22 ஏப்ரல் 2015

மகளுக்காக



என் கணவர் என்னை விட்டுப் பிரிந்தபோது, பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். வாழ்வினையே வெறுத்துப் பல முறை தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் கூட இறங்கினேன்.
  
ஆனாலும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் ஒரு புறம் என்னை தடுத்துக் கொண்டே இருந்தது. தற்கொலைக்கான மனத் தூண்டுதலைத் தவிர்ப்பதற்காக மருத்துவரை நாடி, மனோதத்துவ சிகிச்சையும் பெற்றேன். தற்கொலை உணர்வினையும் தாண்டி, வாழ்ந்தாக வேண்டும், வாழ்ந்தே ஆக வேண்டும் என போராடியதற்கு, ஒரே காரணம், என் மகள், என் அன்பு மகள்.
  
சிறு வயது முதலே துன்பத்தில் உழன்று, வறுமையில் நான் வாடியதைப் போல, என் மகள் மோசமான சூழ்நிலையில் வாழ வேண்டியவளே அல்ல என்று உறுதியாக எண்ணினேன். என் துயரின், என் துன்பத்தின் நிழல் கூட, என் மகள் மீது, விழக்கூடாது என்பதற்காகப் போராடினேன்.


     நண்பர்களே, ஒரு தாயின் மனப் போராட்டத்தை, வாழ்வியல் போராட்டத்தைப் பார்த்தீர்களா.

       தன் மகள் நன்றாக வாழ வேண்டுமே என்ற உயரிய எண்ணம்தான், அத்தாயின் உதிரத்தில் ஒன்றெனக் கலந்து, அவரை வாழத் தூண்டியது.

       அந்த்த் தாய்க்கு சிறு வய்து முதலே, கதைகள் சொல்லுவதில் ஒரு மாபெரும் ஆர்வம் இருந்தது.

      முகபாவங்களை மாற்றியும், குரலில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வந்தும், கதை கேட்கும் சிறுவர்களை, கதையுலகிற்குள்ளேயே அழைத்துச் சென்று விடுவார்.

      வறுமை கொடி கட்டிப் பறந்த சோதனையான காலகட்டத்தில், ஓர் நாள், ஓர் ஊருக்குச் செல்வதற்காக, தன் மகளுடன், தொடர் வண்டி நிலையத்திற்குச் சென்றார்.

      சென்ற பிறகுதான் தெரிந்தது, தொடர் வண்டி, ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு மணி நேரம், தாமதமாகத்தான் வந்து சேரும் என்பது புரிந்தது.

       நான்கு மணி நேரத்தினை, தொடர் வண்டி நிலையத்திலேயே, செலவிட்டாக வேண்டும். மகளோ, அம்மா, ஏதாவது ஒரு கதை சொல்லேன் எனக் கேட்கத் தொடங்கினாள்.

       விளையாட்டாகத்தான் ஒரு புது கதையினை, அப்பொழுதே கற்பனை செய்து, சொல்லத் தொடங்கினார். மனதில் கற்பனை ஊற்றெடுத்து வழியத் தொடங்கியது.

      மனதில் தோன்றிய கதைக்கு உரு கொடுத்து, வார்த்தைகளாக்கி, சுடச் சுட, தன் மகளுக்குக் கூறத் தொடங்கினார்.

    மனதில் கதை உருப்பெற்றுக் கொண்டேயிருந்தது. வார்த்தைகள், கேட்போரைக் கவர்ந்து, ஒரு மாயக் சுழலுக்குள், இழுத்துச் செல்லும், தூண்டில் வார்த்தைகளாய் வெளி வந்த வண்ணம் இருந்தன.

      நான்கு மணி நேரம் கடந்து சென்றதே இருவருக்கும் தெரியவில்லை. தொடர் வண்டி வந்த பிறகுதான் புரிந்தது, நான்கு மணி நேரம் முழுதாய் கடந்திருப்பது தெரிந்தது.

      தொடர் வண்டியில் ஏறிய தாயின் மனதில், ஓர் ஆசை, வண்டியின் வேகத்தினையும் தாண்டி வேகமாய் மனதிற்குள் ஓடத் தொடங்கியது. இக் கதையினை நூலாக அச்சிட்டு வெளியிட்டால் என்ன?

