மாடம்
ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு
கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
பழமையான நகரம்.
வளமான நகரம்.
ஓங்கிய மாட மாளிகைகள்.
ஆறு போன்ற அகன்ற
தெருக்கள்.
சங்க காலத்திற்கும்
முன்பே, சமுதாய இயக்கம் பெற்ற நகரம்.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில், இந்தியாவிற்கு வந்து, தமிழகத்தையே ஒரு சுற்று சுற்றிய, மெகஸ்தனிஸ், தாலமி போன்ற வெளிநாட்டு பயணிகள் வியந்து போற்றிய நகரம்.
ஒன்றல்ல, இரண்டல்ல,
மொத்தமாய் 64 கல்வெட்டுகள், இந்நகர் பற்றிப் பறை சாற்றுகின்றன.
இது, வேறு எந்த
நகருக்கும் கிட்டாதப் பெருமை.
பல போர்களை,
புரட்சிகளை, சமுதாய எழுச்சிகளைச் சந்தித்த நகரம்.
கடம்ப மரங்கள்
நிறைந்ததால்,
கடம்ப வனம்.
கோட்டையின் நான்கு
வாயில்களிலும், நதிகள் சங்கமித்ததால்,
நான்மாடக் கூடல்.
நீர் நிலைகளுக்கு
நடுவே இருப்பதால்,
ஆலவாய்.
மருத மரங்கள்
நிறைந்ததால்,
மருதை எனப் பலவாறு அழைக்கப் பெற்ற, போற்றப்
பெற்ற நகர்,
மதுரை.
மதுரை மாநகர்.
மதுரை மாநகரின்
தனிச் சிறப்பே, அதன் வடிவமைப்புதான்.
மீனாட்சி அம்மன்
ஆலயத்தை, மையமாகக் கொண்டு அமைக்கப் பெற்ற மாட, ஆவணி, மாசி வீதிகள் பழமையான மதுரையின்
வரலாற்றுச் சான்றுகளாகும்.
அன்றைய மதுரை
மாநகரை, தெருக்கள், சத்திரங்கள், நத்தங்கள்,
குளங்கள், கிணறுகள், பொட்டல்கள் என ஆறு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதலில் தெருக்கள்.
மதுரை மீனாட்சி
அம்மன் கோயிலுக்கு எதிரே, சோற்றுத் தெரு
என்னும் பெயரில் ஒரு தெரு இருந்திருக்கிறது.
இந்தத் தெரு,
இன்று மீனாட்சி அம்மன் கோயில் தெருவாக மாறியுள்ளது.
ஜைன முனி கோயில் தெரு
என்ற தெரு, இன்று ஜடா முனி கோயில் தெருவாக மாறியுள்ளது. இத்தெருவின் கோயில் கூட இன்று
இந்து கோயிலாகி விட்டது.
தமிழ் எழுத்துக்களைச்
சீர்திருத்தம் செய்தவரும், தேம்பாவனி எழுதியவரும், கிறித்துவ ஆலயக் கடவுளர்களுக்குத்
தமிழ்ப் பெயர் சூட்டியவருமான, வீரத் துறவி வீரமாமுனிவர், சில காலம் வாழ்ந்த கிறித்துவ
ஆலயத்தினைத் தன்னகத்தே உடைய, ரோஸரி சர்ச் தெரு,
இன்றும் நிலைத்து நிற்கிறது.
செனாய் நகர்.
மதுரை ஆட்சியரின்
பெயரினைப் பெற்ற நகர்.
மதுரையை, மதுரை
மாநகர் என முதன் முதலில் அழைத்தவர் இவர்தான்.
இவர் 1852 இல்
ஆட்சியராய் இருந்த பொழுது, மதுரையை அழகு படுத்த விரும்பினார்.
உடைந்து பாழடைந்த
கோட்டையும், மரம், செடி, கொடிகள் முளைத்த அகழியும், மதுரையின் அழகினை குறைப்பதாக எண்ணினார்.
எனவே, கோட்டையினை
இடித்து, அகழியைத் தூர்த்து, மதுரைக்கு மெருகூட்ட விரும்பினார்.
ஆனால், இதனைச்
செய்து முடிக்க, மிகப் பெரிய தொகை தேவைப்படும்
என்பதால், செலவின்றி, வேலையை முடிக்க, ஒரு
வழியைக் கண்டு பிடித்தார்.
மக்கள் யார் வேண்டுமானாலும், கோட்டையை இடித்து,
அகழியைத் தூர்க்கலாம்.
யார், யார் எவ்வளவு சதுர அடி அகழியைத் தூர்க்கிறார்களோ,
அந்தச் சதுர அடி நிலம், அவரவர்களுக்கே சொந்தமாகும் என அறிவித்தார்.
மக்கள் களத்தில்
இறங்கினர்.
கோட்டையைத் தகர்த்தனர்.
அகழியைத் தூர்த்தனர்.
இடம் அவரவர்களின்
உரிமையானது.
இப்பணியின் போது,
சர்வேயராக இருந்தவர் மாரட்.
இவர் பெயரில்,
இன்றும் ஒரு தெரு உள்ளது.
இப்பணியினை மேற்பார்வை
பார்த்தவர் பெருமாள் மேஸ்திரி.
இவர் பெயரிலும்,
கீழ பெருமாள் மேஸ்திரி தெரு, மேல பெருமாள்
மேஸ்திரி தெரு, என இரு தெருக்கள் இன்றும் உள்ளன.
இவை தவிர தலைவிரித்தான் சந்து, அமெரிக்க மிஷன் சந்து
போன்றவையும் பழைய மதுரை மாநகரின் எச்சங்களாகும்.
அடுத்து நத்தங்கள்.
பழங்கா நத்தம்.
பழமையான நத்தம்
என்ற சொல்லே, மருவி, பழங்கா நத்தமாய் மாறியுள்ளது.
அடுத்து சாமணத்தம்.
எட்டாயிரத்திற்கும்
மேற்பட்ட சமணர்கள், கழுவில் ஏற்றப்பட்டு, இரத்தம் பெருக்கெடுத்து ஆறாய் ஓடிய இடம்,
சாமணத்தம்.
இதன் பின்னர், மிதமிருந்த சமணர்கள், இசுலாமிய மதத்திற்கு
மாறியதாகக் கூறுவார்கள்.
பள்ளி என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்கள்
சமணர்கள்தான் என்ற ஒரு கருத்து நிலவுவதை நாம் அறிவோம்.
இச்சமணர்கள்,
இசுலாமிய மதத்திற்கு மாறிய பிறகுதான், தங்களது வழிபாட்டு இடத்திற்கு, பள்ளி வாசல் என்று பெயரிட்டார்கள் என்று கூறுவாரும்
உளர்.
அடுத்ததாகச்
சத்திரங்கள்.
சத்திரங்கள்
என்று எடுத்துக் கொண்டால், ராணி மங்கம்மாள்
சத்திரம், குன்னத்தூர் சாமி சத்திரம், லாலா சத்திரம், கருப்பட்டி சத்திரம் எனப்
பல சத்திரங்கள் இருக்கின்றன.
கிணறுகள்.
மதுரையில் புகழ்
பெற்ற கிணறுகள் பல இருந்திருக்கின்றன.
மதுரையின் நீர்
ஆதாரமாக விளங்கிய வில்லாபுரம் கண்மாய்
இன்று குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது.
யாதவர்கள் மற்றும்
பிராமணர்களின் பயன்பாட்டிற்கென எல்லிஸ் துரை அவர்களால் உருவாக்கப் பெற்ற செம்பியன் கிணறு இன்று இல்லை.
இருப்பினும்
இவ்விடம், எல்லீஸ் நகர் என்றே அழைக்கப்படுகிறது.
நாயக்கர் படை
வீரர்களுக்காக வெட்டப் பெற்ற, தொட்டியன் கிணறு
இன்று இல்லை. இவ்விடத்தில் தொட்டியச்சி அம்மன் கோயில் இருக்கிறது.
இவை தவிர, தெற்கு வாசல் கிணறு, வாணியன் கிணறு போன்ற
பல கிணறுகள், இன்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன.
குளங்கள்.
குளங்கள் என்று
எடுத்துக் கொண்டால், நைனா தெப்பக்குளம்,
இன்று மைனா தெப்பக்குளமாய் மாறியுள்ளது.
மாரியம்மன் தெப்பக் குளம் இன்று நீரின்றி
வறண்டு காணப்படுகிறது.
