04 ஆகஸ்ட் 2018

காப்பியக்கோ




திப்பு சுல்தான் வரலாற்றை
இளைய தலைமுறை அறிந்துகொள்ள
மனிதர்களை மதங்கள் பழிதீர்க்காமல்,
மனங்கள் வழி பார்த்து நேசிக்க –
இத்தியாதி, இத்தியாதி நன்மைகள் இந்த நூலால்
நாட்டுக்குக் கிடைக்கும்.

இந்தக் காவியத்தைப் பள்ளிப் பாடநூலாக வைத்தால்
தமிழின் தகவும், தமிழ்மண்ணை ஆண்டவர் தகவும்
ஒருசேரத் தெரியவரும்.
மாணவருலகு நல்ல மாண்புகளை எய்தும்.


விருத்தங்களால் ஆன கம்பராமாயணம்
எங்கனம் இன்றளவும் நிலைத்து நிற்கிறதோ
அதுபோல் இந்த நூலும் நிற்கும்.
இதனைக் காலம் தின்னாது
கறையான் அரிக்காது.

     திரைப்படப் பாடலாசிரியர். கவிப் பெருஞ்சோதி, கவிஞர் வாலி அவர்களின் எழுதுகோல் வழி இறங்கிய வாழ்த்துகளை, வார்த்தைகளைப் பாருங்கள்.

கடமையின் பொருட்டு கொழும்புமா நகரில்
மனைவி மக்கள் சுற்றத் தோடு
மகிழ்ந்தினி திருக்கும் மாபெருங் கவிஞன்
தந்த நந்நபி காவியம் தமிழின்
சொந்தம் என்று வாழ்த்துவம் யாமே

வேறு
மரபறி புலமை யாளன்
மானுடம் பேணும் நண்பன்
தரமறிந் தொழுகும் தண்மைத்
தத்துவம் அறிந்தோன் என்றும்
உரம்பெறு கவிதை தந்தே
உலகத்தை அணைக்கும் உன்னைக்
கரங்குவித் தேத்துவன் யான்

கவியுள் ளளவும் வாழ்க

     தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்கள் நாயனொடு வசனித்த நந்நபி காவியத்திற்கு வழங்கிய சாற்றுக் கவியைப் பாருங்கள்.

மண்காத்துத் தமிழரது மானம் காத்து
     மறக்குலத்து மாண்போடு மரணம் நம்முன்
கண்காணச் செங்குருதிக் காட்சி நல்கிக்
     காட்டுகின்ற வீரத்தின் எழுவா யாகப்
பண்காணப் பாட்டிசைத்து வீரம் போற்றும்
     பான்மையோடு புலவர்கள் பாடவேண்டும்
விண்காணப் புகழ்படைத்த வன்னி யன்றன்
     வீரமது புத்துயிர்பெற்(று) எழுதல் வேண்டும்

எனப் பண்டார வன்னியன் காவியத்திற்குச் சிறப்புப் பாயிரம் படைத்துள்ளார் இலக்கியச் செம்மல் செ.குணரத்தினம் அவர்கள்.

     இவர் மட்டுமா,

கண்டாரும் கேட்டாரும்
கொண்டாடச் செந்தமிழில்
கலைஞர் செய்த

பண்டார வன்னியனைப்
பாவடிவில் படைத்தளித்துப்
பெருமை கொண்டார்

எனப் பெருமிதம் கொள்கிறார் கவிக்கோ டாக்டர் அப்துல் ரகுமான் அவர்கள்.

     இவர் மட்டுமா,

     நான் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய பாயும்புலி பண்டாரக வன்னியன் என்ற வரலாற்றுப் புதினத்தைக் கவிதையாக எழுதி, அதனை நூலாக வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

     இது மிகப்பெரும் முயற்சியாகும்

     முழுவதும் படித்து முடிக்க, உடனடியாக நேரம் இல்லாத நிலையில், ஒரு சில பக்கங்களைப் புரட்டிய அளவில், நான் எழுதிய கதையின்  சிறப்புக் கெடாமல், எழுதி இருப்பது நன்றாகத் தெரிகிறது.

      நல்ல முயற்சியிலே ஈடுபட்டுள்ளக் கவிஞரைப் பாராட்டுகின்றேன், வாழ்த்துகின்றேன்.

