26 ஏப்ரல் 2021

கடைசிக் கடிதம்

     நண்பர்களே, வயது 56 ஐ கடந்து விட்டது,

     ஆனாலும் இந்த 56 ஆண்டுகளில் கற்றுக் கொண்டது குறைவுதான்.

     அனுபவமும் சிறிதுதான்.

     பலமுறை பணி ஓய்விற்குப் பிறகான வாழ்க்கையினை எண்ணிப் பார்ப்பேன்.

     காலை முதல் இரவு வரை நேரம் எப்படி நகரும்?.

     இரவில் உறக்கம் வருமா? என மனதிற்குள்ளேயே யோசித்துப் பார்ப்பேன்.

    

சில நேரங்களில், பணி ஓய்விற்குப் பிறகான வாழ்க்கையினை வாழ்ந்து வரும், சில மனிதர்களைச் சந்திக்கும்போது, அவர்களின் வாழ்வியல் சோதனைகளை, துன்பங்களை உணரும்போது, எதனால் இவர்களுக்கு வாழ்க்கை இவ்வளவு கடினமாய் அமைந்து விட்டது, ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு யுகமாய் கழிகிறதே, ஏன்? என என்னையே கேட்பேன்.

     வாழும் காலத்தில் வசதியாய் வாழ்ந்தவர்கள்தான்.

     ஆனாலும் திட்டமிடப்படாத வாழ்க்கை.

     தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பொருள் அனைத்தையும், தங்கள் பிள்ளைகளுக்காக வாரி வாரி வழங்கியவர்கள் இவர்கள்.

     தங்களின் எதிர்காலத் தேவைக்கு என சிறிதும் சேர்த்து வைக்காமல், செலவிட்டவர்கள் இவர்கள்.

     நமது பிள்ளைகள், நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு.

     இந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும்போது, இறுதிக் காலம் சுமையாகிறது.

     இந்த இறுதிக் காலம் பற்றிய ஒரு சிறுகதையினைப் படித்தேன்.

     இறுதிக் காலம் சுமையாய் மாறாமல் இருப்பதற்கு வழி காட்டும் ஒரு சிறுகதையினைப் படித்தேன்.

     நண்பர்கள் இருவர்.

     ரகுராமனும், சங்கரனும் நண்பர்கள்.

     முப்பது வருட நட்பு.

     ரகுராமனுக்கு ஒரு பழக்கம்.

     தனக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலும், தான் எழுத நினைக்கும், கடிதங்களை, சங்கரனை விட்டுத்தான் எழுதச் சொல்வார்.

     அன்றும் அப்படித்தான்.

     சில கடிதங்கள் எழுத வேண்டும் என்று கூறி, சங்கரனை, கோயிலுக்கு அழைத்துப் போனார்.

     கோயிலில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இருவரும் அமர்ந்தனர்.

     சங்கரன் ஒரு ஐந்து கடிதங்கள் எழுதனும். இதுதான் நான் சொல்லி, நீங்கள் எழுதப்போகும் கடைசிக் கடிதங்கள்.

     ஏன் இப்படிப் பேசுறீங்க?

     மனசுக்கு இப்படிப் படுகிறது. சொல்லிட்டேன். விடுங்க, எழுதுங்க.

     முதல் கடிதம் தனது பெரிய பையனுக்கு.

     என் மருமகள் எப்படி இருக்கிறாள்.

     ரொம்ப நல்ல பெண். நீ கொடுத்து வைத்தவன்.

     ஏனோ எனக்கும் அவளுக்கும் தூரம் விழுந்து விட்டது.

     உன்னுடைய தாத்தாவுக்கும், உன் அம்மாவுக்கும் கூட முரண் இருந்திருக்கிறது. கடைசி வரை காட்டிக் கொள்ளாமல் இருந்தார்கள்.

     என்னால் முடியவில்லை.

     கால மாற்றம்.

     இளைய மகன் கார்த்திகேயனுக்கு ஒரு கடிதம்.

     வெளி மாநிலங்களிலேயே அதிகம் பணியாற்றுவதால், என் மருமகளோடு பழகும் வாய்ப்பு போய்விட்டது.

     இரு பிள்ளைகளுக்குமே, இரு செய்திகளைப் பொதுவாய் சொல்லுகிறார்.

     அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

     என் காலத்திற்குப் பிறகும், பிறந்த மண்ணின் பாசத்தால், தனியாகத்தான் இருப்பார்.

     பார்த்துக் கொள்ளுங்கள்.

