நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற்
குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்
என்று
முழங்குவாரல்லவா, முண்டாசுக் கவி, அம்முண்டாசுக் கவி, இமைமூடி மீளாத் துயிலில் ஆழ்ந்த
நாள் செப்டம்பர் 11.
2009, செப்டம்பர் 11.
சென்னை.
மகாகவி கண் துஞ்சிய நாளில்தான், இக்கவியும், தன்
அன்பு மகளின் இல்லத்தில் சுவாசம் துறந்து, கண்ணாடிப் பேழையுள் கண்மூடிப் படுத்தார்.
உற்றார், உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தனர்.
காடு நோக்கிய கடைசிப் பயணம் எப்பொழுது?
என்ன அவசரம், சில நாட்கள் ஆகட்டுமே,
கவியின் தவப் புதல்வர், ஒற்றை வரியில் பதிலுரைத்தார்.
உறவினர்கள் அதிர்ந்தனர்.
என்னது, சில நாட்கள் ஆகட்டுமா?
ஆம்
அமைதியாகவே மகன் பதிலுரைத்தார்.
கவி கண்ணாடிப் பேழையுள் உறக்கத்தைத் தொடர்ந்தார்.
ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் ஏழு நாட்கள் கடந்தன.
எட்டாம் நாள்.
வாசலில் வண்டி வந்து நின்றது.
காடு நோக்கியப் பயணத்திற்குத்தானே? உறவினர்கள்
மெல்லக் கேட்டனர்.
இல்லை, இல்லை. எந்தையார் நிறை வாழ்வு வாழ்ந்த புதுகைக்கு.
உறவினர்கள் வாயடைத்துத்தான் போயினர்.
கவிஞர், கண்ணாடிப் பேழையுள் படுத்தவாரே புதுகைக்குப்
பயணித்தார்.
புதுகையிலும் சில நாட்கள் கண்ணாடிப் பேழையுள் படுத்தவாரே,
வந்தவர்களை எல்லாம், கண் மூடி வரவேற்றார்.
சென்னையைப் போலவே புதுகையும் வியந்துதான் போனது.
எத்தனை நாட்கள் ஆனால் என்ன?
அத்துனை நாட்களும் ,மாணவர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள்,
தமிழறிஞர்கள், நட்பு போற்றும் நல் உள்ளங்கள் என, இருபத்து நான்கு மணி நேரமும், அணி
அணியாய் மக்கள் வந்து கொண்டே இருந்தனர். தங்களின் இறுதி வணக்கத்தை செலுத்திக் கொண்டே
இருந்தனர்.
நாட்கள் மெல்ல, மெல்ல நீண்டு கொண்டே சென்றன.
இறுதியாய், இறுதிப் பயணம் தொடங்கியபோது, கவிஞர்
கண் மூடி, பதினாலு நாட்கள் ஆகியிருந்தன.
27.9.2009 இல் இக்கவி, செந்தணலில் மூழ்கி, அணல்
தகிக்கும் தமிழ்க் காற்றாய் மெல்ல மேலெழுந்து, புதுகை மக்களின் மூச்சுக் காற்றோடு காற்றாய்
கலந்தார்.
எந்தவொரு
நண்பரும் வருத்தப் பட்டுவிடக் கூடாது. திடீரென்று கவிஞர் காணாமல் போய்விட்டாரே என நினைத்து
விடக்கூடாது என்றுதான், இத்தனை நாள், இத்தனை மணி நேரம் வைத்திருந்தோம், இது கூடாது
என்றவர்களையும் மீறி.
புதல்வரின் விளக்கம் கேட்டு, இலக்கிய உலகே நெகிழ்ந்து
போனது.
மகனென்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்.
நண்பர்களே, இக்கவி, மக்களின் மனம் கவர்ந்த இக்கவி
யார் தெரியுமா?
---
சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியில், இவர் மாணவராய்
படித்தபோது, செலவுக்கும் வழியில்லாமல், விளையாடவும் உடல் திறனில்லாமல், நூலகத்தில்
அடைக்கலம் புகுந்தவர்.
நூலகத்தின் ஒவ்வொரு நூலும் இவருடன் விளையாடியது.
கல்லூரியில் புகுந்து இவர் கற்றது என்னவோ, வேதியியல்தான்.
ஆயினும் மனதின் இரசாயண மாற்றம் தமிழைத் தேடியது.
ஆயிரம் ஏழைகட்கு அன்னதானம்
அனைவரும் வந்திடுக
அழைத்திட்டார் மைக்கில்
தலைவர் பிறந்த நாளில்.
தர்மப் பிரபு வாழ்க
செத்த தலைவரும் வாழ்க
என வாழ்த்தி
கூட்டம் பேயாய் விரைந்தது ….
