17 ஆகஸ்ட் 2018

தஞ்சை சோழர் அரண்மனை



     தஞ்சை

      கி.பி.850

     தஞ்சையினை ஆண்ட முத்தரைய மன்னன் ஒருவனிடமிருந்து, விஜயாலயச் சோழன், தஞ்சையைக் கைப்பற்றிய ஆண்டு கி.பி.850.

     அன்று முதல், தஞ்சை சோழர்களின் தலைநகராய் மாறியது.

     ஓராண்டு, ஈராண்டு அல்ல,

     முழுதாய் 164 ஆண்டுகள் தஞ்சைதான் சோழர்களின் தலைநகர்.


     விஜயாலயச் சோழன்

     ஆதித்த சோழன்

     முதலாம் பராந்தகன்

     கண்டராதித்தன்

     அரிஞ்சயன்

     சுந்தரச் சோழன்

     உத்தமச் சோழன்

     மாமன்னன் முதலாம ராஜராஜ சோழன்

எனத் தொடர்ந்து 164 ஆண்டுகள், சோழர்களின் தலைநகராய் விளங்கிய பெருமைக்கு உரியது தஞ்சை.

     மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனுக்குப் பிறகு, மாமன்னன் ராஜேந்திரச் சோழன், புத்தம் புதிதாய், ஒரு நகரை, கங்கை கொண்ட சோழ புரத்தை உருவாக்கி, புத்தம் புதிதாய் கட்டி எழுப்பி, தஞ்சையை விட்டு அகன்ற பின், தஞ்சை மெல்ல மெல்லத் தன் பொலிவினை இழக்கத் தொடங்கியது.

     பொலிவினை இழந்தாலும், கி.பி.1280 வரை, மூன்றாம் ராஜேந்திரச் சோழன் காலம் வரை, தஞ்சை சோழர்களின் குடையின் கீழ்தான் இளைப்பாறியது.

     164 ஆண்டுகள் தொடர்ந்து சோழர்களின் தலைநகராய் விளங்கிய தஞ்சை, எப்படி இருந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

      இன்றும் கூட உலகே வியந்து போற்றும், பெரியக் கோயிலைத் தன்னகத்தே கொண்டிருந்த தஞ்சை, அன்று, எப்படி மாட மாளிகைகளுடன் ஜொலித்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

     இஞ்சி சூழ் தஞ்சை

     அதாவது, அரசர்கள் வாழும் அரண்மனையைப் பாதுகாக்கத்தான், பெரும் பெரும் மதிற்சுவர்களும், ஆழமான அகழிகளும் உருவாக்கப்பட்டிருக்கும்.




சோழர் காலத்திற்கு முன்பும், ஏன், சோழர்கள் காலத்திற்குப் பின்பும் கூட இதுதான் நிலை.

     ஆனால் சோழர்கள் காலத்தில்.

     இஞ்சி சூழ் தஞ்சை

     தஞ்சை மாநகரமே கோட்டைச் சுவார்களால் சூழப்பட்டிருந்தது, பாதுகாக்கப்பட்டிருந்தது.

     ஆம், சோழர்களின் காலத்தில் மட்டும்தான், அதுவும் தஞ்சையில் மட்டும்தான், நகரைச் சுற்றிலும், பெரும் மதிற்சுவர்களும், அகழியும் அரண்களாக விளங்கியிருக்கின்றன.

     நினைத்துப் பாருங்கள்

     முழு நகரைச் சுற்றியும் பெரும் கோட்டை

     கோட்டையை ஒட்டிப் பெரும் அகழி

     இதுதான் தஞ்சாவூர்.

     இப்படிப்பட்டத் தஞ்சையில், ராஜராஜ சோழன் வாழ்ந்த அரண்மனை எப்படி இருந்திருக்கும்.

     எத்துணை அழகாய்

     எத்துணை கம்பீரமாய்

     உயர்ந்து எழுந்து நின்றிருக்கும்.

     இத்தகு பெருமை வாய்ந்த அரண்மனை, பாண்டியனின் கோபத்திற்கு இரையாகி, எரிந்து சாம்பலாகிப் போனதுதான் வேதனை.

     ஆம், மாறவர்மன் சுந்தரபாண்டியனால், தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, தரைமட்டமாக்கப் பட்டது, இந்த அரண்மனை.

     மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மறைவிற்குப் பிறகு, தஞ்சை இந்தப் பேரழிவினைச் சந்தித்தது.

     தப்பிப் பிழைத்தது, பெரியக் கோவில் மட்டும்தான்.

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியும் நீலமும் நின்று கவினிழப்ப
வாவியு மாறும் மணிநீர் நலனழித்துக்
கூடமும் மாமதிளுங் கோபுரமும் ஆடரங்கும்
மாடமும் மாளிகையும் மண்டபமும் பல இடித்துத்
………………………………… 

     தஞ்சையையும், உறையூரையும் அழித்ததாகக் கட்டியம் கூறுகிறது, பாண்டியனின் இந்த மெய்கீர்த்திப் பாடல்.

