14 அக்டோபர் 2020

காந்திய வேர்கள்



     ஆண்டு 1937.

     அக்டோபர் இரண்டு.

     மகாத்மா காந்தியின் பிறந்த நாள்.

     நியூயார்க்கில் இருந்து டர்பன் நோக்கி, கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு, திடீரென்று ஓர் எண்ணம் மனதில் மின்னலாய் வெட்டியது.

     காந்தியைப் பற்றி, ஒரு படம் எடுத்தால் என்ன?

     எண்ணத்தை வாய்விட்டு, வார்த்தையாய் வெளியில் சொன்னபோது, சுற்றிலும் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

     உன்னால் முடியுமா? என ஏளனப் பார்வை பார்த்தார்கள்.

   

  காரணம் அந்த இளைஞனின் வயது.

     வெறும் 27 வயது இளைஞன்.

     உன்னால் முடியுமா?

     கேள்வியே இளைஞனை உசுப்பிவிட்டது.

     ஏன் முடியாது?

     செயலில் இறங்கு.

     மனம் கட்டளையிட்டது.

     முழுமையாய் இறங்கினார்.

     அன்று முதல் அவர் வாழ்வே மாறிப்போனது.

     ஐரோப்பா, இங்கிலாந்து, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா என ஒவ்வொரு நாடாய் புகுந்து புறப்பட்டு, காந்தியச் சுவடுகளைத் தேடினார்.

     உலகையே ஒரு சுற்று சுற்றினார்.

     இவர் பயணித்த தொலைவு எவ்வளவு தெரியுமா?

     சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

     ஒரு இலட்சத்து, அறுபது ஆயிரம் கிலோ மீட்டர்கள்.

     காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், ஒளி நாடாக்கள் எனத் தேடித் தேடி சேகரித்தார்.

     தென்னாப்பிரிக்காவில், காந்தியின் நண்பர் போலனைச் சந்தித்தார்.

     தென்னாப்பிரிக்காவில், காந்தியின் முதல் அறப்போராட்டக் காட்சிகள் ஒளிச் சுருளாய் கிடைத்தது.

     வாரி அணைத்துக் கொண்டார்.

     காந்தி, தன் வாழ்நாளில், என்றும் கால் பதிக்காத அமெரிக்காவில், இவருக்கு, காந்திய ஓளி நாடாக்கள் ஏராளமாய் கிடைத்தன.

     அசராமல் அலைந்தார்.

     ஒளிப்படச் சுருள்களைச் சேகரித்தார்.

     உலகை ஒரு சுற்றி சுற்றிவிட்டு, இறுதியாய் இந்தியாவிற்கு வந்தார்.

     இந்தியாவையும் ஒரு சுற்று சுற்றினார்.

     நேரு, படேல், ரோமைன் ரோலண்ட், மரியா மாண்டிசோரி, சர் சி.வி.இராமன், டாக்டர் இராதாகிருஷ்ணன் என அரசியல் தலைவர்கள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள் அனைவரையும் சந்தித்தார்.

     பேட்டி கண்டார்.

     சபர்மதி ஆசிரமத்தில் முழுதாய் ஒரு மாதம் தங்கினார்.

     காந்தியைக் காண வருபவர்களை எல்லாம் சந்தித்தார்.

     ஆனால், காந்தியை மட்டும் சந்திக்கவேயில்லை.

     காரணம்,

     காந்தியைப் பார்த்தால், என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எனக் கேட்பார்.

     உங்களைப் பற்றியப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினால், நிச்சயமாக, வேறு ஏதாவது உருப்படியான வேலையைப் பார் எனக் கூறிவிடுவார்.

     எனவே, காந்தியை பார்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாய் நின்றார்.

     ஒரு திரைப் படத்திற்கு 12,000 அடி போதுமானது.

     ஆனால், இவர் சேர்த்ததோ, 50,000 அடிகள்.

     பார்த்துப் பார்த்து, செதுக்கி, செதுக்கி 18,000 அடியாய் குறைத்தார்.

     தகுதியானவர்களைத் தேடித் தேடி, படத் தயாரிப்புப் பணியில் இணைத்தார்.

     வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க ஒருவர்.

     பின்னனி குரல் கொடுக்க சிலர்.

     பின்னனி இசை, இசைக்க ஒருவர் எனப் பொருத்தமானவர்களைப் பார்த்துப் பார்த்து, சேர்த்து, படத்தை மெருகேற்றினார்.

     படம் தயாரானது.