என்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே, மனம் மகிழ்ந்து, உளம் நெகிழ்ந்துப் பாராட்டுகிறார் இக் கவிஞரை.

     செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களுக்கும், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற காவியங்களுக்கும், உரை எழுதியவர்களைப் பார்த்திருக்கிறோம், உரைகளைப் படித்துக் களித்திருக்கிறோம்.

      ஆனால், உரை நடைகளுக்கு, கவிதையின் உருவம் கொடுத்து, பா மாலையாக்கி, முத்தமிழ் அறிஞர் கலைஞரே பாராட்டும் வகையில், காப்பியமாக்கியவரை அறிவீர்களா?

பண்டாரக வன்னியன் காவியம்

திரு நபி காவியம்

மஹ்ஜபீன் காவியம்

புனித பூமியிலே காவியம்

பிரளயம் கண்ட  பிதா காவியம் (குறுங் காவியம்)

தாய்க்கென வாழ்ந்த தனயன் (குறுங் காவியம்)

தீரன் திப்பு சுல்தான் காவியம்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்

எல்லாள காவியம்

மூஸா நபி காவியம்

     காவியங்களின் பெயர்களைத் தொடர்ந்து படிப்பதற்கே, நமக்கு மூச்சுத் திணறுகிறதே, ஆனால் ஒரு மனிதர், ஒரே ஒரு தனி மனிதர், இத்துணை காவியங்களுக்கும்,  கவி உரு கொடுத்து, பெரு நூலாக்கி வெளியிட்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

     நம்பித்தான் ஆக வேண்டும்

     காப்பியங்களுக்கு உரை எழுதும்  பழக்கம்தான், காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாகும்.

     முதலில் தோன்றுவது காப்பியம்

     பின்னர் வருவது, அதன் உரை நூல்

     இம்மரபை முழுவதுமாய் மீறி, இவர் புதியதோர், பாதையினை உருவாக்கியுள்ளார்.

     அதாவது, முன்னரே வெளிவந்த, வசன, உரை நடை நூல்களை, கவிதைகளாக மாற்றி, காவியமாக்கியுள்ளார்.

     இம்முயற்சியில் பெரு வெற்றியும் பெற்றுள்ளார்.

     இவரது சிறப்பு, இவர் பின்பற்றும் யாப்பு முறையாகும்.

     தமிழின் யாப்பு அமைதிக்கு ஈராயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உண்டு

     அகவல், வஞ்சி, ஆசிரியம், வெண்பா, கலிப்பா, விருத்தப்பா என நீண்டு செல்லும் மரபைத் தொடர்ந்து கடைபிடித்து, தளை தட்டாமல், கவி புனைவதில் வித்தகர் இவர்.

     கவி புனைவதில் மட்டுமல்ல,

     கவி புனையும் வேகத்திலும், இவர் சூரரோ, சூரர்.

உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை
மூச்சுவிடும் முன்னே முந்நூறும் நானூறும்
ஆச்சென்றால் ஐநூறும் ….
எனவும்
இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம் என்றால் ஆயிரம் பாட்டும்

பாடியதாகச் சொல்லப்படும், புலவர் வரிசையைப் பாரதி பாடுவார் அல்லவா?  அதனை மெய்ப்பிக்கப் பிறந்தவர் இவர்.

     மஹ்ஜபீன் காவியம் 600 பாடல்கள்

     புனித பூமியிலே காவியம் 1000 பாடல்கள்

     பண்டார வன்னியன் காவியம் 1600 பாடல்கள்

     திரு நபி காவியம் 1438 பாடல்கள்

     திப்பு சுல்தான் காவியம் 1600 பாடல்கள்

     எல்லாள காவியம் 1464 பாடல்கள்

     அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் 1250 பாடல்கள்

என ஏராளமாய், ஏராளமாய் கவிபாடி முடித்த பெரு ஆற்றலாளர் இவர்.

பாரம் பரியம் பழுதாகா தென்மக்கள்
பேரர் முதலோர் தமிழ்க்கவிதை – சீராக
ஆக்குந் திறம்பெற் றமைகின்றா ரத்திறமை
பூக்க விறையே துணை

என இவர், இவர்தம் தந்தையாலேயே வாழ்த்தப் பெற்றவர்.

     யாருக்குக் கிடைக்கும் இந்தக் கொடுப்பினை.