     அரண்மனை கொளுத்தப்பட்டது

     மிச்சம் இருந்ததும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டது

     எல்லாம் சரி

     கொளுத்தப்பட்ட, இடித்துத் தரைமட்டமாக்கப் பட்ட, சோழர்களின் அரண்மனை இருந்த இடம்தான் எது?

      பல்லாண்டுகளாய் தஞ்சை மக்களை வாட்டி வதைக்கும் கேள்வி இதுதான்.

     அரண்மனை இருந்த இடம் எது?

      அரண்மனையின் எச்சம், மிச்சம் கூடவா இல்லாமல் போய்விடும்.

      இல்லை

      எச்சமும், மிச்சமும் இருக்கிறது.

      வாருங்கள், சற்றுப் பின்னோக்கிப் பயணித்து, தஞ்சையை ஒரு வலம் வருவோம், வாருங்கள்.

      கி.பி.850 இல் தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப் பற்றிய விஜயாலயச் சோழன், தனது வெற்றியைக் கொண்டாடும வகையில், வெற்றி தேவதை, கொற்றவை என்னும் நிசும்பசூதனிக்கு, ஒரு கோவில் எழுப்பினான்.

     இன்றைய கீழவாசல், கீழ்க் கோடியில், குயவர் தெருவில், புதையுண்டு வெளிப்பட்டக் கொற்றவையே, விஜயாலயச் சோழன் நிறுவிய நிகும்பசூதனி என வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

     இக்கோயில், தஞ்சையின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.

      வட கிழக்கு திசையை, ஈசானி மூலை என்பர்.

      இன்றும்கூட, சிறிய கட்டிடமோ, பெருங்கட்டிடமோ, ஈசானி மூலையில் இருந்து தொடங்குவதுதான் மரபாக இருக்கிறது.

      எனவே, நிசும்பசூதனியின் இருப்பிடத்திற்கு மேற்புறம்தான் சோழர்களின் அரண்மனை இருந்திருக்க வேண்டும்.

      மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில், சோழ அரசுப், பேரரசாய் விரிவடைந்த போது, பாதுகாப்பு மற்றும் குடியிருப்பு இடத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இன்றைய கரந்தையின், அதாவது கருந்திட்டைக்குடி பகுதியில், வடவாற்றை நீராதாரமாகக் கொண்டு, தஞ்சையின் புறநகர் பகுதியாகப். புறம்படி மாளிகை ஒன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது,

      அரச குடும்பம், உயர் அலுவலர்கள், கோயில் ஊழியர்கள் வசிப்பதற்கு என, மிகுந்த பாதுகாப்புடன் வசித்த இடம், தஞ்சை கோட்டை, உள்ளாலை என அழைககப் பட்டது.

     உள்ளாலை

     புறம்படி

     புறம்படியில், யானை, குதிரை கொட்டடிகள், வணிகப் பெருந் தெருக்கள், படை வீரர்களின் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன.

      சரி, அப்படியானால், தஞ்சை கோட்டை உள்ளாலை எவ்விடம் இருந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

      இதோ விடை.

     



சில ஆண்டுகளுக்கு முன், இப்போதிருக்கும் அரண்மனை வளாகத்தில், அகழாய்வு மேற்கொள்ளப் பட்டது.

     அப்பொழுது கலைக் கூடத்தை ஒட்டியுள்ள பகுதியில், சில கட்டிட இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

     இவை நாயக்கர் கால எச்சங்கள் என முடிவு செய்யப்பட்டு, பணியும் இனிதே முடித்து வைக்கப் பட்டது.

     ஆனால், சற்று சிந்தித்துப் பார்த்தோமானால், வரலாற்றின் சில பக்கங்களைப புரட்டிப் பார்ப்போமேயானால், சில உண்மைகள் விளங்கும்.

     நாயக்கர் காலத்தில், பெரிய படையெடுப்புகளையோ, அதனால் பெரும் அழிவினையோ, தஞ்சை அரண்மனை சந்திக்கவில்லை என்பது உண்மை.

     அப்படியானால், நாயக்கர் கால அரண்மனைக்கும் கீழே, மண்ணில் புதைந்திருப்பது யாருடைய அரண்மனையாக இருக்க முடியும்.

     நாயக்கர்கள் கால கட்டிடங்களுக்கும் கீழே, பூமியில், நான்கு அடி முதல், பத்து அடி ஆழத்தில், மூழ்கி இருக்கும் கட்டட எச்சங்கள், நிச்சயம், நாயக்கர்கள் காலத்தைச் சார்ந்ததாக இருக்கவே முடியாது அல்லவா.