     1940 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள் சென்னையில் படம் திரையிடப்பட்டது.

     பின்னர் தமிழ் மொழியில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பெற்று, இந்தி மொழியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள், சுதந்திரத் திருநாளில், தில்லியில் திரையிடப் பட்டது.

     இதனைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பெற்று, பிரிட்டன், அமெரிக்கா எனப் பல நாடுகளிலும்  திரையிடப்பட்டது.

     இன்று, நாம், மகாத்மா காந்தி அவர்களின் புகைப் படங்களை, ஒளி நாடாக்களைப் பார்க்கிறோம் என்றால், அதன் காரணகர்த்தா இவர்தான்.

இவர் யார் தெரியுமா?

உலகம் சுற்றிய தமிழன்


ஏ.கே.செட்டியார்.

---

     ஆண்டு 1929.

     சபர்மதி ஆசிரமம்.

     கோட், சூட்  அணிந்த மனிதர் ஒருவர், காந்தியைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறார்.

     மதியம் 2.30 மணிக்கு காந்தி, இவரைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கி இருந்தார்.

     மணி சரியாக 2.30 ஆன பொழுது. அருகில் இருந்த மரத்தடியில், ஒரு பொக்கை வாய் கிழவர் வந்து அமர்ந்து, கை ராட்டையில், நூல் நூற்கத் தொடங்கினார்.

     அவரது அருகில் சென்றார்.

     கிழவர் நிமிர்ந்து பார்த்தார்.

     நீங்கள்தான் என்னைச் சந்திக்க வந்தவரா?.

     கோட், சூட் அணிந்தவர் திகைத்தார்.

     நீங்கள்தான் காந்தியா?.

     ஆமாம், வாருங்கள், அமருங்கள் என்றார்.

     அமருவதற்கு இருக்கைகள் ஏதும் இல்லை.

     தரையில் அமர்ந்தார்.

     இருவரும் பேசத் தொடங்கினர்.

     கோட், சூட் அணிந்தவர் மெல்ல, மெல்ல கரையத் தொடங்கினார்.

     காந்தியத்தால் உள்ளம் ததும்பி வழியத் தொடங்கியது.

     முதல் சந்திப்பு முடிந்து, பம்பாய் சென்றவர், தன் கோட், சூட் அகற்றி, கதருக்கு மாறினார்.

     காந்தியவாதியானார்.

     பின்னாட்களில், சபர்மதி ஆசிரமமே, இவரது இல்லமாயிற்று.

     இவர் சாதாரண மனிதரல்ல.

     அக்காலத்திலேயே, இங்கிலாந்தில், தணிக்கையாளருக்குப் பயின்று, பட்டயக் கணக்கராய் தேறியவர்.

     காந்தியுடன் இணைந்த பிறகு, காந்தியப் பொருளாதாரம் என்ற சித்தாந்தத்திற்கு உரு கொடுத்தவர்.

     பல முறை சிறை சென்றவர்.

     சிறையிலேயே இரு நூல்களை எழுதியவர்.

     இயேசுநாதரின் போதனைகளும், கிறித்துவ நடைமுறைகளும்.

     இந்திய கிராமப்புற பொருளாதாரம்.

     இவர் ஒரு கிறித்துவர்.

     ஆனாலும் பகவத் கீதையில் தோய்ந்தவர்.

         பீகார் மாநிலத்தில் பெரும் பூகம்பம் ஏற்பட்டபோது, பூகம்ப நிதியினை காங்கிரஸ் திரட்டியபோது, அந்நிதியின் முழுப் பொறுப்பாளராய் பணியாற்றியவர் இவர்.

     பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காண வந்த காந்தி, இவரைக் காண வருகிறார்.

     பார்க்கலாமா? எனக் கேட்கிறார்.

     தற்பொழுது பார்க்க இயலாது.

     கணக்கில் ஒரு அணா இடிக்கிறது என்பதால், கணக்கினை சரிபார்த்துக் கொண்டிருக்கிறார்.

     பதில் கூறியவர், இராஜேந்திர பிரசாத்.

     மறு நாள் காலை வருகிறார்.

     இப்பொழுது பார்க்க இயலுமா? கேட்கிறார்.

     பூகம்ப நிதியினுடைய இறுதி நிதி நிலை அறிக்கையினைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். எனவே இன்று பார்க்க இயலாது.

     இப்பணி முடிந்ததும், வார்தாவிற்கு வந்து, காந்தியைச் சந்திப்பதாகக் கூறுங்கள்.

     காந்தியையே சந்திக்க மறுத்து திருப்பி அனுப்புகிறார்.

     காந்தியாரும் ஏற்றுக் கொண்டு திரும்புகிறார்.

     இதனால்தான் இவர் மகாத்மா.

     இவர் யார் தெரியுமா?

     தஞ்சையில் பிறந்தவர்.

     தன் இறுதி நாட்களை, மதுரை, தே.கல்லுப்பட்டியில், ஒரு சிறு குடிலில் கழித்தவர்.

     கிறித்தவரான இவர், தான் இறந்ததும், தன்னைப் புதைக்கக் கூடாது, எரிக்க வேண்டும் என்றவர்.

     எரித்து, தன் சாம்பலை, தன் குடிலைச் சுற்றி வளர்ந்திருக்கும், ரோஜாச் சொடிகளுக்கு உரமாய் இடுங்கள் என்றவர்.

இவர்தான்,


ஜெ.சி.குமரப்பா.

--

     ஆண்டு 1920.

     ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த பதினேழு வயது நிரம்பிய, அந்த இளைஞன், படிப்பதற்காக திருச்சிக்கு வருகிறார்.

     தேசியக் கல்லூரியில் சேருகிறார்.

     உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கிறார்.

     அவ்வாண்டு, நாக்பூரில் காங்கிரஸ் கூடுகிறது.

     மூன்று தீர்மானங்களை நிறைவேற்றுகிறது.

     உறுப்பினர்கள், சட்ட மன்றத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

     வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தை புறக்கணிக்க வேண்டும்.

     மாணவர்கள், கல்விச்சாலைகளைப் புறக்கணிக்க வேண்டும்.

     சட்ட மன்றம் புறக்கணிக்கப்பட்டது.

     வழக்கு மன்றம் புறக்கணிக்கப்பட்டது.

     இம்மாணவர் கல்லூரியைப் புறக்கணித்து வெளியே வருகிறார்.

     காங்கிரஸில் இணைகிறார்.

     1921 ஆம் ஆண்டு காந்தி திருச்சிக்கு வருகிறார்.

     பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

     இம்மாணவர் உண்டியல் ஏந்தி, நிதி திரட்டுகிறார்.

     இனிக்க, இனிக்க பேசுவதில் வல்லவர் இம்மாணவர்.

     பேசிப் பேசி, கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் அணிந்திருந்த, தோடுகளை, மூக்குத்திகளை நன்கொடையாய் பெற்றுக் குவிக்கிறார்.

     பெண்கள் அவர்கள் நகைகளையே கொடுத்துவிட்டனர், ஆண்களே நீங்கள் என்ன கொடுக்கப் போகிறீர்கள் எனக் கேட்டு, ஆண்களிடம் இருப்பதை எல்லாம் பெறுகிறார்.

     மேடையேறி, காந்தியிடம் சென்று, தான் பெற்ற நன்கொடைகளைத் தருகிறார்.

     காந்தி மகிழ்வுடன், இந்த இளைஞனின் முதுகில் தட்டுகிறார்.

     இதனையே தன் வாழ்வின் பெரும் பேறாய் கருதினார், இந்த இளைஞர்.

     பின்னர் பத்திரிக்கைத் துறையில் நுழைகிறார்.

     நவ சக்தியில் இணைகிறார்.

     யங் இந்தியா இதழில், காந்தி, தன் வரலாற்றைத் தொடர்ந்து எழுதியபோது, அதனைச் சுடச் சுட மொழிபெயர்த்து, அடுத்தடுத்த நாட்களில், நவசக்தியில் வெளியிட்டவர் இவர்.

     இத்தொடர் நிறைவுற்று, நூலாய் வடிவம் பெற்றபோது, நூலுக்கு சத்திய சோதனை எனப் பெயரிட்டதும் இவர்தான்.

இவர்தான்,

சிவகாமியின் சபதத்தைத் தந்தவர்

பொன்னியின் செல்வனைப் படைத்தவர்


கல்கி.

---

     ஆண்டு 1942.

     தொடர் வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார், அந்த இளைஞர்.

     அந்த இளைஞரைப் பிடிக்க, தொடர் வண்டி நிலையங்கள் அனைத்திலும், காவலர்கள் காத்திருக்கின்றனர்.

     இவர் ஒன்றும் குற்றவாளி அல்ல.

     1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள், பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கிறார் இந்த இளைஞர்.

