ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உன்னை நினைத்துக்
கொள்கிறேன். உடல்தான் வாழ்க்கை என்று நீ முடிவெடுத்துவிட்ட பின்னர், உள்ளம் குறித்து
எத்தனை பேசினாலும் உனக்குப் புரியாது.
நீர் வற்றி விடுவதுபோல், உடல் தாகம் வற்றும்
போது, உனக்கு, உள்ளத்தின் தாகம் புரியும்.
அதுவரை நான் காத்திருப்பேன்.
---
ஒரு தந்தையின் ஏக்கம் இது.
---
எனக்கு ரொம்பப் பிடிச்ச நோய் ஹார்ட் அட்டாக்தாம்பா..
அதுதான் படுக்கையில விழாம ... நாலு பேருக்குத் தொந்தரவு இல்லாம...
பீ மூத்திரம்
நான் அள்ளிப் போட்டேன்னு, யாரும் சொல்லி சலிச்சிக்காம...
பட்டுன்னு வந்து, சட்டுன்னு முடிச்சிடும் வாழ்க்கையை
...
எனக்கு ரொம்ப பிடிச்ச நோய்..
என்னோட பேவரைட்,,,
---
ஒரு தந்தையின் எதிர்பார்ப்பு இது.
---
அன்புள்ள
மகன் கோபால கிருஷ்ணனுக்கு,
அப்பா எழுதுவது. எப்படியும் இந்தக் கடிதத்தை
நீ படிக்கப் போவதில்லை என்று தெரியும், ஒரு வேளை அப்படிப் படிக்கிற சந்தர்ப்பம் வாய்த்தது
என்றால், அதைப் பார்க்க நானோ, உன் அம்மாவோ இருக்க மாட்டோம் என்ற உறுதியில்தான் இக்கடிதத்தை
எழுதுகிறேன்.
எதுக்கு நீ படிக்காத ஒரு கடிதத்தை எழுதி, என்ன
பண்ணப்போறேன்னு தோணும்.
அரசாங்க வேலை பாத்தப்ப, பக்கம் பக்கமா எழுதுவேன்.
எழுதிட்டா பாரம் இறங்கிட்ட மாதிரி.
அவ்வளவுதான்.
ரொம்ப சாதாரணமா, ஒரு வார்த்தை பேசிட்டுப் போயிட்ட...
சாக வேண்டிய வயசில, ஏன் அடுத்தவங்க உரிச எடுக்கறீங்கன்னு...
மழ விட்டும் தூவானம் விடலேன்னு ...
பெத்தவங்க, புள்ளைங்களுக்கு எப்பவும் பாரமா இருக்கக்
கூடாது ...
ஆனா, பாசமா இருக்கனும்.
இனி உனக்கு நாங்க தொந்தரவா இருக்க மாட்டோம்.
அதுக்காக, சாகவும் மாட்டோம்.
எனக்கு தெம்பிருக்கு, வாழறவரைக்கும் உழைக்கிறத்துக்கு.
யாரை நம்பியும், யார் வாழ்க்கையும் இல்லை.
எழுதி முடித்த
கடிதத்தை ஒரு முறை படித்தார்.
மறு முறை படித்தார்.
மறு முறை படித்தார்.
பின் கடிதத்தைக்
கிழித்து, பொடிப் பொடித் துண்டுகளாக்கி வீசினார்.
---
ஒரு தந்தையின் வைராக்கியம் இது.
---
இது பூர்விக சொத்துதான்.
என் தாத்தாவோட சொத்து.
எங்கப்பா, இதுல இருந்து வாழ்ந்து செத்தாரு.
இப்போ நான் ...
நீங்க பேசற நியாயப்படி, தாத்தா சொத்து பேரனுக்குத்தான்,
அதாவது எனக்குத்தான்.
இதை என்ன பண்ணனும்னு முடிவு பண்ண வேண்டியது,
நான்தான்.
காலங்காலமா, இதுல வாழ்ந்துகிட்டிருந்தவங்க, செத்த
பிறகும், இங்கதான் இருக்காங்க.
இது வீடு இல்லை ... கோயில்.
தெய்வங்கள் குடியிருக்கிற கோயில்.
இதை விக்க முடியாது.
எனக்கு அப்புறமும் இந்த வீடு இருக்கனும்.
என் பேரப்புள்ளங்க, நிச்சயம் இங்க வருவாங்க.
இருப்பாங்க.
இந்த வீடு என்ன விலை போகுதோ, அந்தத் தொகையைப்
பாகம் பிரிச்சா, ஆளுக்கு என்ன வருமோ, அதை நான் கொடுத்துடறேன்.
இனிமே, இந்த வீட்டுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லேன்று
பத்திரத்துல எழுதிக் கொடுங்க.