      அப்பாடியானால், இந்த எச்சங்கள், நாயக்கர் காலத்திற்க முன், தஞ்சையை ஆண்ட, சோழர்களின் அழிந்து போன, அழிக்கப்பட்ட, தீ வைத்துக் கொளுத்தப்பட்ட, அரண்மனையின் எச்சங்கள்தான் என உறுதியாய் கூற முடியும்.

      எனவே, இப்போதுள்ள அரண்மனை, சோழர் அரண்மனையின் அழிவுகளின் மீதுதான் கட்டப்பெற்றிருக்கிறது என்பது திண்ணம்.

      சோழர் கால அரண்மனை இருந்த இடமும், இப்பொழுது இருக்கும் நாயக்கர் கால அரண்மனையும் ஒரே இடம்தான்.

    



அரண்மனைக்கு அருகில் உள்ள உழவன் சிலை விளையாட்டுத் திடலில், அகழாய்வு செய்தால், நிச்சயம், வெகு நிச்சயமாய், மீதமுள்ள சோழர் கால அரண்மனை வெளிப்படும்.

     செய்வார்களா?

---

     நண்பர்களே, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல், ஒளிப் படக் காட்சிகளோடு, வரலாற்றுச் செய்திகள், ஆதாரங்களோடும், தகுந்த மேற்கோள்களோடும், தெறித்து விழ. தன்னிலை மறந்துதான் அமர்ந்திருந்தேன்.

       பல்லாண்டு கால தனது ஆய்வின் மூலம், ஒரு மாபெரும் வரலாற்று உண்மையை வெளிக் கொணர்ந்திருக்கிறார் இவர்.

      மறுதலிக்க முடியாத வாதத்தை முன் வைத்து, குழுமியிருந்த அனைவரின் உள்ளங்களையும் வென்று விட்டார், இந்த வரலாற்று ஆய்வாளர்.

     இதில் வியப்பிறிகுரிய செய்தி என்ன  தெரியுமா?

     இவர் ஒரு ஆசிரியர்

     பட்டதாரி நிலை கணித ஆசிரியர்

     பதவி உயர்வு பெற்று, மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியராகச் சீரியப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


     ஓய்விற்குப் பிறகும் பல ஆண்டுகள், மெட்ரிக் மேனிலைப் பள்ளி முதல்வராகவும் பணியாற்றியவர்.
     
     தன் காலம் முழுவதையும் வரலாற்றின் பக்கம் திருப்பி, தேடுதலிலேயேச் செலவிட்டவர்.

வரலாற்று ஆய்வாளர்
அய்யம்பேட்டை ந.செல்வராஜ்.
…..


கடந்த 12.8.2018 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற,
ஏடகம் அமைப்பின்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவில்
வரலாற்று ஆய்வாளர்
அய்யம்பேட்டை ந.செல்வராஜ் அவர்களின்
உரைகேட்டு மயங்கித்தான் போனேன்.

      இவரைப் பல ஆண்டுகளாக, நான் அறிவேன்.

       இருப்பினும், நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு, இவர்தம் பொழிவைக் கேட்டு மகிழ்வதற்கான வாய்ப்பு இப்பொழுதுதான் கிடைத்தது.


இவர், நமது நண்பர்
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் நண்பர்.

கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்பர்.

முனைவர் பா.ஜம்பலிங்கம் ஓர் ஆய்வாளர்

அய்யம்பேட்டை ந.செல்வராஜ் ஓர் ஆய்வாளர்

இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்த ஏடகம் நிறுவுனர்
திரு மணி.மாறன் ஓர் ஆய்வாளர்.

ஆய்வாளர்களின் சங்கமம் ஏடகம்.

…..

சோழரும் அரண்மனையும்
என்னும் தலைப்பிலான
ஏடகப் பொழிவிற்கு வந்திருந்தோரை,


தஞ்சை ஜினாலயம், அறங்காவலர்
திருமிகு ச.அப்பாண்டைராஜ் அவர்கள்
வரவேற்றார்.

தஞ்சாவூர், மகளிர் மற்றும் மகப்பேறு அரசு மருத்துவர்
மருத்துவர் ஜெ.காயத்ரி அவர்கள்,
தலைமையுரை ஆற்றினார்.


ஏடகப் பொறுப்பாளர்,
திரு பி.கணேசன் அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.


தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர்
முனைவர் க.ஆனந்தி அவர்கள்
நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.



ஒவ்வொரு மாதமும்
ஞாயிறு முற்றம்
ஒவ்வொரு பொழிவும்
வேறு வேறு விதம்
என ஏற்பாடு செய்து,
அரங்கேற்றிவரும்
ஏடகம் நிறுவுநர்
திரு மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது

போற்றுவோம், வாழ்த்துவோம்.