     இவர் இலங்கை மண்ணின் மைந்தர்

     முஸ்லிம் மதத்தில் பிறந்தவர்

      எனினும், இவர் நேசிப்பதும், சுவாசிப்பதும் தமிழ், தமிழ், தமிழ்.

வெண்பாவின் எனைநீ வென்றாய் ஷரிபுத்தீன்
நண்பாஎன் நாமம் உனக்களித்தேன்

     எனப் புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை உவந்தளித்தப் பட்டமே, இவரது பெயரோடு இரண்டறக் கலந்து நிலைத்தும் விட்டது.
.
ஒருநாளில் ஏழுபத்துக் கவியெழுத வல்லான்
ஒருநூறு எழுதுவதும் இவனுக்கும் இலகாம்
வருநாளில் ஜின்னாஹ்வின் பெயர்கவிதை வானில்
வரகவியென் றேயொளிரும் அட்டியதற் கில்லை

     எனத் தமிழறிஞர் எஸ்.டி.சிவநாயகம் அவர்களால் போற்றப்படும் இவர் யார் தெரியுமா?

     இவர் கவிஞர் மட்டுமல்ல, மருத்துவர்

     முறையாக மருத்துவம் பயின்ற மருத்துவர்

      தனியார் மருத்துவமனை மருத்துவர்

      மக்களின் உடலைக் காக்கக் கல்வி  பயின்றவர், உலகு மெச்ச வாழ்ந்தவர்களின் உள்ளங்களைப் போற்றக் கவிஞராய் வளர்ந்தவர்.

விதிவழுவா திலக்கணங்கள் மேவும்படி உவமம்
விதியும்படி அணிநலன்கள் உயரும்படி கற்றோர்
அதிசயித்தே வியக்கும்படி அடிதோறுந் தேனா
றோடும்படி உன்னதமாப் புலவனிவ னென்றே
மதி மிகுந்தோர் வாழ்த்தும்படி மன்னுபுக ழிலங்கை
ஹமணிக்கவிஞன் ஜின்னாஹ்ஷர் புதீனெனும்
இளைஞன் …..

தந்துள்ள காவியத்தைத் தமிழ்கூறும் உலகந்
தனில்வாழும் இளைஞர்கள் கற்றிடுதல் வேண்டும்
சிந்தையள்ளுங் காவியங்கள் செய்துள்ள முன்னோர்
சிரந்தாழும் இன்னூலில் இவனாளு  கின்ற
சந்தங்களில் துள்ளுகின்ற ஓசைநயங் கேட்கின்
சான்றுரைப்பேன் இவன்பாடல் காலத்தை வெல்லும்

எனப் பெருமிதத்தோடு சாற்றுக் கவியால், கவி கா.மு.ஷெரீப் அவர்களாலும் வாழ்த்தப்பெறும், போற்றப்பெறும் இவர்தான்,


காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன்

வழுத்தூர் வள்ளல் வெள்ளம்ஜி இக்பால் சகோதரர்கள்
ஆதரவுடன்,
இலங்கை கொழும்புவில்
 21.07.2018 அன்று நடந்த
 காப்பியக்கோவின் நூல் வெளியீட்டு விழா.
கவிஞருடன் பேராசிரியர் டாக்டர் சே.மு.முகமது அலி,
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர்,
சிங்கப்பூர், மேனாள் தமிழ் விரிவுரையாளர் கவிஞர் ப.திருநாவுக்கரசு

காப்பியக்கோ அவர்களுடன்,
என் அத்தான், மேனாள் தமிழ் விரிவுரையாளர் சிங்கப்பூர்,
கவிஞர் ப.திருநாவுக்கரசு

ஓயாது சொல் ஊறும் உள்ளத்தின் அன்புடைமை
தூய்தான பண்புடைமை, சோராத நண்புடைமை
தோதான பாட்டியற்றும் தொண்டுத் தவமுடைமை
வாயாரப் பாடி மனத்தால் வழுத்துவமே

என வாழ்த்தும் கவிஞர் இ.முருகையன் வார்த்தைகளால்,

காப்பியக்கோ
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களை
நாமும்
வாழ்த்துவோம், போற்றுவோம்

நாள்தோறும் ஓயாது
கவி மழை பொழிய
வேண்டுவோம்.