14 ஏப்ரல் 2021

சோழ இலங்கேசுவரன்

 


     இலங்கை.

     இந்தியா.

     இந்தியாவிற்கும் இலங்கைக்குமானத் தொடர்பு என்பது, வரலாற்றிற்கும் முந்தைய கால கட்டத்திலேயே தொடங்கிய உறவாகும்.

    

தமிழ் நாட்டில் அண்மைக் காலங்களில் நடத்தப்பெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள சான்றுகளும், தொல்லியல் எச்சங்களும், இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பெற்ற ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற சான்றுகளும், தொல்லியல் எச்சங்களும், இவ்விரு பிராந்தியங்களிலும், ஒத்த கலாசாரம், பண்பாடு நிலவி வந்ததை உறுதி செய்கின்றன.

     தமிழ் நாட்டில் கிடைக்கப் பெற்ற பிராமி எழுத்துப் பொறிப்பும், இலங்கையில் கிடைக்கப்பெற்ற பிராமி எழுத்துப் பொறிப்புகளும், இரு நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமையினையும் உறவினையும் பறைசாற்றுகின்றன.

     கி.மு.5 ஆம் நூற்றாண்டிலேயே, இரு நாடுகளுக்கும் உறவு நிலவி வந்ததை, இலங்கைத் தொல்லியல் பேரறிஞர்கள் உறுதி செய்கிறார்கள்.

     இலங்கையின் வரலாற்றினை எடுத்துரைக்கும் நூல்கள் மூன்று.

     மகாவம்சம்.

     தீபவம்சம்.

     சூளவம்சம்.

     இலங்கையின் வரலாறு என்பதே, கி.மு.543 ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து வந்த விஜயன் என்னும் இளவரசனின் வருகையில் இருந்துதான் தொடங்குகிறது.

     கி.மு.543 இல் விஜயன் தொடங்கி, கி.பி.361 இல் மகாசேனன் வரையிலான மன்னர்களின் ஆட்சி முறையை, கால வரிசைப்படி தொகுத்து வழங்குகிறது மகாவம்சம்.

     கி.பி.923 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட, பராந்தகச் சோழனுடைய மெய் கீர்த்தியில்தான், முதன் முதலாக மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி என்னும் தொடர் வருகிறது.

     இதிலிருந்து, கி.பி.923 ஆம் ஆண்டில் இலங்கையில், சோழர்களின் ஆட்சி தொடங்கியதை அறியலாம்.

     இலங்கையை சோழர்கள் வெற்றி கொண்ட போதிலும், இலங்கையில் நேரடியான, நிர்வாக முறைமையிலான ஆட்சி நடத்தியதாகத் தெரியவில்லை.

     பராந்தகச் சோழன் அரியணை ஏறியபின், மதுரை பாண்டியர் மீது படையெடுக்கிறான்.

     முதல் படையெடுப்பில் தோல்வியுற்ற பாண்டிய மன்னன், இலங்கையின் உதவியை நாடுகிறான்.

     இலங்கை மன்னனும் தன் படையினை அனுப்புகிறான்.

     இருப்பினும் பாண்டியனால் வெற்றிபெற முடியவில்லை.

     தோல்வியடைந்த பாண்டிய மன்னன், தனது அரசகுல சின்னங்களை எடுத்துக் கொண்டு, இலங்கைக்கு ஓடுகிறான்.

     பாண்டியனின் அரசகுல சின்னங்களைக் கைப்பற்ற, பராந்தகன் இலங்கையின் மீது போர் தொடுக்கிறான்.

     வட இலங்கையை வெல்கிறான்.

     தோல்வி அடைந்த சிங்கள மன்னனோ, பாண்டிய அரச குல சின்னங்களோடு, தென் இலங்கைக்கு ஓடுகிறான்.

     அன்றைய காலச் சூழலும், பூகோள அமைப்பும், சோழர் படைகளைத் தென் இலங்கைக்குச் செல்ல விடாமல் தடுக்கின்றன.

     எனவே பாண்டிய அரச குல சின்னங்கள் இலங்கையிலேயே ஓய்வெடுக்கத் தொடங்கின.

     பராந்தகனுக்குப் பிறகு, இராஜராஜனுடைய எட்டாவது ஆட்சியாண்டு மெய்கீர்த்தியில்தான், எண்டிசை புகழ் பெற ஈழ மண்டலமும் என இலங்கையைப் பற்றிய செய்தியே வருகிறது.

     இராஜராஜன் கி.பி.985 இல் ஆட்சியில் அமர்கிறான்.

