தேடிச்
சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி –மனம்
வாடித்
துன்பமிக வுழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக்
கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை
மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?
என்னும்
பாரதியின் பாடல் வரிகளையே, தனது வாழ்வியல் மந்திரமாகக் கொண்டு, வாழ்ந்து, எதிர் வந்தத்
தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து, வாழ்வில் உயர்ந்து வருபவர் இவர்.
இவர் இல்லத்திற்கும், இவர் பணியாற்றும் இடத்திற்குமான
தொலைவு மிகவும் குறைவுதான்.
வெறும் 120 கிலோ மீட்டர்கள்தான்.
தினமும் அதிகாலையில், கோழி கூவும் முன்னே புறப்பட்டு,
தொடர் வண்டியில் 120 கி.மீ பயணம், மீண்டும் மாலையில் 120 கி.மீ பயணம்.
மனிதர் அசராமல் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.
பயணத்தின் போது இவரது உற்ற நண்பராய், உடன் பிறவாச்
சகோதரராய், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதுப் புதுப் புத்தகம். இவரரோடு பயணித்துக் கொண்டே
இருக்கிறது.
நாள் ஒன்றுக்கு 300 பக்கங்களுக்கும் குறையாமல்
இவர் வாசித்துக் கொண்டே இருக்கிறார்.
இவர் வீட்டி மாடியில், அமைந்திருக்கும் நூலகத்தில்,
நூல்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே இருக்கிறது.
சற்றேறக்குறைய இருபதாயிரம் நூல்கள், இவர் வீட்டி
அலமாரியில், இடமின்றி, முண்டியடித்துக் கொண்டு, ஒன்றோடு ஒன்று நெருக்கியபடி, விழி பிதுங்கி
நிற்கின்றன.
பயணத்தின் போது வாசிப்பு, வீட்டிற்கு வந்தவுடன்
எழுத்து, இதுவே இவரது வாழ்வாய், தினசரி நிகழ்வாய் மாறித்தான் போய்விட்டது.
400 க்கும் மேற்பட்டச் சிறுகதைகள், 10 ற்கும்
மேற்பட்ட குறு நாவல்கள், 300 க்கும் மேற்பட்ட கவிதைகள், 5 நாடகங்கள், மொழி பெயர்ப்புச்
சிறுகதைகள், ஆங்கிலக் கவிதைகள் என இவரது எழுதுகோல், அட்சயப் பாத்திரம் போல் படைத்துக்
கொண்டே இருக்கிறது.
குடும்பமும், மானுடமுமே இவர்தம் எழுத்தில், இரத்தமும்
சதையுமாய் பின்னிப் பிணைந்து தவழ்ந்தோடுகிறது.
புரண்டு படுக்கும் வாழ்க்கை
என்னும் இவரின் ஒரு சிறுகதைத் தொகுப்பு போதும்,
நம்மை முழுவதுமாய் புரட்டிப் போட.
மேனிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என
அனைத்திலும் இவரது எழுத்துக்கள் பாடங்களாய் பயிற்றுவிக்கப் படுகின்றன.
தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும்,
இவரது எழுத்துக்களை ஆய்ந்து, ஆய்ந்து, இவர்தம் எழுத்திலேயே தோய்ந்து, தோய்ந்து, எம்.ஃ.பில்.,
பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர்கள் ஏராளம், ஏராளம்.
வாழ்வென்பதே வாசிப்பதற்கும், இதயத்து எண்ணங்களை
எழுத்தாய் ஏட்டில் இறக்கி வைப்பதற்கும்தான், என்னும் உன்னத, உயரிய குறிக்கோளுடம் வாழ்ந்து
வரும் இவர் அமைதியின் மறு உரு.
அன்பு தவழும் முகம். நேசத்தைப் பொழியும் கண்கள்,
உதடுகளில் நிரந்தரமாய் ஒரு மெல்லிய புன்னகை. சிந்தாமல் சிதறாமல் இளந் தென்றலாய் வெளிவரும்
வார்த்தைகள்.
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
என் வலையுலக குருநாதர்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர், வலைப்
பூவினைத் தொடங்கியச் சில மாதங்களிலேயே, கைவசம் இருந்த சரக்கெல்லாம் தீர்ந்துபோன நிலையில்,
எதை எழுதுவது, எப்படித் தொடர்வது, எனப் புரியாமல், தெரியாமல் தத்தளித்தபோது,
பார்த்ததை எல்லாம் எழுதுங்கள்
படித்ததை எல்லாம் எழுதுங்கள்
கேட்டதை எல்லாம் எழுதுங்கள்
பாசமிகு நண்பர்களை எழுதுங்கள்
நேசமிகு உறவுகளை எழுதுங்கள்
வாழ்வில் அனுபவங்களை எழுதுங்கள்
என எனக்கு ஞானமூட்டிய போதிமரம் இவர்.
கவிஞர் ஹரணி
எனத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும்,
முனைவர் க.அன்பழகன்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியர்.
இத்தகு ஆற்றலாளர்
எழுத்தாளர்
கவிஞர்
மனித நேயர்
கரந்தை மண்ணின் மைந்தர்
ஒரு விருது பெற்றிருக்கிறார்.
குறள் நெறிச் செல்வர்
என்னும் சீர்மிகு விருது பெற்றிருக்கிறார்.
உலகத் திருக்குறள் பேரவையின்
சார்பில்,
குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின்
திருக்கரங்களால்
விருது பெற்றிருக்கிறார்.
குறள் நெறிச் செல்வர் ஹரணி அவர்களை
வாழ்த்த வேண்டியது, நமது கடமையல்லவா,
போற்ற வேண்டியது நமது பொறுப்பல்லவா.
வாழ்த்துவோம், போற்றுவோம்.