      வெள்ளையனே வெளியேறு இயக்கம் இக்கூட்டத்தில்தான் தொடங்கப் பெற்றது.

     இவ்வியக்கத்தைச் செயற்படுத்த, காந்தி வகுத்துக் கொடுத்த, நடைமுறைகளை எல்லாம், கவனமாய், மனதில் ஏற்றி திரும்பிக் கொண்டிருக்கிறார்.

     காவலர்களோ, கைது செய்யக் காத்திருக்கிறார்கள்.

     அரக்கோணம் தொடர் வண்டி நிலையத்தில் இறங்கி, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, துண்டை எடுத்து, முண்டாசாய் தலையில் சுற்றிக் கொண்டு, காவலர்கள் கூட்டத்திற்குள் நுழைந்து, சர்வசாதாரணமாக நடக்கிறார்.

     காவலர்களால் இவரை அடையாளம் காண இயலவில்லை.

     பேருந்தில் ஏறிப் பயணிக்கிறார்.

     ராணிப் பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், எனப் பயணித்து, காங்கிரஸ் பிரமுகர்களையெல்லாம் சந்தித்து, செய்ய வேண்டியப் பணிகளை, தெள்ளத் தெளிவாய் கூறிவிட்டு, தன் சொந்த ஊர் திரும்புகிறார்.

     காவல் நிலையத்திற்கு ஆள் அனுப்புகிறார்.

     வீட்டில் இருக்கிறேன்.

     வந்து கைது செய்யுங்கள் என்று தகவல் அனுப்புகிறார்.

     கைதாகிறார்.

     சிறை செல்கிறார்.

     1946 ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க, இவரைத்தான் காந்தி, தில்லிக்கு அழைத்தார்.

     ராஜாஜி, பட்டாபி சீதாராமையா, பி.பிரகாசம் இவர்கள் மூவர்தான் என் கண்ணிற்குத் தெரிகிறார்கள். ஆனால் பிரகாரம் வேண்டாம் என்றார் காந்தி.

     பிரகாசம் கோடீஸ்வரராய் இருந்தவர்.

     தன் சொத்து முழுவதையும், இயக்கப் பணிகளுக்காகச் செலவிட்டு ஏழையானவர்.

     ஏழ்மையில் வாடும் பிரகாசத்தைக் காணச் சகியாத மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நிதி திரட்டி வழங்குகிறார்கள்.

     மக்களின் பாசத்திற்கு அடிபணிந்த பிரகாசம், அந்நிதியினைப் பெற்றுக் கொள்கிறார்.

     என்னதான், தன் சொத்துக்களையெல்லாம், நாட்டிற்காக இழந்திருந்தாலும், பொதுப் பணத்தை, மக்களின் பணத்தைப் பெற்றுக் கொண்டவர் பிரகாசம்.

     எனவே பிரகாசம் வேண்டாம் என்கிறார் காந்தியார்.

     இராஜாஜியை முதல்வராக்கலாமா? என்கிறார்.

     தமிழ் நாட்டில்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார் இவர்.

     பட்டாபி சீதாராமையாவை முதல்வராக்கலாமா? என்கிறார்.

     ராஜாஜி ஒத்துழைத்தால் முடியும் என்று உரைத்துவிட்டு, தமிழகம் திரும்புகிறார்.

     தமிழகம் திரும்பிய இவரை, தொலைபேசி வழி,

     நேரு அழைக்கிறார்,

      படேல் அழைக்கிறார்.

     அபுல் கலாம் ஆசாத் அழைக்கிறார்.

     காந்தி, இராஜாஜியை முதல்வராக்க விரும்புகிறார் என மூவருமே எடுத்துரைக்கிறார்கள், வற்புறுத்துகிறார்கள்.

     மூவர் சொல்வதையும் செவி மடுத்துக் கேட்கிறார்.

     ஆனால் முடிவை, சுயமாய் எடுக்கிறார்.

     நியமனம் கூடாது.

     ஜனநாயகம் வேண்டும்.

     எனவே, முறைப்படி முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,

     தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிதான் முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து, வாக்கெடுப்பு நடத்துகிறார்.

     பிரகாசம் வெற்றி பெற்று முதல்வராகிறார்.

     ஜனநாயகத்தைக் கட்டிக் காத்த இவர் யார் தெரியுமா?

ஒன்பது ஆண்டு சிறைவாசம்

ஒன்பது ஆண்டு முதலமைச்சர்

ஐந்து முறை தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்

நான்கு முறை பாராளுமன்ற உறுப்பினர்

ஐந்து ஆண்டுகள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்

எனச் சாதித்த தமிழன்.

