05 ஆகஸ்ட் 2015

அக்னிக் குஞ்சு


இனிய எண்ணங்களே, போய்விடுங்கள்
கவலை கொண்ட நெஞ்சமும் இனி வேண்டாம்
விழித்திருக்கும் இரவுகளுக்கு
வேலை காத்திருக்கிறது.
பகற் பொழுதுகள்
பரபரப்பாக இருப்பினும்
எனது நினைவுகள் எல்லாம்
இராமேசுவரம் கடற்கரையில்
நிலைகுத்தி நிற்கின்றன.

                                ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்


     ஆண்டு 1946. அந்தப் பதினான்கு வயதுச் சிறுவன், பள்ளியில் இருந்து வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கிறான்.

     இப்பள்ளியில் படித்து முடித்தாகிவிட்டது. இனி படிப்பைத் தொடர, வேறு ஊருக்குத்தான் சென்றாக வேண்டும். பாசமிகு தாய், தந்தையை விட்டுப் பிரிந்தாக வேண்டும். குடும்பத்தை விட்டுவிட்டு, தனியனாய், தன்னந் தனியனாய், ஓர் புத்தம் புதிய ஊரில், ஓர் புத்தம் புதிய பள்ளியில்தான், இனி படித்தாக வேண்டும்.


பெரிய நகரங்களில் உள்ள மெத்த படித்தவர்களுக்குச் சமமாக நீ உயர வேண்டும்.

     ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யரின் வார்த்தைகள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கினறன. ஆசிரியரின் குரல் மனதில் கேட்கும் பொழுதெல்லாம், சிறுவனின் நெஞ்சம் நிமிர்கிறது, தளர்ந்த நடையில் ஓர் உறுதி கூடுகிறது.

முன்னேற்றம் காண்பதற்காக, நீ இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒரு கூடு கூட இல்லாமல், தன்னந் தனியாக, வான வெளியில் நாரை பறக்கவில்லையா? உன்னுடைய மகத்தான ஆசைகள் நிறைந்த இடத்தை அடைவதற்காக, நீ பிறந்த இடத்தின் ஏக்கத்தை உதறியேத் தீர வேண்டும். எங்களுடைய அன்போ அல்லது தேவைகளோ, உன்னைக் கட்டுப்படுத்தி வைக்காது.

  தந்தையும் அனுமதி கொடுத்துவிட்டார்.

     முதன் முதலாய் தன் வீட்டை விட்டு, விடுதி அறைக்குள் அம் மாணவனின் வாழ்வு தொடங்குகிறது. புதிய பள்ளி, புதிய நகரம். புதிய மாணவர்கள். புதிய ஆசிரியர்கள்.


அய்யாதுரை சாலமன்

     புதிய பள்ளியில், சிறுவனின் ஆதர்சனமான வழிகாட்டியாய், நண்பனாய் மாறிப்போன ஆசிரியர்.

திறமைசாலியான ஒரு ஆசிரியரிடமிருந்து, ஒரு மோசமான மாணவன், கற்றுக் கொள்வதைவிட, ஒரு மோசமான ஆசிரியரிடமிருந்து, ஒரு நல்ல மாணவனால் அதிகமாகக் கற்றுக் கொள்ள முடியும் என்று அடித்துக் கூறும் அற்புத ஆசிரியர்.

     ஆசிரியர் மாணவர் என்ற உறவிற்கு அப்பாற்பட்டு, வளர்ந்தது இவர்களது உறவு.

      வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும், நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றால், ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு எனற மூன்று வலுவான சக்திகளைப் புரிந்து கொண்டு, அதில் கைதேர்ந்தவராகிவிட வேண்டும் என்பார்.

      சிறுவன் அற்புதமான ஆசிரியரின் அரவணைப்பில், வழிகாட்டுதலில், மெல்ல மெல்ல வளரத் தொடங்கினான்.

     மாலை நேரங்களில், வான வீதியில் வட்டமடிக்கும் பறவைக் கூட்டங்களைப் பார்த்துப் பார்த்துப் பரவசமடைவான். உச்சியில் பறக்கும் கொக்குகளையும், சீகல் பறவைகளையும் உற்று நோக்குவான்.

      பறவைகளைப் பார்க்கப் பார்க்க, ஓர் உறுதி மனதில் குடியேறி, சம்மணமிட்டு அமரும்.

நானும் ஒரு நாள் வானத்து உச்சியை எட்டுவேன்.


இராமகிருட்டின அய்யர்.

   சிறுவனின் கணித ஆசிரியர். ஒரு முறை விளையாட்டுத் தனமாய், ஓடிய இச்சிறுவன், இன்னொரு வகுப்பறைக்குள் நுழைந்து விட்டான். அவ்வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த இராமகிருட்டின அய்யர், சிறுவனின் கழுத்தைப் பிடித்து இழுத்து, அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும், பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார்.

     அதே ஆசிரியர், பல மாதங்கள் கடந்த நிலையில், காலை நேரக் கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தில், பள்ளியின் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும், இச்சிறுவனைப் புகழ்ந்தார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றமைக்காக.

     பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களிடமும், இச்சிறுவனை, பிரம்பால் விளாசித் தள்ளியக் கதையையும் கூறினார்.

என்னிடம் யார் உதைபடுகிறானோ, அவன் மகத்தானவனாக மாறுகிறான். என் வார்த்தையை நம்புங்கள், தனது பள்ளிக் கூடத்திற்கும், ஆசிரியர்களுக்கும், இந்தப் பையன் பெருமை சேர்க்கப் போகிறான்.

        ஆசிரியரின் வாக்குப் பலித்தது. அச்சிறுவன் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமல்ல, தான் பிறந்த நாட்டுக்கே பெருமை சேர்த்தான்.

