07 டிசம்பர் 2018

நடமாடும் நினைவுப் பெட்டகம்



சுவையான கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்

சொல்லட்டுமா? சோழன் மகளை சேரன் மணந்தான். சேரனுக்கோர் செல்வன் பிறந்தான். அந்த செல்வன் இந்தச் சிலையை மணந்தான்;

 'தெரிந்த கதைதானே இது'

 நடந்த கதை கூட

நடக்காத கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்

 சுவைக்காது கண்ணே அது.

காதல் கதை ஒன்று

 இதோ புறநானூற்றில்..

போதும். வீரக் கதை தானே?

வீரத்தை மணந்த காதல் கதை!

காவிரி தந்த தமிழகத்து புது மணலில் களமமைத்த சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது.

அந்நாளில் போர் களத்தில், தாய்நாடு காக்க தாவி பாய்ந்து செத்தார் தந்தை என்ற சேதி கேட்டு, தனல் மேல் மெழுகானாள் தமிழகத்து கிளி ஒருத்தி.


அனல் போலும் கண்ணுடைய அயலூர் சென்றிருந்த அவள் கணவன் வந்திட்டான்.

புனல் போக்கும் விழியாலே அவள் போர் செய்தி தந்திட்டாள்.

தந்தை களம் பட்ட செய்திக்கோ தவித்தாய்? என்றான்.

இல்லை அன்பா! முல்லை சூழ் இந்நாட்டு படைக்கோர் வீரர் குறைந்திட்டால், நல்ல உடையில் ஓர் கிழிசல் வந்தது போலன்றோ? இனி தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன். அடைபட்ட கண்ணீர் அணை உடைத்தது அத்தான் என்றாள்.

அவன் குகை விட்டு கிளம்பும் ஒரு புலியென, புகை விட்டு குமுறும் எரிமலையென, பகை வெட்டி சாய்க்கும் வாள் எடுத்தான்.
சூழ் உரைத்தான். சுடர் முகம் தூக்கினான்.
சுக்கு நூறுதான் சூழ்ந்து வரும் படை என்றான்.
நாடு மீட்காமல் வீடு திரும்பேன் என்றான்.

நங்கையோ நகை முழக்கம் செய்து நடந்திடுக கண்ணே! என்றாள்.

திருப்பி வருவேனோ இல்லையோ, எதற்கும் இப்போதே ஒரு முத்தம்.

இந்தா திரும்பு என்றான்.

கொடுத்தான்.

பின் தொடுத்தான் பகைவர் மீது பாணம்.

போர் போர் போர் எனவே முழங்கிற்று முரச ஒலி.

பார் பார் பார் அந்த பைங்கிளியின் உரிமையாளன் பகைவர் மீது பாய்ந்து கொல்லும் வீரம் பார் என்று பட்டாளத்து தோழர் எல்லாம் வியந்துரைத்தார்.
அந்த கட்டாணி முத்தாளும் கண் வழியே சிரித்திட்டாள், களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுகாய் குவிந்து வரும் வெற்றிகளை கேட்டு விட்டு.
கோட்டைகள் விடு பட்டன.
எதிரியின் குதிரை கால்கள் உடை பட்டன.
வேழ படை முறிபட்டது.
வேல்கள் பொடி பட்டன.
என் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடை இடியென கேட்குது கேட்குது என குதித்திட்டள்.
புது பண் அமைத்திட்டாள்.
வீரர்கள் வந்தனர்.
வெற்றி உன் கணவனுக்கே என்றனர்.
வேந்தனின் தூதுவர் வந்தனர்.
வாழ்த்துகள் வழங்கினர்.
வீட்டோரத்து தோழிகள் வந்தனர்.
வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்.
அந்த அழகி ஆனந்த கண்ணீர் பொழிந்தாள்.

அப்போது ஏன் அந்த மனிதன் வந்தானோ? இழவு செய்தி சொல்வதற்கு.

என் அருமை பெண் பாவாய்.
கண்ணல்ல கலங்காதே.
களச் செய்தி கடைசி செய்தி கேள் என்றான்.

அந்தோ! மாவிலை தோரணம் கட்டி, மண விழா மேடை தன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன் மார்பிலே வேல் தாங்கி, நல்ல சாவிலே வீழ்ந்து விட்டான்.

