24 ஜனவரி 2020

மனிதனாகவே பிறப்பேன்



     இயல்பிலேயே வாசிப்பை, நேசிப்பாகக் கொண்டிருக்கும், என் போன்றோருக்கு, நிச்சயமாக இந்தப் புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு ஜென்மம் போதாது.

     மாணிக்கவாசகப் பெருமான் பல்வேறு பிறவிகளைக் குறிப்பிட்டிருந்தாலும், சிவனைக் காண்பதற்காக, சிவ பேற்றை அடைவதற்காக, மீண்டும் மீண்டும் மனிதனாகவே பிறப்பேன் என்றார்.
     அதேபோல், இந்த எண்ணிலடங்கா இலக்கியப் படைப்புகளை வாசிப்பதற்காகவே, சிவனருளால் மீண்டும் மனிதனாகவே பிறக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.
     இப்படித்தான் இவர் தனது நூலை நிறைவு செய்திருக்கிறார்.
     தமிழின் மாபெரும் இலக்கியக் கடலைப் பருக, தமிழமுதை அள்ளி அள்ளி அருந்த, இந்தப் பிறவி ஒன்று மட்டும் போதாது, எனவே அடுத்தப் பிறவியிலும் மனிதனாகவேப் பிறக்க வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்.
     வியப்பாக இருக்கிறதல்லவா?

பெரிதினும் பெரிது கேள்
நூலின் பெயரே சுண்டி இழுக்கிறதல்லவா
இதன் ஆசிரியர்,
திருச்சி, ரயில்வே, காவல் கண்காணிப்பாளர்
முனைவர் த.செந்தில் குமார் அவர்கள்.
---
பெரிதினும் பெரிது கேள்
நூலின்  வெளியீட்டு விழா.
கடந்த 19.1.2020 ஞாயிற்றுக் கிழமை காலை,
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ,. மைதானத்தில்,
சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில்
நடைபெற்றது.
     இவ்விழா, நூல் வெளியீட்டு விழாவாக மட்டும் அமையாமல், முன்னாள் மாணவர்களின் சங்கமமாக, ஆசிரியர்களின் சங்கமமாக, தொடக்கம் முதலே, ஒரு நெகிழ்ச்சி விழாவாகவே நடைபெற்றது.
விழுப்புரம், மாவட்ட ஆட்சியர்
திரு ஆ.அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்,. அவர்கள்
விழாவிற்குத்
தலைமையேற்ற,
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்
திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்
நூலினை வெளியிட,
சமூகச் செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர்
திரு தங்கர் பச்சான் அவர்கள்
முதற்படியினைப்
பெற்றுச் சிறப்பித்தார்.
தமிழறிஞர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
திரு பழ.கருப்பையா அவர்கள்
சிறப்புரையாற்றினார்
சென்னை, அமலாக்கத் துறை
மண்டல இணை இயக்குநர்
திரு பா.மாணிக்கவேல், ஐ.ஆர்.எஸ்,. அவர்களும்,
ஆவடி மாநகராட்சி ஆணையர்
திரு ரவிச்சந்திரன் அவர்களும்
வாழ்த்துரை வழங்கினர்.
இப்பெரும் சான்றோர்களோடு சேர்ந்து
நானும்
வாழ்த்துரை வழங்கினேன்.
இந்நூலின் ஆசிரியர்
முனைவர் த.செந்தில்குமார் அவர்கள்.
தஞ்சையில்
காவல் கண்காணிப்பாளராகப்
பணியாற்றிய காலத்தில் இருந்தே.
என்மீது பேரன்பு காட்டி வருபவர்.
இப்பேரன்பின் பயனாய்,
வாழ்த்துரை வழங்கும்
பொன்னான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
முன்னதாக, இவ்விழாவிற்கு வந்திருந்தோரை,
திருச்சி சுபா பிரிண்டர்ஸ்
திரு சுகி மோகன் அவர்கள்
வரவேற்றார்.