     இம்மாணவனால்தான், இந்தியா ஏவுகணையில் பறந்தது.

நண்பர்களே, இச்சிறுவன் யார் என்று புரிந்துவிட்டதா?
ஆம், அவரேதான்.

அச்சிறுவன்
மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்




அவர் பயின்ற பள்ளி,
சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளி,
இராமநாதபுரம்.

      கடந்த 30.7.2015 வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில், உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்க்க, சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளியில் நுழைந்தோம்.



நண்பரும், எம் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு பா.கண்ணன் மற்றும் நான்.

     மாலை நேரமல்லவா. பள்ளியின் வாயில் மூடியிருந்தது. உட்புறத் தாளினைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தோம்.
    

எதிரே உள்ள பழங்காலக் கட்டிடத்தின், வெளிப் பகுதியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை அணுகினோம்.


வணக்கம். நாங்கள் தஞ்சையில் இருந்து வருகிறோம். ஆசிரியர்கள். அக்னிச் சிறகுகளின் நாயகன், விதையாய், வருங்கால பாரதத்தின் வித்தாய், பூமியுள் இறங்கிய இடத்தினைத் தரிசித்து, வணங்கி வருகிறோம்.

அக்னிப் பறவை, தனக்குச் சிறகு முளைப்பதற்கு முன், பாதம் தேயத் தேய நடந்த இடம் இதுவல்லவா.

அக்னிக் குஞ்சு அமர்ந்து பாடம் பயின்ற வகுப்பறையினைக் காணவே வந்தோம்.

     கட்டிடத்தின் வெளிப் பகுதியில் அமர்ந்திருந்தவர் திரு கண்ணன், அப்பள்ளியின் தொழிற் கல்வி பாட ஆசிரியர்.

      திரு கண்ணன் அவர்கள் எங்களை முகம் மலர வரவேற்றார்.

இதோ பாருங்கள் என்றார்.

மேதகு குடியரசுத் தலைவர்
டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்கள்
பயின்ற பள்ளி
என்னும் கல்வெட்டு சுவற்றில் பதிக்கப் பெற்றிருந்தது.

அப்துல் கலாம் இறுதி ஆண்டு பயின்ற வகுப்பறை இதுதான்.

வகுப்பறையின் கதவு பூட்டப் பட்டிருந்தது. வகுப்பறையினுள் சிறிது நேரம் அமர்ந்திருக்க விரும்புகிறோம் என்றோம்.

என்னிடம் அறையின் சாவி இல்லையே என்றார்.

      எங்களின் ஏமாற்றம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை.

       இதோ இரவுக் காவலர் வருகிறார். அவரிடம் சாவி இருக்கும் என்றவர், அவரை அழைத்து, வகுப்பறையைத் திறக்கச் சொன்னார்.

       சொர்க்கத்தின் பரமபத வாசலே, எங்களுக்காகத் திறந்தது போன்ற ஓர் உணர்வு உடலெங்கும் மெல்ல மெல்லப் பரவியது.

      மெதுவாய், மிக மெதுவாய் வகுப்பறைக்குள் நுழைந்தோம்.



  வகுப்பறையில், கரும் பலகையின் அருகே, ஓர் மேசையில் அப்துல் கலாமின் படம். இருபுறமும், இரு பெரிய மெழுகு வர்த்திகள்.

      பழமையான கட்டிடம். வண்ணம் கண்டு பல்லாண்டுகளுக்கு மேல் ஆன வகுப்பறை. நால்வரும் சில நொடி, அக்னிச் சிறகின் படத்தின் முன் கண்மூடி, கரம் கூப்பி மெளனித்தோம்.
     

பிறகு மெதுவாய் நடந்து, வகுப்பறையின் ஓர் இருக்கையில் வரிசையாய் அமர்ந்தோம்.

      அப்துல் கலாம் அமர்ந்து பாடம் பயின்ற காட்சி மனக் கண்ணில் தோன்றி மறைந்தது.

      ஆசிரியர்கள் அய்யாதுரை சாலமனும், கணித ஆசிரியர் இராமகிருட்டின அய்யரும், கரும் பலகையின் முன், தோன்றிப் பாடம் நடத்தத் தொடங்கினார்கள்.

       எப்பேர்ப்பட்ட ஆசிரியர்கள். இவர்களால் அல்லவா, இராமேசுவரச் சிறுவன், தன் சிறகுகளை விரித்தான்.

       பல நிமிடங்கள் வகுப்பறையில் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.

         நாளை பள்ளிக்குச் சென்றாக வேண்டும். தஞ்சை செல்ல 250 கி.மீ தொலைவு பயணித்தாக வேண்டும் என்ற நினைவு வரவே, மெல்ல எழுந்து, வணங்கி விடைபெற்றோம்.


எனக்கு பத்து வயதாக இருந்தபோது
நிகழ்ந்தது நான்றாக நினைவில் நிற்கிறது.
ஒரு பவுர்ணமி நாள் இரவு அது
என் உடன் பிறந்தார் பொறாமை கொள்ள
நான் உன் மடியில் படுத்திருந்தேன்.

என் உலகம் உனக்கு மட்டும்
தெரியும் என் அன்னையே.

நள்ளிரவில் நான் கண் விழித்தேன்
என் முழங்கால் மீது உன் கண்ணீர்த்துளி பட்டு....
உன் பிள்ளையின் வேதனை
உனக்குத் தானே தெரியும், தாயே?

உன் ஆதரவுக் கரங்கள்
என் வேதனையை மென்மையாய் அகற்றின.
உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வல்லமை தந்தன.

அதைக் கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர் கொண்டேன்.

என் அன்னையே,
நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்.
                 
                                ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்