04 ஆகஸ்ட் 2014

கொள்ளிடத்தின் நடுவில்

     

நண்பர்களே, நம் ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் குல தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். குல தெய்வம் என்பது பெரும்பாலும், ஊருக்கு வெளியில் இருக்கும் காவல் தெய்வமாகவே இருக்கும்.

     எங்கள் குடும்பத்தின் குல தெய்வம் போல், உங்களுக்கு அமைந்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆம் நண்பர்களே, எங்கள் குல தெய்வம், ஊருக்கு வெளியில் மட்டுமல்ல, ஆற்றிற்கு நடுவில் அமைந்துள்ளது.

     தீவு என்ற சொல்லை நாம் நன்கறிவோம். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி தீவு எனப்படும். எங்கள் குல தெய்வம் இருக்கும் இடமும், ஒரு தீவுதான். ஆனால் கடலால் அல்ல, ஆற்றினால் நாற்புறமும் சூழப்பட்ட, அதுவும் கொள்ளிடம் ஆற்றினால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட, ஒரு சிறு நிலப் பரப்பில், ஒரு திட்டில் எங்கள் குல தெய்வம்  கோயில் கொண்டுள்ளது.


     கொள்ளிடம் ஆற்றைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள். தங்களின் பயணத்தின் போது பலமுறை கடந்து சென்றிருப்பீர்கள்.

     கொள்ளிடம் ஆற்றினைத் தாங்கள் முன்னமே பார்த்திருந்தால், கொள்ளிடம் ஆற்றின் அகலம் தங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தியிருக்கும். பல இடங்களில் இரண்டு கிலோ மீட்டருக்கும் மேல் அகலம் கொண்ட ஓர் பெரிய ஆறு அது.

     இத்தகைய கொள்ளிடம் ஆற்றின் நடுத் திட்டில்தான் எங்கள் குல தெய்வத்தின் கோயில் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறையேனும், இக்கோயிலுக்குச் சென்று வருவது வழக்கம்.

     கடந்த 29.7.2014 செவ்வாய்க் கிழமையன்று, குல தெய்வம் கோயிலுக்குச் செல்ல குடும்பத்துடன் ஆயத்தமானேன்.

     இப்பூமிப் பந்தின் மூலை முடுக்கெல்லாம், பரந்து விரிந்து, அங்கு இங்கு எனாதபடி, எங்கும் வியாபித்திருக்கும், வலைப் பூ என்னும் அற்புத உறவால், சகோதர பாசத்தால், ஒன்றிணைந்தவர்கள் அல்லவா நாம். இப்பூமியிலேயே பெரிய குடும்பம், நம் வலைப் பூ குடும்பமல்லவா.

    இவ்வாண்டு, வலைப் பூ உறவுகளான, தங்களையும், குல தெய்வம் கோயிலுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். வாருங்கள் நண்பர்களே. இதோ மகிழ்வுந்து தயாராய் காத்திருக்கிறது. வாருங்கள், வந்து அமருங்கள், சேர்ந்து பயணிப்போம்.

      தஞ்சையில் இருந்து புறப்பட்டு, கும்பகோணம் சாலையில் சென்று கொண்டிருக்கிறோம். இதோ அய்யம்பேட்டை, இடதுபுறமாகத் திரும்புவோமா, இதோ கணபதி அக்ரஹாரம். வலது புறம் திரும்பிப் பயணிப்போம். கவித் தலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இதோ சருக்கை என்றும் சிற்றூர். இடது புறம் திரும்புவோமா?

     சிறிது தூரத்திலேயே ஒரு வாய்க்கால் குறுக்கிடுகிறது. வாய்க்காலின் பழுதுபட்ட பாலம் நம்மை வரவேற்கிறது. பாலத்தில் மகிழ்வுந்து செல்ல இயலாது. இதோ பாலத்தை ஒட்டி, ஒரு சரிவான பாதை, மகிழ்வுந்து வாய்க்காலில் இறங்கிக் கரையேறுகிறது. வாய்க்காலில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இருந்தால், இறங்கிப் பழுதடைந்த பாலத்தில நடக்க வேண்டியதுதான்.

என் மனைவி, மகள், மகன்

இதோ கொள்ளிடம் ஆற்றின் தென் கரை. இதற்கு மேல் மகிழ்வுந்தில் செய்ய இயலாது. இறங்குங்கள். நடந்துதான் சென்றாக வேண்டும்.

