22 பிப்ரவரி 2016

ராபிஸ்இது ஒரு வைரஸ். இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தின் வழியே, மெல்ல மெல்ல, மேல் ஏறி, நெஞ்சுப் பகுதியின் வழியாக, கழுத்தைக் கடந்து, மூளையை நோக்கிப் படையெடுக்கும்.

    மூளையைத் தொட்டு விடுமேயானால், இந்த வைரஸ்ஸின் வேகமும், உற்சாகமும் இரட்டிப்பாகி, வெகுவேகமாய் பல்கிப் பெருகும். மூளை மெல்ல மெல்ல வீங்கத் தொடங்கும்.

     உடலின் தசைகள் வலுவிலக்கும். தண்டுவடம் மெல்ல மெல்லக் கூனிக் குறுகும். நிற்க இயலாத நிலையில், உடல் தரையில் தவழத் தொடங்கும்.

     கழுத்துப் பகுதியின் வழியே சென்ற வைரஸ், பேசும் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாய் காவு வாங்கிக் கொண்டே மேல் நோக்கி முன்னேறும். பேச்சு மறைந்து, பெரு மூச்சும், சீறல்களுமே வார்த்தைகளாய் வெளிப்படும்.

      மூளை கொஞ்சம் கொஞ்சமாய் குழப்பத்தின் பிடியில் சிக்கும். தேவையின்றி மனதில், பெரு எரிச்சல், கட்டுக்கடங்காத கோபம் தோன்றும். தொண்டையானது உணவையோ, தண்ணீரையோ விழுங்கும் சக்தியை இழக்கும்.

       தண்ணீரைக் கண்டாலே, மனதில் ஓர் இனம் புரியா பயம், மெல்ல மெல்லத் தோன்றி, பெரும் திகிலாய் உரு மாறும். வாயில் இருந்து, உமிழ் நீர் தாரை தாரையாய் வடியத் தொடங்கும்.

     ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், வேதனை மிகுந்த யுகங்களாய் மெதுவாய், மிக மெதுவாய் நகரும்.

       நான்கு வாரத்தில் இருந்து, 12 வாரத்தற்குள் உயிர், உடலை விட்டுப் பறக்கும்.

        என்ன ஒரு கொடுமையான இறப்பு தெரியுமா? இப்படி ஒரு இறப்பைச் சந்திக்கவா பிறந்தோம். இந்த வைரஸ்ஸால் பாதிக்கப்படவா  உடல் வளர்த்தோம்.

       இந்த வைரஸ்ஸால், பாதிக்கப் பட்டவர்களைப் பார்ப்பதற்கே ஒரு மன தைரியம் வேண்டும்.

       இவ்வளவிற்கும் காரணம், ஒரு சிறு நாயின் கடி.

        நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், உலகெங்கும், ஆண்டுதோறும் ,நாய் கடியால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 59,000.

       மற்ற நாடுகளில் எல்லாம், இந்த இறப்புகளின் எண்ணிக்கை வெகுவேகமாய் குறைந்து, ஒற்றை இலக்கத்தை எட்டி விட்டது. ஆனால் நமது நாட்டில் மட்டும், இந்த இழி நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

       பெரும்பாலான நாடுகளில் நாய்களைத் தெருக்களில் காண இயலாது. அதாவது தெரு நாய்களே கிடையாது.

      
எங்கள் வீட்டு உறுப்பினர்களுள் ஒருவராகிப் போன ஜுலி
வீடடில் செல்லமாய், பாசமாய், வளர்க்கப்படும் நாய்கள்தான் உலகெங்கும் நிறைந்திருக்கின்றன.

       நமது நாட்டிலோ, வீதிக்கு வீதி நாய்கள். கூட்டம் கூட்டமாய் நாய்கள்.

      தெரு நாய்கள் பல்கிப் பெருகும் வேகம் என்ன தெரியுமா?

      ஒரு ஆண் நாயும், ஒரு பெண் நாயும் இணையுமேயானால், பெண் நாய், ஆண்டிற்கு இரு முறை குட்டிகளை ஈன்றெடுக்கும். ஒவ்வொரு முறையும் நான்கு முதல் எட்டு குட்டிகள் வரை பிறக்கும்.

