18 அக்டோபர் 2014

தில்லையாடி

     

தில்லையாடி வள்ளியமை


ஆண்டு 1914. தென்னாப்பிரிக்கா. ஜோகனஸ்பர்க். அதை வீடு என்று கூற முடியாது, ஒரு குடிசை. அக்குடிசையினுள், கிழிந்த பழையத் துணியினைப் போலத்தான், அப்பெண் கிடக்கிறார். எலும்புகளும், எலும்புகளை மூடிய தோலும் மட்டுமே மிச்சமிருக்கினறன. குழி விழுந்த கண்கள். அவ்வப்பொழுது ஏற்படும் சிறு சிறு அசைவுகள் மட்டுமே, அப் பெண்ணின் உடலில், இன்னமும் உயிர் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

     கோட், சூட் அணிந்த வழக்கறிஞர் ஒருவர், கவலை தேய்ந்த முகத்துடன், அக்குடிசையினுள் நுழைகிறார். கிழிந்த பாயில் படுத்திருக்கும் உருவத்தைக் கண்டவுடன், அவரது கண்கள் கலங்குகின்றன. எப்படி இருந்த பெண் இப்படி ஆகிவிட்டாரே? இனி இப்பெண் பிழைக்கப் போவதில்லை என்பது பார்த்தாலே தெரிகிறது. நான்தானே, இந்நிலைக்குக் காரணம். என்னால்தானே, இப்பெண் போராட்டத்தில் குதித்தார்.


நீ சிறை சென்றதை எண்ணி வருத்தப் படுகிறாயா?

     குழி விழுந்த கண்களில், ஓர் பரவசம், ஒரு புத்துணர்வு பொங்கி எழுகிறது.

உங்கள் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணிப் பெருமைப் படுகிறேன்.

    அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. சிறிது நேரம் கண்களை மூடி, உடலில் மீதமுள்ள சக்தியை எல்லாம் சேமித்து, பின் பேசுகிறார்.

நீங்கள் மீண்டும் ஆணையிட்டால், அடுத்தப் போராட்டத்தில், நான் தான் முதல் ஆளாக, முன் நிற்பேன்.

     கையைத் தரையில் ஊன்றி, எழுந்து உட்காருவதற்குக் கூட, உடலில் வலு இல்லை. ஆனால் உள்ளத்திலோ, போராட்ட உணர்வு கொழுந்து விட்டு எரிகிறது. மீண்டும் போராட, வெற்றி கிட்டும் வரை போராட, உள்ளம் துடியாய் துடிக்கிறது.

      எவ்வளவோ முயன்றும், அப்பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள், அவ்வீராங்கைனையின், மூச்சு அடங்கியது.

     நண்பர்களே, இப்பெண் யாரென்று தெரிகிறதா? இவர்தான் தில்லையாடி வள்ளியம்மை. இவரின் குடிசை வீட்டிற்கு வந்த வழக்கறிஞர்தான் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி.


    
தென்னாப்பிரிக்கச் சிறைச் சாலைக்கு வெளியில் காந்திஜி

அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள, தில்லையாடி என்னும் சிற்றூரைச் சேர்ந்த தம்பதிகள்தான் முனுசாமி, ஜானகியம்மாள் தம்பதியினர். முனுசாமி ஒரு நெசவாளி.

     ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில், ஆங்கிலேய நாட்டில், ஆங்கிலேய ஆலைகளில் உற்பத்தியான துணிகள், கப்பல் கப்பலாக, நம் நாட்டிற்கு வந்து இறங்கின. நமது நாட்டின் நெசவுத் தொழில் நசிந்தது. நெசவாளர் குடும்பங்கள் பட்டினியினைத் தத்தெடுத்துக் கொண்டன. பிழைக்க வழியில்லை.

     நிறைமாத கர்பினியான தன் மனைவியுடன், கப்பல் ஏறி தென்னாப்பிரிக்கா சென்றார் முனுசாமி. ஜோகஸ்பர்க்கில், ஓர் குடிசை கட்டிக் குடியேறினார். பெட்டிக் கடை வைத்தார்.

     முனுசாமி ஜோகனஸ்பர்க்கில் காலடி பதித்த, இரண்டே மாதங்களில் 1898 இல் பிறந்தவர்தான் வள்ளியம்மை.

     1913 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் நாள், தென்னாப்பிரிக்காவின், கேப் உயர் நீதி மன்றம், ஓர் உத்தரவினைப் பிறப்பித்தது.

