ஆண்டு 1991
அரசு உயர்நிலைப் பள்ளி, ஆவினங்குடி
ஒன்பதாம் வகுப்பு
கணிதப் பாட வேளை
கணித ஆசிரியர் கே.பி எனப்படும் கே.பாலகிருஷ்ணன்
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
மாணவர்கள் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருக்க,
ஒரு மாணவர் மட்டும் தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறார்.
மாணவரின் மடியில் திறந்த நிலையில் கணித நோட்டு
நோட்டிற்கும் கீழே ஒரு வயர் கூடை
வயர் கூடைக்கும் கீழே ஒரு புத்தகம்.
மணிமொழி
என்னை மறந்துவிடு
தமிழ்வாணன்
அவர்கள் எழுதிய அருமையான காதல் கதை
மணிமொழி
என்னை மறந்துவிடு
காதல் கதையில் முழுவதுமாய் மூழ்கித்தான் போய்விட்டார்
அந்த மாணவர்.
இந்த மாணவர் படிப்பில் சுட்டி
பாடப் புத்தகங்களைத் தாண்டிய புத்தகங்களைப் படிப்பதிலோ
படு சுட்டி
பள்ளிக்கு அருகிலேயே அரசு நூலகம்
இம்மாணவன் முதன் முதலாக நூலகத்திற்குள் நுழைந்தபோது,
நூலகர் சிறுவர் பகுதியை நோக்கி கை காட்டினார்.
இந்த மாணவரோ, கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் சில பாகங்கள் வேண்டும், இருக்கிறதா
என்றார்.
நூலகரோ இந்த மாணவரை மேலும் கீழுமாகப் பார்த்தார்.
வெள்ளை சட்டை, நீலக் கலர் டவுசர். பள்ளிச் சீருடை
நீ எதுக்கு அதைத் தேடற? அதைப் படிச்சு என்ன பன்னப்
போறே?
சட்டென்று மாணவரிடமிருந்து பதில் வந்தது.
பிடிச்சிருக்கு,
படிக்கிறேன்.
நூலகருக்கு இம்மாணவரின் தோற்றமும, பேச்சும் பிடித்துப்
போய்விட்டது.
உடனே, அம்மாணவரை, நூலக உறுப்பினராக்கி, கேட்ட
நூல்களை எல்லாம் தேடித் தேடி எடுத்துக் கொடுத்தார்.
அப்படித்தான் தமிழ்வாணனை, இந்த நூலகத்தில் கண்டுபிடித்தார்
இந்த மாணவர்.
தமிழ்வாணனின் எளிமையான எழுத்து நடை, கதையைக்
கொண்டு செல்லும் விறுவிறுப்பு, சங்கர்லால், வகாப் போன்ற துப்பறியும் பாத்திரங்களின்
புத்திக் கூர்மை, இவையெல்லாம் இம்மாணவரைச் சுண்டி இழுத்தன.
தமிழ்வணனின் ஒவ்வொரு நூலாகத் தேடித் தேடிப் படிக்கத்
தொடங்கினார்.
மணிமொழி என்னை மறந்துவிடு
சிறு வயது
கதையோ அருமையான காதல் கதை
இம்மாணவர் சொக்கித்தான் போய்விட்டார்
புத்தகத்தை மூடவே, இம்மாணவருக்கு மனமில்லை
வகுப்பிலும் படித்தார்
ஆசிரியர் பாடம் நடத்த நடத்த, இவரோ, மணிமொழியிடம்
மயங்கி, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டிருந்தார்.
கணித ஆசிரியர், இவர் பாடத்தைக் கவனிக்காமல்,
கதைப் புத்தகம் படிப்பதைப் பார்த்துவிட்டார்.
கடும் கோபம் வந்தது.
என் வகுப்பில் கதைப் புத்தகமா படிக்கிறாய், வெளியே
போ
வகுப்பை விட்டு வெளியே வந்த மாணவருக்கு என்ன
செய்வது, எங்கே போவது என்று புரியவில்லை
அருகிலுள்ள சிற்றூரான, திட்டக்குடியில் உள்ள
திரையரங்கில், அப்பொழுது ரகுவரன் நடித்த என்
வழி தனி வழி என்னும் படம் ஓடிக் கொண்டிருந்தது.
இதுதான் நமக்கு ஏற்ற படம் என்று நேராகப் படம்
பார்க்கச் சென்றுவிட்டார்
என்
வழி , தனி வழி
இம்மாணவரின் வழியும், தனி வழிதான்
மறுநாள் வகுப்பிற்கு வந்தபோது, கணித ஆசிரியர்
கே.பி அவர்கள் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார்.
