21 டிசம்பர் 2018

மனைவி அமைவதெல்லாம்
     கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளே, அம் மாணவர், உறுதியாய் ஒரு முடிவினை எடுத்தார்.

     எந்த வேலைக்கும் போகக் கூடாது.

     யாரிடமும் கை கட்டி நிற்கக் கூடாது.


     பிறகு,

     எழுத வேண்டும்

     எழுத்தை நம்பியே வாழ வேண்டும்.

     எழுத்தை மட்டும் நம்பி வாழ்வது கடினம், நல்ல வேலைக்குப் போ.

     எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள்

      எந்த வேலைக்கும் போக மாட்டேன்

      எழுத்தே வாழ்க்கை

      உறுதியாய் இருந்தார்

      கல்லூரிக் காலத்திலேயே காதலிலும் விழுந்தார்.

      இருவரையும் இணைத்தது புத்தகங்கள்

      நிறையப் பேசினார்கள்

      ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டார்கள்

      எந்த வேலைக்கும் போக மாட்டோன்

      காதலனின் உறுதியைப் பாராட்டினார் காதலி

      வேலைக்குப் போக வேண்டாம்

      நிறையப் படியுங்கள்

      அதனினும் நிறைய எழுதுங்கள்

       நான் வேலைக்குப் போகிறேன்

       உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்

       யாருக்கு இப்படி ஒரு காதலி கிடைப்பார்?

       இவருக்குக் கிடைத்தார்.

       பொறியியல் படிப்பு முடிந்து., காதலி வேலைக்குச் சென்றார்.

       காதலனுக்குத் தேவையானப் பணத்தை சம்பாதித்துக் கொடுத்தார்.

       காதலி கொடுத்தப் பணத்தில், இந்தியாவையே, ஒரு சுற்று சுற்றி வந்தார் காதலர்.

        திருமணம் ஆனது

        காதலர் இருவரும் தம்பதியினர் ஆயினர்.

        காதல் மட்டும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.

        வீட்டின் கஷ்டம் தெரியாமல் பிள்ளைகளை வளர்ப்போமில்லையா?

        இவர் மனைவி, தன் கணவரையும அப்படித்தான் வளர்த்தார்.

         இவர் ஒரு ஊர் சுற்றி

        நினைத்த நேரத்தில், நினைத்த பேருந்தில் ஏறி விடுவார்

       வீட்டிற்காக காய் கறி வாங்க, மிதிவண்டியில் கிளம்புவார்.

        கடைக்குச் செல்லும் முன்னரே மனம் மாறும்.

        நேராகப் பேருந்து நிலையத்திற்குச் சென்று, பேருந்தில் ஏறி, கங்கை கொண்ட சோழ புரத்திற்கோ, திருவனந்தபுரத்திற்கோ அல்லது ஹம்பிக்கோ சென்று விடுவார்.

         வீட்டில் மனைவி காத்திருப்பாரே, தன்னைக் காணாமல் தவித்திருப்பாரே என்ற எண்ணமே இவருக்கு இருக்காது.

        திடீரென்று ஒரு நாள் இரவில், வீடு திரும்பி கதவைத் தட்டுவார்.

        இத்தனை நாள் எங்கு சென்றீர்கள் என இவரது மனைவி, காதல் மனைவி, ஒருமுறை கூட கேட்டதே இல்லை.

         ஒழுங்காகச் சாப்பிட்டீர்களா?

         நன்றாகத் தூங்கினீர்களா?

         கையில் இருந்த பணம் போதுமானதாக இருந்ததா?

         கவலையுடன் விசாரிப்பார்.

         அடுத்தமுறை, ஊர் சுற்றக் கிளம்பும் முன் சொல்லுங்கள், போதுமான அளவிற்குப் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்பார்.

       பலமுறை பணம் கொடுத்தும் அனுப்பினார்.

       குழந்தை பிறந்தது.

        குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மனைவி, வேலைக்குச் சென்று விடுவார்.

        இவரோ, நாள் முழுவதும், குழந்தையைப் பார்த்துக் கொண்டே, படித்துக் கொண்டிருப்பார்.

          எழுதிக் கொண்டே இருப்பார்.

          குழந்தை அழுதால் கவனித்துக் கொள்வார்.

         வாழ்வில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட, நீ ஏன் வேலைக்குப் போய் சம்பாதிக்காமல், இப்படிப் படிப்பதும், எழுதுவதுமாய் இருக்கிறார் என்று ஒரு முறை கூட கேட்டதே இல்லை.

         வேலைக்கே போகக் கூடாது என உறுதியாய் நின்ற ஒருவரை, நம்பித் திருமணம் செய்துகொண்டு, அரவணைத்து, அன்பு செலுத்தி, இலக்கியத்திலும், வாழ்விலும், நிகரற்ற துணையாக வாழும் இவர் யார் தெரியுமா?

சந்திர பிரபா

இவரது காதல் மணாளன் யார் தெரியுமா?

