20 ஆகஸ்ட் 2014

சங்கமம்


பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே,
பழகிக் களித்த தோழர்களே,
பறந்து செல்கின்றோம் – நாம்
பிரிந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ

     நண்பர்களே, இப்பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், நமது எண்ணங்கள், இறக்கைக் கட்டி, பின்னோக்கிப் பறப்பதையும், இளமைக் கால நினைவலைகளில் மூழ்கி, நிகழ் காலத்தை மறந்து, கண்ணின் விழிகளில் இருந்து, ஒரு துளி நீர் எட்டிப் பார்ப்பதையும், நாம் அனைவரும் அனுபவித்து இருக்கிறோமல்லவா.


     படித்து முடித்து, ஆண்டுகள் பல கடந்த நிலையில், நமது ஆசிரியர் ஒருவரை, எதிர்பாராமல் சந்திக்கும் பொழுது, நம் மனம் எப்படி ஆனந்தக் கூத்தாடும். ஓடிச்சென்று, ஆசிரியரின் கரம் பற்றி, சார், நான் உங்கள் மாணவன். முப்பதாண்டுகளுக்கு முன், உங்களிடம் படித்தவன் எனக் கூறி அறிமுகப் படுத்திக் கொண்டு மகிழ்வோமல்லவா.

     படிக்கும் காலத்தில், நம்மைப் பிரம்பெடுத்து விளாசித் தள்ளிய ஆசிரியர்களும் இருக்கக் கூடும். பிரம்படியால், உடம்பில் தோன்றியக் கோடுகளைத் தழும்புகளைத் தடவிக் கொண்டே, அவ்வாசிரியரை மனதால் வெறுத்துக்கூட இருப்போம்.

     நண்பர்களே, மாணவப் பருவம் முடிந்து, யதார்த்த உலகில் காலடி எடுத்து வைத்த பிறகுதான், ஓர் உண்மை பலருக்கும் புரியும். அன்று படி, படி என்று அவ்வாசிரியர் அடித்திராவிட்டால், இன்றைக்கு நாம் எப்படி இருந்திருப்போம் என்று எண்ணினாலே நெஞ்சம் நடுங்கும்.

      பழமொழி ஒன்றுண்டு. படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் அடி வாங்காதவன், பிற்காலத்தில் போலிசிடம் அடிவாங்குவான் என்பார்கள். ஆசிரியர் அடித்தது, நம்மைச் செம்மைப் படுத்தத்தான், நம்மை நல்வழிப் படுத்தத்தான், என்ற உணர்வும், உண்மையுடன், பிற்காலத்தில்தான் நமக்கு உறைக்கும்.

     முப்பதாண்டுகளுக்கு முன் நம்மை அடித்த ஆசிரியரை, இன்று கண்டால், ஓடிச்சென்று, காலடியில் விழ மாட்டோமா?

     நீங்கள் அடித்த அடி ஒவ்வொன்றும், இதோ இன்று என் பெயருக்குப் பின்னால், பட்டங்களாக நீண்டிருக்கின்றன என்று சொல்லிச் சொல்லி மகிழ மாட்டோமா?

     நண்பர்களே, ஒரு ஆசிரியரை, எதிர்பாராத விதமாய் சந்தித்ததற்கே, மனம் இவ்வளவு மகிழ்ச்சியில் துள்ளுமென்றால், நமது ஆசிரியர்கள் அனைவரையும், ஓரிடத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும்? நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறதல்லவா.

     நண்பர்களே, அத்தகைய ஓர் அற்புத வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

     நான் மாணவனாய் கல்வி பயின்ற, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியிலேயே, ஆசிரியராகவும் பணியாற்றக் கூடிய, ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் 1974 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டுவரை, ஏழாண்டுகள், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியிலேயே கல்வி பயின்றுள்ளேன்.
    

1981 ஆம் ஆண்டிற்குப் பிறகு, என்னைப் போல், என் பள்ளியிலேயே, கல்வி பயின்ற இருவரை, இன்று நண்பர்களாய் பெற்றுள்ளேன்.  ஒருவர் மும்பை சரவணன். மும்பையில் இருந்து வெளியாகும், சுமார் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்பனையாகும், கால நிர்ணய், என்ற மாதாந்திர நாட் காட்டியின், தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர்.