     ஒரு ஜோடி நாய்களால், ஐந்து வருட இடைவெளியில் ,எத்தனைப் புது நாய்கள் இப்வுவியில் அவதரிக்கும் தெரியுமா?

      ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்களேன். அதிகபட்சம் ஒரு வருடத்தற்குப் 16 குட்டிகள். இப்பதினாறு குட்டிகளும், அடுத்த வருடத்தின் தன் சந்ததியினரைப் பெருக்கும். இதன் குட்டிகள் அதற்கடுத்த வருடத்தில்,
தன் இனத்தைப் பெருக்கும்.

      இப்படியாக ஒரு சோடி நாய்களால் ஐந்து வருடத்தில் தோன்றும், புத்தம் புது உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

      ஒரு நிமிடம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்.

      ஓராயிரம் ஈராயிரம் அல்ல.

      ஐந்தே வருடத்தில் புத்தம் புதிதாய் 65,000 நாய்கள்.

      நண்பர்களே, இப்பொழுது உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்வி, ஒரு சந்தேகம் தோன்றுகிறதல்லவா?

      எதனால் பல்வேறு நாடுகளில் தெரு நாய்களைக் காண முடிவதில்லை? இந்தியாவில் மட்டும் ஏன் தெருவுக்குத் தெரு, நாய்கள் கூட்டம் கூட்டமாய் திரிகின்றன.

       காரணம் மிக எளிமையானது.

       மேலை நாடுகளின் தெருக்கள் சுத்தமானவை. குப்பைகளை அதற்குரிய இடத்தில் மட்டுமே போடுவார்கள். அக்குப்பைகளும் உடனுக்குடன் அப்புறப் படுத்தப் பட்டுவிடும். இதனால் தெரு நாய்களுக்கு, உண்ண உணவு என்பதே கிடைப்பதில்லை. உணவே கிடைக்காத இடத்தில், நாய்களுக்கு என்ன வேலை.

       ஆனால் நாம், தினம் தினம் குப்பைகளையும், மீதமிருக்கும் உணவுகளையும், உணவு உண்ட இலைகளையும் தெருவில்தானே போடுகிறோம். திருமண மண்டபங்களில் டன் கணக்கில், ஒவ்வொரு இலையிலும் மீதமிருக்கும் உணவுடன் இலைகள், தெருக்களைத்தானே தஞ்சமடைகின்றன.

      எனவே இந்தியாவில், தெரு நாய்களுக்கு உணவுப் பஞ்சம் என்பதே கிடையாது. இந்தியாவில் எத்துனையோ கோடிக்கணக்கான ஏழைகள் ஒரு  வேளை உணவுக்கு வழியில்லாமல் தவிக்க, நாய்களோ, உணவுப் பஞ்சம் என்றால் என்ன என்பது தெரியாமலேயே, அறியாமலேயே, தின்று தின்று கொழுத்து, தன் இனத்தை முழு வேகத்தில் பெருக்கிக் கொண்டே போகின்றன.

      தெரு நாய்களைக் குறைக்க ஒரே வழி, நாம் நமது தெருக்களையும், நகரத்தையும் ,நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வதுதான்.

     தெரு நாய்களின் எண்ணிக்கையினைக் கட்டுப்படுத்தினால், மக்களின் இறப்பினையும் கனிசமாகக் குறைக்கலாம்.

      நாய்களின் எண்ணிக்கையினைக் கட்டுப் படுத்த, உலக சுகாதார மையமானது, இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

     

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, தெருவில் திரியும் நாய்களை எல்லாம், நகராட்சி ஆட்கள், பெரும் கூண்டு வண்டியோடு வந்து, பிடித்துச் சென்று, கொன்று குவித்தார்கள். கொடூரமான செயல்தான்.

      கொன்று கொன்று அலுத்துப் போய்விட்டார்கள்.

      நூறு நாய்களைக் குறைத்தால், ஆயிரம் நாய்கள் புத்தம் புதிதாய் தெருக்களில் தோன்றின.

       தற்பொழுது நாய்களைப் பிடித்துப் போய், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் தெருக்களில் விடுகிறார்கள்.

      ஒரு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இலட்சக் கணக்கில், கோடிக் கணக்கில், பெருகியிருக்கும் நாய்கள் அத்துனைக்கும், அறுவை சிகிச்சை செய்வது என்பது, முடிவில்லாத காரியமாக, இருக்கிறது.