ஒன்பது நாவல்கள், இருபது சிறுகதைத் தொகுப்புகள்,
நாற்பது கட்டுரைத் தொகுப்புகள், எட்டு திரைப்பட நூல்கள்,
பதினைந்து குழந்தைகள் நூல்கள், ஏழு உலக இலக்கியப் பேருரை நூல்கள்,
மூன்று நாடகத் தொகுப்பு நூல்கள்,
இரண்டு நேர் காணல் தொகுப்பு நூல்கள்,
மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள், நான்கு தொகை நூல்கள்
இரண்டு பிற மொழி நூல்கள்

படிப்பதற்கே மூச்சு வாங்குகிறதல்லவா?

இவர்தான்,
எழுத்தே வாழ்க்கையாய் வாழும்,
சாகித்திய அகாதமி விருது பெற்ற
எழுத்தாளர்எஸ்.ராமகிருஷ்ணன்.

-------------------------------------------------------------------------------------------
                                                                                                                                                                                                                                                                                                                                                                

      

25 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. வியப்பான தம்பதிகள் ஒவ்வொரு "ஆணின் வெற்றிக்கும் பின்னே இருப்பது பெண்" என்பது மெய்யே...

  பதிலளிநீக்கு
 3. பாராட்டுக்கள்.. இப்பவும் அவர் உழைக்காமல்தான் இருக்கிறாரோ?:) ஹா ஹா ஹா.. மாமியார் வீட்டில் கணவர் போய்த் தங்கி விட்டாலே தண்டச்சோறு எனச் சொல்லும் இக்காலத்தில், இவரை மட்டும் எப்படி ஊர் விட்டு வைத்ததோ....

  பதிலளிநீக்கு
 4. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு வியப்பான செய்தியை பதிவிட்டமைக்கு நன்றி, மகிழ்ச்சி. மேலும் திரு எஸ்.ரா அவர்கள் வேலைக்குதான் செல்லவில்லையே தவிர எழுத்துப் பணியில் கடுமையாக உழைத்து வருகிறார்.

  பதிலளிநீக்கு
 5. கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வார்களே! அது இதுதானோ...!!!!!!

  பதிலளிநீக்கு
 6. சிறந்த தம்பதிகள் ! எல்லோருக்கும் நினைத்த வாழ்க்கை கிடைத்து விடாது ! தன் எழுத்தின் மீது உள்ள நம்பிக்கையில் திரு எஸ்.ரா அவர்கள் வேலைக்குதான் செல்லவில்லையே தவிர எழுத்துப் பணியில் கடுமையாக உழைத்து வருகிறார்! சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் திரு எஸ்.ரா அவர்களூக்கு எனது வாழ்த்துக்கள் ! இதனைத் தெரிவித்த நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

  சித்தையன் சிவக்குமார் ! மதுரை!

  பதிலளிநீக்கு
 7. படித்ததும் வியப்பு மேலிடுகிறது. சாதனை மனிதருக்கான பின்புலமான அவரது மனைவி போற்றுதற்குரியவர்.

  பதிலளிநீக்கு
 8. சாதனையாளர்களின் பின்னே அவரவரது மனைவிகளின் பெயர் ஆப்பொறிக்கப்பட்டிருக்கிறதுதான்!

  பதிலளிநீக்கு
 9. படிக்கும்போதே எஸ்.ரா. தானோ என நினைத்தேன். அது உறுதியாகி விட்டது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. சிறந்த தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

  எஸ்.ரா பத்தி அறியாத தகவல்..

  ஒரு கலைஞனுக்கு குடும்பத்தின் ஆதரவு தேவை. அப்போதுதான் அந்த கலைஞன் ஜொலிக்கமுடியும்.

  பதிலளிநீக்கு
 11. இனிய நண்பர் John Durai Asir Chelliah பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

  சுறுசுறுப்பான இயக்குனர் ஸ்ரீதரை, திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது... பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்..! அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத்த படுக்கையாக வீட்டோடு முடங்கிப் போனார்.
  .
  கல்யாணப் பரிசு
  தேன் நிலவு
  நெஞ்சில் ஓர் ஆலயம்
  நெஞ்சம் மறப்பதில்லை
  காதலிக்க நேரமில்லை
  சுமை தாங்கி
  வெண்ணிற ஆடை
  சிவந்த மண்
  உரிமைக்குரல்
  இளமை ஊஞ்சலாடுகிறது
  .
  எத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்கள்...! ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே திரைப்படங்கள் ஓடியது ஒரு காலம்... ஆனால் அந்த ஸ்ரீதரின் கடைசிக் காலம் .. அந்த அஸ்தமன காலத்தில் அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்கு கண்ணாக கவனித்துக் கொண்டவர் தேவசேனா ..

  யார் இந்த தேவசேனா..?

  இவர் மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி..! மருத்துவமனையில் சீரியசான நிலையில் , சிகிச்சையில் இருக்கும்போது, சிலவேளைகளில் திடீரென யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவாராம் ஸ்ரீதர்..! உடனே தேவசேனா , ஸ்ரீதர் பார்க்க விரும்புகிறவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார் பார்க்கணும்னு ஆசைப்படறார்... கொஞ்சம் வர முடியுமா?” என்று பணிவோடு, பரிதாபமாக கேட்பாராம்...!