காந்தி பிறந்த நாளில், தன் வாழ்வைத் துறந்தவர்


கர்மவீரர் காமராசர்.

---

     காந்தியம் உலகு முழுவதும் இன்று பரவியிருந்தாலும், காந்தியத்தின் பக்க வேர்கள் பல, தமிழ் நாட்டில்தான் இருக்கின்றன.

    இவர்கள் அத்துனைபேரும் காந்திய வேர்கள்.

     இந்த வேர்கள் கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இன்றைய சூழலில், காந்தியம்தான் மாருந்தாகத் தேவைப்படுகிறது.

---

     சுமார் ஒரு மணி நேரம், தொய்வின்றித் தொடர்ந்த பொழிவு நிறைவுற்ற போது, அனைவர் மனதிலும் ஒரே ஓர் எண்ணம்தான்

     இன்னும் சிறிது நேரம் பேசியிருக்கலாம், தமிழகத்தை அகழ்ந்து, மேலும் பல காந்திய வேர்களை, வெளியே எடுத்துக் காட்டியிருக்கலாமே என்னும் ஏக்கம்தான் எஞ்சி நின்றது.

இவர் ஓய்வு பெற்ற வணிகவியல் துறைப் பேராசிரியர்.

ஆனாலும், இவர் உதிரம் முழுவதும் கலந்து ஓடுவதென்னவோ,

காந்தியம், காந்தியம், காந்தியம்தான்.

தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரி

மேனாள் வணிகவியல் துறைத் தலைவர்


பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்களின்,

காந்திய வேர்கள்

என்னும் தலைப்பிலான பொழிவு

ஒவ்வொருவரையும்

தன்னிலை மறக்கச் செய்து

கட்டித்தான் போட்டது.

 

கடந்த ஆறு திங்களாய்

இணைய வழி எழுந்த

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவு,

கடந்த 11.10.2020 ஞாயிறன்று

கொரோனா கால முன்னெச்சரிக்கைகளுடன்

நான்காம் ஆண்டு தொடக்க விழாவாக

அரங்கில் அரங்கேறியது.

 

பொழிவிற்கு வந்திருந்தோரை

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்கள்

வரவேற்றார்.

 

ஏடகப் புரவலர்

தஞ்சை சமணர் ஆலய

அறங்காலவர் குழுத் தலைவர்


திரு ச.அப்பாண்டைராஜ் அவர்கள்

தலைமையில்

இப்பொழிவு சிறப்புற நடைபெற்றது.

 

ஏடகப் புரவலர், கல்வியாளர்


திரு எம்.வேம்பையன் அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

 

தஞ்சாவூர், மனவளக் கலை மன்ற


திருமதி எம்.சரோஜா அவர்கள்

நிகழ்வுகளைச்

சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

 

முன்னதாக,

ஏடகம் நூலகக் கட்டிடத்தின்

திறப்பு விழா நடைபெற்றது.

 

சிங்கப்பூர் தமிழாசிரியர்


பேராசிரியர் கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள்

புதிய நூலகக் கட்டிடத்தினைத்

திறந்து வைத்தார்கள்.

 

மேலும், இவ்விழாவின்போது,

திருமதி செ.அபிநயா

திருமதி பி.மகேஸ்வரி

திரு க.முரளி

மூவருக்கும்

உ.வே.சா. இருக்கை

நினைவுப் பரிசும்

சான்றிதழ்களும் வழங்கி

சிறப்பிக்கப்பட்டன.

 

முப்பத்தி ஆறு

திங்களுக்கும் முன்,

கருவாகி

உருவாகி

உயிர் பெற்ற

ஏடகத்தைத்

தன் சேயாய்

தொய்வின்றித்

தாலாட்டி

சீராட்டி

தமிழமுதூட்டிப்

போற்றிவரும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

 



 

     குரல் வழிப் பதிவு

 

    

 

நண்பர்களே, வணக்கம்.

     அமேசான் தளத்தில், மேலும் எனது மூன்று நூல்கள் புதிதாய் இணைந்துள்ளன.




இம்மூன்று நூல்களையும் 15.10.2020 வியாழன் பிற்பகல் முதல் 17.10.2020 சனிக்கிழமை பிற்பகல் வரை கட்டணம்  ஏதுமின்றி தரவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.

     வாசித்துப் பாருங்களேன்.

     வலைச் சித்தருக்கு ஜெ.

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்