விஜயதசமி. இரவு நேரம்.
சிவகங்கை..
தீ பந்தங்களின் ஒளியில் இராஜராஜேசுவரி அம்மன்
கோயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.
அப்பொழுதுதான் கோயிலுக்கு அருகில் வந்த, அந்தப்
பெண், இரு கைகளாலும் கூட்டத்தைப் பிளந்து கொணடு முன்னேறுகிறார்.
சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள். மகிழ்வைச்
சுமந்த உதடுகள்.
உடலைச் சுற்றி இறுகப் பற்றியிருக்கும் புடவைக்குள்,
ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
சாதாரணப்
பார்வைக்குப் புலப்படாத வகையில், அப்பெண்ணின் புடவைக்குள் ஓய்வெடுக்கிறது, ஓர் வாள்.
என்னது வாளா?
ஆம் கூர்மையான கொடிய வாளினை மறைத்துக் கொண்டு
கோயிலுக்குள் மெல்ல மெல்ல முன்னேறுகிறார்.
கோயில் முழுவதும் பெண்கள்.
கோயிலின் விளக்கு ஒளியில், கூடியிருக்கும் பெண்களை
உற்றுப் பார்ப்போமேயானால், மெல்ல மெல்ல ஓர் உண்மை விளங்குகிறது.
நூற்றுக்கு தொண்ணூறு பேர் பெண்களே அல்ல.
ஆண்கள்
என்ன ஆண்களா?
ஆம் ஆண்கள்தான். ஆனால் புடவையில், முகத்தின்
மீசையினைச் சுத்தமாய் வழித்து எடுத்துவிட்டுப், பெண்களாய் மாறு வேடமிட்ட ஆண்கள்.
ஒவ்வொருவரின் உடைக்குள்ளும் பயங்கரமான ஆயுதங்கள்.
அந்தப் பெண் நிதானமாக முன்னேறிச் செல்கிறார்.
கோயிலின் கருவறைக்கு முன், இறைவியை கண்மூடி,
இருகரம் கூப்பி, வணங்கிக் கொண்டிருக்கும், ஒரு பெண்ணின் தோளைத் தொடுகிறார்.
மெதுவாய் தலை திருப்பி நோக்குகிறார் அவர்.
முகத்தை ஊடுருவி, அகத்தினுள் புகுந்து, எதிராளியின்
எண்ண ஓட்டங்களைத் துல்லியமாய படிக்கும், சக்தி வாய்ந்த கண்கள். மிடுக்கானத் தோற்றம்.
இவர் சாதாரணப் பெண்ணல்ல என்பதை முதற் பார்வையிலேயே
உணரலாம்.
ஆம் இவர் சாதாரணப் பெண் அல்ல.
இவர்தான்
வீரமங்கை வேலு நாச்சியார்.
வேலு நாச்சியாரின் காதருகே குனிந்த
அந்தப் பெண், திருப்பத்தூர் கோட்டையை சின்ன மருது படையும், உம்தத் உம்ரா படையை பெரிய மருதுவும்
முறியடித்துவிட்டதாகச் செய்தி வந்துள்ளது தாயே.
வேலு நாச்சியார் ஒரு கணம் கண்மூடி,
இராஜராஜேசுவரி அம்மனை வணங்குகிறார்.
அடுத்த நொடி, உடையினுள், மறைத்து வைத்திருந்த
வாளை, வேகமாய், வெகு வேகமாய் உருவி எடுத்து, தலைக்கு மேலே உயர்த்துகிறார்.
வீரர்களே
தாக்குங்கள்
கோயிலின் அத்துனைச் சத்தங்களையும் மீறி, ஓங்கி
ஒலித்தது வீர மங்கையின் வீராவேச உத்தரவு.
அடுத்த நொடி ஒரு பிரளயமே வெடிக்கிறது.
பெண்களும், பெண்களின் உடையில்
இருந்த ஆண்களும் வாளை உருவி, வீதிக்கு வந்து, எதிர்பட்ட வீரர்களை எல்லாம் வெட்டிச்
சாய்க்கிறார்கள்.
தெருவெங்கும், தலைகளும், தலைகளற்ற முண்டங்களும்
இரத்த வெள்ளத்தில் உருண்டோடுகின்றன.
கண்ணிமைக்கும் நேரத்தில், எதிர்பாராத தாக்குதல்.
ஆங்கிலேயப் படை வீரர்கள் நிலை குலைந்து போனார்கள்.
வேலு நாச்சியாரிடம் செய்தி கூறிய அந்தப்
பெண்ணும், வாளை உருவி, தலைகளைத் தரையில் உருள விடுகிறார்.
