05 ஜூலை 2019

மழை பிணித்து ஆண்ட மன்னன்




     கோடையிலோ தண்ணீர் பஞ்சம்

     மழைக் காலத்திலோ, ஊரெங்கும் வெள்ளம்

     இதுதான் இன்று நம் நிலை.

     ஆனால் அன்று…


இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னன்

     இளங்கோ அடிகளாரின் எழில் மிகு வரிகள் இவை.

     மழை பிணித்து ஆண்ட மன்னன்

     எப்பேர்ப்பட்ட வார்த்தை பார்த்தீர்களா?

     முறையாகப் பெய்யும் மழை நீரை, ஏரி, குளங்களில் சேமித்து, மழையில்லாக் காலங்களில், தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம் பெறச் செய்பவனே திறமையான மன்னன்.

     மன்னனின் கடமை மழை நீரைச் சேமித்தல்

     நீர் நிலைகளைப் பாதுகாத்தல்

     இன்று நாம் மறந்தல்லவா போய்விட்டோம்.

     இதுமட்டுமல்ல, மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற, நீர் நிலைகளை அமைப்பதும், மன்னனின் தலையாயக் கடமைகளுள் ஒன்றாகவே, அன்று பார்க்கப்பட்டது என்பதை, ஒரு புறநானூற்றுப் பாடல் தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறது.

நிலன் யெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே

     நிலம் எங்கு, எங்கெல்லாம், பள்ளமாக இருக்கிறதோ, அங்கு அங்கெல்லாம், நீர் நிலை அமையும்படி, கரை அமைத்த மன்னர்களே என்றென்றும் அழியாப் புகழ் பெறுவர்.

     ஒரு மன்னன் நிலைத்த புகழைப் பெற வேண்டுமானால், அவன் நீர் நிலைகளை உருவாக்க வேண்டும்.

     நம் முன்னோர் இப்படித்தான் நினைத்தனர்

     அப்படிப்பட்ட அரசர்களைத்தான் போற்றினர்.

     புதிதாக உருவாக்கப்படும் நீர் நிலை எப்படி, எவ்வடிவத்தில் அமைய வேண்டும் என்பதையும், நம் முன்னோர், நன்கு அறிந்தே வைத்திருந்தனர்.

அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ.

     ஏரியானது நீளம் குறைவாகவும், ஆனால், அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பான, எட்டாம் பிறை வடிவத்தில் இருக்க வேண்டும்.

     இது ஏரி வடிவமைப்பில், மிகவும் சிக்கனமான அமைப்பாகும் எனப் பறைசாற்றுகிறது புறநானூறு.

     இதுமட்டுமல்ல, சிறுபஞ்சமூலத்தில், காரியாசான் என்ன கூறுகிறார் தெரியுமா?

குணம் தொட்டுக் கோடு பதித்து வழிசிவந்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம் தொட்டுப்
பாகுபடுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது.

     பொதுக் கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகை நீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர்கள், சொர்க்கத்துக்குப் போவார்கள் என வாழ்த்துகிறார்.

     மெய்சிலிர்க்குதல்லவா..

     அன்று சிறு ஏரி, குளங்கள் மட்டுமல்ல, கடல் போன்ற பெரு ஏரிகளும், எண்ணற்ற எண்ணிக்கையில் இருந்ததை எடுத்து இயம்புகிறது, இந்த நாண்மணிக்கடிகைப் பாடல்.

ஆறு உள்ளடங்கும் குளம்

    ஆற்று நீரையெல்லாம் இன்று கடல் விழுங்கி ஏப்பம் விடுகிறதல்லவா?

    அன்று ஆற்று நீரையெல்லாம் முழுமையாய் உள் வாங்கிய ஏரிகள் ஏராளம், ஏராளம்.

