நாங்கள் சென்ற மகிழ்வுந்து, காவலர்களால்
தடுத்து நிறுத்தப் படுகிறது.
இதற்கும்மேல் காரில் செல்ல இயலாது.
நடந்து செல்லலாம் அல்லது அரசுப் பேருந்தில் செல்லலாம் என்றார்.
பேருந்து கூட எவ்வளவு தொலைவு செல்லும்
என்பது புரியவில்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபுறமும் வாகனங்கள்,
வாகனங்கள், வாகனங்கள்.
இவ்வாகனங்களில் வந்தவர்கள் எல்லாம் நடந்தோ
அல்லது அரசுப் பேருந்திலோ பயணத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும்.
ஒரு வாகனத்தில் கூட, அரசியல் கட்சியினை
வெளிப்படுத்தும் கொடிகள் இல்லை.
மனதில் ஒருவித பெருமித உணர்வு மெல்ல தலை
நீட்டிப் பார்த்தது.
யார் சொன்னது? தமிழகத்து இளைஞர்கள்
எல்லாம், நடிகர்களின், ஆளுயரப் படங்களுக்குப் பாலாபிசேகம் செய்கிறவர்கள் என்று.
யார் சொன்னது? தமிழகத்து மனிதர்கள்
எல்லாம், கண்மூடித் தனமாய், ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு, கொடி பிடிப்பவர்கள் என்று.
தமிழகத்து மக்கள் தொகையில், ஒரு சதவீதத்திற்கும்,
குறைந்தோர் வேண்டுமானால், பாலாபிசேகம் செய்கிறவர்களாக, கண்மூடி கட்சிகளை ஆராதணை
செய்பவர்களாக இருக்கலாம்.
இதோ பாருங்கள். இளைஞர்கள், இளைஞர்கள்.
மாணவர்கள், மாணவர்கள். கவலை தோய்ந்த முகத்துடன், நூற்றுக் கணக்கில், ஆயிரக்
கணக்கில் சென்று கொண்டே இருக்கிறார்கள்.
ஆரவாரம் ஏதுமில்லை. வறட்டுக் கூச்சலில்லை.
டாஸ்மாக் வாசனை இல்லவே இல்லை. ஆனாலும் மக்கள், வாகனங்களிலும், பேருந்துகளிலும்
வந்து இறங்கிய வண்ணம் இருக்கின்றனர்.
இன்னும் 50 கி.மீ தொலைவு சென்றாக வேண்டும்.
மகிழ்வுந்தினை, கிடைத்த சிறு இடைவெளியில் நிறுத்தச் சொல்லிவிட்டு, இறங்கி, ஓர்
காவலரை அணுகினோம்.
இந்நிமிடம் வரை, எங்களின் கணிப்புப்படி,
மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோர், அங்கே குவிந்துள்ளனர். நேற்று பிற்பகல்
முதல், இவ்விடத்தைக் கடந்து சென்ற, ஒரு வாகனம் கூட, இன்னும் திரும்பி வரவில்லை.
இனியும் வாகனங்களை அனுமதித்தால், நிறுத்துவதற்குக் கூட இடம் இருக்காது என்றார்.
யாரும், யாரையும், வாருங்கள், வாருங்கள் என
விளம்பரம் செய்து, கூவி அழைக்கவில்லை.
ஆனாலும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இளைஞர்களே,
மாணவர்களே
கனவு காணுங்கள்
என்றாரே.
ஒருவேளை கனவுக்
காணத்தான்
கண்மூடிப்
படுத்திருக்கிறாரோ.
உறக்கம்
கலைந்து எழுந்துவர மாட்டாரா
என்ற ஏக்கத்தை
சுமந்த மனதுடன், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் தமிழகத்தின் அனைத்து மூலைகளில்
இருந்தும் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
அதே ஏக்கம்தானே, தஞ்சையில் இருந்து,
எங்களையும், இங்கே அழைத்து வந்திருக்கிறது.
கடந்த 29.7.2015 புதன்கிழமை மதியம்,
நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள், நாளைதான் அரசு
விடுமுறை ஆயிற்றே, இராமேசுவரம் செல்வோமா? என்றார்.
அன்று இரவே புறப்பட்டோம். நண்பர்கள் திரு
வெ.சரவணன், திரு க.பால்ராஜ், திரு பா.கண்ணன் மற்றும் நான்.
எங்களின் முன்னாள் மாணவர் திரு தினேஷ்
அவர்களின் மகிழ்வுந்தில் புறப்பட்டோம்
இதோ சுப்பையா நகரில் நின்று
கொண்டிருக்கிறோம்.
ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. ஒரு சின்னஞ் சிறு தீவில், அமைதி
தவழும் ஓர் இனிய முகத்தினை, அன்பு முகத்தினை இறுதியாய் காண, ஏறக்குறைய நான்கு
இலட்சம் நல் உள்ளங்கள.
இப்பொழுது செல்வது உசிதமல்ல என்பது
தெளிவாய் புரிந்தது. அறைக்குத் திரும்பினோம். அறையில் இருந்த தொலைக் காட்சிப்
பெட்டியின் முன் அமர்ந்தோம்.