     எட்டாம் ஆட்சியாண்டு எனில் கி.பி.993 இல் இலங்கையை கைப்பற்றி இருக்க வேண்டும்.

     இலங்கையின் அனுராதபுரத்தைக் கைப்பற்றிய சோழர்கள், தலைநகரத்தை பொலன்னருவாவிற்கு மாற்றுகிறார்கள்.

     தலைநகருக்கு ஜனநாத மங்கலம் எனப் புதுப்பெயரும் சூட்டுகிறார்கள்.

     இலங்கையை மும்முடிச் சோழ ஈழ மண்டலமாக மாற்றுகிறார்கள்.

     இதற்குப் பிறகு, கங்கை கொண்ட சோழன், இராஜேந்திர சோழனின் ஐந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டில்தான் இலங்கைகை முழுவதுமாய் வெற்றி கொண்ட செய்தி வெளிப்படுகிறது.

பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்

ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்

முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த

சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்

தெண்டிரை ஈழ மண்டலம் முழுவதும்

     இந்தத் தகவலை உறுதிபடுத்தும் வகையில், இலங்கையில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

     ஒரே கல்தூணில் இரண்டு கல்வெட்டுகள்.

     இந்த இரண்டு கல்வெட்டுகளும், சோழர்கள் இலங்கையை முழுமையாய் வென்ற செய்தியினைப் பதிவு செய்கின்றன.

ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில்

பாண்டியர் குலதனமாக வைத்த முடியும்

ஈழத் தரையர் தம் முடியும்

ஆண்டவன் சேதி முடியும்

பெண்டிர் பண்டாரமும்

பிடித்துக் கொடு போன

அதிகார தண்ட நாயகன் செய்கிற

என்ற வார்த்தைகள் மட்டுமே அடங்கிய ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது.

     இதே தூணில் உள்ள வேறொரு கல்வெட்டில். இதே செய்தி, வேறு விதமாய் பொறிக்கப் பட்டுள்ளது.

ஈழம் முழுவதும் கொண்டு

ஈழத்து அரசரையும்

பெண்டிர் பண்டாரமும்

பிடித்துக் கொடு போன

அதிகார தண்ட நாயக

ஜெயங்கொண்ட மூவேந்த வேளாளர்

     குறுகிய கால இடைவெளியில், இந்த இரண்டு கல்வெட்டுகளும் பொறிக்கப் பட்டிருக்க வேண்டும்.

     முதல் படையெடுப்பில் ஐந்தாம் மகிந்தன் பின் வாங்கி ஓடி விடுகிறான்.

     பின்வாங்கி ஓடியதோடு, இந்த மன்னனுடைய முடியையும், பாண்டிய மன்னன் குல தனமாக அங்கு வைத்திருந்த முடியையும் சோழர்கள் கைப் பற்றி விடுகிறார்கள்.

     இதற்கு அடுத்ததான, இரண்டாம் கட்ட நகர்வில், அம்மன்னனையும், அவர் மனைவியையும் சிறைபிடிக்கிறார்கள்.

     இதனைச் செய்தவர், ஜெயங்கொண்ட சோழ மூவேந்த வேளாளர் என்று உரைக்கிறது இந்த இரண்டாம் கல்வெட்டு.

     ஆனாலும், இலங்கை முழுவதையும் இவர்கள் நீண்ட காலம், தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கவில்லை.

     கி.பி.1070 இல் கீர்த்தி என்றும் விஜயபாகு என்றும் பெயர் கொண்ட இலங்கை மன்னன், படையெடுத்து, சோழர்களை இலங்கையில் இருந்து வெளியேற்றுகிறான்.

     எனவே கி.பி.1070 இல் சோழர் ஆட்சி இலங்கையில் நிறைவடைகிறது.

     கி.பி.850 முதல் கி.பி.1279 வரை, சுமார் 430 ஆண்டுகள், தமிழகத்தில் ஆட்சி புரிந்த சோழர்கள், இலங்கையை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தது என்னவோ வெறும் 77 ஆண்டுகள்தான்.

     கி.பி.993 முதல் கி.பி.1070 வரையிலா 77 ஆண்டுகள் மட்டும்தான்.

     இலங்கையில் கிடைத்த வருவாய், இலங்கையில் அரசினை நடத்திடப் போதுமானதாக இல்லை என்பதே இதற்குக் காரணம் என்ற கருத்தினை முன் வைக்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஸ்பென்சர்.

     சோழர்களின் 77 ஆண்டு கால இலங்கை ஆட்சியின் போது பொறிக்கப்பெற்ற கல்வெட்டுகளில், 50 கல்வெட்டுகள் மட்டுமே இதுநாள் வரை இனம் காணப்பட்டுள்ளன.

     பெரும்பாலான கல்வெட்டுகள் துண்டுகளாகவே கிடைத்துள்ளன.

     இதற்குக் காரணம், சோழர்களுக்குப் பிறகு, இலங்கையினைக் கைப் பற்றிய போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும், சோழர்கள் எழுப்பிய ஆலயங்களை எல்லாம், பீரங்கி வைத்துத் தகர்த்தார்கள்.

     ஆலயங்களைத் தகர்த்ததன் மூலம் கிடைத்த கற்களைக் கொண்டு, தங்களுக்கான கோட்டைகளைக் கட்டிக் கொண்டார்கள்.

     சோழர்கள் இலங்கை முழுவதையும் கைப் பற்றிய செய்தி அடங்கிய கல்வெட்டு பொறிக்கப் பெற்ற தூண் இருந்த இடம் மன்னார் ஆகும்.

     ஆனால், ஆய்வாளர்கள், இக்கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தது என்னவோ, யாழ்ப்பாணத்தில் இருந்த ஊகாவற்றுரை கோட்டையில்தான்.

     பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழ் வரி வடிவம் தாங்கியவை.

     சிலவற்றில் கிரந்த எழுத்துக்களும் உள்ளன.

     ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும் தமிழ் வட்டெழுத்துக்கள் இருக்கின்றன.

     இராஜராஜன் காலம் தொடங்கி, ஆதி இராஜேந்திரன் காலம் வரையிலான கல்வெட்டுகள் இவை.

     சோழ இலங்கேசுவரன் என்ற பெயரில், மூவர் இலங்கையை ஆண்டதாக, இக்கல்வெட்டுகள் கூறுகின்றன.

     சோழ இலங்கேசுவரர்கள்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     ஆனால் ஈழத்தில் ஆட்சி நடத்திய சோழ இலங்கேசுவரர்களுக்கும், தமிழகத்து சோழ அரசுகளுக்குமான உறவு முறை குறித்த சான்றுகள் ஏதும் இல்லை.

      ஜெயங்கொண்ட சோழ மூவேந்த வேளாளர்தான், சோழ இலங்கேசுவரன் என்ற பெயரில் ஆட்சி செய்ததாக, பேராசிரியர் இந்திர பாலா கருதுகிறார்.

     இது உண்மையாகவே இருப்பினும், மற்ற இரு சோழ இலங்கேசுவரர்கள் யார் என்பது குறித்த செய்திகளோ கருத்துக்களோ இல்லை.

     சோழரகள், இலங்கையினை தங்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வைத்திருந்த ஆண்டுகளில், புதிய ஆலயங்கள் பலவற்றை எழுப்பி இருக்கிறார்கள்.

     இதற்கு அரசு நிர்வாகிகளும், வணிகர்களும் நன்கொடை அளித்திருக்கிறார்கள்.

     சோழ அரசனின் பெயரில் எந்த நன்கொடையும் வழங்கப் பட்டதாகத் தெரியவில்லை.

     இலங்கையில் சம்பந்தராலும், சுந்தரராலும் பாடப்பெற்ற திருகேதீச்சரம், திருபுவனேசுவரம் என்ற இரு தலங்கள் உள்ளன.

     இவற்றைப் புணரமைத்து, நாள் வழிபாடு, பூசை முறைகள், விழாக்கள், ஆண்டு விழாக்கள் நடைபெற வழி முறைகளை வகுத்திருக்கிறார்கள்,

     தென்னிந்தியக் கோயில்களில் உள்ளதைப் போன்ற நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

     பிரமதேயங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

     பண்டித சோழீசுவரம், உத்தம சோழிசுவரம், திருவிராமேசுவரம் என்ற பெயர்களில் ஆலயங்கள் இருந்ததாக குறிப்புகள் இருக்கின்றனவே தவிர, அவற்றிற்கான தொல்லியல் எச்சங்களோ, இடிபாடுகளோ இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை.

     ஆனால் இரண்டாம் சிவாலயம், ஐந்தாம் சிவாலயம், ஆறாம் சிவாலயம் என்ற சிவ ஆலயங்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன.

    


இவற்றுள் இரண்டாம் சிவாலயம் எனப்படுகிற, வானவன் மாதேவி ஈசுவரம் அழிவுறாது இன்றும், தலை நிமிர்ந்து நிற்கிறது.

     இலங்கையில் இன்றுவரை நிலைத்துள்ள கோயில்களில் இதுவே பழமையானது ஆகும்.