ஆவிதான் போன பின்னும் உயிர் வாழும் ஆரணங்கு,
  அச்சடித்த தமிழ் பதுமை கூவி அழுதாள்.

கொத்தான மலர் அந்த குடும்பம்.
அதை கொத்தாமல் கொத்திவிட்ட கொடுஞ்சாவை பழித்தாள்.
இழித்துரைத்தாள்.
இனி என்ன மிச்சம் என்றும், கனி அழுகி போனதென்றும் கதறி அழுதாள்.

பனி வெல்லும் விழி காட்டி, பனை வெல்ல மொழியுரைத்து, பள்ளியறை கவி பாடும் நாளெல்லாம் மண் தானோ?

இனி இது தூங்காத கண் தானோ? என அழுதாள் அத்தானின் பிணம் கிடக்கும் களம் நோக்கி தொழுதாள்.

சோகத்தால் வீழ்ந்து விட்ட அவள் காதில், வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும்
  போர் முரசம் பட்டதுதான் தாமதம்.

கெட்டதுதான் கெட்டது நம் குடி. முழுவதுமே பட்டொழிந்து போகட்டும் என எழுந்தாள்.

மட்டில்லா புகழ் கொண்ட நாட்டுக்கே அன்றி வீட்டுக்கோ வாழ்வேன்? என்றாள்.

வட்டிலினால் நாள் பார்க்கும் விதம் கொண்ட தமிழ் நாட்டு மாதரசி, தொட்டிலிலே இட்டு தான் வளர்த்த தூய செல்வன், அட்டி இன்றி கல்வி கற்க ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவு கொண்டாள்.

அங்கு சென்றாள்.
அம்மா என்று பாய்ந்தான் அழகுமிகு மழலை மொழி அன்பு தங்கம்.

அப்பா, தாத்தா ஊர் திரும்பினாரோ என்றான்.

திரும்பி வந்து சாவூர் சென்று விட்டார்.

கரும்பே நீயும் வா என அழைத்தாள்.

என்ன வாங்கி வந்தார் என்றான்.

மானம்! மானம்! அழியாத மானம் என்றாள்.

மகனே அதை சுவைக்க நீயும் வருக என்றாள்.

வந்து விட்டான் குல கொழுந்து.

குடும்ப விளக்கு எரிந்து கொண்டே கூறுகின்றாள்.

எதிரிகளின் படை எடுப்பால் நம் குடும்பம், தலை உதிர்த்து விட்ட மரமாகி போனதடா தம்பி,
கவலை இல்லை.
களம் சென்றார்.
மாண்டார்.
ஆனால், இந்த நிலம் உள்ள வரையில் மானம் காத்தார் என்ற பெயர் கொண்டார்.
மகனே நீயும் உன் தோளிலே பலம் உள்ள வரையில் பகையை சாடு.
பரணி பாடு.
இது உன் தாய் திருநாடு.
உடனே ஓடு எனத் தாவி அணைத்து தளிர் மகன் தன்னை, சீவி முடித்து சிங்காரித்து, ரத்த காவி படிந்த வாள் கொடுத்து, சென்று வா மகனே செறு முனை நோக்கி என வாழ்த்தி விட்ட திருவிடத்து காட்சி தன்னை போற்றி பாடாதார் உண்டோ
திருமகளே இப் பூ உலகில்?


1956 ஆம் ஆண்டு வெளிவந்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த, இராஜா ராணி படத்தில், இடம் பெற்ற, சேரன் செங்குட்டுவன் நாடகத்திற்காக, கெடுக சிந்தை எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலை, அடியொற்றி, டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய, எழுச்சிமிகு வசனத்தை, இம்மனிதர் பேசப் பேச, உலகையே மறந்து, திறந்த வாய் மூட மறந்து பார்த்திருந்தேன்.

     அரசருக்கு உரிய ஒப்பனை ஏதுமின்றி, சிவாஜி கணேசனே, மீண்டும் வந்து, தன் சிம்மக் குரலால், முழங்குவதைப் போன்ற ஓர் உணர்வு.

