28 பிப்ரவரி 2020

வாசிப்பே வாழ்க்கையாய்




     காளமேகம்

     கவி காளமேகம்

     15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்

     தன் காதலுக்காக, அக்காலத்திலேயே, வைணவ சமயத்தில் இருந்து, சைவ சமயத்திற்கு மாறியவர்.

     சிலேடைப் பாடல்களும், நகைச்சுவைப் பாடல்களும் பாடுவதில் வல்லவர்.

     இவரது நகைச்சுவைப் பாடல்களுக்கு, இந்தச் சிறுவன், தன் பள்ளிப் பருவத்திலேயே அடிமையாகித்தான் போனான்.


     பெரகம்பி என்னும் சிற்றூரில் பிறந்த இம்மாணவன், 1930 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், எட்டாம் வகுப்பில் சேர்வதற்காக, முசிறிக்குச் சென்றான்.

     பையா 0.1 0.1 ஆல் பெருக்கினால் என்ன விடை, தலைமையாசிரியருக்கு எதிரில் அமர்ந்திருந்த, முதல் உதவி ஆசிரியர் கேட்டார்.

     சிறுவனோ .1 என்றான்.

     தவறு, 0.01 என்பதுதான் சரியான விடை. இப்படித்தான் கணக்கிலும், ஆங்கிலத்திலும் அடிப்படை அறிவின்றி, எட்டாம் வகுப்பில் சேர வேண்டும் என்று வருகிறார்கள் என்று சலித்துக் கொண்டவர், அடுத்த ஆண்டு வா பார்க்கலாம் என்று அனுப்பிவிட்டார்.

     முசிறியில் இடம் கிடைக்காததால், அருகிலுள்ள, துறையூருக்குச் சென்று, எப்படியோ எட்டாம் வகுப்பில் சேர்ந்துவிட்டான் இம்மாணவன்.

     எட்டாம் வகுப்புப் படிக்கும் பொழுதே, நண்பர்களுடன்,  தமிழிலக்கியம் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பான்.

     எந்தச் செயல், எப்படி நடந்தாலும், அச்சூழலுக்குப் பொருத்தமாய், கவி காளமேகப் பாடலைப் பாடுவதில் வல்லவன் இவன்.

     அக்காலத்தில் துறையூர் பள்ளியில் விடுதி வசதி இல்லாததால், உணவு விடுதியாய் செயல்பட்ட, ஒரு குடிலில்தான் மூன்று வேளையும் உணவு.

     ஒரு நாள் இரவுச் சாப்பாடு தயாராகி வரத் தாமதமானபோது, ஆசு கவி காளமேகப் புலவர் பாடலைப் பாடிச் சிரித்திருக்கிறான் இச்சிறுவன்.

கத்துக் கடல் சூழ்நானைக் காத்தன்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை
அன்னம் இலையிலிட வெள்ளி எழும்

     அரிசி வருவதற்குள் மாலை ஆகிவிடும். உரலில் குத்தி உலையில் இடுவதற்குள் ஊரடங்கி விடும். ஒரு கரண்டி உணவு பரிமாறுவதற்குள் சூரியன் உதயமாகிவிடும்.

     கவி காளமேகத்தின் இந்த நையாண்டிப் பாடலை எட்டாம் வகுப்புப் படிக்கும் பொழுதே, இந்தச் சிறுவன் அறிந்து வைத்திருக்கிறான்.

