23 செப்டம்பர் 2017

ஒத்திகை





     நான் என் குடும்பத்தை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தாலும், மனது சஞ்சனாவைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. இதுவரை என் குடும்பத்திடம், நான் எதையுமே மறைத்ததில்லை.

     முதல் முறையாக எனக்கு மனைவியாய் வரப் போகிறவளைச் சந்தித்ததை மறைத்திருக்கிறேன் என்பது ஞாபகத்துக்கு வந்தது.

     அதைச் சொல்லத் தயக்கமாய் இருந்தது.

     சொல்லாமல் இருப்பதிலும ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது.


---
  
     அவரது பார்வையில் ஏமாற்றம் தெரிந்தது.

     எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. பட் நேத்திக்கு பொண்ணு பார்த்துட்டு, இன்னிக்கே நாம காபி ஷாப் போனால் நல்லாருக்காது. அதான்.

    ஹலோ எந்த காலத்துல இருக்கே நீ.

    இல்ல, எனக்கே கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்கு. இப்ப வேண்டாம். கல்யாணம் ஆகட்டும். நீங்களே வேணாம்னாலும், நான் விட மாட்டேன். டெய்லி ஷாப்பிங் அழைச்சிக்குட்டுப் போகச் சொல்லி வம்பு பண்ணுவேன் போதுமா.

---

     நாங்கதான் பொண்ணு பார்க்க வராங்கனு வந்து சொல்லிட்டுப் போனோமே. நீங்க கோவத்துல இருந்தீங்க. சரி இருந்தாலும் விட்டுக் கொடுக்காம வந்துடுவீங்கனு நினைச்சேன். வரலனவுடன் கஷ்டமாகிடுச்சு. அதான் நாங்க எல்லாருமே இப்ப கிளம்பி வந்துருக்கோம்.

     என் சின்ன பொண்ணு உங்க கிட்ட மரியாதையில்லாம பேசினது தப்புதான். அதுக்கு மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கிறோம்.

     எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டார்.

---

     பக்கத்துக்குப் பக்கம் வழுக்கியபடி விரைந்து செல்லும் கதை.

     முக்கோணக் காதல் என்று படித்திருக்கிறோம், படங்களில் பார்த்திருக்கிறோம்.

      முக்கோணப் பார்வை.

     நாயகனின் பார்வையில், நாயகியின் பார்வையில், எழுத்தாளரின் பார்வையில் என மாறி மாறி, விரைவு வண்டிபோல், எங்கும் நிற்காமல் பயணிக்கிறது கதை.

     பெண் பார்க்கும் படலத்தில் இருந்து தொடங்குகிறது காதல்.

     படிக்கப் படிக்க நமக்கெல்லாம் இது போல் வாய்ப்பு, வாழ்வு அமையவில்லையே என ஏங்க வைக்கும் கதை.

      இளமை எழுதும் கவிதை நீ எனத் திரைப்படம் போல், தன் முதல் நாவலைப் படைத்தவர் இவர்.

      தனது இரண்டாம் படைப்பை, தன் வலைப் பூவில் இறக்கி வைத்து, ஒத்திகை பார்த்து, தொடர்ந்து பாக்யா இதழில மாப்பிள்ளை ஊர்வலம் போல், பவனி வரச் செய்து, இதோ தனியொரு நூலாய் தவழவிட்டிருக்கிறார்.


திருமண ஒத்திகை

அமைதியான முகம்,
நின்று நிதானித்து, மனதிற்குள்ளேயே ஒத்திகைப் பார்த்து,
சிந்தாமல் சிதறாமல்,
வெளிவரும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்.


குடந்தையூர்
ஆர். வி. சரவணன்
அவர்களின்
திருமண ஒத்திகை

வாழ்த்துக்கள் நண்பரே


ஜனனி பதிப்பகம்,
1ஏ, அகத்தியர் தெரு,
ராமா புரம்,
சென்னை-53


விலை 125