       எனவே நம்மிடம் மீதமிருக்கும் ஒரு வழி, சுத்தம் பேணுவதுதான். தெருக்களை சுத்தமாக வைத்துக் கொண்டாலே, தெருக்களில் உணவுப் பொருட்களை வீசாமல் இருந்தாலே, நாய்களின் எண்ணிக்கை படிப்படியாய் வெகுவேகமாய் குறையும்.

       என்னடா இவன், திடீரென்று நாய்களைப் பற்றிப் பேசுகிறானே, என்ற உங்களின் குழப்பம் புரிகிறது. என்னைப் பொருத்தவரை இவையெல்லாம் சில நாட்களுக்கு முன்பு வரை, எனக்குத் தெரியாத செய்திகள்தான்.

     சில நாட்களுக்கு முன்புதான் தெரிந்து கொண்டேன்.

   கடந்த 17.2.2016 புதன் கிழமை, பிற்பகல் 3.00 மணியளவில், தலைமையாசிரியரின் அறைக்குச் சென்றேன்.

     தலைமையாசிரியர் திரு வெ.சரவணன், உதவித் தலைமையாசிரியர் திரு அ.சதாசிவம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு து.நடராசன் ஆகியோருடன் புதிதாக ஒருவர்  பேசிக் கொண்டிருந்தார்.

     பார்த்த முகமாக இருக்கிறதே என்று அருகில் சென்று பார்த்தேன். எனக்கு நன்கு தெரிந்தவர்.


மருத்துவர் முருகன் அப்பு பிள்ளை
(Former ITEC Expert, High Commission of India)

தற்போது, மிஷன் ராபிஷ் அமைப்பின் இயக்குநர்

     சில ஆண்டுகளுக்குமுன்பு வரை எனது தெருவில் வசித்தவர். ஆவின் பால் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். நான் தற்போது வசிக்கும் வீட்டின் அடி மனையினை இவரிடமிருந்துதான் வாங்கினேன்.

       சிரித்த முகம். பழகுதற்கு இனியவர்.

      பள்ளி மாணவ, மாணவியரிடம் ராபிஷ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, எனது பள்ளிக்கு வந்திருந்தார்.

     நண்பர்களே, நாய்கள் பற்றி, நான் மேலே சொன்ன செய்திகள் அனைத்தையும், இவர் மாணவ மாணவியரிடம் கூறியபோதுதான், நானும் அறிந்து கொண்டேன்.

      மாணவர்கள் மத்தியில், மாணவர் போலவே, மாணவர்களின் மனமறிந்தவராய் பேசினார். நாய் போலவே நடித்துக் காண்பித்து, நாயின் செய்கைகள் பலவற்றைச் செய்து காண்பித்து, மாணவர்களின் கவனத்தை சில நொடிகளிலேயே தன்பால் ஈர்த்து, இறுதிவரை, மாணவர்களின் கவனம் திசைமாறாமல், சிதறாமல் பார்த்துக் கொண்டார்.

    

இன்னும் பல செய்திகளைக் கூறினார். தெரு நாய்களிடம் இருந்து, அவற்றின் கடியில் இருந்து எப்படி தப்புவது என்பதை எளிமையாகக் கூறினார்.

தெருவில் நாய் உணவினைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அதனைத் தொந்தரவு செய்யவே கூடாது.

நாய் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அதன் உறக்கத்தைக் கலைக்கவே கூடாது.

நாய் தன் குட்டிகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அருகில் செல்லவே கூடாது.

நாய்களுக்கு முன் ஓடக் கூடாது.

தெரு நாயை நேருக்கு நேராய்ப் பார்க்கக் கூடாது. அதாவது,  தெரு நாய் நம்மைப் பார்க்கும் பொழுது, நாமும் அந்த நாயின் கண்களை நேருக்கு நேராய் பார்க்கவே கூடாது.

விளையாட்டுத்தனமாய், கற்களைக் கொண்டு நாயினை அடிக்கக் கூடாது.

   இச்செயல்கள் அனைத்தும், நாய்களின் கோபத்தைத் தூண்டுபவை. எனவே எக்காரணம் கொண்டும் மேற்கண்ட செயல்களைச் செய்யவே கூடாது என்றார்.