      மனதில் இருக்கும் கதையினை முதலில், வெள்ளைத் தாட்களில் இறக்கி வைத்தாக வேண்டும்.

       தட்டச்சு செய்வதற்கு அவரிடம் தட்டச்சு இயந்திரம் கிடையாது. ஏதேனும் தட்டச்சு நிலையத்திற்குச் சென்று, தட்டச்சு செய்து வாங்குவதற்கு, கையில் காசும் சுத்தமாய் கிடையாது. என்ன செய்வது, காசில்லாமல், எப்படி தட்டச்சு செய்வது என்று புரியவில்லை.

      ஒரு நாள், ஒரு காபி கடையில், பழைய தட்டச்சு இயந்திரம் ஒன்றைக் கண்டார். இருந்த காசை கொடுத்து, ஒரு காபியை வாங்கிக் குடித்துக் கொண்டே யோசித்தார்.

       சில பக்கங்களைத் தட்டச்சு செய்ய வேண்டும். தாங்கள் அனுமதி கொடுத்தால், அவ்வப்பொழுது கடைக்கு வந்து, நானே தட்டச்சு செய்து கொள்வேன். அனுமதி தருவீர்களா?

      அக்கடைக் காரருக்குத் தாராள மனசு. தட்டச்சு செய்து கொள்ளுங்கள் என்றார்.

      அதன் பின், பல நாட்கள், அக் கடையே அவரது இருப்பிடமாய் மாறிப் போனது. மனதில் இருந்த கதை, மெல்ல மெல்ல, வார்த்தைகளாய், ஒவ்வொரு எழுத்தாக, வெள்ளைத் தாட்களில் முகம் காட்டத் தொடங்கியது.

      தட்டச்சுப் பணி முடிந்த பின்னர்தான், அடுத்த பிரச்சினை மெல்ல தலை தூக்கியது. எவ்வாறு நூலாய் வெளியிடுவது?

      ஒவ்வொரு பதிப்பகமாய் கால் தேயத் தேய, ஏறி இறங்கினார். கதையினைப் படித்துப் பார்க்கக் கூட யாரும் தயாராக இல்லை.

வெளியிட முடியாது
வெளியிட முடியாது
வெளியிட முடியாது

சொல்லி வைத்தாற்போல், பதிப்பகத்தார் அனைவரும், ஒரே பதிலை, ஓரெழுத்துக் கூட மாறாமல் கூறினர்.

        அசரவில்லை அவர். மேலும், மேலும் பதிப்பகங்களைத் தேடித் தேடி அலைந்தார். அயராமல் ஒவ்வொரு படியாய் ஏறி இறங்கினார்.

புளூம்ஸ்பரி

     ஓர் சிறிய  பதிப்பகம். இவரது கதையினை பதிப்பிக்க முன்வந்தது. ஆயிரம் பிரதிகளுக்கு இரண்டு ஆயிரத்து 250 பவுண்டுகளைத் தர முன்வந்தது.

        அந்தத் தாய் மகிழ்ச்சி வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார். பணம் பெரிதல்ல. நூல் வெளி வரட்டும். காத்திருந்தார்.

        நூல் வெளிவந்தவுடன், யாருமே எதிர்பாராத ஓர் அற்புதம் நிக்ழ்ந்தது. நூல்கள் அனைத்தும் வெளிவந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்து விட்டன. உடனே அடுத்த பதிப்பு, உடனே அதுவும் விற்றுத் தீர்ந்தது. பதிப்புகள் தொடரத் தொடர, அனைத்தும் விற்றுக் கொண்டே இருந்தது.

       இங்கிலாந்து நாடே நூலினைப் படித்து மகிழ்ந்தது. தியேட்டர்கள், வீடியோ விளையாட்டுக்கள் என, அலையாய் அலைந்து கொண்டிருந்த மாணவ்ர்கள், புத்தகக் கடையினைத் தேடத் தொடங்கினர்.

       விரைவாய், வெகு விரைவாய் உலகையே வலம் வரத் தொடங்கியது அந்நூல்.

40 கோடிப் பிரதிகள் விற்பனை. 700 கோடி பவுண்டுகள் வசூல்.

ஹாரி பாட்டர்.

மகளுக்காகக் கதை எழுதிய அந்தத் தாய்


ஜே.கே.ரௌலிங்