கடந்த
7.2.2016 ஞாயிற்றுக் கிழமை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், உடன் பணியாற்றும் சக ஆசிரியரும்,
உறவினருமான திரு மு.பத்மநாபன் அவர்களின், மகளின் திருமணம் அரியலூரில் நடைபெற்றது.
உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரும்
நண்பருமான திரு வெ.சரவணன் அவர்களும், நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு பா.இராசேந்திரன்,
திரு எஸ். சேகர், திரு பா.கண்ணன், திரு ஆர்.அறிவழகன், நான் மற்றும் எனது மனைவி என எட்டு
பேர் வாடகை மகிழ்வுந்தில் அரியலூர் சென்றோம். திருமண நிகழ்வில் பங்குபெற்றோம்.
தஞ்சை திரும்பும் வழியில் கீழப்பழுவூர் வந்தடைந்தோம்.
கீழப்பழுவூர், திருமானூர் சாலையில், வலது புறம் திரும்பிப் பயணிக்கும் சாலையில், ஓர்
பெயர்ப் பலகை.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
தங்களை அன்புடன் வரவேற்கிறது.
பலமுறை இவ்வழியே சென்றிருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ,பெயர் பலகை, அன்போடு அழைத்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் அந்த
அன்பு அழைப்பை இதுநாள் வரை ஏற்றதில்லை.
இம்முறை மனதில் ஓர் ஆசை. பறவைகள் சரணாலயத்தைப்
பார்க்கலாமே என்னும் ஓர் உந்துதல்.
பறவைகள் சரணாலயத்தைப் பார்க்கலாமா?
நண்பர்
திரு வெ.சரவணன் அவர்களிடமிருந்து, எனது ஆசை வார்த்தையாகவே வெளிப்பட்டது.
அனைவருமே பார்ப்போம் என்றனர். மகிழ்வுந்து வலது
புறம் திரும்பி, சரணாலயத்தின் திசை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.
பத்தே நிமிடம், ஐந்தே ஐந்து கிலோ மீட்டர்தான்.
மீண்டும் வலதுபுறம் திரும்பினோம். ஒரு சிறிய தார்ச்சாலை. சிறு சிறு கருங்கற்கள் தரையினைப்
பிளந்து கொண்டு வெளிக் கிளம்பி, கருங்கல் சாலையாய் காட்சி அளித்தது.
இடது புறம் வயல் வெளிகள். வலது புறம் நீண்ட
நெடிய ஏரி. கப்பிச் சாலையும், சிறிது தூரத்தில் முடிவுக்கு வந்தது. மகிழ்வுந்தில் இதற்கு
மேலும் செல்ல வழியில்லை.
இறங்கி நடந்தோம். ஏரிக் கரையில் இரண்டு தளங்களை
உடைய, ஒரு பார்வையாளர் மாடம். இரண்டாம் தளத்தின் மேல் திறந்த வெளி.
இதோ எங்களின் கண்களுக்கு முன்னால், கண் பார்வையினைக்
கடந்தும், பரந்து விரிந்த, சமுத்திரம் போல் ஏரி. ஏரியெங்கும் மரங்கள், நீர்த் தாவரங்கள்
பரவிக் கிடக்கின்றன.
இதுதான்
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்.
454 ஹெக்டேர் பரப்புடையப் பெருங்கடல். காவிரி
ஆற்றாலும், மழை நீராலும் நீர் பெற்று, நிரம்பி வழியும் பெரும் ஏரி இது.
புள்ளம்பாடி மற்றும் கட்டளாள் கால்வாய்களும்,
இந்த ஏரிக்கு, வள்ளல் தன்மையோடு நீரினை வாரி வழங்குகின்றன.
கரைவெட்டி ஏரியைப் பற்றிய ஆச்சரியத்திற்கு உரிய
செய்தி என்னவென்றால், தமிழகத்தின் ஆறுகள் ,குளங்கள், ஏரிகள் அனைத்தும் மார்ச் மாதத்திற்குள்ளாகவே
வற்றி வறண்டு போய் விடும் சூழலில், இந்த கரைவெட்டி ஏரி மட்டும், கடும் கோடையான மே மாதத்திலும்
கூட, நீர் தவழும் ஏரியாய் காண்பவர் கண்களையும் மனதினையும் கொள்ளை கொள்ளுகிறது.
இந்தியப் பறவைகள் மட்டுமல்ல, பல வகையான வெளிநாட்டுப்
பறவைகளும் நாடி வந்து ஓய்வெடுக்கும் சரணாலயமாய்
கரைவெட்டி சரணாலயம் விளங்குகிறது.
டிசம்பர் மற்றும் சனவரி ஆகிய இரு மாதங்களில்,
ஏரியின் மரங்கள் எங்கும் பறவைகள், பறவைகள், பறவைகள் என இப்பகுதியே பறவைகளால் நிரம்பி
வழியும்.