     சரி, நாய் நம்மைக் கடிக்க வேகமாய், நாலு கால் பாய்ச்சலில் ஓடி வருகிறது. அப்பொழுது நாம் என்ன செய்வது?

    ஓடக் கூடாது. அசையாமல் நிற்க வேண்டும். நாய் ஓடி வருவதையே, கவனியாதது போல் நிற்க வேண்டும். நாய் அருகில் வந்தாலும், நாம் அதனைக் கவனியாததை உணர்ந்தால், தானே விலகிச் சென்றுவிடும் என்றார்.

     நாய் கடித்தே விட்டது. என்ன செய்வது?

    கடி பட்ட இடத்தில், தொடர்ந்து  15 நிமிடங்களுக்குத் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது தண்ணீர்க் குழாயினைத் திறந்துவிட்டு, கடிபட்ட இடத்தைக் காட்ட வேண்டும்.

    கடிபட்ட இடத்தை தண்ணீரில் காட்டிக் கொண்டே, ஏதோ ஒரு சோப்பைக் கொண்டு, குளிக்க உதவும் சோப்போ அல்லது துணி துவைக்க உதவும் சோப்போ, ஏதோ ஒரு சோப்பால், தொடர்ந்து கடிபட்ட இடத்தை, சுத்தப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

      கழுவுவதாலும், சோப்புப் போட்டுச் சுத்தப்படுத்துவதாலும், 94.4 சதவீத வைரஸ் கிருமிகள் நீங்கி விடும்.

       பின்னர் டெட்டால் அல்லது ஸ்பிரிட்டை கடிபட்ட இடத்தில் தடவலாம்.

      ஆனால் கடிபட்ட இடத்தில் கட்டு போடவேக் கூடாது.

      பின்னர் மருத்துவ மனைக்கு விரைந்து செல்ல வேண்டும்.

      ஐந்தே ஐந்து ஊசிகள்.

      ராபிஷ் நோய் நம்மை நெருங்கவே நெருங்காது.

      மருத்துவர் முருகன் அப்பு பிள்ளை அவர்களின் பேச்சு, மாணவர்களிடத்து மட்டுமல்ல, என்னிடத்திலும் புதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தியது.

விழிப்புணர்வோடு இருப்போம்   ராபிஷ் தவிர்ப்போம்.

------------------


    

68 கருத்துகள்:

 1. விழிப்புணர்வைத் தரும் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா! வீட்டில் வளர்க்கும் நாய்களுக்குத் தவறாமல் தடுப்பூசியும் போடவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. விழிப்புணர்வைத் தரும் பகிர்வு.நன்றி..

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள் தகவல்.. நல்லதொரு பதிவு..

  பதிலளிநீக்கு
 5. ராபிஸ் நோய் பற்றிய அருமையான விழிப்புணர்வு பதிவு. நன்றிகள் பல.

  தெரு நாய்கள் அனைத்துமே நோயை பரப்பக் கூடியவை அல்ல என்பதை நம்ம மக்கள் புரிந்துக் கொள்வதில்லை, முதலில் அவற்றை அருவருப்பான ஒரு ஜந்து என பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

  குப்பைகளை சுத்தம் செய்யும் தெரு நாய்களும் காகங்களும் இல்லை என்றால் நம் ஊர் நாற்றத்தை சகிக்க முடியாது. துப்புரவு தொழிலாளிகள் இவை.

  அதே சமயம் இவற்றின் அபரீத பெருக்கத்தை கட்டுப் படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும், வீட்டிற்கு வீடு வெளிநாட்டு நாய்களை வளர்க்க ஆர்வம் கொண்ட நாம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ராஜபாளையம் சிப்பிப்பாறை கோம்பை போன்ற நாட்டு ரகங்களை வளர்க்க முன் வர வேண்டும்.

  தெருநாய்களை பிடித்து கொல்வது மிக கொடூரமானது, மாறாக அவைகளை வளர்க்க விரும்பும் சமூக ஆர்வலர்களிடம் ஒப்படைத்து விடலாம்.