---
ஒரு தந்தையின் உறுதிப்பாடு இது.
---
சங்கரன், இந்த வீட்டை இடிச்சாங்கல்ல, ஏதாச்சும்
போடோ இருக்கான்னு கேளுங்க. அதுல ஒரு வேளை, உங்க தாத்தா முகம் கிடைக்கலாம்.
அத அப்படியே, அந்த வீட்டுக் கொல்லைப் புறம் போட்டிருக்கோம்...
இருந்தா எடுத்துக்கங்க...
இரண்டு படங்கள் கிடைத்தன.
ஒன்று குழு படம்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இருந்தனர்.
கறையான் அரித்திருந்தது.
இன்னொரு படம்,
நாற்காலியில் உட்காந்த நிலையில், ஒரு ஆணின் தனித்த
படம்.
அதில் நெஞ்சுக்கு மேல் இல்லை.
கைகள் சுருங்கிக் கிடந்தன, உலர் திராட்சைகளைப்
போல.
எடுத்துச் சென்று அம்மாவிடம் காட்டினேன்.
இது உன் தாத்தாவோட கைகள்தான்.
வலது கை சுண்டுவிரலைப் பார்.
மூட்டைப் பூச்சு மாதிரி ஒரு மச்சம்.
இது உன் தாத்தாதான்.
போட்டோவைப் பார்த்தேன்.
மச்சம் இருந்தது.
உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு.
கவிஜீவன் சொன்னார்.
சங்கரன், இந்தக் கைகள் உள்ள போட்டோவை, அப்படியே
பிரிண்ட் போட்டு, லேமினேஷன் பன்னிடுங்க.
உங்களுக்குப் பிடிச்ச, உங்க அப்பாவைத் தூக்கி
வளர்த்த கைகள் இவை.
உங்கப்பா கைகள் உங்களை வளர்த்தது.
இது தலைமுறை தொடர்ச்சி.
இதுவும் கூட குலதெய்வம்தான்.
---
படிக்கப் படிக்க
மனம் நெகிழ்ந்து போகிறது.
நெகிழ்வில் திளைத்த
உள்ளத்தின் வெளிப்பாடாய், கண்களின் வழி, சில
துளிகள் எட்டிப் பார்க்கின்றன.
மனதை ஒரு பெருந்துயர் அழுத்துகிறது.
அப்பா, அப்பா
என மனம் அரற்றுகிறது.
தந்தையை இழந்த
தனயன்களால், இந்நூலை எளிதில் கடந்துவிட முடியாது.
படித்தபின்,
மறந்துவிடவும் முடியாது.
எப்படி இவரால்
முடிந்தது?
---
இவர் உறவுகளைப்
படித்தவர்.
உன்னத நண்பர்களைப்
படித்தவர்.
வாழ்க்கையைப்
படித்தவர்.
படித்துக் கொண்டே
இருப்பவர்.
இவர் எழுதத்
தொடங்கி, நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.
எழுதிக் கொண்டே
இருக்கிறார்.
கதைகள் ஒவ்வொன்றும்
என்னை எழுது, எழுது என இவரிடம் வரிசை கட்டி நிற்கின்றன.
இவரும் தொடர்ந்து
எழுதிக் கொண்டே இருக்கிறார்.
---
தாயைப் பற்றி
நிறைய பேர், நிறையவே எழுதி இருக்கிறார்கள்.
பாடி இருக்கிறார்கள்.
கொண்டாடி இருக்கிறார்கள்.
ஆனால், தந்தையைப்
பற்றி எழுத்தில் வடித்தவர்கள் குறைவு.
மிகக் குறைவு.
இக்குறையினைப்
போக்க வந்த, அருமருந்து இவரது நூல்.
இந்நூலைப் படிக்கும்
போது, பல பக்கங்களில், என் உள்ளம், தேங்கித் தேங்கி நின்றது.
காரணம், எழுத்தோடு
எழுத்தாய், தன் வாழ்வியல் நிகழ்வுகள் பலவற்றையும், இறக்கி வைத்திருப்போரோ, என்னும்
ஓர் ஐயம்.
அப்படித்தான்
இருக்க வேண்டும்.
அதனால்தான் எழுத்துக்களோடு,
உள்ளத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.
சிறு கதைத் தொகுப்பு
14 கதைகள்
அப்பா, அப்பா, அப்பா
என
ஒவ்வொரு சிறுகதையிலும்
ஓர் அப்பா.
அப்பாக்களின்
உணர்வுக் குவியல்
எண்ணக் குவியல்
எழுச்சிக் குவியல்
அப்பா
இவர்தான்
அண்ணாமலைப் பல்கலைக் கழக
தமிழ்த் துறை, மேனாள் பேராசிரியர்
ஹரணி.