09 ஏப்ரல் 2015

மீன் மார்க்கெட்டில் திருமணம்

   

 ஆண்டு 1907. மராட்டிய மாநிலம். பம்பாயின் பரேல் பகுதி.

     பைகுல்லா மீன் மார்க்கெட்.

     மாலை 7.00 மணியளவில், அன்றைய வியாபாரம் முடிந்து, கடைக்காரர்கள், ஒவ்வொருவராய், மிச்சம் இருந்த மீன்களுடன் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கினர்.

      வியாபாரிகள் அனைவரும் வெளியேறிய பின், அப்பகுதி மக்கள் ஒவ்வொருவராக, மீன் மார்க்கெட்டினுள் நுழையத் தொடங்கினர்.

      தரையிலே, அங்கு இங்கு என, எங்கும் சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே இருந்த பெரிய கற்களில், ஒருவர் இருவர் என அமர்கின்றனர்.

       சிறிது நேரத்தில் மீன் மார்க்கெட் முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.

      சாக்கடையின் துர்நாற்றத்தினையும் மறந்து, மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கின்றனர்.

     என்ன நடக்கப் போகிறது இங்கே? எதற்காக இவர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்? புரியவில்லைதானே.

     இதோ மேளச் சத்தம் கேட்கிறதே? புது உடை அணிந்து, கழுத்தில் மாலையுடன் ஒரு சிறுவன் வருகின்றான். பதினேழு வயதிருக்கும். அச்சிறுவனைத் தொடர்ந்து ஒரு பெண், கழுத்தில் மாலையுடன், பெற்றோர் பின்தொடர, உள்ளே வருகிறார்.

     இப்பொழுது புரிந்துவிட்டதல்லவா? ஆம் திருமணம் நடைபெற இருக்கின்றது. மணமக்களை வாழ்த்துவதற்குத்தான் இந்த கூட்டம்.

     என்னது? திருமணமா? மீன் மார்க்கெட்டிலா? வழிந்தோடும் சாக்கடைகளுக்கு இடையிலா? பூக்களின் வாசனை வீச வேண்டிய இடத்தில், சாக்கடையின் துர்நாற்றமல்லவா, மூக்கைப் பிடிக்க வைக்கின்றது.

       திருமணம் நடத்த, அவ்வூரில் சத்திரங்களோ அல்லது திருமணக் கூடங்களோ இல்லையா என்ன? இருக்கினறன. ஆனால் இந்தத் திருமணத்திற்காக, அத்திருமணக் கூடங்களை வாடகைக்கு தருவதற்குத்தான், அவர்களுக்கு மனமில்லை.

       தாழ்த்தப் பட்ட மஹர் வகுப்பினருக்கு திருமண மண்டபத்தை வாடகைக்கு விடுவதா? தெய்வ குற்றமல்லவா? தீட்டாகி விடுமே? அந்தப் பாவத்தை எப்படி போக்குவது.

       வேறு வழியில்லை, மீன் மார்க்கெட்டில் திருமணம் அரங்கேறுகிறது.

      மாப்பிள்ளை யார் தெரியுமா?

      இங்கே நாங்கள், நாய்களை விடவும், பூனைகளை விடவும், இழிவாக நடத்தப்படும் பொழுது, இதை நான், என் தாய் நாடு என்று எப்படி அழைக்க முடியும்? இதை என்னுடைய சொந்த மதம் என்று எப்படி நினைக்க முடியும்?

     இங்கே குடிப்பதற்குக் கூட, நாங்கள் தண்ணீரைப் பெற முடியாத நிலை உள்ளதே. சுயமரியாதை உணர்வுள்ள, எந்தவொரு, தீண்டப்படாதவனும், எப்படி இந்த நாட்டைப் பற்றிப் பெருமையாக நினைக்க முடியும்?
என்று மகாத்மா காந்தியிடமே, நேருக்கு நேர் முழங்கியவர்.

நான் இந்துவாகப் பிறந்தேன்,
ஆனால்
நிச்சயமாக, இந்துவாக சாக மாட்டேன்
என்று சூளுரைத்து,
அவ்விதமே
பௌத்தராய் கண் மூடியவர்.

     இந்தியா சுதந்திரம் பெற்றதும், அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராய் அமர்ந்து, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்து வழங்கியவர்.

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்.

14.4.2015

சித்திரைத் திங்களின் முதல் நாள்
அண்ணல் அம்பேத்கரின் 124வது பிறந்த நாள்.


மனுதர்மத்தை நிராகரித்துவிட்டு
மனித தர்மத்தை முன்வைத்த
அண்ணல் அம்பேத்கரின்

நினைவினைப் போற்றுவோம்.