உணவுக்கு நாயாய்ப் பறந்தது …
முண்டியடித்து முட்டித் தள்ளி
வசைபாடி, வசை கேட்டு
சண்டையிட்டுச் சப்பணமிட்டுச்
சாப்பிடத் தொடங்கும்போது
கேட்டது ஒரு குரல்..
ஒரு தலைவர் பிறக்காத
நாளும் ஒரு நாளா?
365 தலைவர் இல்லாத
நாடும் ஒரு நாடா?
இவர் எழுதிய முதல் கவிதை இது.
கவிதை என்பது வானில் இருந்து இறங்கி வருவது,
கனத்த மௌத்தில் இருந்து அவதாரம் எடுப்பது என்றெல்லாம், தகிடு தத்தம், செய்து கொண்டிருந்தவர்களுக்கு
மத்தியில், அன்றாட வாழ்வில், கண்முன் காணுகின்ற நிகழ்வில் இருந்து பிறப்பெடுப்பதுதான்
கவிதை என்பதை உறுதிபடுத்தியவர் இவர்.
தலைமைப்
பண்பு வளர்க்கத்
தனிப்பயிற்சி
தருகிறார்களாம்
நான்
சொல்கிறேன் கேளுங்கள்.
தலைமை
என்பது யாதெனின்
அடிமையை
ஆள்வதல்ல
தகுதியாய்
வாழ்வது.
தனிமையில்
ஒளிவது அல்ல
பெருமையில்
ஒளிர்வது.
கீழ்மை
பரப்புவது அல்ல
மேன்மை
நயப்பது.
வாழ்வு
பெறுவதல்ல
வாழ்வு
தருவது.
என் கவிதைகளில் தமிழ் உலகு, நான் பார்க்கும்
பேருலகு வாழ்கிறது. என் கவிதைகளில் தமிழர்களை விமர்சனம் செய்கிறேன். எள்ளல், பகடி,
என் கவிதை உத்திகள். மனிதம், அன்பு என் இலட்சியம்.
உள்ளூர் பற்று, சாதி வட்டம், வீட்டு மொழி என்று
பிரிந்து கிடக்கும் தமிழர்களை நான் இடித்துரைத்துள்ளேன்.
வெளிநாடு போக வசதி தரும் குரு பீடங்கள், பத்திரிக்கையில்
தாராள கவனிப்புக் காட்டும் சாதி, அரசியல் கட்சிகளின் நிழல் இவற்றைத் தாண்டி என் படைப்புணர்வு
வாழ்ந்து வருகிறது.
ஆம, இவர் அணு அணுவாய் மனிதனை அரித்துத் திண்ணும்
சின்னச் சின்ன கவலைகளைக் கூட, தன் கவிதை வரிகளில் படம் படித்துக் காட்டுகிறார்.
மனைவி மக்கள் இருக்குமன்றோ?
மணியார்டர் பார்க்கும் தாயுமுண்டோ?
மாசக் கடைசியில் வாங்கிய கடன்கள்
மனசை முறிக்கும் கவலையுண்டோ?
அலுவலகத்தில் சண்டையுண்டோ?
அன்றாடப் பொய்கட்டுக் பஞ்சமுண்டோ?
இப்போ ஒரு வகை நிம்மதிதான்
ஏதுமில்லை இவனுக்குக் கவலை.
மழையாய் பொழிந்து ஆறாய் பெருகித்
தன் காலத்து படைப்பாளிகளையும் இணைத்து மானுட சமுத்திரத்தில் சங்கமித்த மனிதர் இவர்.
கடவுள்
வணக்கம்
தமிழ்
வணக்கம்
சொல்லிக்
கூட்டம் போட்டது போதும்.
புல்
வணக்கம்
பூ வணக்கம்
சொல்லி
கூட்டம்
போடச் சொல்கின்றன
வாரா
மழையும் வறளும் ஆறுகளும்.
தன்னைப் போல், மண்ணை, மனிதர்களை,
மன்னுயிர்களை, தேசத்தை, மொழியை, இனத்தை, எல்லை கடந்த இயற்கையை நேசித்துப் பாடிய கவிஞர்
இவர்.
கவிதையைப் புதிதாக்குவது பற்றிஎன்னிடம் பேசாதீர்கள்
நான் உண்மையைக்
கவிதையாக்கிக்
கொண்டிருக்கிறேன்
இவர் கொஞ்சமாகத்தான் கவிதைகளைக்
கொடுத்திருக்கிறார், விதைகளைப் போல.
விருட்சங்களாகும் வீரியங்களாக அவற்றுள் உண்மைகள் ஒளிர்ந்திருக்கும்.
தான் எழுதுவதைவிட, தன் காலத்தில் நிறையப் படைப்பாளிகளை
எழுதத் தூண்டியவர்.
தன் தொகுப்புகளைக் கொண்டு வருவதில் பெரிதும் அக்கறை
எடுத்துக் கொள்ளத் தெரியாமல், விரும்பாமல், தன் காலத்துச் சிறந்த கவிஞர்களின் பெருந்
தொகுப்புகள் வெளிவரப் பெரிதும் காரணமானவர்.
மரபுக் கவிதை விழுந்த இடத்தில், எழுந்த புதுக்
கவிதையைச் சரிந்துவிடாமல் தூக்கி நிறுத்திய மனித நேயர்.
இதனாலேயே, தான் எழுதிய கவிதைகளுக்கு இடையே,
எழுதாத கவிதைகள் குறித்தும் எழுதியிருக்கிறார்.
இன்னும்
எழுதப்படாமல்
என் கவிதைகள்
ஏராளமாய்த்
திண்டாடுகின்றன
பாவம்.
இந்தக்
கவிதைகளை எல்லாம்
யார்
படிக்கிறார்கள் இன்று?
இப்படிப்
கேட்கலாம்தான் நீங்கள்.
எழுதாத
என் கவிதைகளை
வேறு
யார் எழுதப் போகிறார்கள்
என்ற
கவலைதான் எனக்கு.
வாழ்வைப் பற்றி மட்டுமல்ல, வாழ்க்கையை
முடித்து வைக்கின்ற மரணத்தைப் பற்றியும், ஒரு மகத்தானப் பார்வை கொண்ட கவிஞர் இவர்.
என் வாழ்க்கை ஒரு பொன் பாத்திரமாயின்
நான் அதனை ஒளித்து வைக்க வேண்டும்
அல்லது பறிகொடுக்க நேரும்.
ஒளிந்து வாழ நான் திருடனுமில்லை
பறிகொடுத்துவிட நான் ஏமாளியுமில்லை.
என் வாழ்க்கை ஒரு வெண்கலப் பாத்திரமாயின்
ஒரு மோசமான நாளில்
அது அடகு போய்விடலாம்.
எவருக்கும் நான்
அடகு போய்விட விரும்பவில்லை.
வாழ்க்கை ஒருவேளை
வண்ணமயமாய் வரும்
பிளாஸ்டிக் பானையானால்
ஒரு நாள் அது
தைக்க இயலாது கிழிந்து போய்விடலாம்.
எவருக்கும் பயனின்றி
நான் கிழிந்து போய்விட விரும்பவில்லை.
என் வாழ்ககை ஒரு மண் பாத்திரமாயின்
தொலைந்து போக முடியாது
அடகும் போகாது.
ஒரு சிரம நாளில் வேண்டுமானால்
உடைந்து போகலாம் அது
என்றாலும அப்போது நான்
மண்ணோடு மண்ணாய்
மூலத்தோடு மூலமாய்
முதலுக்கு முதலாவேன்.
மூலத்தோடு மூலமாய் கலந்த பிறகும்,
நண்பர்களுக்கு, இறுதியாய் தன் திருமுகம் காட்ட, 16 நாட்கள் காத்திருந்து, புதுகையின்
மண்ணோடு மண்ணாய், காற்றோடு காற்றாய் கலந்தவர் யார் தெரியுமா?
கவிஞர் பாலா
எழுதி முடிக்கப் பெறாத இந்தியத்
தமிழ்க் கவிதையாகவே, நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டவர்
கவிஞர் பாலா
பேராசிரியர்
முனைவர் கா.செல்லப்பன் இவரது ஆசிரியர். கவிஞர் பாலா அவர்களின் நினைவரங்கக்
கூட்டத்தில், இவர் நெஞ்சம் நெகிழ்ந்து கூறிய வார்த்தைகள் என்றென்றும் மறக்க இயலாதவையாகும்.
பிற்காலத்தில்,
அவரது ஆசிரியராகவே அறிமுகப்படுத்தப்படும் அளவுக்கு, எல்லாவற்றிலும் என்னை முந்தி முந்தி
சென்ற என் மாணவன், மரணத்திலும் என்னை முந்தியிருக்க வேண்டாம்.
கவிஞர் பாலா
மானுடம் பேணிய வானம்பாடி
உறவுகளைப் பேணுவதினும் பன்மடங்கு நட்பினைப் போற்றியவர்.
எளிமை, இனிமை, வலிமை கலந்த பொதுமை மிளிறும் புன்னகைதான்
கவிஞர் பாலா அவர்களின் அகமும் முகமும்.
கவிதை வழியே மனிதத்தைத் தேடித் தேடி அலைந்தவர்
கவிஞர் பாலா.
பன்னெடுங்காலம் பழகிய அனுபவத்தில், கவிஞர் மு.மேத்தா அவர்கள், கவிஞர் பாலாவை,
மூன்றே வரிகளில், முழுமையாய் உணர்த்துவார்.
பாலாவின்
நட்பை
உணர முடியுமே
தவிர
உரைக்க
முடியாது.
கவிஞர்
பாலா போற்றுவோம்.