என்
வகுப்பிற்கு வரலாம், ஆனால் இனி கிளை நூலகத்தின் பக்கம், தலை வைத்துக் கூடப் படுக்கக்
கூடாது என்றார்.
முடியாது,
நான் நூலகம் செல்வேன்
இல்லை, நீ போகக் கூடாது
நான் போவேன்
ஆசிரியர் குரல் உயர, உயர, மாணவர் குரலும உயர்ந்து
கொண்டே சென்றது.
இனி
என் வகுப்பிற்கு நீ வரவே கூடாது.
இம்மாணவரோ, ஒன்பதாவது வகுப்பின், வேறொரு பிரிவிற்கு
மாற்றப் பட்டார்.
அந்த
வகுப்பின் கணித ஆசிரியர் எம்.எஸ் சார்
என அழைக்கப்படும் எம். செல்வராஜ்
மிகவும் கண்டிப்பானவர்
கண்டிப்பு காட்டினாலும், இம்மாணவரின் ஆர்வம்
அறிந்து, அன்பால் தன்வசப்படுத்தினார், நெறிப்படுத்தினார்.
இப்புதிய வகுப்பில், இம்மாணவருக்கு இரு நெருங்கிய
நண்பர்கள் கிடைத்தனர்.
அண்ணாதுரை,
மாணிக்கவேல் .
ஆசிரியர் எம்.எஸ் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில்,
மூவருமே இலட்சியத்தோடு வளர்ந்தனர், உயர்ந்தனர்.
ஒன்பதாவது வகுப்பில், தமிழ் வழியில், ஒரே வகுப்பில்
படித்த இம்மாணவர்கள் மூவரும், இன்று உயர் பதவிகளில், உச்சானிக் கிளையில் அமர்ந்திருக்கின்றனர்.
திரு ஆ.அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்., அவர்கள்,
மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்
திரு பா.மாணிக்கவேல், ஐ.ஆர்.எஸ்., அவர்கள்,
மண்டல இணை இயக்குநர், அமலாக்கத் துறை, சென்னை
மணிமொழி என்னை மறந்துவிடு
என்னும் நூலை
வகுப்பறை என்பதைக் கூட மறந்து படித்தவர்,
முனைவர் த.செந்தில்குமார், எம்.எல்.,பி.எச்டி.,
அவர்கள்
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர்
வியப்பாக இருக்கிறதல்லவா? ஒரே வகுப்பு மாணவர்கள்
மூவர், இன்று வாழ்வில் உச்சம் தொட்டிருக்கிறார்கள் என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது
அல்லவா.
இவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தாலும், தங்கள் ஒன்பதாம்
வகுப்பு கணித ஆசிரியரை மட்டும் ஒரு நாளும் மறந்தார்கள் இல்லை.
கடந்த 2018 ஆம் ஆண்டில்,
திரு ஆ.அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்., அவர்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும்,
முனைவர் த.செந்தில்குமார்,
எம்.எல்.,பி.எச்டி., அவர்கள்,
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும்
ஒரே ஊரில் பணியாற்றியபோது,
26.1.2018 அன்று கொண்டாடப்பெற்ற,
குடியரசு தின விழாவிற்கு,
தங்களின் ஒன்பதாம்
வகுப்பு கணித ஆசிரியர்
திரு எம்.செல்வராஜ்
அவர்களை
விருந்தினராக அழைத்துச்
சிறப்பித்தனர்.
இதுமட்டுமல்ல, இவ்வாண்டு, சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ.,
மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின்போது, 19.1.2020 ஞாயிற்றுக் கிழமையன்று
நடைபெற்ற,
முனைவர் த.செந்தில்குமார் அவர்களின்
பெரிதினும் பெரிது கேள்
நூல் வெளியீட்டு விழாவின்போது,
உழைப்பால் உயர்ந்த,
இம் மேனாள் மாணவர்கள் மூவரும்
தங்கள் ஆசிரியரை மேடையேற்றி,
ஆசிரியரின் திருவடிகளைத்
தொட்டு வணங்கிய காட்சி
காண்போரை நெகிழச்
செய்தது.
பெரிதினும் பெரிது கேள்
தன் சிறு வயது நினைவுகளை எல்லாம் எழுத்தாக்கி,
விருந்து படைத்திருக்கிறார்,
இந்நூலின் ஆசிரியர்
முனைவர் த.செந்தில்குமார் அவர்கள்.
பெரிதினும் பெரிது
கேள்