நவம்பர் மாதத்தில் பறவைகளின் வரவு தொடங்கும்.
மே மாதம் வரை பறவைகளின் சொர்க்கமே இந்த கரைவெட்டிதான்.
பதினாறு வகையான வாத்துகள், 23 வகையான நீண்ட
கால்களை உடைய வேடர் இனப் பறவைகள் எனப் பல்வேறு பறவை இனங்களின் வசந்த மாளிகைதான் இந்தக்
கரைவெட்டி.
சனவரி மாதத்தில் மட்டும், கரைவெட்டியில் பள்ளி
கொள்ளும் பறவைகளின் எண்ணிக்கை 50,000 என்பதில் இருந்தே, இந்த கரை வெட்டியின் பெருமை
நன்கு விளங்கும்.
இடது புறம் வயல் வெளியில், ஒரு டிராக்டர், வயலினை
உழுது கொண்டிருக்கிறது. டிராக்டருக்கு முன்னே, இராணுவ அணிவகுப்பைப் போல் கொக்குகள்.
டிராக்டரின் இயக்கத்திற்கோ, ஓசைக்கோ சிறிதும்
அஞ்சாமல் கொக்குகள் வரிசையாய். டிராக்டர் நகர, நகர வயலின் மண் கீழும் மேலுமாய் புரட்டிப்
போடப் படுகிறது. புழுதி கிளம்புகிறது.
கொக்குகள் புழுதிக்குள் அஞ்சாமல் நுழைந்து,
புரட்டிப் போடப்படும் மண்ணில் இருக்கும், மண்புழுக்களை, சளைக்காமல் வேட்டையாடுகின்றன.
வியந்து போய் பார்த்தோம்.
பின் ஏரிக் கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும்
இரண்டு அடுக்கு, பார்வையாளர் மாடத்தில் ஏறினோம்.
ஏரியின் அழகு, கண்கொள்ளாக் காட்சியாய் கண் முன்னே
விரிந்தது. ஏரியெங்கும் நீர்த் தாவரங்கள். நீர்த் தாவரங்களின் உச்சி எங்கும் பறவைகள்.
நீரில் மிதந்தபடி நூற்றுக் கணக்கானப் பறவைகள்.
நண்பர்களே, கரைவெட்டி ஏரிக்கு, கடந்த பல நூற்றாண்டுகளுக்கும்
மேலாக, பல திசைகளில் இருந்தும், பல தூர, தூர தேசங்களில் இருந்தும் பறவைகள் வந்து போய்
கொண்டு இருந்தாலும், இப்பகுதியானது, பறவைகளின் சரணாலயமாக, கரைவெட்டி பறவைகள் சரணாலயமாக,
அறிவிக்கப் பெற்றது மிக, மிக அண்மையில்தான்.
ஆம், 1999 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதிதான்,
இப்பகுதி பறவைகளின் சரணாலயமாக அறிவிக்கப் பட்டது.
தினமும் நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள்
வந்து, பார்த்து, வியந்து போய் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கரைவெட்டி ஏரி பறவைகளின் சரணாலயமாக அறிவிக்கப்
பெற்று, பதினைந்து ஆண்டுகள் கடந்த பிறகும், அடிப்படை வசதிகள், ஒன்று கூட இல்லாத நிலையே
தொடருகிறது.
இரண்டு அடுக்கு மாடத்தின் பணிகள் கூட முழுமையாக
முடியவடையவில்லை.
இரண்டு அடுக்கு மாடத்தில் ஏறி நின்றோம். கண்பார்வையின்
எல்லை வரை பரந்து விரிந்த ஏரிப் பரப்பில் பறவைகள் சிறு சிறு, புள்ளிகளாகத்தான் தெரிந்தன.
தூரத்தில் இருக்கும் பறவைகளை, அருகாமையில்
கண்டு ரசிக்க, ரசித்து மகிழ உதவும், டெல்ஸ்கோப் வசதி இல்லவே இல்லை.
இப்பொழுதுதான் ஒலி, ஒளி அரங்கம் ஒன்று கட்டி
முடிக்கப் பட்டுள்ளது. செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கானப் பூங்கா போன்றவை விரைவில்
உருவாக்கப்பட உள்ளதாக, அங்கிருந்தோர் தெரிவித்தனர்.
விரைவில் அடிப்படை வசதிகள் உருவாக்கப் பெற்று,
இப்பகுதி புத்துணர்வு பெறுமானால், தஞ்சைக்கு மிக, மிக அருகில் அமைந்திருக்கும், அதி
அற்புதமானச் சுற்றுலாத் தலமாய் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் வளரும், உயரும்.