     விஷ்ணுவிற்கும் ஓர் ஆலயம் கட்டப்பெற்ற செய்தியும் உள்ளது.

     சோழர்கள் இந்து ஆலயங்களுக்கு மட்டுமல்ல, பௌத்த விகாரைகளுக்கும் தானம் வழங்கி உள்ளார்கள்.

    ராஜராஜ பெரும் பள்ளி என்ற பெயரில் அமைக்கப் பெற்ற பௌத்த விகாரை இன்றும் உள்ளது.

     சோழர்களின் நிர்வாக அமைப்பு, வரிவிதிப்பு முறைகள், தனி உடமை இருந்ததற்கானச் சான்றுகள் என அனைத்தும், துண்டு, துண்டாய் , வெடி வைத்துத் தகர்க்கப் பெற்ற கல்வெட்டுகள் வழி நமக்குத் தெரிய வருகின்றன.

---

ஏடகம்

அமைப்பின் சார்பில்,

கடந்த 11.4.2021 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவில்

இலங்கை, பேராதனைப் பல்கலைக் கழக

தமிழ்த் துறை, முதுநிலை விரிவுரையாளர்


திரு எம்.எம்.ஜெயசீலன் அவர்கள்

தனது

இலங்கையில் சோழர் கல்வெட்டுக்கள்

என்னும் தலைப்பிலானப் பொழிவில்,

தனது நேர்த்தியான உரையின் மூலம்

அனைவரையும் இலங்கைக்கே அழைத்துச் சென்றார்.

சாஸ்த்ரா பல்கலைக் கழக

மேனாள் இயந்திரவில் துறை மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்


பேராசிரியர் ஏ.இராமசாமி அவர்கள்

இந்நிகழ்விற்குத் தலைமையேற்று

தலைமையுரை ஆற்றினார்.

முன்னதாக,

விழாவிற்கு வந்திருந்தோரை

ஏடகப் புரவலர் மற்றும் பொறுப்பாளர்


திரு பி.கணேசன் அவர்கள்

வரவேற்றார்.

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தமிழ்த் துறைத் தலைவர்


முனைவர் சு.சந்தியா அவர்கள்

நிகழ்வினைச் சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

நிறைவில்.

ஏடகப் புரவலர் மற்றும் பொறுப்பாளர்


திரு உ.செந்தில்குமார் அவர்கள்

நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

 

தஞ்சைத்

தமிழ் மண்ணுக்கு

இலங்கைத் தமிழை

அழைத்து வந்து

சோழர் காலக்

கல்வெட்டுக்களால்

தமிழமுது படைத்திட்ட

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

 

16 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 2. சோழனின் ஆட்சி காலம் வெறும் 77 ஆண்டுகள் என்பது வியத்தகு செய்தி நண்பரே. பதிவின் மூலம் இலங்கைக்கே அழைத்து சென்று வீட்டீர்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 3. அருமையான வரலாற்று ஆய்வு. தங்கள் பதிவு தெளிவான வரலாற்று உண்மைகளை கூறுகிறது. இது போன்ற நல்ல நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வரும் ஏடகம் திரு.மணி.மாறன் அவர்களின் சேவை பாராட்டத்தகுந்தது.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா

  அறிய வேண்டிய சிறப்பான தகவலை சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா அத்தோடு இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 5. தகவல்கள் அனைத்தும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன!

  பதிலளிநீக்கு
 6. அருமையான தகவல்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அருமையான வரலாற்றுத் தகவல்கள்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 9. தகவல்கள் அனைத்தும் வியப்பாக இருக்கிறது நண்பரே...

  பகிர்வுக்கு நன்றிகள் பல!

  பதிலளிநீக்கு
 10. அருமையான வரலாற்று தகவல்கள் கொண்ட பதிவு.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள். வரலாற்றாசிரியரின் வகுப்பில் இருந்தைப் போல ஓர் உணர்வு இதனைப் படிக்கும்போது ஏற்பட்டது.

  பதிலளிநீக்கு
 12. அருமையான வரலாற்று ஆய்வு.

  பதிலளிநீக்கு
 13. சோழ இலங்கேசுவரன் - அருமையான வரலாற்றுப்பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு கரந்தை ஜெயக்குமார்

  பதிலளிநீக்கு
 14. மிகப் பெறுமதியான வரலாற்றுத்தகவல்கள். நன்றி

  உடுவை.எஸ்.தில்லைநடராசா,
  கொழும்பு- இலங்கை

  பதிலளிநீக்கு
 15. அருமையான வரலாற்று ஆய்வு.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு