16 செப்டம்பர் 2017

கடுக்கன்




      ஆண்டு 1851.

      அவருக்கு வயது 31

     வயதில் இளையவர்தான் எனினும், தமிழையேத் தன் வாழ்வாய் போற்றி வருபவர்.

      இலக்கண, இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்.

      வாய் திறந்தால் கவிதை அருவியாய் கொட்டும்.

      பேசும் பேச்சோ தென்றலாய் வருடும்.


      இவருக்கு ஒரு நூலில், இலக்கண நூலில் சில ஐயங்கள்.

      குட்டி தொல்காப்பியம் என்று கற்றறிந்தவர்களால் போற்றப்படும், இலக்கண விளக்கம் என்னும் நூலில் சில சந்தேகங்கள்.

      தனக்கு இந்த இலக்கண விளக்கம் நூலினை, முழுமையாய் போதிக்கத் தகுதி வாய்ந்த ஆசிரியரைத் தேடினார்.

      பலரையும் விசாரித்தார்.

      கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகர் என்னும் புலவரைத்தான், இதற்குச் சரியானவர் எனப் பலரும் எடுத்துரைத்தனர்.

      சற்றும் தயங்காமல் கீழ்வேளூர் புறப்பட்டார்.

       சுப்பிரமணிய தேசிகரின் இல்லம் சென்றார்.

        மாணாக்கர்கள் சூழ அமர்ந்திருந்த தேசிகருக்கு, மாலை அணிவித்து வணங்கினார்.

         இலக்கண விளக்கம் நூலினைத் தாங்கள், இந்த எளியேனுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்

          அன்போடு வேண்டினார்.

         சுப்பிரமணிய தேசிகரோ பதிலுரைக்காமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

        சுப்பிரமணிய தேசிகரின் சீடர் ஒருவர், மெல்ல எழுந்து வந்து,, இளைஞரின் தோளைத் தொட்டார்.

         விலகி வருமாறு சாடை காட்டித் தனியே அழைத்துச் சென்றார்.

புலவர் பெருமானிடம் இலக்கணம் படிக்க வேண்டுமானால், ஆறு மாதத்திற்கும் குறையாமல், ஐயா அவர்களை, தங்கள் இல்லத்தில் தங்க வைத்துப் போற்ற வேண்டும். தங்களால் முடியுமா?

இலக்கணம் படித்தாக வேண்டும். எனவே அவசியம் புலவர் பெருமானை, என் இல்லத்தில் தங்க வைத்துப் போற்றுகிறேன்

மாதம் ஒன்றுக்கு இருபது ரூபாய் கொடுக்க முடியுமா?

அவசியம் தருகிறேன்

பாடம் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும் பணம் கொடுக்க வேண்டும், கொடுப்பீர்களா?

கொடுப்பேன்

மூன்று மாதத் தொகையினை, முன் பணமாகக் கொடுக்க வேண்டும்

கொடுக்கிறேன்

பாடம் கேட்டும் பொழுது, புலவர் பெருமானை, உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்து, தாங்கள் அவர்தம் காலடியில் அமர்ந்து பாடம் கேட்க வேண்டும்.

காலடியில் அமர்ந்து பாடம் கேட்பேன்

     அத்துனை நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டார்.

      இலக்கண விளக்கம் படித்தாக வேண்டும், ஐயங்களைப் போக்கி, தெளிவு பெற்றாக வேண்டும் என்ற ஆர்வம் இளைஞருக்கு,

      ஆனால் கொடுப்பதற்குத்தான் பணம் இல்லை.

      என்ன செய்வது? எப்படிப் பணம் கொடுப்பது? என்று சிந்தனை செய்த இளைஞருக்கு, காந்தியம்மைப் பிள்ளைத் தமிழ் என்னும் கவிதை பாடியபோது, கிடைத்தப் பரிசு நினைவிற்கு வந்தது.

      இளைஞரின் கைகள் அவரையும் அறியாமல், அவரது காதுகளைத் தடவிப் பார்த்தன.

      தங்கக் கடுக்கன்கள்.

      பரிசாய் கிடைத்த கடுக்கன்கள்

      தயங்காது கழட்டி விற்றார்.

      ஆறு மாதத் தொகையினையும், முழுதாய் கொடுத்தார்.

      காலடியில் அமர்ந்து இலக்கணம் கற்றார்.

      நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

இவர்தான்,



மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை