சென்னையை அன்று வந்தடைந்த தொடர் வண்டிகள்
அனைத்தில் இருந்தும், பேரூந்துகள் அனைத்தில் இருந்தும், பெண்கள் கூட்டம் கூட்டமாய்
வந்து இறங்கினர். சென்னையே பெண்களால் நிரம்பத் தொடங்கியது.
அருகாமையில் இருந்த ஊர்களில் இருந்து,
பெண்கள் மாட்டு வண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும் வந்த வண்ணம் இருந்தனர். அடுப்பூதிக்
கொண்டு, வீட்டைவிட்டு வெளியில் எங்கும் வராமல், வீட்டிலேயே இத்தனை காலமும்
முடங்கிக் கிடந்த பெண்களா இவர்கள்? பார்த்தவர்கள் மலைத்துத்தான் போனார்கள்.
தமிழகம் அதுவரை கண்டிராதக் காட்சி. ஆண்களால்
அன்று வரை, நினைத்துக்கூடப் பார்க்க இயலாத ஓர் செயல், அவர்களின் கண் முன்னே, உயிர்
பெற்று, உருப் பெற்றுக் கொண்டிருந்தது.
நண்பர்களே, புரியவில்லையா? சென்னையில் ஓர்
மாநாடு நடைபெற இருந்தது. பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் மாநாடு, தமிழ்
நாட்டுப் பெண்கள் மாநாடு.
இதோ மாநாடு தொடங்கி விட்டது. அரங்கில்
எங்கு பார்த்தாலும், பெண்கள், பெண்கள், பெண்கள். அமருவதற்குக் கூட இடமின்றி,
நின்று கொண்டே, மாநாட்டு நிகழ்வுகளைக் கவனித்தப் பெண்கள் ஏராளம், ஏராளம்.
தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு என்னும்
பெயரில், இம்மாநாடு செயலாக்கம் பெற முழு முதற் காரணமாய் இருந்தவர், பம்பரமாய்ச் சுழன்று, செயலாற்றி,
செயற்படுத்திக் காட்டியவர் ஒரு பெண். அவர்தான்,
சமூக
சேவர், மருத்துவமணி
டாக்டர்
எஸ்.தர்மாம்பாள்.
நண்பர்களே, டாக்டர் எஸ்.தர்மாம்பாள். இவரது
பெயரினை உச்சரிக்கும் போதே, பெருமையால் என் நெஞ்சம் விம்முகிறது. உடலெங்கும் ஓர்
இனம் புரியா உணர்ச்சி பரவுகிறது. மனம் மகிழ்ச்சியால் ஆனந்தக் கூத்தாடுகிறது.
காரணம் என்ன தெரியுமா நண்பர்களே. இவர்,
நான் வளர்ந்த, படித்த, பணியாற்றுகின்ற கரந்தையில் பிறந்தவர்.
சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
அக்காலத்திலேயே சித்த மருத்துவம் பயின்றவர். சென்னையில் மருத்துவமனை ஒன்றினை
நிறுவி, மருத்துவப் பணியினைச் சேவையாகவே செய்து வந்தவர்.
விதவைகள் மறுமணம், கலப்பு மணம் மற்றும் பெண் கல்வி என
இம்மூன்றிற்கும், தன் வாழ்வினையே அர்ப்பணித்தவர்.
இதோ, டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களின்
அயரா முயற்சியின் பயனாய் பெண்கள் மாநாடு.
நண்பர்களே, இப்பெயர் நமக்குத் தெரிந்த
பெயராகத் தோன்றுகிறது அல்லவா? இழந்த தமிழின் பெருமைகளை மீட்க, காக்க, தனித் தமிழ்
இயக்கம் கண்ட மறைமலை அடிகளாரின் திருமகள்தான் இவர்.
இம்மாநாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக
வேறொருவரையும் அழைந்திருந்தார். சிந்தனையில் புரட்சி, பேச்சில் புரட்சி, எழுத்தில்
புரட்சி, செயலில் புரட்சி, முடிவெடுப்பதில் புரட்சி என, தான் தொட்ட அனைத்துச்
செயல்களிலும் முற்போக்குச் சிந்தனையுடன் செயல்பட்ட, தமிழ் நாட்டில் புரட்சி என்ற சொல்லுக்கு,
உண்மையான சொந்தக்காரராகிய, ஈ.வெ.இராமசாமி அவர்களைத்தான் சிறப்பு
விருந்தினராக அழைத்திருந்தார்.
பெண் என்றாலே, பிள்ளைப் பெற்றுத் தரும்,
உயிரும், இரத்தமும், சதையுமுள்ள ஓரு இயந்திரமே, என்ற எண்ணம், புரையோடிப் போயிருந்த,
அக்கால மனிதர்களிடம், பெண்களின் உரிமைக்காகப் போராடியவர் அல்லவா, ஈ.வெ.இராமசாமி
அவர்கள். அதற்காகத்தான் அவரை அழைத்திருந்தார்.
நண்பர்களே, ஈ.வெ.இராமசாமி. ஈ.வெ.இராமசாமி என
இருமுறைக் குறிப்பிட்டு விட்டேன். தந்தைப் பெரியார் எனக் குறிப்பிடாமல், பெயரை
மட்டுமே குறிப்பிட்டது, தங்களுக்கு
வியப்பாகக் கூட இருக்கலாம்.
இம்மாநாட்டிற்கு வரும் வரை, இவர் ஈ.வெ.
