06 பிப்ரவரி 2020

காற்றின் பேரோசைசெந்தமிழில் இசைப்பாடல் இல்லையெனச் செப்புகின்றீர் மான மின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி
எந்தமிழில் இசையில்லை, எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ?
உந்தமிழை அறிவீரோ தமிழறிவும் உள்ளதுவோ உஙங்கட் கெல்லாம்?

வெளியினிலே சொல்வதெனில் உம்நிலைமை வெட்கக்கே டன்றோ? நீவிர்
கிளிபோலச் சொல்வதன்றி தமிழ்நூற்கள் ஆராய்ந்து கிழித்திட் டீரோ?
-    பாவேந்தர் பாரதிதாசன்

     அது ஓர் காட்டுப் பகுதி.

     கேரளக் காட்டுப் பகுதி

     ஒரு சிறு கூட்டம், மூட்டை முடிச்சுகளோடு, மகிழ்வோடு, காட்டுப் பாதையில் பயணிக்கிறது.

     திடீரென ஒரு கள்வர் கூட்டம், இவர்களைச் சுற்றி வளைக்கிறது.

     ஒவ்வொருவர் கைகளிலும் பயங்கரமான ஆயுதங்கள்.

     நீங்கள் தோளில் சுமந்துவரும் மூட்டைகளை எல்லாம், கீழே இறக்கி வையுங்கள்.

     கள்வர்களின் உத்தரவுக்கு இணங்க, மூட்டைகள் கீழே இறக்கப்படுகின்றன.

     கள்வர்கள் ஒவ்வொரு மூட்டையாகப் பிரித்துப் பார்க்கிறார்கள்.

     சில மூட்டைகளில் இசைக் கருவிகள்

     பல மூட்டைகளில் பொன்னும், மணியும் என தங்க ஆபரணங்கள் மின்னுகின்றன.

     கள்வர்களின் கண்கள் வியப்பால் விரிகின்றன.

     இன்று நல்ல வேட்டை.

     மூட்டைகளைக் கட்டுங்கள், ஒரு சிறு பொருளைக் கூட விட்டுவிடாதீர்கள்.

     பொன்னையும், மணிகளையும், இசைக் கருவிகளையும், பறிகொடுத்தக் கூட்டத்தில் இருந்து ஒருவர், மெல்லப் பேசுகிறார்.

    

கொள்ளையர்களே, எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த பிடில் பெட்டியை மட்டும், தயவு செய்து கொடுத்து விடுஙகள் என வேண்டினார்.

     பிடில் பெட்டி வேண்டுமா?

     பொன்னையும், பொருளையும் விட இதன் மதிப்பு அதிகமோ? என எண்ணிய கள்வர் தலைவன், யார் நீ? எனக் கேட்டான்.

     ஐயா, நான் தஞ்சாவூர் வடிவேல் ஓதுவார்

     ஏன் இந்தப் பிடில் கருவியை மட்டும் கேட்கிறாய்?
   
     ஐயா, நாங்கள் தமிழ் இசைக் கலைஞர்கள். கேரள அரசர் சுவாதித் திருநாள் மகாராஜா அவர்களுக்குமுன், இந்தப் பிடிலை இசைத்தபடி நான் பாடிய பாடல்களைக் கேட்டுத்தான், இந்த தங்க ஆபரணங்களை எல்லாம் பரிசாகக் கொடுத்தார்.

     நீங்கள் பொன் பொருளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பிடில் கருவியை மட்டும் கொடுத்தால் போதும். இந்தப் பிடிலை வாசித்தபடி மீண்டும் பாடி, இழந்த செல்வங்களை எல்லாம் மீட்டு விடுவேன்,

     கொள்ளையர் தலைவன் வியந்து போனான்.

     இந்தப் பிடிலில் அப்படி என்ன இசை வரும் என்றான்.

      பிடில் கருவியைக் கள்வனிடம் இருந்து பெற்ற அடுத்த நொடி, தஞ்சாவூர் வடிவேல் ஓதுவார், தன் காந்தக் குரலால் பாடத் தொடங்குகிறார்.

     பிடில் இசையோடு எழுந்தப் பாடல் கேட்டு, அந்த அடர்ந்த கானகத்தின் விலங்குகள், பறவைகள்கூட மெய்மறந்து நிற்கின்றன,

     தமிழிசையால் விலங்குகளே மெய்மறந்து நிற்கும்போது, கள்வர்கள் எம்மாத்திரம்.

