27 மே 2017

சித்தப்பா மறைந்தார்


சிறு வயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்திய என் சித்தப்பா, இயற்கையோடு இணைந்து விட்டார்.

      என்னுடன் அதிகம் பேசிய, என் ஒரே உறவு.

      நான் அதிகமாய் பேசிய, என் ஒரே உறவு


      உறவு மட்டுமல்ல, என் உற்ற தோழர்

      சிறு வயதில், என் கோடை நாட்களைக் குளிர்மைப் படுத்தியது, இவரது இல்லம்தான்.

       மாலை நேரங்களில், காவிரி ஆற்று மணலில், என்னை ஓட விட்டு, கைதட்டி உற்சாகப் படுத்தியவர்.

       திருவையாற்று நூலகத்திற்குள், என்னை முதன் முதலாய் அழைத்துச் சென்று, பாடப் புத்தகங்கள் மட்டுமே புத்தகங்கள் அல்ல, அதையும் தாண்டி, பரந்து விரிந்த ஒரு உலகம் இருக்கிறது, என்பதை எனக்கு உணர்த்தியவர்.

       என் சித்தப்பா.

        அண்ணன் தம்பி உறவிற்கு ஒரு ஒப்பற்ற உதாரணம் என் சித்தப்பா.

        என் தந்தை முன், அதாவது தன் அண்ணன் முன், உட்கார்ந்து பேசக்கூடத், தயங்கும், மரியாதை மிகுதி உடையவர்.

       எத்துனைச் சுமைகள், உள்ளத்தை அழுத்திய போதும், இதழோரப் புன்னகையால், உலகை வென்றவர்.

       உன்னத மனிதரின், உண்மை முகம் காண மறுத்த குடும்பம்.

       சோதனைகளும், வேதனைகளுமே தினசரி வாடிக்கையாகிப் போன வாழ்வு.

        வீட்டில் அமைதி, வெளியில் புன்னகை.

        எத்துனைக் கடினமானப் பணியினையும், வெகு இயல்பாய், வெகு எளிமையாய், வெகு நேர்த்தியாய் நிறைவேற்றும் ஆற்றலாளர்.

         வாழ்வில், தான் சந்தித்த, அத்துனை மனிதர்களின் உள்ளங்களையும் வென்றெடுத்தப் பண்பாளர்.

         நானே பலமுறை கேட்டதுண்டு, எதற்குச் சித்தப்பா, இவ்வளவு கடினமானப் பணிகளை, இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறீர்கள்.

         சிரித்தபடியே பதிலுரைப்பாய்.

         யாராவது ஒருவர் இந்த வேலையைப் பார்த்துத்தானே ஆக வேண்டும், அதை நான் செய்து விட்டுப் போகிறேனே.

          போதி மரமில்லா புத்தர் என் சித்தபபா.

           அன்று முதல் இவரே, என் வழிகாட்டியாகவும் ஆகிப் போனார்.

           ஆசிரியர்

           நல்லாசிரியர்

           நல்லாசிரியர் விருதும் பெற்ற நல்லாசிரியர்

           உதவிக் கல்வி ஆய்வாளர்

            தலைமையாசிரியர்

            பணி ஓய்விற்குப் பிறகு, தஞ்சாவூர், அய்யம்பேட்டை, ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியின் நிருவாக அலுவலர்.

            மாரடைப்பு

           25.5.2017 வியாழன் மாலை வரை, கல்வியியல் கல்லூரியில் பணியாற்றிவிட்டு, வீடு திரும்பி, என்றுமறியாச் சோர்வுடன் அமர்ந்திருந்தவருக்கு, இரவு 9.00 மணியளவில், இதயத்தில் இடியிறங்கியதைப் போன்ற, ஒரு பெரும் வலி.

            வியர்வையில் உடல் நனைந்தே போனது

           ஐந்தே ஐந்து நிமிடம்தான்

           அருகில் இருக்கும், மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற பொழுது, உடல் மட்டுமே மீதமிருந்தது.

         என் சித்தப்பா

வாழ்வு முழுவதும் ஓய்வறியா,
என் சித்தப்பா,
ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்டார்.



திரு சி.திருவேங்கடம்

இனியேனும் அமைதியாய், நிம்மதியாய் தூங்குங்கள்.