     மாதா மாதம் இருவரும் எனக்கு அனுப்பும் தொகையில் இருந்து, இன்று வரை ஒரு பைசா கூட நான் எடுத்துக் கொள்ளவில்லை. என் பெயரப் பிள்ளைகளின் பெயர்களில், வங்கியில் போட்டிருக்கிறேன்.

     வங்கி பாஸ்புக் உங்களுக்கு வந்து சேரும்.

     தன் மகள் ராஜேசுவரிக்கு ஒரு கடிதம்.

     மாப்பிள்ளை நல்லவர். அதே சமயம் செலவாளி.

     முன்பு போல்தான் இப்போதும், குடிக்கிற எல்லோரும் கெட்டவர்கள் அல்ல.

     மாப்பிள்ளையும் அப்படித்தான்.

     உனக்குத்தான் அவரைப் புரிந்து கொள்ள, நீண்ட காலம் பிடித்து விட்டது.

     நீ மேலும் மேலும் உயர்ந்துதான் போவாய்.

     ஏனெனில், முன்பாதி கஷ்டப்பட்டுவிட்டாய். இனி கஷ்டம் இல்லை.

     மாப்பிள்ளையாலும், உன் பிள்ளைகளாலும் இனி உயர்வாய்.

     என் பென்ஷனில் ஒரு பகுதியை, உன் பிள்ளைகளுக்கு என சேமித்து வைத்து இருக்கிறேன். பாஸ்புக் அம்மாவிடம்.

     எந்த நிலையிலும், உன் சகோதரர்களோடு, ஒரு நல்ல உறவு வைத்துக் கொள்.

     நான்காவது கடிதம், நண்பர் சங்கரனுக்கு.

     சங்கரன் எழுதுவதை நிறுத்திவிட்டுப் பார்த்தார்.

     எழுது சங்கரா, என் விருப்பம்.

     சங்கரன் எழுதுகிறார்.

     முப்பது வருடம் என்னை நீ பகிர்ந்து கொண்டிருக்கிறாய். அடுத்த பிறவி இருக்குமாயின், உனக்கும், எனக்கும், ஒரு தாய், ஒரு மகள் என்கிற பெண்மை உறவு கிட்ட வேண்டும்.

     சங்கரா, நான் இன்னும் இரண்டு நாள் இருக்கலாம். அப்படித்தான் தோணுது.

     எனக்குப் பயம் எதுவும் இல்லை.

     உன்னை விட்டுப் பிரிவதுதான் சிறிது நெருடல்.

     கடைசி கடிதம், என் மனைவிக்கு.

     நானே , என் கைப்பட எழுதுகிறேன்.

     எழுதுகிறார்.

என்னவளே உனக்கு,

     இன்று போகிறேன். நாளை வா.

     பயமும் கவலையும் உதறு.

     நம்முடைய எல்லை அடைபட்டு விட்டது.

     சங்கரனைத் தேற்று.

     உன்னை நேசித்ததையும், உன்னோடு வாழ்ந்ததையும் விவரிக்க முடியாது.

     அது மனசும், மனசும் உணர்வது.

     உனக்குப் புரியும்.

     அதற்குப் பின், மூன்றாம் நாள், காலை 5 மணிக்கு ரகுராமன் இறந்து போனார்.

     இதுதான் கதை, சிறுகதை.

     நமது வாழ்வியல் யதார்த்தத்தை நெற்றிப் பொட்டில் அடித்தவாறு புரிய வைக்கும் கதை.

     இந்தக் கதை, கதையாகவே எனக்குப் படவில்லை.

     கூட்டுக் குடும்பங்கள் வெகு வேகமாய் சிதைவுற்று வரும், இக்காலத்தில், அனைவரும், குறிப்பாக, பணி ஓய்வு பெறும் வயதை நெருங்கி வரும், அன்பர்களுக்கு நல் வழிகாட்டும் கதை.

     எக்காலத்தும், எவரிடத்தும், சொந்த பிள்ளைகளிடம் கூட, கையேந்தி நிற்கும் நிலை வரவே கூடாது.

     கொடுக்கும் இடத்திலேயே எக்காலத்தும் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் உன்னதக் கதை.

கடைசிக் கடிதம்.

இதுதான் அந்தச் சிறுகதையின் பெயர்.

இச்சிறுகதையினை, ஒரு அற்புதமான நூலில் கண்டெடுத்தேன்.


புரண்டு படுக்கும் வாழ்க்கை

சிறுகதைத் தொகுப்பின் பெயரே,

வாழ்வியல் தத்துவங்களை உணர்த்துகிறது அல்லவா.

இக் கதையின் ஆசிரியர்


ஹரணி,