     கள்வர்கள் இசையால் மனம் மாறினர்.

     தங்களின் செயலுக்கு வருந்தி, பரிசுப் பொருட்களைத் திரும்பக் கொடுத்ததோடு, தங்கள் பகுதியில் விளைந்த, காய், கனிகளையும் வழங்கி, கேரள எல்லை வரை காவலுக்கும் வந்தனர்.

ஆறலைகள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின்பாலை
கொடுமையான மனம் படைத்தக் கள்வர்கள்கூட, இனிமையான இசையினால் பண்பட்டுவிடுவர் என்று பொருநராற்றுப் படையில் பாடும், முடத்தாமக்கண்ணியாரின் பாடல், இக் கேரளக் காட்டில் உண்மையாயிற்று.

காற்றின் பேரோசை

     இசை என்பது தமிழரின் வாழ்வோடு ஒன்றிப்போன ஒன்று என்பதை தெளிவாய் விளக்கும் அருமையானக்  கட்டுரை.

காற்றின் பேரோசை

பேரிகை படகம் இடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழா தக்கை கணப்பறை
தமருகம் தண்னுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொத்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளம் துடுமை சிறுபறை யடக்கம்
ஆசில் தகுணிச்சம் விரலேறு
பாகம் தொக்க உபாங்கி துடிபெரும்
பறையென மிக்க நூலோர்
விரிந்துரைத் தனரே.

     நண்பர்களே, இவையெல்லாம் என்ன தெரியுமா? தமிழர்களின் இசை பரப்பும் தோல் இசைக் கருவிகள்.

காற்றின் பேரோசை

     இசை என்பது தொன்றுதொட்டு தமிழர் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் இயைந்து வருவதை உணர்த்தும், இந்த அற்புதக் கட்டுரையினை எழுதியவர் யார் தெரியுமா?

     இசைக் கலைஞர் அல்ல

     காக்கிச் சட்டைக்குச் சொந்தக்காரர்.

     காவல் கண்காணிப்பாளரையும், இசை மயக்கி, தன்னைப் பற்றி எழுத வைத்திருக்கிறது.

காற்றின் பேரோசைகாற்றின் பேரோசையைச் சுமந்துவரும்
முனைவர் த.செந்தில்குமார் அவர்களது 
எழுத்தோவியத்தால் உருவான நூல்
பெரிதினும் பெரிது கேள்.
---

பெரிதினும் பெரிது கேள்
விகடன் பிரசுரம்
விலை ரூ.420

ஆன் லைனில் வாங்க

   

    

     35 கருத்துகள்:

 1. நானும் இந்த நிகழ்ச்சி பற்றி எப்போதோ படித்திருக்கிறேன் சார்..... வடிவேலு நட்டுவனார் என்பதே சரி.... வடிவேலு ஓதுவாமூர்த்திகள் அல்ல....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா, தாங்கள் கூறிய திருத்தத்தினை காவல் கண்காணிப்பாளர் ஐயா அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன் ஐயா.
   நன்றி

   நீக்கு
 2. வடிவேலு நட்டுவனார் என்பதே சரி... அவர் ஓதுவாமூர்த்திகள் அல்ல சார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிதினும் பெரிது கேள் நூலின் ஆசிரியர், காவல் கண்காணிப்பாளர் ஐயா அவர்கள், சற்றும் காலம் தாழ்த்தாது,உடனடியாகப் பதில் அனுப்பியுள்ளார்கள் ஐயா. ஐயா அவர்கள், தான் இத்தகவல் பற்றித் தான் படித்த நூலில் வடிவேல் ஓதுவார் என்றுதான் இருந்தது என்றும், அப்பெயரினையே தனது நூலில் பயன்படுத்தியதாகவும் கூறி, தான் படித்த நூலின் அச்சிறு பகுதியின் ஒளிப்பட நகலினையும் அனுப்பி உள்ளார் ஐயா.
   அந்த ஒளிப்பட நகலினை, கருத்துரைப் பெட்டியில் பதிவேற்றம் செய்ய வழியில்லாததால், அந்த ஒளிப்பட நகலினைத் தங்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 3. இசையால் மயங்காத இதயமுண்டோ?

  பதிலளிநீக்கு
 4. இசை ஒரு தென்றல்!
  இசை ஒரு புயல்...!
  இசை ஒரு நதி!
  இசை ஒரு பிரவாகம்!
  இசை மெல்லிய தூரல்!
  இசை ஒரு பெருமழை...!என
  இன்னும் இன்னுமாய்
  சொல்லிக்கொண்டு செல்ல வைக்கும் இசை ஒரு மகத்துவம்.
  அதற்கு மயங்காதவர் யாரும் உண்டா?

  பதிலளிநீக்கு
 5. அரிய தகவல் களஞ்சியம் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் எழுத்து நடை ரொம்ப ரொம்ப வித்தியாசமானது. புதுமையானது. 20 இளைஞர்கள் வாசிகக உகந்த எழுத்து நடை. அமேசான் தளத்தில் மின்னூலாக போடுங்க. ஒரு வாரம் இலவசமாக கொடுங்க. பல ஆயிரம் மக்களுக்குச் சென்று சேரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பு வாழ்த்திற்கு நன்றி ஐயா
   முயற்சித்துப் பார்க்கிறேன்

   நீக்கு
 7. அற்புதக் கட்டுரையை அழகாக சொல்லி உள்ளீர்கள் ஐயா...

  ஜோதிஜி அவர்கள் சொன்னதையும் ஞாபகம் வைத்துக் கொண்டு செய்யவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 8. இசைக்கு மொழி ஏது இதெல்லாம் தெரியாமல்தான்தமிழிசை தெலுங்கிசை என்றெல்லாம் கூறு கிறர்களோ

  பதிலளிநீக்கு
 9. இசைக்கு ஓர் சமர்ப்பணம். தெரியாத தகவல்கள். அருமையான பதிவு. வலைத்தளம் சிறக்க வாழ்த்துக்கள்.

  நமது வலைத்தளம்: https://newsigaram.blogspot.com/2020/02/any-do-reminder-in-whatsapp.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு
 10. இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருகிறது.
  இசையால் மயங்காதவர் எவர் உண்டு?

  மிக அருமையாக சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 11. இசையின் வலிமை.... எத்தனை சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா. நூலாசிரியருக்கும் உங்களுக்கும் மனம் திறந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு
 12. அக்காலத்து கள்வர் இசைஞானம் உடையவராக இருந்ததால்தான் களவாடிய பொருட்களை திருப்பி தந்தனர். இக்காலத்து கள்வர்களை நிணைத்தால்....... நெஞ்சம் பதறுகிறது....

  பதிலளிநீக்கு
 13. மனக் காயங்களை ஆற்றும் வலிமையுடையது இசை. நோய் தீர்க்கும் மருந்தாக இருந்தது, இருக்கிறது இசை. இந்த நோயை குணமாக்க இந்த ராகத்தை இசைக்க வேண்டுமென்ற அகராதியே இருக்கிறது இசையில்! இத்த‌கைய சக்தியுடைய இசை கள்வரையும் உருக்கியதில் ஆச்சரியமில்லை. மிக அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராகத்தில் பாட வேண்டும் என்றொரு பட்டியலையும், இந்நூலின் ஆசிரியர், தனது இந்தக் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 14. அவர் தொடாத துறை இல்லை எனலாம். அதுபோல நீங்களும் அதனைத் தேடிப் பகிர்ந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 15. வழக்கம் போலவே எழுத்து நடை அருமை நண்பரே.
  எப்படி தான் உங்களுக்கும் காவல் துறை நண்பருக்கும் எழுத நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரத்தைத் திருட வேண்டும் நண்பரே
   பணிநேரம் முடிந்த பிறகு, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கொஞ்சம், தூங்கும் நேரத்தில் கொஞ்சம் என நேரத்தைத் திருட வேண்டும் நண்பரே

   நீக்கு
 16. இசையை இரசிக்கத்தெரிந்தால் எல்லா நாட்களுக்கும் இன்பமான நாட்களே! இசையால் பல விடயங்களைச் சாதிக்கலாம் என்பதற்கு இ்ந்நிகழ்வு ஓர் எடுத்துக்ககாட்டு. அதைத் தொட்டுக்காட்டிய காவல்துறை அதிகாரிக்கும் அற்புதமான எழுத்தாற்றலால் சுவைத்துப் படிக்க வைத்த திருமிகு கரந்தை ஜெயக்குமார் ஐயாவுக்கும் நன்றி பலப்பல.----உடுவை.எஸ்.தில்லைநடராசா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
   நன்றி

   நீக்கு
 17. அற்புதக் கட்டுரை நன்றி

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு