பயண நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக்
கழகத்தில், அப் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்கள், அவரின்
இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்
கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக, குதிரைகள் பூட்டப்பட்ட கோச்
வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.
பேராசிரியர் வீட்டை விட்டு வெளியே
வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர்.
பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து
விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி,
தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க வாழ்க
என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத அற்புதக்
காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள் ஆசிரியரை
மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.
பேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப்
பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு
பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த
உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.
பல்கலைக் கழகப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும்,
இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த
இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் ஆவார். இவரது பிறந்த நாளான
செப்டம்பர் 5 ஆம் நாளைத் தான், ஆசிரியர் தினமாக பாரதமே கொண்டாடி மகிழ்கின்றது.
டாக்டர்
எஸ்.இராதாகிருட்டின்ன் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.
நண்பர்களே, இந்நாள் டாக்டர்
எஸ்.இராதாகிருட்டின்ன் அவர்களின் பிறந்த நாள் மட்டுமல்ல.
தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் எண்ணி, எண்ணிப்
பெருமைப்பட வேண்டிய நாளும் ஆகும்.
கப்பலை யோட்டி
கடுங்காவல் தண்டனையில்
உப்பிலாக்
கூழுண் டுடல் மெழிந்தோன் – ஒப்பிலாச்
செந்தமிழ்ச்செல்வன்
சிதம்பரனை அன்போடு
சிந்தனை செய்
நெஞ்சே தினம்.
எனக் கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை போற்றும்,
செக்கிழுத்தச்
செம்மல்
வ.உ.சிதம்பரம்
பிள்ளை அவர்களின்
பிறந்த நாளும்
இன்றேயாகும்.
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகப்
போராடியதற்காக, ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தமைக்காக, இரட்டை
ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் செக்கிழுத்த செம்மல், சிறையினின்று மீண்டு வந்தபின்,
சந்தித்ததெல்லாம் வறுமை, வறுமை, வறுமை ஒன்றினைத்தான்.
பகலெல்லாம் செக்கிழுத்தச் சிதம்பரனார், இரவில்
தான் ஆலன் எழுதிய As a man Thinketh என்ற ஆங்கில நூலை மனம் போல வாழ் எனத்
தமிழிலும், திருக்குறளின் அறத்துப் பாலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து
தமிழன்னைக்கு அமுது படைத்தார்.
நண்பர்களே, கர்மவீரன், தென்னாட்டுத் தலைவர்,
செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டிய தமிழன், தொழிலாளர்களின் தோழன் என்றெல்லாம்
புகழப்பட்ட சிதம்பரனார், மரணப் படுக்கையில் வீழ்ந்து, இறுதி மூச்சினை சுவாசித்த,
அந்த சில விநாடிகளில் கூட, அவருக்கு ஓர் ஆசை, தன் அருகில் இருந்த, காங்கிரஸ்
இயக்கத் தொண்டர் சிவகுரு நாதன் அவர்களைப் பார்த்து, ஒரு பாடலைக் கூறிப்
பாடுங்கள் என்றார்.
என்று தணியும்
இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை
விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
மகாகவி பாரதியின் பாடல் வரிகள், செவிகளில்
நுழைய, நுழைய, இறுதி மூச்சினைக் கூட, சுதந்திர தேசத்தில் விட முடியவில்லையே, என்ற
ஏக்கத்தோடு, கண் மூடி மீளா உறக்கத்தில் ஆழ்ந்தார் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
செக்கிழுத்தச்
செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
நினைவினைப்
போற்றுவோம்
------------------------
நண்பர்களே,
நான் ஆசிரியராகப் பணியாற்றும்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், எனது வகுப்பில், பத்தாம் வகுப்பு மாணவியருக்கு,
ஆசிரியர் தினத்தை முன்னிட்டும், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின்
பிறந்த நாளினை முன்னிட்டும், பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியினை
நடத்தினேன். போட்டிகளில் வெற்றி பெற்றோரை, எனது நண்பரும், உமாமகேசுவர மேனிலைப்
பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள் வாழ்த்திப் பேசி
பரிசில்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எனது நண்பர்களும், பள்ளி
ஆசிரியர்களுமான திரு து.நடராசன் அவர்களும், திரு வி.பாலசுப்பிரமணியன்
அவர்களும், திரு சு.கோவிந்தராசன் அவர்களும் கலந்து கொண்டு, நிகழ்வினைச்
சிறப்பித்தனர்.
பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் மாணவிகளிடைய உரையாற்றுகிறார் |
உடற் கல்வி ஆசிரியர் திரு து.நடராசன் பரிசு வழங்குகிறார் |
ஓவிய ஆசிரியர் திரு சு.கோவிந்தராசன் பரிசு வழங்குகிறார் |
அறிவியல் ஆசிரியர் திரு வி.பாலசுப்பிரமணியன் பரிசு வழங்குகிறார் |