ஆண்டு 2019, ஜுலை மாதம்
கென்யா.
கிழக்கு ஆப்பிரிக்க நாடு.
கென்ய நாட்டில் இருந்து, ஒரு குழு, இந்தியாவிற்கு வந்தது.
இந்தியப் பிரதமரைச் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து உரையாடியது.
ரிச்சர்ட் டாங்கி.
கென்ய நாட்டுக் குழுவில் வந்தவர்களுள் ஒருவர்.
இவர் கென்ய நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்.
இதுமட்டுமல்ல, இவர் கென்ய நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை துணைத் தலைவரும் ஆவார்.
புது தில்லியில் தன் பணி முடிந்தபிறகு, தன் மனைவியுடன் விமானம் ஏறி, மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகருக்குப் பறந்தார்.
அவுரங்காபாத் ஆட்சியர் வரவேற்றார்.
ஆட்சியருக்கு ஒன்றும் புரியவில்லை, கென்ய நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர், தன் குழுவினரை விட்டுவிட்டு, தனித்த பயணமாக, எதற்காக அவுரங்காபாத்திற்கு வரவேண்டும் என்று புரியவில்லை.
விமான நிலையத்திற்கு வந்து தன்னை வரவேற்ற ஆட்சியரிடம், தான் அவுரங்காபாத்திற்கு வந்த காரணத்தைக் கூறினார்.
வாங்கடே நகரில் வசிக்கும் ஒரு பெட்டிக் கடைக்காரரைப் பார்க்க வேண்டும்.
ஆட்சியர் அதிர்ந்து போனார்.
இரண்டு நாட்கள் சல்லடை போட்டுச் சலித்து, அந்தப் பெட்டிக்கடைக் காரரைக் கண்டு பிடித்தனர்.
காசிநாத் கௌலி.
அந்தப் பெட்டிக் கரைக்காரரின் பெயர்.
உடனே புறப்பட்ட ரிச்சர்ட், வாங்கடே நகர் சென்றார்.
காசிநாத் கௌலியைக் கண்டு கைகூப்பி வணங்கினார்.
என்னைத் தெரிகிறதா?
எழுபது வயது, காசிநாத் கௌலிக்கு ஒன்றும் புரியவில்லை.
நான்தான் ரிச்சர்ட் டாங்கி.
அப்பொழுதும் அவருக்குப் புரியவில்லை.
இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1985 லிருந்து 1989 வரை, அவுரங்காபாத், மவுலானா ஆசாத் கல்லூரியில் மேலாண்மை பயின்ற மாணவன் நான்.
காசிநாத் கௌலியின் முகத்தில் சிந்தனையின் ரேகை படர்ந்தது.
இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பா.
யோசித்தார்.
மிகவும் ஏழ்மை நிலையிலும், நாடு விட்டு, நாடு வந்து படித்த எனக்கு, தங்க இடம் கொடுத்து உதவியர் தாங்கள்தான்.
தங்கள் கடையில் இருந்து காய், கனிகளை கொடுத்து உதவியதும் தாங்கள்தான்.
கடைசியாய், தங்களிடம் கடனாய் வாங்கிய காய், கனிகளுக்கு உரிய 200 ரூபாயைத் திருப்பிக் கொடுக்காமலேயே, கென்யா சென்று விட்டேன்.
அந்தக் கடனை அடைப்பதற்காகத்தான் தங்களைத் தேடி வந்துள்ளேன்.
ரிச்சர்ட் பேசப் பேச, காசிநாத்தின் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.
தாவி அணைத்துக் கொண்டார்.
வார்த்தைகள் இன்றி சில நிமிடங்கள் கடந்தன.
சுயநினைவு பெற்ற காசிநாத், ரிச்சர்டையும் அவர் மனைவியையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
விருந்து படைத்தார்.
பழங்கால நினைவுகளில் இருவரும் மூழ்கித் திளைத்தனர்.
இறுதியாய் ரிச்சர்ட், இருநூறு ரூபாய் பணத்தை எடுக்க, அன்போடு மறுத்த காசிநாத், ரிச்சர்டுக்கு குல்லாவையும், ரிச்சர்டின் மனைவிக்கு அழகிய சேலை ஒன்றினைவும் பரிசளித்து மகிழ்ந்தார்.
இப்படியும் ஒரு மனிதரா?
ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி உதைக்கும் மனிதர்கள் பெருகிவிட்ட, இக்காலத்தில், இப்படியும் ஒரு மனிதரா?
இப்படியும் ஒரு நாணயமா?
அவுரங்காபாத்தே வியந்து போனது.
இதற்கு, கென்ய பாராளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைத் துணைத் தலைவருமான, ரிச்சர்ட் டங்கியின் பதில் என்ன தெரியுமா?
நேர்மையாக இருக்க, எனக்கு இந்தியர்கள்தான் கற்றுக்
கொடுத்தனர்.
குரல் வழிப் பதிவு