பிற்பகலில் அறையில் இருந்து புறப்பட்டோம்.
எதிர் திசையில் வாகனங்கள், சிறிது கூட இளைவெளியின்றி, திரும்பி வந்த வண்ணம்
இருந்தன.
பாம்பன் பாலத்தில் பயணித்து, அக்கா மடம்,
தங்கச்சி மடம் கடந்தோம்.
இதோ பேக்கரும்பு.
மிகவும் வித்தியாசமான பெயர். இவ்விடத்தில்
ஒரு வகை புல் விளையுமாம். இப்புற்கள் காண்பதற்குக் கரும்பினைப் போலவே இருக்குமாம்.
ஆனாலும் கரும்பு அல்ல. பே என்றால் இல்லை என்று பொருள். எனவே பேக்கரும்பு என்றால்,
கரும்பு இல்லை என்று பொருளாம். ஒரு புல்லின் பெயர், மண்ணின் பெயராய்
மாறியிருக்கிறது.
இதோ இடது புறத்தில், சவுக்குக் கழிகளால்
அமைக்கப்பட்டத் தடுப்பு. அமைதியாய் உள்ளே செல்கிறோம்
அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமானால், அப்பிறவியிலும், இந்தியனாகவே பிறக்க விரும்புகிறேன் என்று கூறி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர்,
இந்திய இளைஞர்களை எல்லாம், கனவு காணச்
சொன்னவர். இதோ பூமித் தாயின் மடியில், மீளாத் துயிலில்.
இப்புனிதர் இங்கு புதைக்கப்படவில்லை.
விதைக்கப் பட்டிருக்கிறார்.
ஒரு
மனிதர், இயற்கையோடு இரண்டறக் கலக்கும் பொழுது,
அவன்
தாய் அழுதால், அவன் ஓர் நல்ல மகன்
அவன்
பிள்ளைகள் அழுதால், அவன் ஓர் நல்ல தகப்பன்
அவன்
ஊர் அழுதால், அவன் ஓர் உத்தமன்
ஒரு
நாடே அழுதால், அவன் ஓர் நல்ல தலைவன்
ஆனால்,
இவருக்காக
இன்று
உலகே
அழுது
கொண்டிருக்கிறது.
உலகையே
அழ
வைத்தவர்
இதோ,
இங்கு மீளாத் துயிலில்.
நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால் நம் இறப்பு, ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று கூறியவர், புதிய சரித்திரம்
படைத்தவர், கோடிக் கணக்கான இளைஞர்களின் உள்ளத்தில், நம்பிக்கை விதையினை
விதைத்தவர்,
இதோ
ஒரு
விருட்சத்திற்கான
வித்தாய்
மண்ணில்
இறங்கியிருக்கிறார்.
கண்மூடி,
கரம் கூப்பி நிற்கிறோம்.
ஒரு கனவு
இருந்தது.
வாழ்வில் ஒரு முறையேனும்
ஒரே ஒரு
முறையேனும் – தொலைவில்
நின்றேனும்
தங்களைக்
கண்ணாரக் காண வேண்டும் – என்ற
ஒரு கனவு
இருந்தது.
இன்று
உங்களுக்கு
மிக அருகில் நிற்கின்றோம்.
– சில
அடிகள்
தொலைவில் நிற்கின்றோம் - ஆனாலும்
எங்கள்
கண்களால்
தங்களைக்
காண இயலவில்லை.
மண்ணுள்
விதையாய் நீங்கள்
வெளியே
மரம்போல் நாங்கள்.
பூமியில் இருந்து, ஓர் அதிர்வலை மெல்ல மெல்ல
மெலெழும்பி வருவதை உணர முடிந்தது. நாற்புறமும் பார்க்கின்றேன். அனைவருமே
அதிர்வலைகளை உணர்ந்தவர்களாய், அமைதியாய், நின்னை விழுங்கிய மண்ணை, தம் கண்களால்
விழுங்கியவாறு நிற்கிறார்கள்.
என் இந்தியா
என் இந்தியா
என் இந்தியா
என ஒரு
துடிப்பு,
மெல்ல, மெல்ல
மெலேழும்பி வருவதை
உணர முடிகிறது.
அமைதியாய், உன் அருகில், அசைந்தாடும்,
தேசியக் கொடியினை உற்றுப் பார்த்தவாறே நிற்கின்றோம். தேசியக் கொடியின் அசைவு கூட,
உன் உதட்டு அசைவினை ஒத்தவாறே அசைகிறது. உன் உள்ளத்துச் செய்தியினை, காற்றின் பட
படப்பில் அசைந்தாடி, கூற முற்படுவது தெரிகிறது.
மாணவர்களே,
இளைஞர்களே
விடைபெறுகிறேன்.
நாட்டை
முன்னேற்றப் பாதையில்
அழைத்துச்
செல்வது
இனி
உங்கள்
கடமை.
துயரம் ததும்பும் முகங்களோடு வந்தவர்கள்,
ஏதோ ஓர் உள்ளத்து உறுதியோடு வணங்கிக் கலைந்து செல்கிறார்கள்.
தாங்கள்
வாழ்ந்த காலத்தில்
நாங்களும்
வாழ்ந்தோம்
என்பதே