     இந்தியர்கள் தங்கள் பரம்பரை வழக்கப்படி திருமணம் செய்து கொண்டால், அத்திருமணம் செல்லவே செல்லாது. கிறித்துவ மதச் சம்பிரதாயப்படி, திருமணங்கள் பதிவு செய்யப்பட்டே ஆக வேண்டும்.

     போராட்டம் வெடித்தது. போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. வள்ளியம்மைக்கு அப்பொழுது வயது பதினைந்து.

     பள்ளியில் படித்து வந்த வள்ளியம்மைக்கு, போராட்டத்தில் குதித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. சிறு வயது முதலே, அந்நிய தேசத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளைக் கண்ணெதிரிலேயே கண்டு வளர்ந்தவர் அல்லவா.

    மகளிர் அணியில் இடம் பெற்றார் வள்ளியம்மை. ஒவ்வொரு மகளிர் அணிக் கூட்டத்திலும், வள்ளியம்மையின் குரலே ஒங்கி ஒலித்தது.

     பள்ளியைத் துறந்தார். போராட்டம், போராட்டம் என, போராட்டத்திலே முழு மூச்சாய் ஈடுபட்டார். விளைவு கைது செய்யப் பட்டார். மாரிட்ஸ் பர்க் என்னும் சிறையில்  அடைக்கப் பட்டார்.

     சிறையில் சரியான உணவு கிடையாது. தூக்கம் கிடையாது. மோசமான உணவைத் தின்றே ஆக வேண்டிய கட்டாயம். கடுமையான வேலைகள். உடல் நலிந்து, மெலிந்து போனார். உடல் மெலிந்தாலும், உள்ளம் பாறைபோல் வலிமையுடன் விளங்கியது.

     சிறையில், வெள்ளைக்கார சிறையதிகாரி, வள்ளியம்மையிடன் ஒரு நாள் கத்தினார். எதற்காக இந்த வீண் போராட்டம். பேசாமல் தென்னாப்பிரிக்கராகப் பதிவு செய்து பிழைக்கப் பாருங்கள். உங்கள் இந்தியாவிற்குக் கொடி கூடி கிடையாது, மேலும் அது நாடே அல்ல. எதற்காக இல்லாத இந்தியாவிற்காகத் தேவையில்லாமல் போராடுகிறீர்கள்.

      தளர்ந்திருந்த வள்ளியம்மையின் உடலில், எங்கிருந்துதான், பலம் வந்ததோ தெரியவில்லை. கண்கள் நெருப்பினைக் கக்க, நிமிர்ந்து நின்றார், தன் சேலையின் ஒரு பகுதியை, வெறியுடன் கிழித்தார்.
    


தனது புடவையினையே கொடியாக, அவ்வெள்ளையன் முன் ஆட்டினார். இதோ எங்கள் கொடி, எங்கள் தாய்த் திருநாட்டின் வெற்றிக் கொடி, இதோ எங்கள் கொடி. பாரடா வெள்ளையனே, இதோ எங்கள் கொடி.

    காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் அடுத்தடுத்து அமைந்திருந்த சேலை அது.

    நண்பர்களே, நமது தேசியக் கொடியை, நமக்கு அளித்த பெருமைக்கு உரியவர் இந்த வீரத் தமிழச்சி, தில்லையாடி வள்ளியம்மைதான்.  உண்மை, நண்பர்களே, உண்மை.

     தில்லையாடி வள்ளியம்மை சிறையில் இருந்ததென்னவோ, சில மாதங்கள்தான். அதற்குள்ளேதான் எத்தனை எத்தனை கொடுமைகள், சித்திரவதைகள். 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள், வள்ளியம்மை விடுதலை செய்யப் பட்டார்.

     நண்பர்களே, வள்ளியம்மையால் நடக்கக் கூட முடியவில்லை. விடுதலையாகி, தன் குடிசைக்கு வந்து படுத்தவர்தான், பின் எழவேயில்லை.

    சிறையில் இருந்து மீண்ட பிறகு, அவர் உயிருடன் இருந்த நாட்கள், வெறும் எட்டே எட்டுதான்.

    தில்லையாடி வள்ளியம்மை தன் பதினாறாவது வயதிலேயே, இம் மண்ணுலக வாழ்வு துறந்தார்.
    


தில்லையாடியில் கருவாய் உருவெடுத்த போதும், தமிழகத்தில் கால் பதிக்காமலேயே, ஏன், இந்திய மண்ணைத் தொட்டுக் கூட பார்க்காமல், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே மறைந்த,
வீரத் தமிழச்சி
தில்லையாடி வள்ளியம்மையின்

நினைவினைப் போற்றுவோம்.

-----