முட்டை யடையும் குளம்பி முறுவலம் தோசையுடன்
கெட்டித் துவையலைக் கேட்ட உடனே மகிழ்ந்தபடி
கட்டித் தருவான் குமாரெனும் வள்ளல் கடையினிலே
பெற்று வளர்த்த பெற்றோரைப் போல்,
பாசம் காட்டி, நேசத்தோடு அரவணைத்து, காசில்லாவிட்டாலும் பரவாயில்லை, வயிராரச் சாப்பிடு,
என மூன்று வேளையும் இன்முகத்தோடு உணவிட்ட, உணவு விடுதியின் உரிமையாளர் குமார் என்பாரைப்
பற்றி, அழகிய கட்டளைக் கலித்துறையில், இப்பாடலை எழுதியபோது, அந்த இளைஞரின் வயது
23.
திருப்பனந்தாள்
செந்தமிழ்க் கல்லூரி மாணவர் இவர்.
பேராசிரியர்
ம.வே.பசுபதி அவர்களின், யாப்பிலக்கண வகுப்பில், மூழ்கி முத்தெடுத்துக் கவிஞனாய்
கரையேறிய இளைஞர் இவர்.
மரபுப் பாடலும், நாட்டுப் புறப் பாடலும் வெகு
இயல்பாய் இவர்தம் கரம் பற்றி, வலம் வரத் தொடங்கின.
ஓய்ச்சல் இன்றி உழைப்பு இருந்ததால்
காய்ச்சல் வந்து கவ்விக் கொண்டது
உடல் நலமில்லாத பொழுது, வகுப்பாசிரியருக்கு
இவர் எழுதிய விடுப்புக் கடிதம் கூட, கவிதையாகத்தான் உருவெடுத்தது.
இப்படி யாப்பிலக்கணத்தில் தோய்ந்து காணும் காட்சிகளை
எல்லாம் கவிதையாக்கி மகிழ்ந்திருந்த, இந்த இளைஞரை, ஓர் சிற்றிலக்கியம் எழுது, என உற்சாகமூட்டினார்,
இவரது பேராசிரியை முனைவர் வே.சீதாலட்சுமி.
கல்லூரி ஆண்டு மலருக்காக ஓர் சிற்றிலக்கியம்.
அன்று இரவு சிந்தித்தபடியே உறக்கத்தில் ஆழ்ந்த
இவ்விளைஞர், மறு நாள் அதிகாலையிலேயே எழுந்து, ஒரே மூச்சில் 168 வரிகளில், அற்புதமாய்
ஓர் சிற்றிலக்கியம் படைத்தார்.
மாணவராற்றுப்படை
பழந்தமிழ் இலக்கியங்களான பத்துப் பாட்டும்,
எட்டுத் தொகையும் தமிழர்களின் பழந்தமிழ்க் கருவூலங்களாகும். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியன பத்துப் பாட்டில்
அடங்கும்.
இவை ஆற்றுப்படை நூல்கள் எனப்படும். இப்பாட்டில்
ஆற்றுப் படுத்தப் பெறும், பாணர், கூத்தர், விறலியர், பொருநர் ஆகியோர், யாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம் என்னும்
பழந்தமிழர் பாண்பாட்டுக் கொள்கையினை உடையவர்கள்
ஆற்றுப்படை என்பது, தமக்குப் பெரும் பரிசு வழங்கிச்
சிறப்பித்த அரசரின் உயரிய பண்புகளையும், அந்த அரசனது நாடு, அதன் தலைநகர் முதலியவற்றின்
சிறப்பினையும், அந்த அரசரின் அரண்மனைக்குச் செல்வதற்குரிய வழிகளையும், தம்மைப் போன்ற
பிற புலவர்களுக்கு எடுத்துரைப்பதாகும்.
தமிழைப்
படிக்கத் தணியா விருப்பொடு
இமிழ்திரை
உலகில் இனிய கல்லூரி
தேடிப்
பொழுதெலாம் திரிந்தே அலைந்து
நாடி
வந்த மாணவ நல்லோய்,
இப்படித்தான் தொடங்குகிறார்,
தன் ஆற்றுப்படையை இவர்.
இயற்கை
அழகோ எங்கும் சூழ்ந்து
செயற்கை
விளைவுடன் சேர்ந்தே சிரிக்கும்
காவிரி
யாற்றின் வளமை கண்டு
பூவிரி
சோலையில் புட்களும் பாடும்
கரும்பும்
வாழையும் கமுகும் தெங்கும்
அரும்பும்
முல்லையும் அழகிய கோங்கும்
நெல்லும்
பருத்தியும் நேரிய பனைகளும்
சொல்லரும்
சோலையும் சுற்றிலும் அமைய
நீர்வளம்
காட்ட நெடிதே வளைந்து
மார்தட்
டியோடும் மண்ணி யாற்றின்
சீரெலாம்
சொல்லின் சீர்த்த குடியின்
வேரொடு
தொடர்புற்று விளங்கு வதாமே
இவ்விளைஞர், தான் படிக்கும்
கல்லூரியின் இயற்கை எழிலைக், கவியாய்க் கூறக் கூற, இக்கல்லூரியில் படிக்காமல் போனோமே
என்ற ஏக்கமே நமக்கு மிஞ்சுகிறது.
ஆங்கிலம்
அறிவியல் அயல்துறை வணிகம்
ஓங்கிய
வரலாறு, ஓராத் தத்துவம்
சிறுவர்
பாடல்கள், செந்தமிழ் அகராதி
நறுமல
ரன்ன நங்கையர் விரும்பும்
புதுமைக்
கதைகள், பட்டாங்கு நூல்கள்
மதிமை
சாற்றும் மேலோர் நல்லுரை
புறத்தில்
பயனுறு அகத்தில் ஆயிரம்
அறத்தைச்
சாற்றும் அழகிய குறளுரை,
நற்றிணை
குறுந்தொகை நாலடி பழமொழி
உற்றவர்
போற்றும் உயரிய தேவாரம்
திருவா
சகம்திரு மந்திரம் தீந்தமிழ்க்
குருபரர்
நூல்கள், குண்டல கேசி
செந்தமிழ்ச்
சீர்சொல் சிலம்பு மேகலை
முந்தையத்தொல்
காப்பியம் மூத்த திருப்பதிகம்
ஆற்றுப்
படைநல் அந்தாதி உலாமடல்
போற்றுயர்
தூது, புகழ்சொற் கலம்பகம்
பொடியணி
அடியவர் பெரிய புராணம்.
நடிப்பைக்
காட்டும் நாடக நூல்கள்,
மொழிநூல்
வரலாறு முகிழ்க்கும் புதினம்
வழிநூல்
சார்புநூல் வகைக்கு நூறாய்
ஆய்வர்
பலரும் அகழ்ந்தே உணர்ந்து
தோய்ந்துடன்
எழுதிய திறனாய்வு நூல்கள்
பொன்விழா
மலர்கள் புதுமைப் பாக்கள்
பொன்மொழி
அறிவுரை புவியியல் நூல்கள்
நாள்முதல்
இதழ்கள் ……..
இப்படியாக, இவர்தம் கல்லூரி
நூலகத்தில் இருக்கும் நூல்களைப் பட்டியலிட, பட்டியலிட, ஆகா, கல்லூரியின் இயற்கை ஏழிலையும்
மிஞ்சும், தமிழமுதச் சோலையாகவே, கல்லூரியின் நூலகம், நம் மனக் கண்ணில் விரிகிறது.
ஒல்காத்
தமிழை உயர்வாய்க் கற்றுநல்
உலகம்
முழுதும் ஓடித் தங்கி
மலரும்
வாழ்க்கையை மாண்பாய் நடத்தி
செய்கைக்
கெல்லாம் கல்லூரி நினைந்து
கையால்
தொழுது கடமை யாற்றும்
அறிவோர்
போல ஆன்ற புலம்பெறச்
செறிபுகழ்ப்
பனசைக் கல்லூரி செல்கவே
என்று சக மாணவர்களுக்குத்
தன் கல்லூரியின் இயற்கை எழிலை, நூலகத்தின் வளமையை, பேராசிரியர்களின் பெருமையை, என அனைத்தையும்
வரிசையாய், இனிமையாய், எளிமையாய், நிலைமண்டில ஆசிரியப்பாவில் அழகுற கோர்த்து, படிக்கும்
நம்மை நெகிழ்வுறச் செய்கிறார்.
மாணவராற்றுப்படை
தனக்குக் கல்விக் கண் திறந்தும், யாப்பிலக்கணக்
கடலில் நீந்தவும் கற்றுக் கொடுத்த, தன் கல்லூரியின் வரலாற்றை, பெருமை பொங்க, உள்ளத்தில
உவகை பெருக, எடுத்துரைக்கும், ஒரு மாணவனின் சொல்லோவியம்தான் இந்த மாணவராற்றுப்படை.
கல்லூரி ஆண்டு மலர் தயாரிக்கும் பொறுப்பாளப்
பேராசிரியரிடம், இவ்விளைஞர், தன் சிற்றிலக்கியத்தை வழங்கியபோது, ஓர் எதிர்பாரா அதிர்ச்சி
காத்திருந்தது.
சிற்றிலக்கியத்தின் சொற்களைப் படித்துப் பொருள்
உணர்ந்து, மகிழத் தெரியாத அப் பேராசிரியர், பாடலின் வரிகளை எண்ணி, வரிக் கணக்குப் போட்டுப்
பார்த்து, வெளியிட இயலாது என ஒதுக்கினார்.
துவண்டு போய்விடவில்லை இந்த இளைஞர்.
நண்பர்களே, இந்த இளைஞர் யார் தெரியுமா?