திருச்சி, தேசியக் கல்லூரி, தமிழ்ப் பேராசிரியர்
முனைவர் நீலகண்டன் அவர்களும்,
ராஜ் தொலைக் காட்சி, நிகழ்ச்சித் தொகுப்பாளர்
செல்வி நர்மதா அவர்களும்
விழா நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்து வழங்கினர்.
---
விழுப்புரம், மாவட்ட ஆட்சியர்
திரு ஆ.அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்,. அவர்கள்.
சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்
திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்,
திரைப்பட இயக்குநர், சமூகச் செயற்பாட்டாளர்.
திரு தங்கர் பச்சான் அவர்கள்,
சென்னை, அமலாக்கத் துறை, மண்டல இணை இயக்குநர்,
திரு பா.மாணிக்கவேல், ஐ.ஆர்.எஸ்,.அவர்கள்.
தமிழறிஞர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
திரு பழ.கருப்பையா அவர்கள்.
திருச்சி, ரயில்வே, காவல் கண்காணிப்பாளர்
முனைவர் த.செந்தில்குமார் அவர்கள்
என அறுவருமே, தங்களின் சொல்வன்மையால், பேச்சாற்றலால்,
விழா அரங்கையே கட்டிப்போட்டனர்.
     விழா மேடையில் அரங்கேறியச் சில நிகழ்வுகள், பார்வையாளர்கள் அனைவரையும், நெகிழச் செய்தது என்றால், அது மிகையாகாது.
முதலாவதாக,
விழாவிற்குத் தலைமையேற்ற,
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
திரு ஆ.அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்,. அவர்களும்,
அமலாக்கத்துறை, மண்டல இணை இயக்குநர்
திரு பா.மாணிக்கவேல், ஐ.ஆர்.எஸ்,. அவர்களும்,
நூலின் ஆசிரியர்,
திருச்சி, ரயில்வே, காவல் கண்காணிப்பாளர்,
முனைவர் த.செந்தில்குமார் அவர்களும்,
கடலூர் மாவட்டம், ஆவினன்குடி.
அரசு உயர்நிலைப் பள்ளியில்,
ஒரே வகுப்பில்,
தமிழ் வழியில்,
கல்வி பயின்ற மாணவர்கள்
என்பதை அறிந்தபோது, அரங்கே வியந்துதான் போனது.
இரண்டாவதாக,
இம்மூவரும்,
ஆவினன்குடியில், ஒரே வகுப்பில் பயின்றபோது,
தங்களுக்கு வழிகாட்டியாக,
தங்களின் வாழ்வை நெறிப்படுத்தியவராக
விளங்கிய,
தங்களின் கணித ஆசிரியர்
திரு எம்.செல்வராஜ் அவர்களை,
சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து,
மேடையேற்றி,
மேனாள் மாணவர்கள் மூவரும்,
தங்கள் கணித ஆசிரியரின்
திருவடியினைத் தொட்டு வணங்கிய
காட்சி கண்டு
அரங்கே திக்குமுக்காடித்தான் போய்விட்டது.
மூன்றாவதாக,
இந்நூலின் ஆசிரியர் அவர்கள்,
தனது தந்தை, தனது இளம் வயதிலேயே,
இவ்வுலக வாழ்வை நீத்த போதிலும்,
தன்னையும்,
தன் சகோதர, சகோதரிகளையும்
ஒற்றை ஆளாய் நின்று
வளர்த்து, ஆளாக்கிய

தன் தாயை
மேடையேற்றி ஆசிபெற்றபோது
அரங்கே ஆடித்தான் போய்விட்டது.
மொத்தத்தில்,
இந்நூல் வெளியீட்டு விழா,
ஒரு முன்மாதிரி விழாவாக,
இனிவரும் விழாக்களுக்கு எல்லாம்,
வழிகாட்டி விழாவாக
இனிது அரங்கேறியது.
இதுமட்டுமல்ல,
அவையோரும், பார்வையாளர்களும்.
வெளியிடப்பெற்ற நூலினைக் கண்டு
ஒருங்கே வியந்துதான் போனார்கள்.
பெரிதினும் பெரிது கேள்
நூலின் தலைப்பு மட்டுமல்ல,
நூலும்  பெரிதுதான்.
432 பக்கங்கள் வரை வளர்ந்து நிற்கும் அற்புத நூல்.
     காவல் துறையில், கண் அயரக்கூட வழியில்லாத, இடையறாப் பணிகளுக்கு இடையிலும், இப்பெரும் நூலை எழுத, எழுதி, எழுதித் திருத்தம் செய்து மெருகேற்ற, எப்படி இவருக்கு நேரம் கிடைத்தது என்று எண்ணி, எண்ணி வியந்துபோனார்கள்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புஞ் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்
என்னும் குமரகுருபரரின் பாடலுக்கு, இவரே. இன்று மாபெரும் எடுத்துக்காட்டாய் உயர்ந்து நிற்கிறார்.
வாழ்த்துகள் ஐயா.
காவல் பணியோடு
எழுத்துப் பணியும் தொடர
வாழ்த்துகள் ஐயா.