பிராமணர்களுக்காகவே
வெட்டப் பெற்ற, கிருஷ்ணராயர் தெப்பக் குளத்தின்
ஒரு கரையில்தான், பாண்டித் துரை தேவர் அவர்கள்,
மதுரை தமிழ்ச் சங்கத்தையே தொடங்கினார்.
தள்ளா குளம்.
இது காரணப் பெயராகும்.
வைகையில் நீர்
பெருக்கெடுத்து ஓடும் போது, அந்நீரை, மடை மாற்றம் செய்து, இந்தக் குளத்திற்குத்தான்
அனுப்பி இருக்கிறார்கள்.
இந்தக் குளம்,
மீண்டும் நீரை, வைகைக்குத் திருப்பித் தள்ளியதே இல்லை.
எனவே இது, தள்ளா
குளம்.
சொக்கிக் குளம்,
பீவி குளம் மற்றும் வயல் வெளிகளுக்குத் தன் சேமிப்பை வழங்கி இருக்கிறது.
தள்ளா குளம்.
இன்றைய நிலையை
நினைத்தால் பெரு மூச்சுதான் மிஞ்சும்.
ஒரு காலத்தில்,
கழுத்தைச் சுற்றிய பாம்பு போல், மதுரையின் நான்கு பக்கங்களையும் சுற்றி ஓடிய நதி கிருதுமாள் நதியாகும்.
அக்காலத்தில்
வேதம் ஓதும் வேதியர்கள், கங்கை, யமுனை, காவிரி என்று மந்திரங்களைக் கூறும்போது, கிருதுமாள்
நதியின் பெயரினையும் சேர்த்தே கூறியிருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு
புனிதம் பெற்று விளங்கிய கிருதுமாள் நதி, இன்று,
கழிவு நீர் வாய்க்கால்களால், தன் புனிதத்தை இழந்து, அசுத்தத்தையே தன் ஆடையாய் பெற்று,
கூவத்தின் மறு உருவாய், பரிதாபமாய் காட்சி அளிக்கிறது.
பொட்டல்கள்.
பொட்டல்கள் என்று
எடுத்துக் கொண்டால், கோவலன் பொட்டல், மெய்
காட்டுப் பொட்டல், தமுக்கம் திடல் முக்கியமானவை ஆகும்.
1981 ஆம் ஆணடு
அகழாய்வில் வெளிப்பட்டது கோவலன் பொட்டல்.
ஒரு சாதி பிரிவினரின்
இடுகாடாக உள்ளது.
மெய் காட்டுப் பொட்டல் இன்று, மேகாட்டுப்
பொட்டலாக உரு மாறியுள்ளது.
ராணி மங்கம்மாள்
அவர்களால் உருவாக்கப்பட்ட, தமுக்கம் திடல்,
இன்று காந்தி அருங்காட்சியகமாக, ஆட்சியர் அலுவலகமாக திரிந்து நிற்கிறது.
எவ்வாறு இருப்பினும்,
2500 ஆண்டுகள் பழமையான, தொன்மையான நகரமான மதுரை, இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலால்,
புகழ் குன்றாது, ஒளி வீசித் திகழ்கிறது.
இரவு, பகல் என்ற
வேறுபாடு ஏதுமின்றி, 24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கும் தூங்கா நகரமாய், சுறு சுறுப்பாக
இயங்கிக் கொண்டே இருக்கிறது.
---
ஏடகம்
ஞாயிறு
முற்றம்
சொற்பொழிவு
கடந்த 11.7.2021 ஞாயிற்றுக் கிழமை
இணைய வழி, வீடு தேடி வந்தது.
ஏடகப் புரவலர், கல்வியாளர்
அவர்கள்
மதுரை
– ஒரு பார்வை
என்னும் தலைப்பில் உரையாற்றி
தனது எளிமையான வார்த்தைகளால், இனிமையான சொற்களால்
காணொலியினைக் கண்டோரை, கேட்டோரை
மதுரைக்கே அழைத்துச் சென்று
ஒரு பருந்துப் பார்வையின் வழி
மதுரை மாநகரைத் தெள்ளத் தெளிவாய் காட்டினார்.
எத்துணை
இடர் வரினும்
தளராது
ஏடகப் பொழிவை
இணையப் பொழிவாய்
வானில் அரங்கேற்றும்
ஏடக நிறுவுநர், தலைவர்
அவர்களைப்
போற்றுவோம், வாழ்த்துவோம்