இராமசாமி மட்டும்தான். இம் மாநாட்டில்தான், இந்தத் தமிழ் நாட்டுப் பெண்கள்
மாநாட்டில்தான், டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்கள்
ஈ.வெ.இராமசாமி
அவர்களுக்குப்
பெரியார்
என்னும்
சீர்மிகு பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அந்நொடி முதல்தான், அந்நிமிடம் முதல்தான்,
அந்நாள் முதல்தான், உலகமே, இவரைப் பெரியார், தந்தைப் பெரியார் என அழைக்கத்
தொடங்கியது.
இச்செய்தி உண்மை நண்பர்களே உண்மை.
வரலாற்றின் பொன்னேடுகளில் பதிவு செய்யப் பெற்ற உண்மை. ஆனால் தந்தைப்
பெரியாருக்குப் பெரியார் என்னும் மகத்தானப் பட்டத்தை வழங்கிய டாக்டர்
எஸ்.தர்மாம்பாள் அவர்களைத்தான், இவ்வுலகு மறந்து விட்டது.
டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களின் செயல், சாதனை இத்துடன் முடிவடைந்து
விடவில்லை.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து
கொண்டு, பல முறை சிறை சென்றார். தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசையினை
வளர்ப்பதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த இவரை, மற்றவர்களை விட, அதிகம் போற்ற
வேண்டியவர்கள், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியவர்கள், இன்றைய
தமிழாசிரியர்களே ஆவார்கள்.
நண்பர்களே, விளங்கவில்லையா? 1940 ஆம் ஆண்டு
வரை, சமுதாயத்தில், தமிழாசிரியர்களுக்கு உரிய மதிப்பு இல்லாமல்தான் இருந்தது. குறைவான
ஊதியம். மற்ற பாட ஆசிரியர்களைவிட, மிகக் குறைவான ஊதியமே, தமிழாசிரியர்களுக்கு
வழங்கப் பட்டு வந்தது. ஆனால், அரசை அதட்டிக் கேட்பதற்குத்தான், கோரிக்கையினை
முன்வைத்துப் போராடத்தான் ஆளில்லை.
டாக்டர் எஸ்.தர்மாம்பாள் போராட்டத்தைத்
தொடங்கினார். தமிழாசிரிகளுக்கு உரிய ஊதியத்தைக் கொடு என முழங்கித் தொடர்
போராட்டத்தைத் தொடங்கினார்.
நண்பர்களே, இவர் தொடங்கிய, தொடர்ந்து
நடத்திய, போராட்டத்தின் பெயர் என்ன தெரியுமா?
இழவு
வாரம்.
ஆம்,
போராட்டத்திற்கு இழவு வாரம் எனப் பெயரிட்டுத்தான் போராடினார், அன்றைய அரசைச்
சாடினார்.
போராட்டத்தைக் கண்டும், போராட்டத்தின்
பெயரைக் கண்டும், அரசு வெட்கித் தலை குணிந்தது.
அன்றைய கல்வி அமைச்சர் திருமிகு
அவிநாசிலிங்கம் செட்டியார், பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை,
தமிழாசிரியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டார்.
தமிழாசிரியர்களே, நாம் இவரைப் போற்ற
வேண்டாமா.
மாணவர் மன்றம். முன்னாள், இந்நாள்
மாணவர்களும், ஆசிரியர்களும், நன்கு அறிந்த மன்றம், மாணவர் மன்றம்.
தமிழ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில்
படிக்கும், மாணவர்களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்
பெறவும், பேச்சாற்றலை, எழுத்தாற்றலை வளர்க்கவும், உருவாக்கப்பட்ட மாணவர்
மன்றத்தின், எழுச்சிமிகு தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றியவர் இவர்.
நண்பர்களே, தமிழ்த் திரை உலகின்
சக்கரவர்த்தியாக விளங்கிய,
நடிப்பு,
பாட்டு என கொடி கட்டிப் பறந்த,
எம்.கே.தியாகராச
பாகவதர் அவர்களுக்கு,
ஏழிசை
மன்னர்
என்ற
பட்டத்தினையும் வழங்கியவர் இந்த தர்மாம்பாள் அவர்கள்தான்.
பெண்களின்
விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும்,
பாடுபட்ட,
கரந்தை
டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களுக்கு,
அன்றைய
தமிழர்கள்,
வீரத்
தமிழன்னை
என்னும்
செம்மாந்தப் பட்டத்தினை வழங்கி மகிழ்ந்தனர்.
பெண்ணாய்ப்
பிறந்து, தனது தன்னலமற்ற உழைப்பால்,சேவையால், தொண்டால், வீரத் தமிழன்னையாக
உயர்ந்த,
கரந்தை
எஸ்.தர்மாம்பாள் அவர்கள்,
தனது
69 வது வயதில்,
கண்ணயர்ந்து
ஓய்வெடுக்கத் தொடங்கிய ஆண்டு 1959.
நண்பர்களே,
தமிழ்கூறும் நல்லுலகம் மறந்த,
எண்ணற்ற
மனிதர்களுள் ஒருவராகிவிட்ட,
வீரத்
தமிழன்னை
மருத்துவ
மணி
கரந்தை
எஸ். தர்மாம்பாள் அவர்களை,
நாமாவது
நினைவில் ஏந்திப் போற்றுவோம்.
(
டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களின்
புகைப்
படத்தினை வழங்கி உதவிய
திராவிடர்
கழகத்திற்கும்,
டாக்டர்
தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக்
கல்லூரி
முதல்வர் அவர்களுக்கும்
என்
மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்)