29 ஜூன் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன்




          1976 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள். இந்நாள் என் வாழ்வில் மறக்க இயலாத நாள்.

        தாயின் கருவறையில் குடியிருந்த நான், அந்த அன்புத் தாயின் கரங்களில் முதன் முதலாய் தவழ்ந்த நாள்,  இந்நாள். ஆம் நண்பர்களே, நான் பிறந்த பொன்னாள் இது.

        தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தின் கோட்டப் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவன் நான்.

     அழகிய கிராம்ம். அன்பு நிறைந்த பெற்றோர். வேறு என்ன வேண்டும் எனக்கு.


      என் தந்தையிடம் அன்பும், பாசமும் இருந்த அளவிற்குப் பணம் இல்லை. ஆயினும் அக்குறை தெரியாமல்தான் என்னை வளர்த்தார்.

     அரசுப் பள்ளியில் மட்டுமே படித்தேன். அதுவும் தமிழ் மொழியில் மட்டுமே படித்தேன். என்ன இல்லை அரசுப் பள்ளியில்.

      எனது ஆசிரியர்கள் அனைவருமே என்னை செதுக்கி, செதுக்கித்தான் உருவாக்கினார்கள். அவர்கள் எழுத்தை மட்டும் கற்றுத் தரவில்லை. தன்னம்பிக்கையினையும், துணிவையும் கல்வியோடு கலந்து ஊட்டித்தான் என்னை வளர்த்தார்கள்.

        அமெரிக்கன் கல்லூரியின் பசுமை நிறைந்த சூழ்நிலையில் என் கல்லூரிப் படிப்பு. கல்லூரியின் இறுதி ஆண்டில், அந்தப் பயம் என்னை மெல்ல மெல்ல தொற்றிக் கொண்டது.

       கல்லூரிப் படிப்பு முடியப் போகிறது. அடுத்து என்ன செய்யப் போகிறோம்?. போட்டிகள் நிறைந்த உலகில் காலடியை வைத்தாக வேண்டுமே, என்ன செய்யப் போகிறோம்? எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

    கல்லூரிக்கு அடுத்து என்? என்ற கேள்வி என் உள்ளத்தை துளைக்கத் தொடங்கியது.

          ஆனாலும் மனதில் ஓர் ஆசை. இள வயது முதலே, அந்த ஆசை என்னைத் தொடர்ந்தே வந்திருக்கிறது. ஆசை என்று கூடச் சொல்ல முடியாது, மோகம்.

ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும்.

    புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக கழகத்தில் சேர்ந்து படிக்க முடிவு செய்தேன். மே மாதம் 1997 இல் நுழைவுத் தேர்வு எழுதினேன். வெற்றியும் பெற்றேன்.

      

முதல், வட இந்தியப் பயணம். இந்தி மொழியில் ஒரு வார்த்தைக் கூட தெரியாத நான், துணிந்து, தனித்துப் புறப்பட்டேன்.

       எனது ஆசிரியர்கள் வழங்கிய தன்னம்பிக்கையினை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

    இந்தியாவிலேயே அதிக பாடச் சுமையுடைய பல்கலைக் கழகங்களில் ஒன்றுதான், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம்.

    அயராமல் படித்தேன். தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல வளர்ந்தது.

     1999 ஆம் ஆண்டு ஜுன் மாதம், மத்திய தேர்வாணைக்குழு நடத்திய முதல் நிலைத் தேர்வும் வந்தது.

       தேர்வறையில் நுழைந்தேன். தேர்வு தொடங்கிய சில வினாடிகளிலேயே, எனது தன்னம்பிக்கை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு, கனவு, இலட்சியம் எல்லாம் வெடி வைத்துத் தகர்த்தது போல் தூள் தூளானது.

   நான் இதுவரை எதிர்கொண்ட தேர்வு முறைகளுக்கு எல்லாம், முற்றிலும் எதிரான தேர்வு முறை.

      என் போன்றோர்களால், விடை எழுத இயலா கேள்வி அமைப்பு. திகைத்துத்தான் போனேன்.

        சிறு வயது முதல், என்னில் மெல்ல மெல்ல, வளர்ந்த ஆசைகள் எல்லாம், ஒரே நிமிடத்தில் தகர்ந்து தவிடு பொடியாயின.

       விழியோரங்களில் கண்ணீர் மெல்ல, மெல்ல எட்டிப் பார்த்தது.

       பாவம், என் கண்களுக்கு அது மட்டும்தானே தெரியும்.

       நண்பர்களே, தங்களுக்குப் புரியவில்லைதானே. தேர்வு முறை எப்படி எனக்கு எதிராய் திரும்ப முடியும் என்று புரியவில்லைதானே,

      உடற்குறைபாடு உடையவர்களால், எழுத முடியாத வகையில் கேள்வி முறைகள் அமைந்திருந்ததுதான், என் விழி நீருக்குக் காரணம்.

      இன்னும் புரியவில்லையா, நான் பிறவி முதல் பார்க்கும் சக்தியினை இழந்தவன்.

                                                                                                                









தொடர்ந்து பேசுவேன்.








-----------------------------------------------------------------------------

நண்பர்களே,

     வணக்கம். இந்த இனிய நண்பர் திரு வெற்றிவேல் முருகன் அவர்களை, இரண்டு வருடங்களுக்கு முன், அவரது திருமணத்தின்போது, சுவாமிமலையில் சந்தித்தோமே நினைவிருக்கிறதா?

        பிறவியிலேயே கண் பார்வையினை இழந்தபோதும், சோர்ந்து விடாமல், மூலையில் முடங்கிவிடாமல், வாழ்வினைத் துணிச்சலுடன் எதிர் கொண்டு. வெற்றி பெற்ற தீரர் இவர்.

      வெற்றிவேல் முருகன் தனது முனைவர் பட்ட ஆய்வினை மெற்கொண்டது எங்கு தெரியுமா?

      தமிழ் நாட்டில் இல்லை.

      இந்தியாவிலேயே இல்லை

      நியூ யார்க்கில்

     அமெரிக்காவின் நியூயார்க்கில்.

     கல்வி உதவித் தொகையினை மட்டுமே நம்பி, தன்னந்தனியனாய் புறப்பட்டு, விமானம் ஏறி, பறந்து, அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பினைப் படித்தவர் இவர்.

      சில மாதங்களுக்கு முன், வெற்றிவேல் முருகன் அவர்களிடமிருந்து, எனக்கு ஓர் மின்னஞ்சல் வந்தது.

     மின்னஞ்சலின் இணைப்பில் ஒரு பி.டி.எஃப்., பைல்

     சுமார் 120 பக்கங்களில், வெற்றிவேல் முருகன் அவர்களே, தட்டச்சு செய்த, அவர்தம் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்கள், ஒவ்வொரு பக்கத்திலும்.

      வியந்து போனேன் நண்பர்களே, வியந்துதான் போனேன்.

      வெற்றிவேல் முருகன் அவர்களின் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களை, என் எழுத்தில், என் போக்கில், தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

       வாருங்கள், வெற்றிவேல் முருகனின் கதையினைக் கேட்போம்


என்றென்றும் தோழமையுடன்,
கரந்தை ஜெயக்குமார்