     இதுமட்டுமல்ல, மதிய நேரத்தில் காத்திருந்து, மோர் வாங்கிக் குடிக்கும் பொழுது, மோர் தண்ணீரைப் போல் உள்ளது என்பதை உணர்த்த, அதற்கும் ஒரு காளமேகப் பாடலைப் பாடியிருக்கிறான் இச்சிறுவன்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துரும்போது
நீரென்று பேர்படைத்தாய் நீள்தரையில் வந்தபின்
வாரொன்று மென்முலையார் ஆச்சியர்கை வந்தபின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

     வானத்தில் இருக்கும்போது கார் எனப் பெயர் பெற்றாய். பூமிக்கு வரும்போது நீர் எனப் பெயர் பெற்றாய். ஆச்சி கை பட்டவுடன் மோர் எனப் பெயர் பெற்றாய் என்றப் பாடலைப் பாடி, ஆச்சி தண்ணீர் கலந்த மோரை ஊற்றுகிறார்கள் எனக் கிண்டல் செய்திருக்கிறான் இச்சிறுவன்.

     பசி நேரத்திலும், சாப்பிடும் நேரத்திலும்கூட இலக்கியம், இலக்கியம் என இலக்கியத்தையே பேசிய இச்சிறுவன் யார் தெரியுமா?

     பிற்காலத்தில், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், நம்மார்வார் தத்துவத்தை ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தன் 90 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தில், 135 நூல்களை எழுதி, அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டு புரிந்தவர்.

     இப்பெருமகனாரைப் பற்றி மட்டுமல்ல, பல்வேறு தமிழறிஞர்களைப் பற்றியச் செய்திகளை, வாசிப்பே வாழ்க்கையாய் வாழ்ந்துவரும், காக்கி உடைக்குள் மறைந்திருக்கும், தமிழ் இதயத்தில் இருந்து, ததும்பி வழிந்த எழுத்தின் வழி அறிந்து நெகிழ்ந்துதான் போனேன்.

வாசிப்பே வாழ்க்கையாய்
கட்டுரையின் தலைப்பும் இதுதான்.

     தமிழ் இலக்கியத்தை எப்படிப் படிப்பது? எங்கிருந்து தொடங்குவது? என்று புரியாமல் தவித்துவந்த இவருக்கு, இப்பெருமகனாரது நூல்தான் வழிகாட்டியிருக்கிறது.

தமிழ்ப் பாடம் சொல்லும் முறை

     ஆர்வத்தோடு, இந்நூலை எடுத்துப் படித்தவரின் உள்ளத்தில், இந்நூல் பற்ற வைத்த நெருப்பு, இன்று வரை, அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது.

     இன்று வரை, இவர் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

     செந்தமிழ் இலக்கிய நூல்களைத் தேடித் தேடி இவர் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

     மீண்டும் ஒரு பிறவி இருப்பின், அப்பிறப்பிலும் மனிதனாய் பிறந்து, இப்பிறவியில் படிக்க இயலாத இலக்கியங்களை எல்லாம், அடுத்தப் பிறவியிலாவது படித்து முடிக்க வேண்டும், என்ற வேண்டுதலோடு, வாசிப்பே வாழ்க்கையாய் வாழ்ந்து வருகிறார் இவர்.

     இவர்தான், தன் முதல் நூலிலேயே, கவி காளமேகத்தை நேசித்த பெருமகனாரைப் பற்றிச் சுவைபட எடுத்துரைத்து நம்மையெல்லாம், இலக்கியம் நோக்கி இழுக்கிறார்.

     பள்ளிப் பருவத்திலேயே, கவி காளமேகத்தை முழுவதுமாய் கரைத்துக் குடித்துப் பின்னாளில், இவ்வுலகு போற்றும் பேரறிஞராய் உயர்ந்த இப்பெருமகனார்

 
பேராசிரியர் முனைவர் .சுப்பு ரெட்டியார்

     பேராசிரியர் முனைவர் .சுப்பு ரெட்டியார் அவர்களைத் தன் நூலில் உலாவ விட்டு, நம்மை மனம் இனிக்கப் படிக்கச் செய்து பரவசப்படுத்தியவர்

 
திருச்சி, ரயில்வே காவல் கண்காணிப்பாளர்
முனைவர் .செந்தில் குமார் அவர்கள்.

இவரது நூல்
 
பெரிதினும் பெரிது கேள்