     இன்றும் நிலைத்து நிற்கும் பேரேரிக்கு எடுத்துக் காட்டு

     வீராணம் ஏரி

     16 கி.மீ அகலம்

      17 கி.மீ நீளம்

     வீராணம் ஏரி

     முக்கொம்பு, கல்லணை, கீழணை எனப்படுகின்ற அணைக்கரை என்னும் மூன்று அணைகளின் வழியே, நடந்து, நடந்து, பிரிந்து, பிரிந்து, பல கிளைகள் பரப்பிய ஆறுகள், சிற்றாறுகள், கால்வாய்களின் வழியே, தண்ணீரைப் பெற்று, தங்கள் முழு வயிற்றையும் நிரப்பிக் கொண்ட ஏரிகள், குளங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

     740 ஏரிகள் மற்றும் குளங்கள்.

     இந்த 740 ஏரி, குளங்களை நிரப்பிய பிறகும், உபரியாய் மிஞ்சிய நீர், அடைக்கலமானப் பேரேரிதான் வீராணம் ஏரி.

     வியப்பாக இருக்கிறதல்லவா

      இதனினும் பெருவியப்பு என்ன தெரியுமா?

      அன்றைய சோழ மண்டலத்தில் மட்டும், இருந்த ஏரிகள் மற்றும் குளங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

     சொன்னால், நம்பவே மாட்டீர்கள்

     முப்பதாயிரம் ஏரிகள், குளங்கள்

      இன்று  இவையெல்லா எங்கே?

---

     நண்பர்களே, வாழ்வில் முதன் முறையாக, முனைவர் பட்ட, பொது வாய்மொழித் தேர்வு ஒன்றினை, அரங்கில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.


கடந்த 28.6.2019 வெள்ளிக் கிழமை
நண்பகல் 12.00 மணியளவில்,
தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசு கல்லூரி
தமிழ் உயராய்வு மையத்தில்
நடைபெற்ற
முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு

     தலைப்பு என்ன தெரியுமா?

வரலாற்று நோக்கில், தமிழ் இலக்கியங்கள் காட்டும் நீர் மேலாண்மை

     ஆய்வாளர், தன் ஆய்வினை நான்கு பகுதிகளாகப் பிரித்து, முன் வைத்தார்.

1.   தமிழ் இலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை
2.   கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் காசுகள் காட்டும் நீர் மேலாண்மை
3.   நீரியல் திறன் காட்டும் கலைப் படைப்புகள்
4.   நீர் மேலாண்மைச் செயல்பாடுகள்

     ஆய்வாளர், தன் உதிரத்துடன் இணைந்துவிட்ட, ஆய்வினை, அழகுத் தமிழில் எடுத்துரைத்தபோது, அரங்கே அதிர்ந்துதான் போனது, தமிழரின் நீர் மேலாண்மை அறிந்து வியந்துதான் போனது.

     அரங்கில் குழுமியிருந்த பலரும், கேள்விக் கணைகளைத் தொடுக்க, கேள்வி முடியும் முன்னே, பதில் தெறித்துத் திரும்பி வந்தது.

ஆய்வு நெறியாளர்
மன்னர் சரபோசி கல்லூரி
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் வி.பாரி அவர்கள்
முன்னிலையில்.

வாய்மொழித் தேர்வின்
புறத் தேர்வாளர்
புதுவைப் பல்கலைக் கழகத்
தமிழ்த துறைப் பேராசிரியர்
முனைவர் க.இளமதி சானகிராமன் அவர்கள்
அரிதின் முயன்று, களப் பணி மேற்கொண்டு, தரவுகள் பல திரட்டி, செம்மையான ஆய்வேட்டினை வழங்கியிருக்கும், ஆய்வாளருக்கு, முனைவர் பட்டம் வழங்க, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துரை செய்கிறேன் என அறிவித்தார்.

     கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.

வரலாற்று நோக்கில், தமிழ் இலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற ஆய்வு.

ஆய்வாளர் யார் தெரியுமா?

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்,
பாடப் புத்தகமாய் இடம்பெறத் தகுந்த
ஆய்வேட்டை வழங்கியவர்
தஞ்சாவூர், சரசுவதி மகால்
தமிழ்ப் பண்டிதர்
ஏடகம் அமைப்பின் நிறுவுநர், தலைவர்


திரு மணி.மாறன் அவர்கள்.

ஆய்வாளரை
வாழ்த்துவோம், போற்றுவோம்