17 ஜனவரி 2020

மரணக் கிணறு


     அதிகாலை 2.00 மணி

     ஒன்றல்ல, இரண்டல்ல

     ஒரு நூறு இரு நூறல்ல

     முழுதாய் 1500 பேர், ராணுவப் பயிற்சித் திடலில் ஒன்று கூடினர்.

     துப்பாக்கிகளும், தோட்டாக்களும் வாரி வாரி வழங்கப் பட்டன.

     அடுத்த நொடி வேட்டுச் சத்தம் தொடங்கியது

     குருவியைச் சுடுவதுபோல், தேடித் தேடிச் சுட்டனர்.

     சில நிமிடங்களிலேயே, 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


                                                                            ---
     136 ஏக்கர் பரப்பளவு

     மூன்று கி.மீ சுற்றளவு

     மூன்று கி.மீ சுற்றளவிற்கும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மதில் சுவர்

     மூன்று கி.மீ சுற்றளவிற்கும், மதில் சுவரைத் தொட்டுக் கொண்டு 191 அடி அகலத்திற்கு, மிக ஆழமாய் அகழி.

     ஒரே வாசல்

     கிழக்கு வாசல்

     கிழக்கு வாசல் வழி நுழைந்தால், தொடர்ச்சியாய் ஒன்றன் பின் ஒன்றாய் மூன்று வாயில்கள்

     கிழக்கு வாசலுக்கு நேரே, ஒரே ஒரு தூக்குப் பாலம்.

     இதுதான் வேலூர் கோட்டை.

     கி.பி.1560 இல், விஜயநகரப் பேரரசின் அரசராக இருந்த சதாசிவராய நாயக்க மன்னரின் ஆட்சியின் கீழ், சின்ன பொம்மு நாயக்கர், வேலூரை ஆண்ட பொழுது, கட்டப்பெற்றக் கோட்டை.

     வேலூர்

     ஏழு வள்ளல்களின் அத்துணை அருங்குணங்களையும், ஒருங்கே பெற்றிருந்த, குரும்பர் இனச் சிற்றரசன், நல்லியக் கோடன் ஆண்ட ஊர் வேலூர்.

     ஆதொண்டைச் சோழன் ஆண்டு ஊர் வேலூர்

     பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் ஆண்ட ஊர் வேலூர்.

     ராஷ்டிரக்கூட மன்னன் கண்டலத் தேவன் ஆண்ட ஊர் வேலூர்.

     சம்முவராய மன்னர் ராஜகம்பீரன் ஆண்ட ஊர் வேலூர்

     ஹைதர் அலி ஆண்ட ஊர் வேலூர்

     திப்பு சுல்தான் ஆண்ட ஊர் வேலூர்

     தற்பொழுது வேலூர் ஆங்கிலேயர் கோட்டை.

     வேலூர் கோட்டைக்குள் மூன்று மகால்கள்.

     திப்பு சுல்தானை வென்ற ஆங்கிலேயர்கள், அவரது குடும்பத்தை, வேலூர் கோட்டையில்தான் சிறை வைத்தனர்.

     திப்பு சுல்தானுக்கு வாரிசுகள் மொத்தம் 20 பேர்.

     12 மகன்கள்

     8 மகள்கள்

     இரண்டு மகன்களுக்குத் திருமணம் ஆகியிருந்தது.

     ஒரே ஒரு மகளுக்குத் திருமணம் ஆகியிருந்தது.

     மொத்தம் 23 பேர்.

     இந்த 23 பேரும் வேலூர் கோட்டைக்குள் தங்க வைக்கப் பட்டனர்.

     மகன்கள் வேலூர் கோட்டைக்குள் இருந்த திப்பு மகலாலில் தங்க வைக்கப்பட்டனர்.

     மகள்களோ, ஹைதர் மகாலில் தங்க வைக்கப் பட்டனர்.

     திப்புவின் குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 23 பேருக்குமானப் பணியாளர்களும் இங்கேயே தங்க வைக்கப் பட்டனர்.

     23 பேருக்கு எத்தனைப் பணியாளர்கள் தெரியுமா?

     1812 பேர்

     இலங்கை கண்டியர்களின் கடைசி மன்னனைச் சிறைப் பிடித்த ஆங்கிலேயர்கள், அம் மன்னனையும், அவர்தம் குடும்பத்தினரையும், வேலூர் கோட்டைக்குள்தான் தங்க வைத்திருந்தனர்.

     அம் மகாலின் பெயர் கண்டி மகால்.

     திப்பு மகால், ஹைதர் மகால், கண்டி மகால் இம்மூன்றையும் தவிர, ஆங்கிலேய அதிகாரிகள் தங்க தனித் தனிக் கட்டடங்கள், படை வீரங்களுக்கானப் படை வீடுகள் எனக் கட்டங்களால் நிரம்பி வழிந்தது வேலூர் கோட்டை.

     வேலூர் கோட்டைக்குள் இருந்த இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கை 1500.

     ஆங்கிலேயச் சிப்பாய்கள் 379 பேர்.

     எண்ணிக்கையில் ஆங்கிலேய வீரர்கள் குறைந்திருந்தாலும, அவர்களுக்கு வழங்கப்பட்டக் சலுகைகளோ அதிகம், அதிகம்.

     ஆங்கிலேய வீரன் மிகப் பெரியத் தவறு செய்தால் கூட, மன்னிக்கப் பட்டான்.

     இந்திய வீரன், சிறு தவறு செய்தால் போதும், பெருந் தண்டனை, கொடுந் தண்டனை தயாராய் காத்திருக்கும்.

     இதுமட்டுமல்ல, வயிற்றுப் பாட்டிற்காகச் சேர்ந்த இந்திய வீரர்களுக்கு விதிக்கப் பட்டக் கட்டுப்பாடுகளும் அதிகம்.

     இந்துவாக இருந்தால் கடுக்கன் அணியக் கூடாது.

     திருமண் பூசக் கூடாது.

     திருநீறு கூடவேக் கூடாது.

     இசுலாமியராக இருந்தால், தாடியை முழுமையாக மழித்துவிட வேண்டும்.

     மீசையை அளவாக, சிறியதாகக் கத்தரித்துக் கொள்ள வேண்டும்.

     இதனால் இந்திய வீரர்கள் கொதித்துப் போய் இருந்தனர்.

     தக்க தருணத்திற்காகக் காத்திருந்தனர்.

     வேலூரைச் சுற்றிலும், இருபது மிகப்பெரிய பாளையக்காரர்களின் கோட்டைகள் இருந்தன.

     அத்துணைக் கோட்டைகளையும் ஆங்கிலேயர்கள் தடைமட்டமாக்கி இருந்தனர்.

     எனவே, பாளையக்காரர்கள் மட்டுமல்ல, அங்கு வசித்த மக்களின் மன நிலையும் கொதி நிலையில்தான் இருந்தது.

     இவர்களும் வசதியான வாய்ப்பிற்காகக் காத்திருந்தனர்.

     திப்புவின் மறைவிற்குப் பிறகு, மைசூரில் இருந்து, கிட்டத்தட்ட 3000 இசுலாமியக் குடுமபங்கள், வேலூருக்கு வந்து குடியேறி இருந்தன.

     இவர்களும் தக்கதொரு தருணத்திற்காகக் காத்திருந்தனர்.

     வேலூர் கோட்டைக்குள் முடங்கிக் கிடந்த, திப்புவின் மகன்களும், சரியானதொரு வாய்ப்பிற்காகக் காத்திருந்தனர்.
இந்நிலையில்தான், சென்னையில் இருந்த ஆங்கிலேய இராணுவத் தமைமைத் தளபதி ஜெனரல் கிராடக் என்பவர், ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.

     இராணுவ வீரர்கள் அனைவரும், வினோத வடிவில், தொலினால் செய்யப்பட்டத் தொப்பியை கட்டாயம் அணிய வேண்டும்.

    தொப்பியின் முன்புறம், இறகுகளுடன் கூடிய, கொம்பு போன்ற அமைப்பையும் சேர்த்து அணிய வேண்டும்.

      சிலுவை போன்ற உருவமுள்ள, சங்கிலியை கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும்.

      இராணுவ வீரர்கள் கொதித்துப் போனார்கள்.

     இரவுக் கூட்டம் போட்டார்கள்.

     செய்தியைப் பரப்பினார்கள்.

     புரட்சி ஏற்படப் போகிறது, தயாராக இருங்கள் என்ற செய்தியை இசுலாமிய பக்கீர்கள் மூலம் நாடு முழுவதும் பரப்பினார்கள்.

     1806 ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில், சென்னையில் இருந்து, தொப்பி, இறகு, சங்கிலி என அனைத்தும், வண்டி வண்டியாய் வந்து இறங்கியது.

     1806, மே 29

     வேலூர் கோட்டையில், 21 ரெஜிமண்ட் படைகள் இருந்தன.

     அவற்றுள் ஒரு ரெஜிமண்டில் இருந்தவர்கள், முதன் முதலில் எதிர்ப்புக் குரலை எழுப்பினர்.

     தொப்பி, சங்கிலி அணியமாட்டோம் என்று கூறி, தாங்களே தயாரித்த, கைக்குட்டைப் போன்ற துணியைத் தலையில் கட்டிக் கொண்டு, எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

     தலையில் துணியைக் கட்டிக் கொண்ட அனைவரையும், விசாரனைக்காகச் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

     விசாரனை நடைபெற்றது.

     21 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

     இரு சுபேதார்கள். ஒருவர் இந்து, மற்றொருவர் இசுலாமியர்.

     19 படை வீரர்கள்.

      சுபேதார்கள் இருவருக்கும் தலா 900 கசையடி.

     19 படைவீரர்களுக்கும், ஆளுக்கு 500 கசையடி.

      தண்டனை நிறைவேற்றப்பட்டபொழுது, 21 பேருக்கும், தசை கிழிந்து தொங்கியது.

     குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடந்த 21 பேரையும், இராணுவத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.

     செய்தி அறிந்து வேலூர் மட்டுமல்ல, இந்தியாவே அதிர்ந்தது.

     பொறுத்தது போதும் எனப் பொங்கி எழத் தீர்மானித்தார்கள்.

     திப்புவின் பிள்ளைகள் திட்டம் போட்டுக் கொடுத்தனர்.

     1806, ஜுலை 10 நெருங்கியது.

     அன்று இராணுவ நாள்.

     ஒவ்வொரு ஆண்டும் இராணுவ நாள் சிறப்பாகக் கொண்டாடப் படுவது வழக்கம்.

     வேலூர் கோட்டை இராணுவ நாளுக்காகத் தயாரானது.

     கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருவதைப் போன்று, வெளியூர் ஆட்கள் எல்லாம், முதல் நாளே கோட்டைக்குள் நுழைந்தனர்.

     இதுபோதாதென்று, திப்புவின் மகள் வசீராவிற்கு, அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

     மைசூர், வேலூர், ஆற்காடு போன்ற பகுதிகளில் இருந்து, வருவதைப் போல, கோஷா அணிந்த பெண்கள் வரிசை வரிசையாய் பல்லக்குகளில் அமர்ந்து உள் நுழைந்தனர்.

     பல்லக்கு முழுவதும் ஆயுதங்கள்.

     கோட்டைச் சுவருக்குத் தலைமைக் காவலர் ஒரு ஆங்கிலேயர்.

     ஷேக் காசிம் என்ற சுபேதார் இவருக்கு நெருங்கிய நண்பர்.

     ஷேக் காசிம், தலைமைக் காவலரிடம், மெதுவாய் பேச்சுக் கொடுத்து, நான் கோட்டையைப் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் ஓய்வெடுங்கள் எனக் கூறி, ஆங்கிலேயனை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    கோட்டை வாயிலைப் பூட்டினார்.

    191 அடி நீள, அகழித் தொங்கு பாலம் தூக்கப் பட்டது.

    கோட்டைக்குள் வருவதற்கும், வெளியேறுவதற்குமான, ஒரே வழி அடைக்கப் பட்டது.

     அதிகாலை 2.00 மணி

     இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சித் திடலில் ஒன்று கூடினர்.

     துப்பாக்கிகளைக் கையில் ஏந்தினர்.

     ஆங்கிலேயர்களை விரட்டி, விரட்டி வேட்டையாடத் தொடங்கினர்.

     முதல் பலி, கோட்டைத் தளபதி வான் போர்ட்.

     தொடர்ந்து வேட்டுச் சத்தம்.

     சில நிமிடங்களிலேயே 200க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

     இந்திய வரலாற்றில் முதன் முறையாக, வேலூர் கோட்டையில் பறந்த, யூனியன் ஜாக் கொடி இறக்கப் பட்டது.

     வெடிச் சத்தம் கேட்டு, எஞ்சியிருந்த ஆங்கிலேயர்கள் விழித்து எழுந்தனர்.

     ஆங்கிலேய அதிகாரி ஸ்மித் என்பாரின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

     இதனை அறிந்த இந்திய வீரர்கள், அவ்விடத்தைச் சுட்டுக் கொண்டே நெருங்கினர்.

     ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லைப் புறம் வழியாக ஓடி, மலையில் ஏறித் தப்பித்தனர்.

     விடிய விடிய வேட்டை தொடர்ந்தது.

     காலை 6.00 மணியளவில், ஆங்கிலேய அதிகாரி ஒருவர் எதிர்பாராத விதமாக, வேலூர் கோட்டைக்கு வந்து சேர்ந்தார்.

     கோட்டை பூட்டப் பட்டிருந்தது.

     தொங்கு பாலம் தூக்கப் பட்டிருந்தது.

     உள்ளுக்குள் தொடர் வெடிச் சத்தம்.

     சந்தேகம் பிறந்தது.

     வேலூர் கோட்டையில் இருந்து வெறும் 16 மைல் தொலையில் ஆற்காடு

உடனே, ஆற்காடு ஆங்கிலேய அதிகாரியான கில்லஸ்பி அவர்களுக்குத் தகவல் கொடுத்தார்.

     உடன், விரைந்து புறப்பட்ட கில்லஸ்பி, ஆயிரக் கணக்கான வீரர்களை அழைத்துக் கொண்டு வந்து, எப்படியோ தொங்கு பாலத்தை இறக்கி, கோட்டைக் கதவுகளை வெடி வைத்துத் தகர்த்து, வேலூர் கோட்டைக்குள் நுழைந்தார்.

     இதில் கொடுமை என்ன தெரியுமா?

     கில்லஸ்பி அழைத்து வந்த வீரர்கள் அனைவரும், இந்திய வீரர்கள்.

     இந்திய வீரர்களை வைத்தே, இந்திய வீரர்களை அடக்கினார்.

     பின்னாலேய பீரங்கிப் படையும் வந்து சேர்ந்தது.

     மிகச் சரியாக, எட்டே எட்டு மணி நேரம்.

     அதிகாலை 2.00 மணிக்குத் தொடங்கிய புரட்சி, காலை 10.00 மணிக்கு அடக்கப் பட்டது.

     எட்டு மணி நேரம் மட்டுமே நீடித்தப் புரட்சி வேலூர் புரட்சி.

     முதல் சுதந்திரப் போர் எனப் போற்றப்படும், சிப்பாய்ப் புரட்சிக்கு 51 ஆண்டுகளுக்கும் முன் எழுந்த புரட்சி இது.

     எட்டு மணி நேரத்திற்குள் இப்புரட்சி முடங்கிப் போய்விட்டதற்குச், சில காரணங்கள் இருக்கத்தான் செய்தன.

     திப்பு சுல்தான் பிள்ளைகள் வழி காட்டினார்களே தவிர, தலைமையேற்றுப் புரட்சியை நடத்த வில்லை.

     அரண்மனைக்கு உள்ளேயே இருந்து விட்டனர்.

     கோட்டைக்குள்ளே இருந்த இந்திய வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி இருந்ததே தவிர, போர்ப் பயிற்சி கிடையாது. தலைமையேற்று வழி நடத்தவும் ஆளே இல்லாமல் போயினர்.

     பேராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கோட்டையின் வெளிப் பகுதியில் இருந்து வந்த பொது மக்கள், சுமார் 300 பேராவது இருப்பார்கள்.

     இவர்கள் போர் செய்வதை விட்டுவிட்டுப் பாதியிலேயே, அரசு கஜானாவை கொள்ளை அடிப்பதில் இறங்கி விட்டனர்.

     வேலூர் கோட்டையைச் சுற்றிய மொத்தப் பகுதியின் வரி வசூலும் இங்குதான் இருந்தது.

     கொள்ளையில் கவனம் திரும்பியதால், கோட்டைக்குள் இருந்த, மூன்று வயிற் கதவுகளையும்  திறந்தே போட்டுவிட்டனர்.

      இதனால் பீரங்கிப் படை எளிதாய், வெகுவேகமாய் உள்ளே நுழைந்துவிட்டது.

     ஆங்கிலேயர்களின் கணக்குப்படி, வேலூர் கோட்டையில், அன்று, அரசு கஜானாவில் இருந்து, கொள்ளையடிக்கப் பட்டது எவ்வளவு தெரியுமா?

     5,84,000 பொற் காசுகள்.

     புரட்சி முடிவிற்கு வந்துவிட்டது.

     இந்திய வீரர்கள் கைது செய்யப் பட்டனர்.

     இதன் பின்னர்தான், வெள்ளையரின் வெறியாட்டம் தொடங்கியது.

     கோட்டைக்கு வெளியே, பொது மக்களுக்கு முன், பீரங்கியின் வாய் பகுதியில் வைத்து, ஆறு வீரர்களைக் கட்டினார்கள்.

     பீரங்கியை வெடிக்க வைத்தார்கள்

     ஆறு பேரின் சதைகளும் தூள் தூளாய் பிய்ந்து பறந்தன.

     ஐந்து பேரை பொது இடத்தில் வைத்துச் சுட்டார்கள்.

     ஆறு பேரை பொது இடத்தில், தூக்கில் தொங்க விட்டனர்.

     மீதமிருந்த ஆயிரக் கணக்கான இந்திய வீரர்கள் அனைவரையும், கோட்டையின் மேற்குச் சுவர் முழுக்க வரிசையாய் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றார்கள்.

     ஒருவரைக் கூட விடவில்லை.

     கொன்ற பிறகு, அனைத்து உடல்களையும், அருகில் இருந்த, கிணற்றில் போட்டார்கள்.

     இந்திய வீரர்களால் அந்தக் கிணறு நிறைந்துதான் போனது.

     1806, ஜூலை 10.

     இன்று நாம் 2020 இல் வாழ்கிறோம்.

     இன்றுவரை, அந்தக் கிணறு எங்கே இருக்கிறது என்பது கூட நமக்குத் தெரியாது.

     அந்தக் கிணற்றைக் கண்டுபிடிக்க, முயற்சி மேற்கொண்டதாகக் கூடத்தெரியவில்லை.

      ஆனால், இந்திய வீரர்களால் கொல்லப்பட்ட, ஒவ்வொரு ஆங்கிலேய வீரருக்கும், கோட்டைக்குள்ளேயே சமாதி கட்டப் பட்டது.

     இச்சமாதிகள் இன்றும் இருக்கின்றன.

     முதல் பலியான ஆங்கிலேயத் தளபதி பான்கோர்ட்டின் சமாதி, கோட்டைக்குள்ளே, தேவாலயத்தில் அருகில், இன்றும் மிகப் பிரமாண்டமாய் நிற்கிறது.

     வாழ்க பாரதம்.
---

கடந்த 12.1.2020 ஞாயிற்றுக் கிழமை மாலை,
ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவில்

பூண்டி, புட்கம் கல்லூரி
மேனாள் வணிகவியல் துறைத் தலைவர்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்கள்,

முதல் இந்திய விடுதலைப் போர்
வேலூர் புரட்சி – 1806
என்னும் தலைப்பில்
சொற்பெருக்காற்றினார்.

தஞ்சாவூர், பாரதி பயிலகம் இயக்குநர்
திரு வெ.கோபாலன் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற
இப்பொழிவிற்கு வந்திருந்தோரை.

தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
இளங்கலை, தமிழ்த் துறை மாணவி.
செல்வி ஸ்ரீ.சந்தியா அவர்கள்
வரவேற்றார்.

தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
இளங்கலை, தமிழ்த் துறை மாணவி
செல்வி ச.பிரியதர்ஷினி அவர்கள்
நன்றி கூற
விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்
முனைவர் சு.சத்தியா அவர்கள்
நிகழ்வுகளைச் சுவைபடத்
தொகுத்து வழங்கினார்.


வாழ்வியல்
வரலாறு
இலக்கியம் எனத்
திங்கள் தோறும்
பொழிவுகளைப்
பொலிவோடு
வழங்கிவரும்
ஏடகம் அமைப்பின்
நிறுவுநர், தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்களின்
பணி
போற்றுதலுக்கு உரியது.
போற்றுவோம், வாழ்த்துவோம்.