ஆண்டு
2017.
அக்டோபர் மாதம் 25 ஆம் நாள்.
மாலை நேரம்.
ஆற்றின் கரைதனில் நின்றுகொண்டிருக்கிறோம்.
நானும், நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும்.
புது ஆறு என்றழைக்கப்படும், கல்லணைக் கால்வாயின்
கரையில் நின்று கொண்டிருக்கிறோம்.
தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி வெகுவேகமாய்
ஓடிக் கொண்டிருக்கிறது.
கண் கொள்ளாக் காட்சி.
இக்காட்சியைக் காண வேண்டும் என்பதற்காகவே,
இரு சக்கர வாகனத்தில், சுமார் 25 கிலோ மீட்டர் பயணித்து, இவ்விடத்திற்கு வந்திருக்கிறோம்.
பல ஆண்டுகளாகவே இவ்விடத்தைக் காண வேண்டும்
என்ற ஆவல் இருந்த போதிலும்., இன்றுதான் எண்ணம் ஈடேறியிருக்கிறது.
ஆற்றங்கரையில் நின்று, ஆற்று நீர் ஓடிவருவதைக்
காண எதற்காக, 25 கி.மீ பயணிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
நியாயமான கேள்விதான்.
நண்பர்களே, ஆற்றைக் கடப்பதற்காகக் கட்டப்பெற்ற,
எண்ணற்றப் பாலங்களைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள்.
தினமும் இதுபோன்றப் பாலங்களைக் கடந்தும் சென்று
கொண்டிருப்பீர்கள்.
ஆனால் நாங்கள் நின்று கொண்டிருக்கும்
பாலம் வித்தியாசமானது.
இங்கு கல்லணைக் கால்வாய் என்று அழைக்கப்படும்
புது ஆறே, ஒரு பாலத்தின் மேல்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆற்றைக் கடப்பதற்குத்தானே பாலம்.
ஆனால், இங்கு ஆறே ஒரு பாலத்தின் மேல்தான்
ஓடிக் கொண்டிருக்கிறது.
என்ன ஆறு பாலத்தின் மேல் பயணிக்கிறதா?
அப்படியானால் அந்தப் பாலத்திற்குக் கீழ் என்னதான்
இருக்கிறது.
வேறு ஒரு ஆறு பாலத்திற்குக் கீழ் ஓடிக் கொண்டிருக்கிறது.
என்ன கீழே ஒரு ஆறு, மேலே ஒரு ஆறா-
வி‘யப்பாக
இருக்கிறது அல்லவா?
உண்மை.
நால்ரோடு சந்திப்பு என்று சொல்வார்கள்
அல்லவா?
கிழக்கு மேற்காகச் செல்லும் சாலையும், தெற்கு
வடக்காகச் செல்லும் சாலையும், ஒன்றை ஒன்று, சந்திக்கும் இடத்தை, நால் ரோடு சந்திப்பு
என்பார்கள்.
அதனைப்
போலத்தான், தெற்கு வடக்காகப் பயணிக்கும் காட்டாறும், கிழக்கு மேற்காகப் பயணிக்கும்
புது ஆறும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளும் இடம் இது.
வெட்டிக்காடு
நண்பர்களே, இன்று நாம் காணுகின்ற,
கடக்கின்ற ஆறுகள், ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னர் இயற்கையாய் உருவானவை.
ஆனால் இந்தப் புது ஆறோ, 85 வருடங்களுக்கு
முன் செயற்கையாய் வெட்டப்பட்டது.
புதிதாக ஒரு ஆறு உருவாக்கப்படும் பொழுது,
குறுக்கே செல்லும் ஆறுகளைக் கடந்தாக வேண்டும் அல்லவா?
இதோ வெட்டிக் காட்டில், காட்டாறு ஒன்றினை,
புது ஆறு கடக்கின்ற அற்புதக் காட்சி.
இந்தப் பாலத்தின் கீழ் காட்டாறு தங்கு தடையின்றி
ஓடுகிறது.
பாலத்தின் மேல் புது ஆறு, வெகு வேகமாய் பாய்கிறது.
பாலத்தின் மேல் இடதுபுறம், போக்குவரத்திற்கான
பாதை, கைப் பிடிச் சுவருடன் எழுப்பப் பெற்றுள்ளது.
பாலத்தின் வலது புறம் ஒரு அகல மேடை.
பாலத்தின் இரு புறங்களையும் இணைக்க, ஒரு
சிறு நடைப் பாலம்.
நடைப் பாலத்தில் நின்று பார்க்கிறேன்.
கால்களுக்கும் கீழே புது ஆறு, வெகு வேகமாய் நழுவிச் செல்கிறது. ஆற்று நீர் வேகமாய் ஓட ஓட, பாலமே நகர்வது போன்ற ஒரு உணர்வு.
ஆற்று நீரின் வேகத்தோடு, போட்டிப் போட்டுக்
கொண்டு, நேரமும் விரைவாய் நகரவே, தஞ்சை நோக்கியப் பயணத்தைத் தொடங்கினோம்.
சுமார் 15 கிலோ மீட்டர்களுக்கும் மேல், புது
ஆற்றின் கரையிலேயே பயணம்.
அந்தி சாயும் நேரம்.
தென்றல் காற்று, ஆற்று நீரின் குளிர்ச்சியை,
அள்ளி எடுத்து, முகத்தில் வீச, வீச, உடலும் உள்ளமும் குளிர்ந்து, தஞ்சைக்குத் திரும்பினோம்.
கண்டிதம்பட்டு
புது ஆற்றின் கரையிலேயே தொடர்ந்து பயணிப்போமானால்,
தஞ்சைக்கு அருகில், கண்டிதம்பட்டு என்னும் சிற்றூரில், இதே புது ஆறு.. ஒரு காட்டாற்றிக்குத்
தலை வணங்கி, வழி விட்டு, பூமிக்குள் புகுந்து, காட்டாற்றிற்கும் கீழே பயணித்து, காட்டாற்றினைக் கடந்ததும், மீண்டும்
மேல் எழுந்து பயணிக்கும் காட்சியைக் காணலாம்.