     62 ஆண்டுகளுக்கு முன், தான் பார்த்த, படத்தின் வசனத்தை, இன்றுதான் பார்த்ததுபோல், ஏற்ற இறக்கங்களோடு, ஒரு எழுத்து மாறாமல், ஒரு சொல் பிறழாமல், கேட்போர் நாடி நரம்புகள் எல்லாம், வீரத்தால், பெருமித உணர்வால், முறுக்கேறும் வண்ணம், பெருவெள்ளமாய் ஆர்ப்பரித்து வெளி வந்தன வார்த்தைகள்..

இவர் ஒரு
நடமாடும் நினைவுப் பெட்டகம்

     ஒரு முறை படித்து மனப்பாடம் செய்துவிட்டாரானால், எத்துணை வருடங்கள் ஆனாலும் மறக்கவே மாட்டார்.

     தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியங்கள் வரை அனைத்துப் பாடல்களும், அப்பாடல்களுக்கானப் பதவுரைகளும், தெளிவுரைகளும், இவரது நினைவு அடுக்குகளில் ஆழ்த்தான் பதிந்து கிடக்கின்றன.

     ஒவ்வொரு பாடலும், இவர் வாய் திறக்கும் முன்பே, தொண்டைக்கு வந்து, வரிசை வரிசையாய் நிற்கும்.

     ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டப் பாடல்கள், எப்பொழுது, எவர் கேட்டாலும், தயக்கமின்றி, இவர் நாவிலிருந்து தெறித்து வெளிவரும்.

     இவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் தீவிரத் தொண்டர்.

    கலைஞர் கதை, வசனம் எழுதியப் படங்களுள், பத்துப் படங்களின் முழு வசனத்தையும், தொடக்கம் முதல், வணக்கம் வரை, பிசிறு தட்டாமல் முழங்கும் ஆற்றலாளர்.

     இவர் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது தொடங்கிய பழக்கம், இவரை இன்றும் விடாமல் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கிறது.

புலவர் சா.பரமசிவம்
இவர் பயின்ற பள்ளியின் தமிழாசிரியர்
கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாய் நின்றவர்

     ஆனாலும், அருணகிரி பெருமான் இயற்றியப் பாடல்களை, சுவைபட, பொருள்பட விளக்குவதில் வித்தகர்.

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய … குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய …. மணவாளா
எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலை, பதவுரையோடு, மனப்பாடம் செய்து வரும்படி, வகுப்பு மாணவர்களுக்குக் கட்டளையிட்டார்.

     வகுப்பில் அனைவரும் திணறியபோது, இவர் ஒருவர் மட்டும்தான், முழுப் பாடலையும், அருவியெனக் கொட்டித் தீர்த்தார்.

     அன்று தொடங்கிய பழக்கம்

     பாடல்களை மனதிற்குள் பதிவேற்றம் செய்யத் தொடங்கிய பழக்கம், இவர் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தபோது, உறுதி பட்டுப் போனது.

     கரந்தைப் புலவர் கல்லூரியில் கால் பதித்தார்

     கரந்தை மண்ணில் ஆழமாய், திடமாய் கால் ஊன்றினார்.

     இவரே சொல்கிறார்,

இந்த மண்ணில்
ஒரு மண் வந்தாலும்
தமிழ்ப் படிக்கும்
அப்பேற்பட்ட மண்
கரந்தை மண்.

     புதிதாய் புகுந்த மண்ணைக் கூட, கரந்தை மண், தமிழ்ப் படிக்க வைக்கும் என்றால், தமிழ் மேல், பெரும் காதலோடு வந்த இவரை, எப்படி வரவேற்றிருக்கும், மெருகேற்றி இருக்கும்.

புலவர் ந.இராமநாதன்
இவருக்குப் பேராசிரியராகவும்,
கல்லூரியின் முதல்வராகவும் வீற்றிருந்தவர்.

     வகுப்பறைக்குள் நுழைந்ததும், புத்தகத்தைத் திறந்து, அன்று நடத்த இருக்கும் பாடலின், முதல் அடியைப் பார்த்தார் என்றால், அதன் பின் புத்தகத்தைப் பார்க்கவே மாட்டார்.

     அவரது நினைவகத்தில் இருந்து பாடல் வரிகள், வற்றாது பெருமழையாய்ப் பொழியும்.

     அற்புத நினைவாற்றல் உடையவர்.