        


(படத்தில் தெரியும் சக்கரச் சுவடுகள் டிராக்டருடையவை,
டிராக்டரால் மட்டுமே இம்மணலில் பயணிக்க இயலும்)
 நண்பர்களே, இவ்விடம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? சென்னை மெரீனா கடற்கரையில் நிற்பதுபோல் ஓர் உணர்வு ஏற்படுகிறதல்லவா? எதிரில் கடல்தான் இல்லை. எங்கு பார்த்தாலும் மணல், மணல், மணல் மட்டும்தான். ஒரு சிறு பாலைவனம் போல் தெரிகிறதா?

     எதிரே பாருங்கள், ஒரு கிலோ மீட்டர் தொலையில், ஒரு திட்டு தெரிகிறதல்லவா? மரங்களால் சூழப்பட்ட வனப்பகுதிபோல் தெரிகிறதே, அப்பகுதியை நோக்கி நடப்போமா?

     நடப்பதற்குச் சற்று சிரமமாகத்தான் இருக்கும். கால்கள் மணலில் புதையும். காலணிகளை அணிந்து கொண்டு நடப்பது கடினமாக இருக்கிறதல்லவா? அதற்காக காலணிகளைக் கழட்டிவிட வேண்டாம், வெயிலால் மணல் கொதிக்கும், காலினைப் பொசுக்கும்.

         எனது மகன் தற்பொழுது பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சிறுவனாய் இருந்தபொழுது, முடி எடுக்க இங்கு வந்தோம். கொள்ளிடத்தின் ஒரு பகுதியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த்து. இடுப்பளவு ஆழம்.

     என் மகனைத் தூக்கி, எனது தோளில் உட்கார வைத்துக் கொண்டு, ஆற்றினைக் கடந்த நினைவலைகள் நெஞ்சில் மோதுகின்றன.
    
கீழ இராமநல்லூர் சிற்றூரின் நுழைவு வாயில்


இன்று ஆற்றில் தண்ணீர் இல்லை. வெறும் மணல்தான். இதோ திட்டை நெருங்கி விட்டோம். அதோ ஒரு பாதை தெரிகிறது பாருங்கள். அதன் வழியாகத்தான் சென்றாக வேண்டும், வாருங்கள்.

     நண்பர்களே, நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. கோயில் இங்குதான் இருக்கிறதா? என்றுதானே கேட்கிறீர்கள். கோயில் இந்தத் திட்டில் இல்லை. இத் திட்டினைக் கடந்து, மீண்டும் கொள்ளிடம் ஆற்று மணலில் நடந்தால், அடுத்ததாக ஒரு திட்டு வரும், கோயில் அங்குதான் இருக்கிறது.

      சரி, அப்படினாயால் இந்த திட்டில் என்ன இருக்கிறது?


இந்தத் திட்டின் பெயர் கீழ இராம நல்லூர் என்பதாகும். இதற்குள் ஒரு சிற்றூர் உள்ளது. சிற்றூரிலும் மிகச் சிறிய சிற்றூர். மொத்தமே இரண்டே இரண்டுத் தெருக்கள்தான். சுமார் ஐம்பது அல்லது அறுபது வீடுகள் இருக்கும். இரண்டுத் தெருக்களைச் சுற்றிலும் காடுதான்.


     இங்கு வசிப்பவர்கள், எந்தவொரு சிறு பொருள் வாங்க வேண்டும் என்றாலும், மளிகையோ, அவசரத்திற்கு மருந்தோ, பகலோ, இரவோ, ஒரு கீலோ மீட்டருக்கும் மேல், ஆற்று மணலைக் கடந்து, நடந்து சென்றுதான் வந்தாக வேண்டும். சின்னஞ்சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதென்றாலும், இவ்வாற்று மணலைக் கடந்துதான் தினமும் சென்றாக வேண்டும். கடினமாக வாழ்க்கைதான்.

     கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரோ, வெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால், இவர்கள் இத்திட்டிலேயே சிறைக் கைதிகளைப் போல் இருக்க வேண்டியதுதான், அல்லது படகில் மிதந்துதான் கரையேற முடியும்.
    
குல தெய்வம் இருக்கும் திட்டு



இரு தெருக்களையும் கடந்து விட்டோம். வாருங்கள் மீண்டும் கொள்ளிட அற்று மணலில் நடப்போம். அதோ தெரிகிறது பாருங்கள், ஒரு திட்டு, அதற்குள்தான் எங்கள் குல தெய்வத்தின் கோயில் இருக்கிறது. இதோ ஒரு பாதை, திட்டின் மேல் நோக்கிப் போகிறதல்லவா, வாருங்கள் இப்பாதையில் செல்வோம். அதோ தூரத்தில் கோயில் தெரிகிறதே.
    