     மற்றொரு நண்பர் குமார். இவர் சென்னையில், எச்.சி.எல்., நிறுவனத்தின் முதுநிலை மேலாளர்.

     நண்பர்களே, இவர்கள் இருவரையும் எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? நமது வலைப் பூதான் காரணம். வலைப் பூ என்னும் உயரிய பந்தத்தால் இணைந்து நண்பர்கள் ஆனவர்கள் இவர்கள்.

     இவர்கள் இருவருக்கும் ஓர் ஆசை. ஒரு சில நண்பர்களுடன் இணைந்து, தேடினார்கள், தேடினார்கள். தம்மோடு படித்த நண்பர்கள் நாற்பது பேரை தேடித் தேடிக் கண்டுபிடித்தார்கள்.

     அடுத்துத் தங்களுக்குப் பாடம் புகட்டிய ஆசான்களைத் தேடினர். அவ்வாசிரியர் எங்கே இருக்கிறார், இவ்வாசிரியை எங்கு இருக்கிறார் எனத் தேடித் தேடி ஆசான்கள் இருபது பேரைக் கண்டுபிடித்தனர்.

     மாணவர்கள் நாற்பது பேரும், ஆசிரியர்கள் இருபது பேரும், சங்கமிக்க நாள் குறித்தனர். ஆகஸ்ட் 15. இவர்களுக்குச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களைச் சந்திக்க, இவர்கள் குறித்த நாள் ஆகஸ்ட் 15.
    

மும்பை சரவணன் மும்பையில் இருந்தும், குமார் சென்னையில் இருந்தும், அலைபேசியின் குழு அழைப்பில்,  கரந்தையில் உள்ள ஓரிரு நண்பர்களுடன், விவாதித்து, விவாதித்து நிகழ்ச்சிக்கு உரு கொடுத்தனர். தஞ்சை வாழ் நண்பர்களான,      .பெட்ரோல் பங்க் சம்பத், புவி.விசு, அக்கு பஞ்சர் செந்தில், சரவணக் குமார், சுரேஷ்பாபு மற்றும் வெற்றி வீடியோஸ் வெற்றி ஆகியோர், தங்களது வேலைகளை எல்லாம் சில நாட்களுக்கு, ஒதுக்கி வைத்துவிட்டு, பம்பரமாய்ச் சுழன்று, சங்கமத்திற்கானப் பணிகளை, ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.

      அதிலும், சங்கம விழாவிற்கு வருகின்றவர்கள் எனது நண்பர்கள் அல்லவா, எனது இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்ட ஆசிரியர்கள் அல்லவா, எனவே இரவு விருந்து, என் பொறுப்பு, என் செலவு, அதுவே என் மகிழ்ச்சி என்று கூறி இரவு உணவுச் செலவினங்கள் அனைத்தையும், பெட்ரோல் பங்க் சம்பத் அவர்களே, தனியொருவராக ஏற்றுச் சிறப்பித்தார்.

     நானும், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் பட்டிருந்தோம்.
    


ஆகஸ்ட் 15. அந்நாளும் வந்தது. சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம், ஒரு திருமண மண்டபம். வசந்த மகால். தங்களின் வசந்தமான வாழ்விற்கு வழி கோலியவர்களை, இவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த இடம் வசந்த மகால். என்னவொரு பொருத்தம் பாருங்கள்.

      முன்னாள் மாணர்கள் ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் இருந்தும், ஒவ்வொரு ஊரிலிருந்தும், ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர்.

     பள்ளியில் படித்து முப்பதாண்டுகள் கடந்து விட்டன. அன்றைய உருவம் இன்று இல்லை. காலத்தின் கோலம், ஒவ்வொருவர் தோற்றத்திலும் தெரிந்தது. நண்பர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு, கட்டியணைத்துக் கூச்சலிட, மண்டபமே அதிர்ந்தது.

     பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், உடல் தளர்ந்திருந்தாலும், உள்ளம் தளராமல், மலர்ந்த முகத்துடன், ஒவ்வொருவராய் வர, மாணவர்கள், தங்கள் ஆசான்களின், காலைத் தொட்டு வணங்கி வரவேற்றனர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்

என அன்பின் பெருமையை, வலிமையைப் பேசும் திருவள்ளுவரின், குறளின் பொருளை மெய்ப்பித்தனர் மாணவர்கள். ஒவ்வொருவரின் கண்களும் கலங்கித்தான் காட்சி தந்தன.
    
