12 ஜனவரி 2020

பேருந்தில் படித்தவர்





     ஆண்டு 1994



     சென்னை



     ஆழ்வார் திருநகர்



     அது ஓர் அறை



     வேலைக்குச் செல்பவர்கள் இருவரும், சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரும் இந்த அறையில் தங்கியிருந்தனர்.




     மாணவருக்குத் தன் சட்டப் புத்தகங்களைத் தாண்டியும், தமிழின் பரந்து பட்ட, நூல்கள் அனைத்தையும், கரைத்துக் குடித்துவிட வேண்டும் என்பதில் அளவிலா ஆர்வம்.



     ஆனால் கல்லூரி முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும், தான் தங்கியிருந்த அறையில், புத்தகங்களைப் படிக்க முடியாத சூழல்.



     காரணம், அறையில் எப்பொழுதும் பாட்டும், கும்மாளமும் நிரம்பி வழியும்.



      இதுபோதாதென்று பக்கத்து வீட்டிலிருந்து புறப்படும், வானொலிப் பாடல்கள் வேறு இவரது அறையை நிரப்பும்.



     காதுகளை மூடிக்கொண்டு படித்தாலும், இவரது நண்பர்கள், தங்கள் ஆட்டம் பாட்டத்திற்குள் இவரையும் இழுத்துப் படிக்க விடாமல் செய்தனர்.



     படித்தே ஆக வேண்டும்



     என்ன செய்வது?



     யோசித்தார்



     ஒரு முடிவிற்கு வந்தார்.



     விடுமுறை நாட்களில், தான் படிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு, வடபழநி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, கோவளம் செல்லும் பேருந்தில் ஏறி, ஓட்டுநருக்கு அருகில் உள்ள, சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டு படிக்கத் தொடங்குவார்.



     பேருந்து புறப்பட்டு கோவளம் நோக்கி விரையும்.



     இவரோ தலை கவிழ்ந்து, புத்தகத்தின், ஒவ்வொரு பக்கமாகப் பயணித்துக் கொண்டேயிருப்பார்.



     அப்பொழுதெல்லாம் மாணவர்களுக்கு என்று ஒரு டோக்கன் முறை இருந்தது.



     ஒரு டோக்கன் 60 பைசா



     மாதாந்திரப் பேருந்துப் பயண அட்டை வாங்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, மாதம் ஒன்றுக்கு 60 டோக்கன் வழங்குவார்கள்.



     ஒரு டோக்கனைக் கொடுத்து விட்டு, பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்.



     அதாவது அடுத்தப் பேருந்து நிலையத்தில் இறங்கினாலும், கோவளம், திருவெற்றியூர் போன்ற நீண்ட தூரப் புறநகர் பகுதிகளுக்குச் சென்றாலும் ஒரே டோக்கன்தான்.



     பெரும்பாலும் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அல்லது நீல நிற பேண்ட் வெள்ளை சட்டை அணிந்து, இன் செய்து கொண்டு, தோளில் ஒரு கருப்பு நிற தோள் பையுடன் புறப்படுவார்.



     பையில் சில புத்தகங்கள்



     வட பழநியில் ஏறுபவர், படித்துக் கொண்டே, கோவளம் வரை பயணிப்பார்.



     கோவளம் செல்வதற்குள் 50 பக்கங்களாவது படித்திருப்பார்.



     புத்தகத்தை வைத்துக் கொண்டு, பேணாவால் கோடு போட்டுக் கொண்டும், நோட்டில் குறிப்பு எடுத்துக் கொண்டும், சுகமாய் பயணிப்பார்.



     கோவளத்தில் இறங்கிக் கடற்கரையில் ஒரு உலா.



     பின் சுவையான, சூடான தேநீர்



     மீண்டும் பேருந்தில் ஏறி, படித்துக் கொண்டே வட பழநி வரை பயணிப்பார்.



     பல நேரங்களில், தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டதைக் கூட கவனிக்காமல், அப்படியே, ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி வரை சென்று விடுவார்.



     ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு ஆண்டுகள், 1994 முதல் 2001 வரை முழமையாக இவர், சென்னைப் பல்லவன் பேருந்திலேயே படித்திருக்கிறார்.



     இதனால் பல்லவன் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும், இவருக்கு நண்பர்களாகிப் போனார்கள்.



     கோவளத்தில் ஓட்டுநரும், நடத்துநரும் இவருக்குத் தேநீர் வாங்கிக் கொடுப்பார்கள்.



     பேருந்தில் பயணித்துக் கொண்டே இருந்தார்



     படித்துக் கொண்டே இருந்தார்



     பல மாதங்களில், மாதம் முடிவதற்கு முன்பாகவே, இவரது 60 டோக்கன்களும் தீர்ந்துவிடும்.



     நண்பர்களிடம் டோக்கன்களைக் கடன் வாங்கிக் கொண்டுப் பயணிப்பார், படிப்பார்.



     இதனால் நட்பு வட்டாரத்தில் இருக்கு ஒரு செல்லப் பெயரே கிடைத்து விட்டது.



     டோக்கன் செந்தில்.



     நண்பர்களே இவர் யார் தெரியுமா?



வாசிக்காத நாள்கள் எல்லாம் சுவாசிக்காத நாள்கள்

என்னும் கொள்கை கொண்டவர்.



பேச்சிலும், மூச்சிலும், இவர்தம்  உதிரத்திலும்

ஒன்றெனக் கலந்து ஓடுவது

தமிழ், தமிழ், தமிழ்




இவர்தான்

முனைவர் த.செந்தில்குமார்

காவல் கண்காணிப்பாளர்

திருச்சி ரயில்வே.



இவரது முதல் நூல்

பெரிதினும் பெரிது கேள்




தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும்

சென்னைப் புத்தகத் திருவிழாவில்

வெளியீட்டு விழா காண இருக்கிறது.



காவல் பணியோடு

எழுத்துப்  பணியும்

தொடர வாழ்த்துவோம்.