குல தெய்வம் கோயிலுக்கான நுழைவு பாதை


சிறு கோயில்தான். ஆனால் கோயில் கதவுகள் பூட்டியல்லவா இருக்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் கோயில் பூசாரி வந்து விடுவார். அதுவரை, இத்திட்டினைச் சுற்றிப் பார்ப்போமா?

       நண்பர்களே, இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம், அருள்மிகு அரியதங்கம், கூத்தாயி உடனுறை அப்பாலிக் கூத்தர் என்பதாகும். இக்கோயிலின் எதிரில் இடது புறத்தில், கருப்புசாமி, வலது புறத்தில் மதுரை வீரன். கோயிலுக்கும் பக்கத்தில் பாப்பாத்தி அம்மன்.



    

கருப்பு சாமி

மதுரை வீரன்

பாப்பாத்தி அம்மன்

உணவுக் கூடம்

கருப்பு சாமியின் முன்தான் கிடா வெட்டுவார்கள்.அதோ ஓடு வேய்ந்த, நாற்புறமும் திறந்துள்ள, நீண்ட கட்டிடம் தெரிகிறதல்லவா? இவ்விடம் சாப்பாட்டுக் கூடமாகும். கிடா வெட்டி முடிந்ததும், இங்குதான் விருந்து நடைபெறும்.

     அரை கிலோ மீட்டர் அளவிற்கு நீண்ட திட்டு இது. இத்திட்டில் இக்கோயில் தவிர வேறு எதுவும் இல்லை  ஓங்கி உயர்ந்த மரங்கள், கருவேல மரங்கள், முற் புதற்கள் நிறைந்த காடுதான்.
    


கொள்ளிடத்தின் வட வரை இங்கிருந்து தெரிகிறது பாருங்கள். அக்கரையினை அடைய , மீண்டும் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

     இதோ பூசாரி வந்துவிட்டார். கோயில் கதவுகள் திறக்கப் பட்டுவிட்டன. இதோ அரியதங்கம் ஒரு புறமும், கூத்தாயி மறுபுறமும் நிற்க, நடுவில் அப்பாலிக் கூத்தர்.

     என்ன நண்பர்களே, இப்பயணம் இனிமையானதாக, புதிய அனுபவமாக அமைந்ததா? வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது, மீண்டும் மணலில் இறங்கி, வந்த வழியே நடபோமா, வாருங்கள்.

      வெயிலையும் பொருட்படுத்தாது, ஒரு வழியாக நடந்து கரையேறிவிட்டோம். இதோ மகிழ்வுந்து. நண்பர்களே, நாம் விடபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. என் மனைவி, இங்கிருந்து புறப்பட்டு, பட்டீசுவரம் கோயிலுக்கும், அடுத்ததாக மயிலாடுதுறையை அடுத்துள்ள வைத்தீசுவரன் கோயிலுக்கும் சென்றே ஆக வேண்டும் என வற்புறுத்துகிறார்.

     என் உள்ளத்திலும் ஓர் ஆசை, மெதுவாய் தலையை நீட்டிப் எட்டிப் பார்க்கிறது. கை நீட்டி ஓர் காட்சியினைக் காட்டுகிறது.

     ஆயிரம் ஆயிரம் யானைகள் அணிவகுத்து வரும் அற்புதக் காட்சி ஒரு புறமும், ஆயிரம் ஆயிரம் போர்க் கப்பல்கள் அணிவகுத்துச் செல்லும் வியப்புமிகு காட்சி மறுபுறமும் கண்ணில் விரிகிறது. இதோ பட்டத்து யானையின் மீது, கம்பீரமாய், சோழ மாமன்ன்ன், கடாரம் கொண்டான் இராஜேந்திர சோழன்.

      சோழ மாமன்ன்ன் இராஜேந்திர சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய கற்றளி, பிரகதீசுவரர் ஆலயம், நெஞ்சம் நிமிர்த்தி, இளமை மாறாமல், நிற்கிறது. நம்மை வா, வா என அழைக்கின்றது.

     வைத்தீசுவரன் கோயிலுக்குச் சென்று விட்டு, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு, இன்றே சென்றாக வேண்டும் என மனது துடியாய்த் துடிக்கிறது. இதோ புறப்பட்டு விட்டோம்.

      நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்தப் பதிவில், கங்கை கொண்ட சோழபுரத்தில் சந்திப்போமா.