சங்கம விழா தொடங்கியது. முப்பை சரவணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி கால நினைவலைகளில் மூழ்கி, இச்சங்கம நிகழ்ச்சி, உயிர் பெற்ற விதத்தினை துடிப்போடு விவரித்தார்.
    










பொதுப் பணித் துறையில், பொறியாளராகப் பணியாற்றும், பேச்சாற்றல் மிக்க, புவி.விசு அவர்கள், நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
     





ஆசிரியர்கள் அனைவரும், ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப் பட, ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒவ்வொரு மாணவர் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

     இடையிடையே ஆசிரியர்கள், மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

     நானும், நண்பர் வெ.சரவணன் அவர்களும் இணைந்து, கரந்தைத் தமிழ்ச் சங்க விழாக்கள் பலவற்றை நடத்தியிருக்கிறோம். விழா என்றால், தமிழ்த் தாய் வாழ்த்து, வரவேற்புரை, சிறப்புரை, நன்றியுரை, நாட்டுப் பன் என்ற வரிசையில்தான் அமையும். மேலும் விழாவின் நிறையில், ஒரே ஒருவர் மட்டுமே நன்றியுரையாற்றுவார்.

     நண்பர்களே, இச்சங்கம விழா, ஒரு வித்தியாசமான விழாவாகத்தான் நடந்தது. ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்திப் பேசினர். ஆனால் விழாவின் தொடக்கம் முதலே, பேசிய ஒவ்வொரு மாணவரின் உரையும், நன்றியுரையாகத்தான் அமைந்தது. ஒரே விழாவில் இத்தனை நன்றியுரைகளா, என வியக்கும் வண்ணம் விழா சிறப்புடன் அரங்கேறியது.

     நண்பர்களே, இன்று நான் வலைப்  பூவில் எழுதுகிறேன் என்றால், அதற்கு என் தமிழாசிரியர்கள்தான் காரணம். முக்கணிபோல், முத்தான மூன்று தமிழாசிரியர்களின் அரவணைப்பில் வளர்ந்தவன் நான். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், நூல் வெளியிடல், சங்க விழாக்களை நடத்துதல், போன்ற அனைத்து நிகழ்வுகளிலும், என் கரம் பற்றி அழைத்துச் சென்று, என்னை ஊக்கப் படுத்தியவர்கள், எனக்கு வழி காட்டியவர்கள், என்னை நெறிப்படுத்தியவர்கள், இம்மூன்று தமிழாசிரியர்கள்தான்.

     ஒருவர் புலவர் மீனா. இராமதாசு அவர்கள். இரண்டாமவர் புலவர் சிவ. திருஞானசம்பந்தம் அவர்கள். மூன்றாமவர் புலவர் கோ. பாண்டுரங்கன் அவர்கள்.

     மூவருமே முத்தமிழையும் கரைத்துக் குடித்தவர்கள். இவர்கள் வாய் திறந்தால், சங்க இலக்கியப் பாடல்கள் அருவியெனக் கொட்டும். அவ் அருவிகளின் சாரல்களில் நனைவதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது, நான் செய்த பெரும் பேறு.

     புலவர் சிவ.திருஞான சம்பந்தம் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இவ்விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. 
    


புலவர் மீனா.இராமதாசு அவர்கள், தனது தள்ளாத வயதிலும், நடக்கக் கூட இயலாத நிலையிலும், கோலூன்றி, சங்கம அரங்கிற்கு வருகை தந்தார். அமர்ந்து கொண்டே பேசினார். அமர்ந்து கொண்டே பேசினாலும், வெளி வந்த தமிழ் வார்த்தைகளோ, துள்ளிக் குதித்தன.

     நண்பர்களே, தமிழகத்தின் தேர்தல் ஆணையர் திரு பிரவீன் குமார் அவர்களைத் தாங்கள் நன்கறிவீர்கள். பல ஆண்டுகளுக்கு முன், இவர் மாவட்ட ஆட்சியராய், தமிழகத்தில் முதன் முதலில் பொறுப்பேற்றது தஞ்சையில்தான்.

      தமிழகத்தில், அதுவும் தஞ்சையில பணி. அவரோ வெளி மாநிலத்தைச் சார்ந்தவர். ஆகையினால் அவருக்குத் தமிழ் தெரியாது. ஆனாலும் அவர் உள்ளத்தில் தமிழ் கற்றே ஆக வேண்டும், தமிழில் பேசியே ஆக வேண்டும், என்ற ஓர் உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது.

     நண்பர்களே, எனது ஆசிரியர் புலவர் மீனா. இராமதாசு அவர்கள்தான், ஆறு மாதம், தினமும், ஆட்சியர் இல்லத்திற்கு, மிதி வண்டியில் சென்று, பிரவீன் குமாருக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்தார்.

     தேர்தல் நேரங்களில், தொலைக் காட்சியில், தினமும், தேர்தல் ஆணையர் மழலைத் தமிழில் பேசுவதைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். சங்கத் தமிழை, மழலைத் தமிழாய் அவருக்கு ஊட்டியவர், என் ஆசான் புலவர் மீனா.இராமதாசு. என் ஆசான்தான் அவருக்கும் ஆசான்.
    

வசந்த நினைவுகளை மனதில் தேக்கி
உள்ளமெல்லாம் உவகை கொண்டாட
இனம் புரிய இன்ப அலைகள்
உடல் முழுதும் பரவி ஓட

இதோ ஓர் நன்றித் திருவிழாவில்
நெகிழ்ந்து நான் நிற்கின்றேன்

இப்படித்தான் தொடங்கினார் அருள்தாஸ் என்னும் முன்னாள் மாணவர். எனது தந்தை, கரந்தையில் ஒரு தேநீர் கடை நடத்தி வந்தார். சந்தாணம் டீ கடை என்று பெயர். பள்ளி நேரம் போக, மீதமிருக்கும் நேரமெல்லாம், எனது தந்தையின் கடையில், டீ கிளாசுகளை கழுவுவதுதான் என் வேலை. மகன் என்றும் பாராமல், என் தந்தையார் எனக்கும், நாளொன்றுக்கு ரூ.2 கூலி தருவார்.

     இக்காசினைச் சேர்த்து வைத்துதான், எனக்குத் தேவையான நோட்டுகள், மற்றும் புத்தகங்களை நானே வாங்கிக் கொள்வேன். அன்று பிறரின் எச்சில் கிளாசுகளைக் கழுவிய என் கரம், இன்று பச்சை மையினால், தினந்தோறும் கையெழுத்துப் போடுகிறது. நான் இன்று உதவி அஞ்சல் துறை கண்காணிப்பாளர்.

     டீ கிளாசுகளைக் கழுவியவன், இன்று பச்சை மையினால் கையெழுத்துப் போடும் அளவிற்கு உயர்ந்துள்ளேன் என்றால், அதற்குக் காரணம், என் அசான்களாகிய நீங்கள்தான். உங்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகள் மட்டுமல்ல, இந்த ஒரு ஜென்மமும் போதாது என்றார்.

     அரங்கே ஒரு நிமிடம் அமைதியில ஆழ்ந்தது. அடுத்த நொடி, கைத் தட்டல்களால் அரங்கு அதிர்ந்தது.

     முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும், ஒரு கதை வைத்திருந்தனர். ஒவ்வொருவராய்ப் பேசப் பேச, அரங்கமே நெகிழ்ந்துதான் போனது.
     

நண்பர்களே, சங்கம நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகும் கூட, அரங்கை விட்டுக் கலைந்து செல்ல மனமின்றி ஒவ்வொருவரும் தவித்தனர். சந்தித்த, சங்கமித்த ஒரு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் பிரிவா? பிரிய மனமின்றித் தயங்கித் தயங்கித்தான் ஒவ்வொருவராய், ஒவ்வொருவரிடமும், பிரியா  விடை பெற்றுச் சென்றனர்.

      ஆனாலும் அனைவரின் உள்ளத்திலும் ஓர் உறுதி உரமேறியிருப்பது, தெள்ளத் தெளிவாய் தெரிந்தது. அடுத்த வருடமும் இதே நாளில் ஒன்று கூட வேண்டும். இவ்வருடத்தை விட அதிக எண்ணிக்கையில், விடுபட்ட மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இம்முறை கலந்து கொள்ள வாய்ப்பில்லாத, ஆசிரியர்களையும், எப் பாடுபட்டேனும் அரங்கிற்கு அழைத்து வர வேண்டும் என்ற உள்ளத்து உறுதியோடுதான் கலைந்து சென்றார்கள்.


--------------------------------