அப்பா
மகனின் குரல் கேட்டுத் திரும்பிப்
பார்க்கிறார் தந்தை.
என்னோட மேற்படிப்புப் பற்றி, உங்களுடன்
சிறிது நேரம் பேச வேண்டுமப்பா.
தந்தை மகனை வியப்புடன் பார்க்கிறார். தன்
மகனின் வயதுடைய மற்ற பிள்ளைகள் எல்லாம் பொறுப்பின்றி, எதிர்காலச் சிந்தனைகள்
ஏதுமின்றி, மகிழ்ச்சியாக, ஊர் சுற்றித் திரியும்போது, இவன் மட்டும், படிப்பைப்
பற்றிக் கவலைப் படுகிறானே. தந்தைக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.
சொல்லப்பா
நான்
ஐ.சி.எஸ்., படிக்க விரும்புகிறேன் அப்பா. ஆனால் இப் படிப்பைப் படிக்க
இலண்டனுக்குத்தான் சென்றாக வேண்டும். செலவு அதிகமாகும்.
செலவு
கிடக்கட்டும். ஐ.சி.எஸ்., படித்து முடித்துவிட்டு, நீ என்ன செய்யப் போகிறாய்.
மகன் குழம்பித்தான் போனான். எதற்காகத்
தந்தை, தெரியாதது போல் கேட்கிறார். அந்தக் கால ஐ.சி.எஸ்., என்பது, இன்றைய
ஐ.ஏ.எஸ்., படிப்பிற்கச் சமமானது. படித்து முடித்துவிட்டால் அரசுப் பணிதான்.
சொல்லு மகனே, ஐ.சி.எஸ்., படித்து
முடித்துவிட்டுத் திரும்பி வந்து, நீ என்ன செய்வாய்?
மகன் அமைதி காக்கிறான்.
நம்மை அடிமைப்
படுத்தி வைத்திருக்கும், இந்த வெள்ளைக் காரர்களுக்குச் சேவகம் செய்யப் போகிறாயா?
தந்தையின் வார்த்தைகளில் இருந்த நியாயம்,
மகனின் நெஞ்சைச் சுட்டது. மகன் பல நாள் யோசித்தான். ஒரு முடிவிற்கு
வந்தான்.
அப்பா, நான்
மருத்துவராகப் போகிறேன்.
இங்கிலாந்து, இலண்டன் பல்கலைக் கழகத்தில்
மருத்துவப் படிப்பில் சேர்ந்தான். புதிய தேசம், புதிய சூழ்நிலை, புதிய வகுப்பு,
புதிய பாடம் எல்லாமே பிடித்துத்தான் இருந்தது.
ஆனால் அனாடமி வகுப்பு மட்டும் சுத்தமாய்
ஒத்தே வரவில்லை. அனாடமி அறைக்குள் நுழைந்தாலே, குப்பென்று மூக்கைத் துளைக்கும்,
அந்தத் துர்நாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை.
மிகுந்த சிரமத்துடன், மூக்கைப் பிடித்துக்
கொண்டு உள்ளே சென்றான்., மனித உடல் அறுக்கப் படுகின்ற காட்சியைக் கண்டதும்
அவனுக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. அப்படியே மூக்கைப் பிடித்துக் கொண்டு
சரிந்தான்.
இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சல்.
ஒருவாறு உடல் நலம் தேறினான். மீண்டும் அனாடமி வகுப்பு. மீண்டும் அதே துர்நாற்றம்.
மீண்டும் மயக்கம். மீண்டும் காய்ச்சல்.
அனாடமி படிக்காமல் எப்படி மருத்துவர்
பட்டம் பெறுவது? மருத்துவப் படிப்பிற்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டான்.
வேறுவழியின்றி இலண்டனிலேயே, ஒரு அறிவியல்
கல்லூரியில் சேர்ந்தான். விருப்பம் இன்றித்தான் கல்லூரியில் காலடி எடுத்து
வைத்தான். சில நாட்களிலேயே புரிந்து விட்டது, தனது கல்லூரி இதுதான். தான் படிக்க
வேண்டிய படிப்பும் இதுதான் என்பது புரிந்து விட்டது.
நண்பர்களே, இம்மாணவன் யார் என்று
தெரிகிறதா? ஈ, எறும்பு முதல் மனித உயிர்களுக்கு மட்டுமே உயிர் உண்டு என்று பல நூறு
ஆண்டுகளாக, நம்பப்பட்டு வந்த உண்மையை, சுக்கு நூறாக உடைத்து, மரம், செடி,
கொடிகளுக்கும் உயிரும், உணர்வும் உண்டு என்பதை நிரூபித்துக் காட்டிய இந்திய மாமேதை
இவர்தான்.
என்னது? தாவரங்களுக்கும் உயிர் உண்டா, உலகமே
இவரைப் பார்த்து சிரித்தது. யாரும் நம்பவில்லை. 1901 ஆம் ஆண்டு இலண்டன் ராயல்
சொசைட்டியே, இவரது சொல்லை நம்பாமல், அழைத்தது. நீரூபித்துக் காட்டு எனச் சவால்
விட்டது. இலண்டன் சென்றார்.
பேசியது போதும்
நிரூபித்துக் காட்டு
என்றனர்.
ஒரு தொட்டியில் இருந்து வேரூடன் ஒரு செடியை
எடுத்து, வேறொரு தொட்டியில், அச்செடியைத் தண்டுவரை நீரில் மூழ்குமாறு செய்தார்.
அந்தச் செடியுடன், ஒரு கருவியை இணைத்து, அச்செடியின் நாடித் துடிப்பை, ஒரு
திரையில், ஒளி வடிவத்தில் காட்டினார்.
ராயல் சொசைட்டி ஒரு நிமிடம் மூச்சு விடவே
மறந்தது.
அடுத்ததாக, தொட்டியில் இருந்த நீரை
வெறியேற்றிவிட்டு, அத்தொட்டியில், புரோமெட் என்னும் விஷ திரவத்தை ஊற்றினார்.
செடியின் நாடித் துடிப்பு, மெல்ல மெல்ல
குறைந்து, பிறகு ஒரு வித நடுக்கத்தோடு, நாடித் துடிப்பு நின்றே போனது. கண்முன்னே
ஒரு செடியின் மரணம்.
ராயல் சொசைட்டி ஒரு நிமிடம் மௌனமாய்
எழுந்து நின்று, அச்சிறு செடிக்கு அஞ்சலி செலுத்தியது. மறுநிமிடம் கைத்தட்டல்கள்
விண்ணைப் பிளந்தன.
மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி
இருக்கிற, இவரின் திரு உருவப் படத்தினை, ஜெனிவாவில் உள்ள, சர்வதேச மாளிகையில்
வைத்துப் பாராட்ட வேண்டும் என்றார், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.
நண்பர்களே,
இவர்தான்
இந்திய மாமேதை
ஜெகதீஸ்
சந்திர போஸ்.