என்னதான் ஆக்ரோசமாக சண்டையிட்டாலும்,
அப்பெண்ணின் கவனமெல்லாம், வேலு நாச்சியாரின் மேல்தான் இருக்கிறது.
வேலு நாச்சியாரின் வீராவேசத் தாக்குதல் கண்டு
மனம் மகிழ்ந்திருந்த, இவரின் செவிகளில், அந்த ஆண் குரல் விழுகிறது.
வீரர்களே, ஆயுதக் கிடங்கில்
இருக்கும் வெடி மருந்துகளை எடுத்து வீசுங்கள்.
குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப்
பார்க்கிறார்
கோயிலுக்கு அருகில் இருக்கும் அரண்மனையில்
இருந்து, ஆங்கிலேயத் தளபதி பான்ஜோர் கூச்சலிடுவது தெரிகிறது.
ஒரு கணம் திடுக்கிட்டுத்தான் போனார்.
என்னது வெடி குண்டுகளா?
நாமோ
வேளும் ஈட்டியும் ஏந்தி, இழந்த மண்ணை மீட்கப்
போராடிக் கொண்டிருக்கிறோம். வெடி குண்டுகள் நம்மீது வீசப் பட்டால் பெரும் பாதிப்பல்லவா
ஏற்படும். கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சி, ஒரு நொடியில் பழாகிவிடுமே
ஏதாகிலும் செய்ய வேண்டும், செய்தே தீர வேண்டும்.
இந்த வெள்ளையரை இம் மண்ணை விட்டு விரட்டியே ஆகவேண்டும். இழந்த இம் மண்ணை தாய் மண்ணை
மீட்டே ஆக வேண்டும்.
வேலு நாச்சியாருக்கு வெற்றியைத் தேடித் தந்தே
ஆக வேண்டும்.
என்ன செய்வது.
எப்படி வெடிகுண்டுத் தாக்குதலை எதிர்கொள்வது.
ஒரு நொடி, ஒரே நொடி, ஒரே நொடியில் மின்னலாய்
வெட்டியது ஓர் எண்ணம்.
ஆம், இதுதான் சரியான வழி
வாளைத் தூக்கி எறிந்தார்.
கோயிலுக்குள் ஓடினார்.
கோயிலின் சுவற்றில் சொருகப்பட்டிருந்த, தீ
பந்தம் ஒன்றினைக் கையில் எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை நோக்கி ஓடினார்.
வேலு
நாச்சியார் வாழ்க
வீரத்தாய்
வேலு நாச்சியார் வாழ்க
நெய்யினால் முழுவதுமாய் நனைந்திருந்த, தன் உடலுக்குத்,
தீ பந்தத்தால், தானே தீ வைத்துக் கொண்டார்.
அடுத்த நொடி உடல் முழுவதும் தீ,
கொழுந்து விட்டு எரிய, ஆயுதக் கிடங்கினுள் நுழைந்தார்.
ஆயுதக் குவியலுக்குள் வேங்கையெனப் பாய்ந்தார்.
வேலு
நாச்சியார் வாழ்க
வீரத்தாய்
வேலு நாச்சியார் வாழ்க
அடுத்த நொடி, சிவகங்கையே கிடு கிடுத்தது.
வானத்தில் இருந்து இறங்கும் பெரு இடியென, பூமி
அதிர, குண்டுகள் குவியல் குவியலாய், வெடித்துச் சிதறத் தொடங்கின.
ஆயுதக் குவியலுக்குள், தானே ஓர் ஆயுதமாய்
மாறிப் புகுந்த, அப்பெண், அவ்வீரப் பெண், நார் நாராகப் பிய்த்து எறியப்பட்டார்.
நண்பர்களே, உலகின் முதல் மனித வெடி குண்டு
இவர்தான்.
தாய் நாட்டை மீட்க, தமிழ் மண்ணைக் காக்க,
தன் அரசிக்கு வெற்றியைக் காணிக்கையாக்க, தானே வெடி குண்டாய் மாறிய, இவ்வுலகின் முதல்
பெண், வீரத் தமிழச்சி இவர்தான்.
இவர்தான்
வீரத்தாய் குயிலி.
….
குயிலியின் நினைவுகள், குயிலியின் தன்னலமற்ற
தியாகம், அப்பழுக்கற்ற வீரம் மனதில் சுழன்றடிக்க அமைதியாய் நின்றோம்.
தாயே, நின் வீரத்திற்கு
ஈடு, இணை ஏது.
தாங்கள் வாழ்ந்த மண்ணில், தமிழ் மண்ணில்
நாங்களும் வாழ்கிறோம்
என்பதே
எங்களுக்குப் பெருமை.
வீரத்தாய் குயிலியைப் போற்றுவோம்.