  நாய் கடித்த பிறகு செய்ய வேண்டிய முதலுதவிகள் முக்கியமானவை, பகிர்வுக்கு மிக்க நன்றிகள் + பாராட்டுகள் !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ராஜபாளையம் சிப்பிப்பாறை கோம்பை போன்ற நாட்டு ரகங்களை வளர்க்க முன் வர வேண்டும்.
   உண்மைதான் சகோதரியாரே
   நமது நாட்டு இன நாய்களின் பெருமையினை அறியாமல்தான் இருந்து விட்டோம்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 6. பயனுள்ள தகவல்.நானும் உங்களைப் போலவே வீட்டில் நாய் வளர்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. மிக அருமையான கருத்துப்பெட்டகம் ..நாய்க்கு இத்தனையா? நன்றி நண்பரே ....

  பதிலளிநீக்கு
 8. நாய்கள் பலவும் உணவுதேடி நகர்ப்பக்கம்வருகின்றனவாம்புள்ளி விவரங்கள் பயமுறுத்துகின்றன

  பதிலளிநீக்கு
 9. வீட்டிலே வளர்க்கிற நாய்ங்களுக்கு பெரும்பாலும் 'ஜூலி'ங்கிற பெயர்தான் இருக்கும் போலிருக்கு ,நல்ல தகவல் :)

  பதிலளிநீக்கு
 10. விழிப்புணர்வைப் பற்றிய தங்களது நடையில் அருமையான கட்டுரை நண்பரே

  //நான்கு வாரத்தில் இருந்து 12 வாரத்தற்குள் உயிர் உடலை விட்டுப் பறக்கும்//

  இந்த இடத்தில் அவரின் வேதனை மட்டுமல்ல 12 வாரமும் நாம் அவரை மருத்துவமனையில்தானே வைத்திருப்போம் இன்றைய நிலையில் இதன் செலவு என்னாகும் இருப்பவர்கள் பிரச்சினை இல்லை இல்லாதவர்களின் நிலை ? இவ்வளவு செய்தும் அவரின் மணரம் உறுதி இதெல்லாம் நாம் செய்யும் சிறிய தவறின் தொடக்கமே.... வெட்கப்பட வேண்டிய விடயமே.
  தமிழ் மணம் 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே
   நாம் செய்யும்சிறிய தவறின் தொடக்கம்அல்லது நமது விழிப்புணர்வுஇன்மையின் பலன்
   நன்றி நண்பரே

   நீக்கு
 11. நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு/

  பதிலளிநீக்கு
 12. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக நல்ல விழிப்புணர்வு பதிவு!
  தமிழ் மணம் வாக்களிக்க இயலவில்லை.

  பதிலளிநீக்கு
 13. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் அய்யா.
  அவரை ஊர் ஊராகப் போய்ப் பேச வைக்க அரசே ஏற்பாடு செய்ய வேண்டும், அல்லது நம் தொடர்புள்ள அனைவரிடமும் இச்செய்தியைப் பகிர வேண்டும் அய்யா. நல்ல பகிர்விற்கு மிக்க நன்றியும் வணக்கமும், தம வாக்கு 11உம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருத்துவர் அப்பு பிள்ளை முருகன் அவர்கள் ராபிஷ் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியில், ஒவ்வொரூ ஊராக பயணித்துக் கொண்டேதான் இருக்கிறார்
   நன்றி ஐயா

   நீக்கு
 14. பயன்மிக்க பகிர்வு ஐயா.

  பதிலளிநீக்கு
 15. விழிப்புணர்வு செய்தி ....

  பதிலளிநீக்கு
 16. நாய்கள் என்றாலே நடுங்கும் எனக்குக்கூட இந்தப்பதிவு சற்று மனத்தெளிவையும் துணிவையும் தந்துள்ளது. நன்றி ஐயா. இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மருத்துவர் முருகன் அப்பு பிள்ளை அவர்களுடைய அற்புதமான பணிக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 17. நல்ல விவரமான பயனுள்ள பதிவு. தெருநாய்கள் பற்றிய விழிப்புணர்வு குறிப்புகள் தனிச்சிறப்பு.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்
  ஐயா

  யாவரும் அறியவேண்டிய விடயம் தங்களின் கருத்தில் மிக அரமையாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 19. அருமையான தெள்ளீய பதிவு

