என்பணி கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே
என்றுபணி யாற்றும் இனியநல் ஜெயக்குமாரா
பண்புடனே பணியாற்றி, பயனுள்ள நூலியற்றும்
உன்பணி தொடர்ந்திடவே உளமாற வாழ்த்துகிறேன்
என்று
என்னை மனமார வாழ்த்திய நல் இதயம், தன் துடிப்பினை நிறுத்தி,
விறகுஇடை மூடி அழல்கொடு போட
வெந்து
விழுந்துமு றிந்து நிணங்கள்
உருகி எழும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும்இ லாத உடம்பை
என்னும்
பட்டினத்தாரின் வாக்கிற்கேற்ப, அணலில் கரைந்து, காற்றில் கலந்த காட்சியைக் காணும் துர்பாக்கிய
நிலை.
தமிழை மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட
பெரிய விழாவாக இருந்தாலும், விழாவினை ஏற்பாடு செய்தல், தக்கவரை அழைத்தல், அழைப்பிதழ்
தயார் செய்தல், மேடை நிர்வாகம், நிகழ்ச்சி நிரலினை வடிவமைத்தல் என ஒவ்வொன்றையும் எனக்குக்
கற்றுக் கொடுத்த ஆசான்.
எனக்கு வழி காட்டியவர்
என்னை நெறிபடுத்தியவர்
இன்று இல்லை. நெஞ்சம் கலங்குகிறது.
ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் முப்பதாண்டுகள்
புற்றுநோயுடன் தளராது போராட்டம் நடத்தியவர்.
சில மாதங்கள் மட்டுமே இனி தங்கள் வாழ்வு நீடிக்கும்,
என்று ஆங்கில மருத்துவர்கள் கைவிட்ட பிறகும், சித்த மருத்துவத்தை நாடி, முழுதாய் முப்பதாண்டுகள்,
புன்னகையோடு வாழ்ந்து காட்டிய மறவர்.
செய்தியறிந்து காணச் சென்ற, எனது கரம் பற்றி,
அவரருகிலேயே அமரச் செய்து, முழுதாய் ஒரு மணி நேரம் சளைக்காமல் பேசினார்.
கடந்த கால நினைவலைகளில் மூழ்கி, தன் உடல் வலியினையும்
மீறி மகிழ்வோடு பேசினார்.
அடடா
கடலாடி வெள்ளைக் கோழி
கிழடல்ல
மலடல்லவோ
இவ்வரிகளை
தவறின்றி, சரியாக மீண்டும் மீண்டும் கூறி, பயிற்சி மேற்கொண்டால், தமிழ் உச்சரிப்பு
மேம்படும் என்று மீண்டும் மீண்டும் கூறி மகிழ்ந்தார்.
மரணப் படுக்கையில் படுத்தபடி, விழியோரம் கண்ணீர்
கசிய கசிய, உதட்டிலோ புன்னகை வழிய, வழிய, என்
ஆசான் பேசிய பேச்சுக்கள், என் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருக்கும்.
புலவர்
சிவ.திருஞானசம்பந்தம்
நேற்று 11.1.2017, புதன் கிழமை காலை 7.00 மணியளவில் விழி மூடி, மீளாத் துயிலில்
ஆழ்ந்தார்.
மாலை 6.30 மணி.
கும்பகோணத்திற்கு அருகில், சாக்கோட்டை என்று
அழைக்கப்படும் சாகாஜிக் கோட்டையில், நாச்சியார் கோயில் சாலையில், நானும், நண்பரும்
உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும், முதுகலை
ஆசிரியரான திரு மு.பத்மநாபன் அவர்களும் நிற்கிறோம்.
விறகுப் படுக்கையில், ராட்டிகளை உடல் முழுதும்
போர்வையாய் போர்த்தியபடி, இதோ
எங்கள் ஆசான்
எங்கள் வழிகாட்டி
எங்கள் நெறிகாட்டி
எங்கள் நண்பர்
எங்கள் தோழர்.
சாலையை ஒட்டியவாரே மயானம்.
என் ஆசானின் பொன்னுடலுக்கு, அவரது மருமகனார்
தீ மூட்ட, மெல்ல மெல்ல, ஆசானின் உடலினை ஆரத் தழுவி, மெதுவாய், மிகமெதுவாய் மேலெழுகிறது செந்தணல்.
இதோ என் ஆசான், எங்களின் ஆசான் நெருப்போடு நெருப்பாய்,
காற்றோடு காற்றாய் கலந்து கொண்டிருக்கிறார்.
சாலையோரம் நின்றிருந்த மூவருமே, எங்களையும்
அறியாமல் பெருமூச்சு விடுகிறோம்.
காற்றோடு காற்றாய் கலந்த எங்கள் ஆசான், எங்கள்
சுவாசக் காற்றோடு காற்றாய் கலந்து, உள் நுழைந்து, உடலெங்கும் பரவுவதைப் போன்ற உணர்வு.
உடல் சிலிர்க்கிறது.
புறக் கண்களால் இனி எங்கள் ஆசானைக் காண இயலாது.
ஆனாலும், எங்கள் அகத்தோடு அகமாய் இணைந்துவிட்ட,
ஒன்றெனக் கலந்துவிட்ட, எங்கள் ஆசான் உணர்வுகளால் என்றென்றும், எங்கள் உடன் இருப்பார்,
எங்களை வழி நடத்துவார்.
ஆசானுக்கு
எங்கள்
அன்பு வணக்கங்கள்.