     தன் ஆசிரியரைப் பார்த்து, பேராசிரியரைப் பார்த்து, இவருக்கும் ஒரு உள்ளக் கிளர்ச்சி, தானே பொங்கியது.

      வயது முதிர்ந்தப் பேராசிரியரே, பாடல்களை, நூலினைப் பார்க்காமலேயே, அருவியாய்ப் பொழிகிறார் என்றால், இளமையின் தொடக்கத்தில் நிற்கும், தான் இன்னும் மேலாய் படிக்க வேண்டாமா?  படித்துப் படித்து மனதில் இருத்த வேண்டாமா? என்னும் மன எழுச்சி.

     இவரது ஊர் ராவுசாப் பட்டி

     தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும் சிற்றூர்.

     கரந்தைக்குத் தினமும் மிதிவண்டிப் பயணம்.

     காலையில் 12 கி.மீ

     மாலையில் 12 கி.மீ

     இப்பயணத்தையே, தன் பயிற்சிப் பட்டறையாக மாற்றிக் கொண்டார்.

     இவரது கால்கள் மிதிவண்டியை மிதிக்கும்.

     மனமோ அன்று வகுப்பறையில் நடத்தப்பட்டப் பாடலை எடுத்துக் கொடுக்க, தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டே வருவார், போவார்.

     மிதிவண்டியை மிதிக்க மிதிக்க, மனதில் பதிவேறியப் பாடல்களின் எண்ணிக்கையும், ஒவ்வொரு நாளும், கூடிக் கொண்டே போனது.

     சங்க இலக்கியப் பாடல்களின் சங்கமம் இவர்.

---

     இவர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை.

     இவரது பேரன்பையும் பெற்றிருக்கிறேன் என்பது அதனினும் பெருமை.

புதுச்சேரியில் வாழும்,
உலகம் சுற்றும் வாலிபர்
தேடலின் நாயகர்

பண்ணாராய்ச்சி வித்தகர்
குடந்தை சுந்தரேசனார்
மற்றும்
விபுலாநந்த அடிகளார்
ஆவணப் படங்களை உருவாக்கி, உலகத் தமிழர்களின் இதயங்களில் எல்லாம் உன்னத இடத்தைப் பிடித்த,


முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்,

ஒரு இலட்சம் பாடல்களை உள்ளத்தில், ஏந்தி வாழும், இந்த நினைவுப் பெட்டகத்தை, தமிழ்ப் பொக்கிசத்தை, நேர் காணல் கண்டு, ஒளி, ஒலி நாடாக்களில் உள் வாங்கியபோது, உடனிருந்து காணும் பேற்றினையும் பெற்றேன்.

நேர்த்தியான ஒளிப் பதிவு

துல்லியமான ஒலிப் பதிவு

அற்புதமாய் கேள்விக் கணைகளைத் தொடுத்து.
நினைவுப் பெட்டகத்தின்,
வியப்புறு வாழ்க்கையை, வெளிக் கொணர்ந்து
ஆவணப் படுத்திய
இவரின் எண்ணமும், முயற்சியும், போற்றுதலுக்கு உரியது.


வாருங்கள் நண்பர்களே,
இந்தக் காணொலிக் கதவினைத் திறந்து,
உள்ளே வாருங்கள்.

பொங்கும் தமிழை
அள்ளி அள்ளிப் பருக வாருங்கள்.

நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

இன்றைய மாணவர்கள் தமிழைப் படிக்க வேண்டும்.

தமிழ் வேறு, தான் வேறு என்ற எண்ணமில்லாமல் படிக்க வேண்டும்.

மதிப்பெண்களுக்காகப் படிக்கக் கூடாது

மதி கிடைக்கப் படிக்க வேண்டும்

ஆழங்கால் பட வேண்டும்

அந்த இலக்கியம் தரக் கூடிய இன்பம்தான், வாழ்நாளில் நாம் படக்கூடிய, அவ்வளவு தொல்லைகளையும், அல்லல்களையும், இன்னல்களையும், இடுக்கண்களையும், அலக்கண்களையும், பழங்கண்களையும், உறுக்கண்களையும் போக்கக் கூடிய ஒப்பற்ற மருந்து.
என முழங்கும், இவர்தான்





முதுபெருந் தமிழறிஞர்
செந்தமிழ் மாகடல்
முனைவர் இரா.கலியபெருமாள்