---
தன்பெண்டு
தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு
என,
ஊதியம் எப்பொழுது கிடைக்கும், ஊதியக்குழு எப்பொழுது அமையும், அகவிலைப் படி எப்பொழுது
உயரும், வீடு வாங்குவது எப்பொழுது, அருமையாய் ஓர் மகிழ்வுந்து வாங்குவது எப்பொழுது
என, சுய நலன் ஒன்றினையே, பெரிதும் போற்றி வாழும் மனிதர்களுக்கு இடையில், இவர் ஒரு ஆலமரமாய்
பரந்து, விரிந்து, உயர்ந்து, தனித்து நிற்கிறார்.
பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து கொண்டே
இருக்கிறார், நூற்றுக்கும் அதிகமான தமிழறிஞர்களை நேரில் சென்று கண்டு, செய்திகளைத்
திரட்டிக் கொண்டே இருக்கிறார்.
மக்கள் மறந்து போன, செய்திகளைக்
கிளறி முத்தெடுத்து விருந்து வைத்துக் கொண்டேயிருக்கிறார்.
மறைந்த பழம்பெரும் தமிழறிஞர்களின் இல்லங்களைத்
தேடிக் கண்டுபிடித்து, அவர்களது வாரிசுகளிடம் பக்குவமாய் பேசி, அவர்களின் வீட்டுப்
பரண்களில், காகிதப் குப்பைகளுக்குள், புத்தகக் கட்டுகளுக்குள் ஒளிந்திருக்கும், பல
ஆவணங்களை, கடிதங்களை மீட்டெடுத்து இணையத்தில் ஏற்றி உயிரூட்டி வருகிறார்.
பண்ணாராய்ச்சி வித்தகர்
குடந்தை
ப.சுந்தரேசனார்
அவர்களைப் பற்றி,
ஆவணப் படம் எடுத்து,
அகிலம் முழுதும் உலாவ விட்டவர்.
இசைத் தமிழின் இலங்கை முகமாகிய
தவத்திரு விபுலாநந்த அடிகளாரின்
அடிச் சுவற்றின் வழி, ஓர் அற்புதப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக, தமிழகத்தில் மட்டுமல்ல,
வானூர்தி ஏறிப் பறந்து, இலங்கையிலும் தன் தேடலைத் தொடர்கிறார் இவர்.
இவர் அரசுப் பள்ளிகளில் மட்டுமே படித்தவர்.
தமிழில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் எனத் தொடர்ந்து படித்து முனைவர் பட்டமும்
பெற்றவர்.
முனைவர் பட்டத்திற்காக இவர் ஆராய்ந்தது பாரதிதாசன் பரம்பரையை.
அச்சக ஆற்றுப்படை, மாணவராற்றுப்படை, பாரதிதாசன்
பரம்பரை என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கை
கொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள, இடைக்கட்டு
என்னும் சிற்றூரில் பிறந்து, இன்று உலகறிந்த ஆய்வாளராய், தமிழறிஞராய் உயர்ந்து நிற்கிறார்.
தனக்குத் தனக்கு எனப், பெருஞ் செல்வம் சேர்க்கப்
பேராசையுடன் அலையாய் அலையும் மனிதர்கள் நிரம்பிய இவ்வுலகில், தமிழுக்குத் தமிழுக்கு
எனப் பெரும் தேடலுடன், மனதில் பெருந் தமிழ்க் காதலுடன், ஊரைச் சுற்றி, உலகைச் சுற்றி,
வலம் வரும் இவர் தேடலின் நாயகர்தானே.
முனைவர் மு.இளங்கோவன்
இவர் எதிர்வரும்,11.2.2017 அன்று அகவை ஐம்பதினை
நிறைவு செய்கிறார் என்பதை அறிந்தபோது, நமக்குப் பெரு வியப்புதான் ஏற்படுகிறது.
இவரது அகவை வெறும் ஐம்பதுதானா?
நூற்றாண்டுப் பணிகளை அல்லவா சாதித்திருக்கிறார்.
அடுத்த நூற்றாண்டுப் பணிகளை அல்லவா, இவர் தற்பொழுது செய்து வருகிறார்.
வியப்பினூடே ஓர் பெரு மகிழ்வும் உடன் நம் மனதில்
குடியேறுகிறது.
இவரது அகவை வெறும் ஐம்பதுதான்.
நீண்ட, நெடிய வாழ்வு மீதமிருக்கிறது.
மறைந்து போன, மக்கள் மறந்து போன, உலகப் பெருந்தமிழர்களுக்கெல்லாம்
மறுபிறவி அளித்து, ஆவணப் படுத்தி அமரத்துவம் வழங்குவார் என்னும் நம்பிக்கை பிறக்கிறது.
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
நூறாண்டு
வாழ வாழ்த்துவோம்
நூறாண்டு
காலம் வாழ்க
நோய்நொடி
இல்லாமல் வளர்க
ஊராண்ட
மன்னர் புகழ் போலே
உலகாண்ட
புலவர் தமிழ் போலே
நூறாண்டு
காலம் வாழ்க