  இவர் கேட்கும் இரக்க தொனியில் எவராக இருந்தாலும் அடுத்த நிமிடமே ஸ்ரீதரைப் பார்க்க ஓடோடி வந்து விடுவார்களாம் !

  கணவரின் அன்புக்குரிய அந்த நண்பர்களை வரவழைத்து , அவர்களை கணவரோடு பேச வைத்து, கணவரின் கடைசி நிமிட எதிர்பார்ப்புகளையும் சிறப்பாகவே பூர்த்தி செய்த புண்ணியவதி, ஸ்ரீதரின் மனைவி தேவசேனா...!
  .
  சில வேளைகளில் ஸ்ரீதர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரைப் பார்க்க வரும் முக்கியப் பிரமுகர்களிடம் , சிறிது நேரமாவது பழைய கதைகளை ஸ்ரீதரிடம் பேசச் சொல்வார்களாம்..!
  .
  ஆனால் , ஸ்ரீதர் பேசுவதே என்னவென்று. வந்தவர்களுக்கு புரியாத நிலையிலும் கூட, தேவசேனா கணவர் சொல்வதைப் புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வாராம்...!
  .
  இப்படியாக ... பதினான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்தபோதும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத தேவசேனா , கட்டுக்கு அடங்காத கண்ணீர் வழிய நின்றது ஒரே ஒரு நாள்தான்...!

  அது ஸ்ரீதர் இறந்த 2008 , அக்டோபர் 20 இல் மட்டும்தான்...!
  .
  ஸ்ரீதர் செய்த பூர்வஜென்ம புண்ணியமெல்லாம் ஒரு பெண்ணாக வடிவெடுத்து , தேவசேனா என்ற பெயரில் அவருக்கு மனைவியாக வந்து வாய்த்தது.

  " மனைவி என்பவள்
  தெய்வமாகலாம்.."
  .
  ஆம் .. ஸ்ரீதரின் "சுமைதாங்கி" பாடலை கொஞ்சம் மாற்றி பாடிக் கொள்கிறேனே..!
  .
  "மனைவி என்பவள் தெய்வமாகலாம்
  வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
  உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
  மனைவி என்பவள் தெய்வமாகலாம்"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிடி அருமையான ஒரு பெண்மணி பற்றி பகிர்ந்திருக்கீங்க. அருமை. மனம் நெகிழ்ந்துவிட்டது...இப்படியும் பெண்மணிகள் பலர் உலக வெளிச்சத்தில் படாமல் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் சாதாரண மக்கள் என்பதால் வெளியுலகிற்குத் தெரியாமல் போய்விடுகிறார்கள்...

   கீதா

   நீக்கு
  2. ஸ்ரீதர் அவர்களின் துணைவியார் தேவசேனா பற்றி சிறப்பான, அறியாத செய்தியினை சரியான இடத்தில் திரு DD அவர்கள் தொகுத்து பதிவு செய்தமை பாராட்டுக்குறியது!

   நீக்கு
  3. எப்பேர்பட்ட மனைவி! நன்றி அண்ணா

   நீக்கு
 12. கொடுத்துவைத்த மனிதர் (கள்)

  பதிலளிநீக்கு
 13. துளசிதரன் : கொடுத்து வைத்தவர் நிச்சயமாக. வாழ்த்துகள் எஸ் ராமக்கிருஷ்ணன் அவர்களுக்கு.

  கீதா: முதல் சில வரிகளைப் படித்து வரும் போதே எஸ் ரா என்று தெரிந்துவிட்டது. அவர் மனைவி பற்றியும் வாசித்திருக்கிறேன் எஸ் ரா அவர்களே சொல்லியிருந்தது. அருமையான பெண்மணி. அவருக்குத்தான் வாழ்த்துகள் சொல்ல வேண்டும். இன்று எஸ் ரா அவர்களுக்கு விருது கிடைத்துள்ளது என்றால் சந்திரபிரபா அவர்களுக்குத்தான் முழு பெருமையும்!!!

  இருவருக்குமே வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இன்று எஸ் ரா அவர்களுக்கு விருது கிடைத்துள்ளது என்றால் சந்திரபிரபா அவர்களுக்குத்தான் முழு பெருமையும்!!! // உண்மை

   நீக்கு
 14. கரிசல் மண் என்கிற தலைப்பில் ஒரு பிளாக் ஆரம்பித்துள்ளேன்,ஆதரவு தரவும் வழக்கம் போல்,,,.நன்றி வணக்கம்/

  பதிலளிநீக்கு
 15. கொஞ்சம் படிக்கும்போது பாலகுமாரனோ என்று நினைத்தேன். பிறகு எஸ்.ரா என்பது புரிந்தது. சிறப்பான பதிவு.

  திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எழுதிய தேவசேனா-ஸ்ரீதர் பற்றியும் நான் படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. படித்தேன்., கண்களில் நீர் முட்டியதுஃ ராமகிருஷ்ணாவுக்கு ஒரு சந்திரபிரபா அமைந்தது போல எந்த ஆணுக்கும் ஒரு துணை அமைந்து விட்டால் வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்..?

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு