நான்
போட்டித் தேர்வு எழுதும்போது, ஆரம்ப நிலையில், 1999 இல் எழுதிய குரூப் 4 எனப்படும்
கிளார்க் தேர்விலேயே தேர்ச்சிபெற முடியவில்லை.
இந்தத் தேர்வு தந்த தோல்வி, சென்னையில்
தங்கிப் படிப்பதையே ஒரு கேள்விக் குறி ஆக்கிவிட்டது. இந்நிலையில்தான், பாரதியின் வரியான,
பெரிதினும் பெரிது கேள் என்ற வரி, எனக்குள் ஒரு காட்டுத் தீயைப் பற்ற வைத்தது.
பெரிதினும் பெரிது கேள்
கேட்பதைத்தான் கேட்கிறோம், ஏன்
சிறிதாகக் கேட்க வேண்டும்?. ஏன் நாம் ஒரு தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டும்? ஏன் தாழ்த்திக்கொண்டு
யாசிக்க வேண்டும்?
ஆகச்சிறந்த வெற்றியைக் கேள். உலகத்
தரத்திலான திறமையை வெளிப்படுத்து. மகத்தான ஒன்றைக் கேள். மகத்துவமான ஒன்றைச் செயல்படுத்து.
அடுத்த ஆண்டு 11.6.2000 அன்று,
தமிழக அரசின் குடிமைப் பணித் தேர்வு எழுதும்போது, காலியிடங்கள் வெறும் 74, தேர்வு எழுதியதோ,
கிட்டத்தட்ட மூன்று இலட்சம் பேர்.
நாம் வெற்றிபெற வேண்டுமானால்,
2,99,926 போட்டியாளர்கள் தோல்வியடைய வேண்டும், இதைத்தாண்டி நம் மதிப்பெண்கள் செல்ல
வேண்டும்.
குரூப் 4 தேர்வின் தோல்வி, அவ்வப்போது
வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், குரூப் 1 தேர்விற்குத் தயாரானபோது, துணை ஆட்சியர்,
காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவியைத் தவிர, வேறு பணியை மனதால் கூட கற்பனை செய்யவில்லை.
தேர்வு என்பது வெறும் 200 வினாக்கள்
மட்டுமே. ஆனால் நான் பயிற்சி செய்து பார்த்தது, கிட்டத்தட்ட 27,000 வினாக்கள் ஆகும்.
அந்த வினாக்களின் தொகுப்பை, இன்றுவரை பைண்ட் செய்து பத்திரமாக வைத்துள்ளேன்.
இரவு நேரங்களில், அதுவும் குறிப்பாக,
இரவு ஒரு மணியில் இருந்து, 3 மணிவரை, மாதிரி வினாக்கள் பயிற்சி செய்வேன். திருத்திவிட்டு,
மீண்டும் எந்தெந்த வினாக்களில், எந்தெந்தப் பாடத்தில், தவறு செய்திருக்கிறோம் என்பதைக்
குறித்துக் கொண்டு, அதைப் பற்றி, தீவிரமாக யோசிப்பேன்.
இரண்டாம் ஜாமத்துக்கு மேல், சற்று
சோர்வு ஏற்பட்டால், களைப்பாக உணர்ந்தால், உடனே பாரதியார் பாட்டை உரக்கச் சொல்வேன்.
அதைச் சொல்லும்போதே ஒரு வேகம் உண்டாகும். எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி
பிறக்குது மூச்சினிலே என்பதுபோல், ஒருவித ஆர்ப்பரிக்கும் சக்தி உருவாவதாக உணர்வேன்.
காலை 5.00 மணிக்குத்தான் சற்று
கண்ணயர்வேன்.
பார்த்தீர்களா உழைப்பு என்றால் இதுவல்லவா உழைப்பு,
படிப்பு என்றால் இதுவல்லவா படிப்பு.
அயராது, கண் துஞ்சாது பாடுபட்டுத் தான் ஈட்டிய
வெற்றிக் கனி குறித்த தனது நினைவலைகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு கட்டுரையாக்கித் தந்துள்ளார்.
மாணவர்களுக்கு, அதிலும் குறிப்பாகப் போட்டித்
தேர்வை எதிர்நோக்கித் தயாராகும் மாணவர்களுக்கு எல்லாம், ஒரு புத்துணர்வை, புது எழுச்சியை,
நல் வழிகாட்டுதலை வழங்கும் அற்புதமான கட்டுரை இது.
பெரிதினும் பெரிது கேள்.
மணிமொழி
என்னை மறந்துவிடு என்ற அருமையான, நீண்ட காதல் கதையை எழுதியிருப்பார் தமிழ்வாணன். அந்தப்
புத்தகத்தை நூலகத்தில் இருந்து எடுத்துச் சென்று, ஆசிரியருக்குத் தெரியாமல், வகுப்பறையில்
கிடைத்த நேரத்தில் படிப்பேன். கணிதப் பாட நேரத்தில், அப்படி வயர் கூடைப் பைக்குப் பின்னால்
வைத்து, இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது, கணித ஆசிரியர் கே.பி எனப்படும்,
கே.பாலகிருஷ்ணன் அதைப் பார்த்துவிட்டு, கடும் கோபமாகி, வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.
மறுநாள் எச்சரிக்கப்பட்டு மீண்டும்
வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். ஆனாலும் கிளை நூலகம் செல்லக் கூடாது என்று சொன்னதை,
கடுமையாக எதிர்த்துப் பேசியதால், வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டேன்.
அங்குதான் தற்பொழுது, விழுப்புரம்
மாவட்ட ஆட்சியராக இருக்கும் அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்., மற்றும் மாணிக்கவேல், ஐ.ஆர்.எஸ்.,
ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.
அந்த வகுப்பு கணித ஆசிரியர் எம்.எஸ்
சார் என அழைக்கப்படும், எம்.செல்வராஜ் ஆசிரியர், கண்டிப்பானவராக இருந்தாலும், எங்களிடம்
அன்புடனே அறிவைப் போதிக்கும் வகையில் நடந்து கொண்டார். அந்த அன்பு, குரு பக்தி இன்றளவும்
தொடர்கிறது.
நண்பர் அண்ணாதுரையும் நானும், ஒரே மாவட்டத்தில்,
தஞ்சாவூரில், கலெக்டர், எஸ்.பியாகப் பணிபுரிந்தபோது, 26.1.2018 குடியரசு தின விழாவுக்கு,
எங்கள் அன்பிற்குரிய, கணித ஆசிரியர் எம்.எஸ் சாரை அழைத்து கௌரவப்படுத்தினோம். தன் மாணவர்கள்
கலெக்டராகவும், எஸ்.பி ஆகவும் இருப்பதைப் பார்த்து புளங்காகிதம் அடைந்தார்.
படிக்கும்போதே, அந்த ஆசிரியர் அடைந்த புளங்காகிதம் நம்மையும் தொற்றிக் கொள்கிறதல்லவா? இதைவிட ஒரு ஆசிரியருக்கு என்ன பெருமை வேண்டும், தன் மாணவன், தன்னிலும் உயர்ந்து நிற்பதைப் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? கொடுத்து வைத்த ஆசிரியர்.
பெரிதினும் பெரிது கேள்
ஜெர்மானிய
அறிஞர் மேக்ஸ் முல்லர், தமிழ்தான் தொன்மையான, செழுமையான இலக்கிய வளங்களைப் பெற்றுள்ள
மொழி என அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
Tamil is the most highly
cultivated ancient language and possess the richest stores of indigenous
literature – Max Muller.
காலம்தோறும் இந்த மொழி தன்னை அழகு
படுத்தியும், செழுமைப் படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் வந்துள்ளது.
தமிழ் மொழியின் தொன்மை, மேன்மை,
இலக்கிய வளம் குறித்து உணர வேண்டியதும், அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியதும்
மிக அவசியமான ஒன்றாகும்.
என்றுமுள தென்தமிழ் என்னும் இந்தக் கட்டுரை,
நாற்பது பக்கங்களுக்கும் மேல் நீண்டு செல்கிறது. சங்க இலக்கியங்கள் தொடங்கி, அன்று
முதல் இனறுவரை எழுந்த இலக்கியங்கள், இலக்கிய ஆளுமைகள் எனப் பக்கத்துக்குப் பக்கம்,
நம்மைப் பரவசப்படுத்தும, செய்திகள், தெளிந்த நீரோடையாய் பயணிக்கிறது. படிக்கப் படிக்க
இவர் ஒரு தமிழறிஞராகவே நம் மனதில் பதிந்து போகிறார்.
பெரிதினும் பெரிது கேள்
தமிழர்கள்
எல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன்
உணர்ந்திலாத் தமிழர், முற்றும் துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்றத் தந்தையேயாயினும்,
யான் பெற்ற மக்களேயாயினும், யான் அவர்களைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை.
1910 ஆம் ஆண்டு வெளியான கர்மயோகி என்னும் இதழில்,
கப்பல் ஓட்டியத் தமிழன் வ.உ.சி அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார் என்பதை, திருக்குறள்
போற்றுதும், திருக்குறள் போற்றுதும என்னும் கட்டுரை வழி அறிந்தபோது, எனக்கு எத்தனை
திருக்குறள் தெரியும் என்பதனை எண்ணிப் பார்த்தேன், வெட்கித் தலை குனிந்துதான் போனேன்.
பெரிதினும் பெரிது கேள்
2000 ஆம் ஆண்டில், குரூப் 4 தேர்வில்
தோல்வியுற்ற நிலையில், அடுத்து குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளிவந்தபோது, தோல்வியின்
விளிம்பில் இருந்த நான், தமிழக வரலாற்றில், வெற்றி மிக்க மாவீரன் என்றாலே அது, ராஜராஜ
சோழன்தான் என்று கருதி, வேறு எந்த சிந்தனையும் இன்றி, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றே
ஆக வேண்டும் என்று, நான் வந்து வணங்கிவிட்டுச் சென்றது, ராஜராஜேச்சுவரம் உடைய பரமசாமி
என்று ராஜராஜசோழன் பெயர் சூட்டிய தஞ்சைப் பெருவுடையார்
கோயில் எனப்படும் சிவாலயத்தைத்தான். அந்தத் தேர்வில் வெற்றி பெற்றுத்தான் 2002 ஆம்
ஆண்டில் டி.எஸ்.பி ஆகத் தேர்வு செய்யப்பட்டேன்.
பெருவுடையாரை வணங்கித் தேர்வில் வெற்றி பெற்று
டி.எஸ்.பி ஆகி. பின் எஸ்.பி ஆக உயர்ந்து, தஞ்சைக்கே வந்தவர், இன்றைக்கு 88 ஆண்டுகளுக்கும்
முன், 1932 இல் மாயமாய் மறைந்துபோன, இராஜராஜ சோழன், உலகமாதேவி திருமேனிகளை மீட்டு வந்த கதையையும், சோழ வரலாற்றையும், நம் கண் முன்னே ஓட
விட்டுக் காட்டுகிறார்.
பெரிதினும் பெரிது கேள்
விரல் ரேகை என்பது மனித உடலின்
ஓர் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். கை விரல், உள்ளங்கை, பாதப் பகுதிகளில் ரேகை
இருக்கும்., உலகில் உள்ள எந்த இரு மனிதருடைய ரேகையும் ஒன்றாக இருக்காது.
கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த
ஹேர்ஷல் என்பவர் 1857 இல் கல்கத்தாவில், முதன் முறையாக, ஓர் ஒப்பந்தக்காரரிடம், கையெழுத்து
பெறுவதற்குப் பதிலாக, ரேகையைப் பதிவு செய்யச் சொன்னார்.
இவ்வாறு தொடங்கிய விரல் ரேகை அடையாள முறை நடைமுறைக்கு
வந்ததை விவரிக்கும் இவர், இன்றைய காவல் துறையின் அமைப்பு பற்றியும், இத்துறையில் இணைவதற்கான
வழிமுறைகளைப் பற்றியும், எளிமையாகவும், இனிமையாகவும் விவரித்துக் கொண்டே செல்கிறார்.
காலம்தோறும் காவல் துறை என்னும் இக்கட்டுரையானது,
அந்நாள் தொடங்கி, இந்நாள் வரையிலான காவல் துறை, மாற்றங்களை, முன்னேற்றங்களை வரிசைப்படுத்தி,
காவல்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
பெரிதினும் பெரிது கேள்
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதைப் போல், பதினாறு செல்வங்களையும்
உடையார், பெரு உடையார் என்பதற்கு இணங்க,. பதினாறு தலைப்புகளில் கட்டுரைகள் 432 பக்கங்கள் வரை நீண்டு செல்கின்றன. ஒவ்வொரு பக்கமாகப் படிக்கப்
படிக்க, இதுநாள் வரை அறியாத எண்ணிலடங்காத் தகவல்கள், விறுவிறுப்பாய், அடுத்தடுத்தப்
பக்கங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
பெரிதினும் பெரிது கேள்
இந்நூலைப் பார்த்ததும், நான் வியந்து போனது,
இதன் ஆசிரியரைப் பற்றித்தான். இப்பெரும் நூலை வெளிக் கொணர இவருக்கு எப்படி நேரம் கிடைத்தது?
அச்சேறிய நூலே 432 பக்கங்கள் எனில், இந்நூலின்
கையெழுத்துப் பிரதி நிச்சயமாக, ஆயிரம் பக்கங்களையும் தாண்டி விரிவடைந்திருக்க வேண்டும்.
இதற்கு இவருக்கு ஏது நேரம்?
இந்நூலின்
வெளியீட்டு விழாவில், எனக்குள் எழுந்த இந்தக் கேள்விக்கான விடையையும் அவரே கூறினார்.
Steal the Time
நேரத்தைத் திருடு.
எப்பொழுதெல்லாம் சிறிது ஓய்வு கிடைக்கிறதோ, அந்தச்
சிறிது நேரத்திலும், சிறிது நேரத்தைத் திருடி, நூலுக்காக உழைத்திருக்கிறார்.
வீட்டில் மனைவி மக்களுடன் செலவிட வேண்டிய நேரத்தின்,
பெரும்பகுதியைத் திருடி, இந்நூலுக்காக உழைத்திருக்கிறார். இவர் மனைவியும் இதற்கு அனுமதித்திருக்கிறார்.
இடைவிடாத பணிகளுக்குப் பிறகு, இரவில் அயர்ந்து
உறங்க வேண்டிய நேரத்திலும், பெரும்பகுதியைத் திருடி, உறக்கம் மறந்து இந்நூலுக்காக உழைத்திருக்கிறார்.
தனது அலுவல் நேரத்தை முழுமையாக அலுவலுக்கு மட்டுமே
ஒப்படைத்து, மற்ற நேரங்களை எல்லாம் சிறுகச் சிறுகத் திருடி, தன் குடும்பத்தைக் கூட
மறந்து, இம்மாபெரும் நூலினை வெளிக் கொணர்ந்திருப்பவர் யார் தெரியுமா?
முனைவர் த.செந்தில்குமார் அவர்கள்,
திருச்சி, ரயில்வே காவல் கண்காணிப்பாளர்.
இவரது நூல்
பெரிதினும் பெரிது கேள்
ஒவ்வொருவர்
இல்லத்திலும், உள்ளத்திலும் நிரந்தரமாய் குடியிருக்கத் தகுந்த நூல்.
இன்றைய இளைஞர்களின் வாழ்வை வளப்படுத்த, வாழும்
முறையை நெறிப்படுத்த, வாழ்க்கைத் தரத்தை உச்சானிக்
கிளைக்கு உயர்த்த உதவும் உன்னத நூல்.
பெரிதினும் பெரிது கேள்
---
பெரிதினும் பெரிது கேள்
விகடன் பிரசுரம்,
விலை ரூ.420
ஆன் லைனில் வாங்க
Kindly Click the Link
Books.vikatan.comBooks.vikatan.com