  பதிலளிநீக்கு
 20. பல நல்ல தகவல்கள் கொண்ட அருமையான பதிவு. தெருநாய்களின் பிரச்சினையால் நானெல்லாம் பதினோரு மணிக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் வெளியே வரவே மாட்டேன்

  பதிலளிநீக்கு
 21. முதலில் பாராட்டுகள்! நல்ல விழிப்புணர்வுக் கட்டுரைக்கும், தகவல்களுக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

  கீதா: நான் பேச வேண்டும் என்று நினைத்து எழுதி பாதியில். (இப்படி நிறைய இருக்கின்றது)முன்பு ஒரு முறை எழுதியிருக்கின்றேன் ஆனால் விரிவாக இல்லாததால் மீண்டும் அதைப் புதுப்பித்து காத்திருப்புப் பட்டியலில் முடிவு பெறாமல் இருக்கிறது. மகன் கால்நடை மருத்துவன் என்பதால் விழிப்புணர்வுக் கட்டுரையாக. லெப்டோஸ்பைரோசிஸ் பற்றி எழுதிவிட்டேன்.

  நீங்கள் மிக அழகாக நல்ல தமிழில் சொல்லிவிட்டீர்கள் சகோ! அதுவும் தெரு செல்லங்கள் எல்லாம் ஆபத்தானவை அல்ல. நோய் பரப்பிகளும் அல்ல. மக்கள்தான் இந்தச் செல்லங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கின்றனர்.

  இவை கடிக்காமல் எப்படி நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னவை அனைத்தும் மருத்துவர் சொல்லிவருவது மிகச் சிறப்பு.

  நாம் நம் கைகளை நன்றாக விரித்து கையில் ஒன்றுமில்லை என்று காட்டிவிட்டாலும் அவை புரிந்து கொண்டுவிடும். அவை அருகில் வரும் போது கைவிரல்களை மூடி வைத்துக் கொள்ளக் கூடாது. நம் பயத்தை வெளிப்படுத்தக் கூடாது - கத்தியோ, கம்பெடுத்தோ, கல்லெடுத்தோ...

  ரேபிஸ் வெளிநாடுகளில் நீங்கள் சொல்லுவது போல் நாய்களினால் இல்லை என்றாலும் வேறு வகையில் இருக்கிறது என்றாலும் நம் நாடு அளவு இல்லைதான். ரேபிஸ் நோய்க்கு நாய்கள் மட்டும் காரணமல்ல. இதைப் பற்றிப் பதிவில் எழுதுகின்றேன்.

  அருமை சகோ மிக மிக அழகான, விரிவான, நல்ல விளக்கங்களுடன் எல்லோருக்கும் பயனுள்ள விழிப்புணர்வுக் கட்டுரைக்கு வாழ்த்துகள். பாராட்டுகள் சகோ!!எல்லோரையும் சென்றடைய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக நீண்ட கருத்துரைக்கு நன்றி சகோதரியாரே
   நம் நாடு ராஷ் பற்றிய விழிப்புணர்வில் மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறது .
   தங்களின் ராபிஷ் குறித்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் சகோதரியாரே
   நன்றி

   நீக்கு
 22. உங்கள் ஜூலி ரொம்ப அழகாக இருக்கின்றாள். பெண் செல்லங்கள் மிகவும் அன்புடன் இருக்கும். எங்கள் வீட்டிலும் இரு பெண் செல்லங்கள் கண்ணழகி, ப்ரௌனி, நாட்டுச் செல்லங்கள். துளசி வீட்டில் ஆன் செல்லம் டைகர்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரியாரே
   ஒன்று தெரியுமா
   ஜுலி எங்களின் வீட்டிற்கு வந்தபின்
   வீட்டின் சூழ்நிலையினையே தலைகீழாக மாற்றிப் போட்டு விட்டது.

   நீக்கு
 23. அய்யா இவரை ஊர் ஊராகக் கொண்டுபோய்ப் பேசவைக்க வேண்டும்! அவ்வளவு புதிய செய்திகள் முக்கியமாக நாய் வளர்ப்போர்க்குத் தேவையான செய்திகள். நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 24. பயனுள்ள தகவல்களை சுவாரசியமாக சொன்னது அருமை

  பதிலளிநீக்கு
 25. நாயைப் பற்றி ஒரு எச்சரிக்கை பதிவுகள், மாணவர்களுக்கு நல்ல ஆலோசனை குறிப்புகள், அதேபோல நம்மை சுற்று தூய்மையாக வைத்துக்கொள்ளும் கடமையுணர்வை தூண்டியதற்கு நன்றி.விழிப்புணர்வுடன் காலத்திற்கேற்ற அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 26. அருமையான வழிகாட்டல்

  பதிலளிநீக்கு
 27. நல்ல தகவல்
  மிக்க நன்றி.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 28. லக்சம்பேர்க்கில் இருந்து டாட்டீனா எனக்கு ஒரு சாட்சி கொடுக்க இங்கே இருக்கிறார்
  நான் HIV எய்ட்ஸ் வைரஸ் SAGBO DIBA மூலம் குணமாகி எப்படி ஒரு அதிசயம் இருந்தது,
  நான் இந்த பெரிய மனிதன் சந்தித்த வரை ஒரு சிகிச்சை இருந்தது நம்பவில்லை
  இணையம், நீங்கள் ஹெச் நோயாளி மற்றும் நீங்கள் சிகிச்சை பெற விரும்பினால், உங்களை காப்பாற்ற
  மருந்துகள் வாங்குவதற்கு சில பணம், DR SAGBO மூலிகை மூலமும் மூலிகையையும் பயன்படுத்துங்கள்
  மருத்துவம் குணமடைந்து 20 நாட்களுக்குள் குணப்படுத்த முடியும், அவர் தான் ஒரே ஒருவர்
  எச்ஐவி எய்ட்ஸ் வைரஸ் மற்றும் பிற ஆபத்தான நோய்களைத் தவிர்ப்பதற்கு இது எதை அளிக்கலாம்
  நோய்கள், நான் சில கடினமான காலங்களை கடந்து விட்டேன், நான் உறைந்திருந்தேன்
  $ 2600DD வேறு மக்கள் இருந்து நான் என்னை கொடுத்த டிஆர் SAGBO சந்தித்தார் வரை
  20 நாட்களுக்குள் வைரஸ் போய்விடும் என்றும் என் உடல் உறுதியளிக்கும் என்று ஒரு முழுமையான உறுதி
  முறைமை மீண்டும் ஆரம்பிக்கப்படும், முதலில் நான் சந்தேகிக்கிறேன், எனவே நான் அதை ஒரு வாய்ப்பு, சில நாட்கள் கொடுக்கிறேன்
  பின்னர் என்னால் நியமிக்கப்பட்ட ஒரு மருத்துவரால் சோதனை செய்யப்பட்டது.
  நீங்கள் இருக்கிறீர்களானால், நீங்களும் என்னால் குணமடைய முடியும்
  தொடர்பு டாக்டர் SAGBO
  EMAIL ADDRESS: drsagbo6088@gmail.com நீங்கள் உண்மையாக நம்புவதில்லை
  அவரது ஹேர்பேல் மெடிக்கல்ஸைப் பயன்படுத்தினால், ஒரு பயனும் இல்லை
  முயற்சி செய்வதில். நான் சாட்சி கொடுக்க அடுத்ததாக இருப்பேன் என்று நான் உத்தரவாதம் தருகிறேன்.
  இதைப் படிப்பதற்கு நீங்கள் எடுத்துக் கொள்வதற்கு நன்றி
  WhatsApp மற்றும் அழைப்பு.
  தொலைபேசி: +2347019642881
  : EMAIL drsagbo6088@gmail.com
  அவர் என்னிடம் கூறினார்:
  ஹெர்பெஸ் 1 & 2, ஸ்ட்ரோக், கேன்சர், ஹெச், ஜெனிட்டல் மருக்கள்,
  ஹெபடைடிஸ் பி, ஆஸ்துமா, டென்ஜ், மூளை கட்டி, நீரிழிவு மற்றும் இன்னும் பல.

  பதிலளிநீக்கு
 29. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 30. நன்றியுள்ள ஜீவனால் பல கரைச்சல்களும் உண்டு. அதற்கு அறிவு குறைவு.எனவே அறிவு அதிகமான மனிதன் தான் சரியாக நடக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு