24 ஜனவரி 2023

அறியாதபுரம்



தொண்ணூறு வயது முதியவர் மடியில்

முன்னூறு நிமிடத்திற்கு முன்

பிறந்த குழந்தை ஒன்று

சிரித்துப் பார்த்து சிறுநீர் கழிக்கிறது

முதுமை அதையும் பேறாய் மகிழ்ந்து

மெச்சிப் பேசி, உச்சி முகர்ந்து

இறையை நிறைய துதிக்கிறது.

படிக்கும் பொழுதே மனம் நெகிழ்ந்து போகிறது. முதுமையின் பெருமையினையும், வாழ்வின் உன்னதத்தையும், முழுமையாய் உணர்ந்திருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன, இவரது எழுத்துக்கள்.

     இன்றைய உலகு அவசர உலகாகி விட்டது. எதற்கெடுத்தாலும் அவசரம். இரண்டு சக்கர வாகனப் பயணம்கூட, பறத்தலுக்கு இணையாகிவிட்டது. உணவு கூட, துரித உணவாகிவிட்டது.

     எதற்கு இந்த அவசரம். இந்த அவசரத்தையும் கவியாக்கி இருக்கிறார் இக்கவிஞர்.

ஏன் அந்தக் கவிதையை

இத்தனை அவசர அவசரமாய் படிக்கிறாய்?

பரபரப்புடன் இப்படிப் படிக்க

என்ன தான் அவசியம்?

இங்ஙனம் அந்தக் கவிதைப் புத்தகத்தை

இனியும் கேவலப்படுத்தாதே.

உன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதும்

கவிதை இல்லையா?

உன் வாழ்வே ஒரு கவிதைப் புத்தகம் இல்லையா?

     கவித்துவமாய் வாழ வேண்டிய வாழ்வில், நட்பு என்பதைக்கூட, ஒரு கருவியாக்கி, சுயநலத்தினை மட்டுமே முதன்மையாக்கி வாழும் மனிதர்களை வேதனையோடு எண்ணிப்பார்க்கிறார்.

அறம் பொருள் இன்பமெல்லாம் பேசினாய்

அக்கறை இருப்பதாய் காட்டிக் கொண்டாய்

பேச்சில் எப்போதும் தேன் கூட்டுவாய்

மூச்சில் எனை வானெனச் சாற்றுவாய்

நண்பர் என்றே எண்ணியுமிருந்தேன்.

…..

…..

பாவி நான் அறிந்திருக்கவில்லை

நீயொரு இரயில் நிநேகிதன் என்பதனை.

உன் நிறுத்தம் உனக்கு தெரிந்திருக்கிறது

நீ கவனத்தோடு இறங்கி விட்டாய்.

     இவர் உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசுவதில் என்றும் விருப்பம் இல்லாதவர். இதனையும் தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறார்.

பொய்யாய் வந்து

பொய்யாய் முகம் காட்டி

பொய்யாய் ஆலிங்கனம் செய்து

பொய்யாய் பேசித் திரிந்து

பொய்யாய் போய் வரவேண்டும்.

ஆதலினால் நான் மாட்டேன்.

     பொய்யாய் வாழவிரும்பாத இவர், ஒரு தனிமையின் ரசிகர். தனிமையைத் திருவிழாவாய் கொண்டாடுபவர். தனிமையில் இவரது சந்தோச சாம்ராஜ்யம் பரந்து விரிகிறது.

என் நண்பனான நானும்

என் எதிரியான நானும்

நானான நானும் இணைந்திருக்கையில்

நீங்களெல்லாம் நினைப்பது போல

எனக்கேது தனிமை… ?

…..

…..

என் சூரிய சந்திரர்களை

நீங்கள் சந்திக்கவில்லை தானே.

என் இல்லத்து வின்மீன்கள்

உங்கள் கண்களுக்கு

அகப்பட்டவை இல்லைதானே.

பின் நீங்கள் எப்படி அறிவீர்கள்?

நானே நிரம்பிய என் பரப்பில்

என்மையின் வட்டம் மிக நிரம்பிக் கிடக்கிறது.

     தனிமையை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வாழ்வின் ஒரு பகுதி, காத்திருப்பதிலேயே கழிந்து விடுகிறது. பிறந்தது முதல், வளர்ந்து முதுமை அடைந்த பின்னும், ஏதோ ஒன்றிற்காக காத்துக் கிடக்கத்தான் வேண்டியிருக்கிறது.

காத்திருப்பு

சில நெருப்பை அணைத்து விடுகிறது

சில நெருப்பை வளர்த்து விடுகிறது.

காத்திருப்பு

ஒரு தவத்தை வலிந்து தினித்து விடுகிறது.

….

….

காத்திருப்பு

ஏதேனும் ஒரு சேதியை தாமதப் படுத்துகிறது.

பரபரப்பின் நகங்களை கடித்துத் தின்கிறது

இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது

எதையோ தீவிரமாக எதிர்பார்க்கிறது

அதுவரை நம்பிக்கையை வளர்க்கிறது.

     மனிதனாய் இப்புவியில் வாழும், ஒரு சிறு வாழ்வில், ஒரு பக்கம் அவசரம், மறுபக்கம் காத்திருப்பு, நடுவில் ஏமாற்றங்கள், துன்பங்கள் , துயரங்கள் எனச் சுழலும் இவ்வுலகில், மனித மனங்களுக்குள் மறைந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை கண்டு எள்ளி நகையாடுகிறார்.

வாழும் இச்சிறு வாழ்வில்

ஆகுவதாம் … ஆகாததாம்

உறவாம் … வஞ்சகமாம்

பணமாம் … பரதேசித்தனமாம்

அரசியலாம் … ஆட்டுக்குட்டியாம்

மதமாம் … மசிராண்டியாம்

     கவிஞரின் வார்த்தைகளில் கோபம் ததும்பி வழிகிறது.

     தொண்ணூறு கவிதைகளால் கோர்க்கப் பெற்ற, கவி மாலையாய் மலர்ந்து மணம் வீசுகிறது இவரது நூல்.

     இவர் யார் தெரியுமா?

     அதையும், இவரே கூறுகிறார், கேளுங்கள்.

அனல் காற்றினிலே

அல்லாடும் சிறு கொடி நான்.

ஆதரிக்க யாருமின்றி

பேதலித்துத் தவிக்கிறேன்.

காட்டாற்று வெள்ளம்

கழுத்துவரை செல்கிறது.

நான் கடுகளவும்

எதிர்பாராதது வதைக்கிறது.

எந்தக் கொழுகொம்பும்

இதுவரை கிடைக்கவில்லை.

நெஞ்சமோ கூப்பாடு போடுகிறது.

எங்கிருந்தாவது உன் உதவிகள் வரட்டும்.

அறியாத புரத்திலிருந்து

செல்வமும் உதவியும் வரும்

என்பது என் பாட்டியார் வாக்கு.

     இவர், தன் பாட்டியார் மீது கொண்டிருக்கும் பற்றால், பாசத்தால், நம்பிக்கையால், பாட்டியார் வாக்கினையே, இந்நூலுக்கு, தன் முதல் நூலுக்கு,  கவிநூலுக்கு வைத்திருக்கிறார்.


அறியாதபுரம்

     இவர் வாய்மொழி அறியாதிருந்த போதே, தமிழ் மொழியால் சுவீகரிக்கப் பட்டவர்.

     என்ன எழுதுகிறோம் என்று அறியாமலே, கிடைக்கும் காகிதங்களில் எல்லாம், எழுதும் பழக்கம், இவரது பால பருவத்தில் இருந்தே தொடங்கி விட்டது.

     இள வயது கவிதைகள் இவரிடத்தில் மலை மலையாய் குவிந்து கிடக்கின்றன.

     இன்றைக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, எழுந்து வா என்னும் இவரது, இளவயது கவிதையை, இலங்கை வானொலி, பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் காத்தக் குரலில் ஒலிபரப்பியபோது, நோபல் பரிசு பெற்ற உணர்வு இவருக்கு.

     மேலும், இளவயதில் இவருக்கு வாய்த்த தமிழாசான்கள் கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களும், புலவர் கலியபெருமாள் அவர்களும், எழுது, எழுது என இவரை உசுப்பிவிட்டனர், உற்சாகப்படுத்தினர்.

     இவரும் மனமகிழ்ந்து கவிஞராய் வளர்ந்தார், உயர்ந்தார்.

     கவிதை இவரது உயிராகிப் போனது. கவிதைகள் இவர் மனவானில் ததும்பி வழியத் தொடங்கின.

விடாப்பிடியாக

தரதரவென எழுத்துக்களின்

கழுத்தைப் பிடித்திழுத்து

கவிதை செய்பவன் நானல்ல.

தானே ததும்பி வருவதற்கு

தடம் அமைக்க

தெரியாதவனும் நானல்ல …

 

கவிதை பயிர் செய்வது

என் தொழிலல்ல….

அதுவே என் உயிர்.

     இவர் தன் கவி நூலை, தன் முதல் நூலை, தன் தாய், தந்தையாரிடம் இருந்துதான் தொடங்குகிறர்.

நேர்படும் இறையருள்

நேத்திரங்களின் குளிர்ச்சி

எந்தாய்.

வாழ்வில் கிடைத்த வரம்

நாளெல்லாம் ரசிக்கும் ஸ்வரம்

எந்தை.

 

அறியாதபுரம்.

     இந்நூலுக்கு உயிரினிய முதல் வாழ்த்தை வழங்கி இருப்பவர்கள், இவரது பெற்றோர்கள்தான்.

எங்களது வாழ்த்து எனும் தாலாட்டு

எப்போதும்

ஒலித்துக் கொண்டே இருக்கும்

என்ற மனதார, மகிழ்ந்து வாழ்த்தி இருக்கிறார்கள்.

தாலாட்டி, சீராட்டி வளர்த்தவர்களின் வாழ்த்து, இவரை மேலும் உயர்த்தும்.

ஒரு நல்ல கவிதை கிடைத்துவிட்டால்

பிரபஞ்சம் மகிழ்ந்து நிறையுமே

அதுபோதும்


என இவரது கவிதை வரிகளாலேயே, அகம் மகிழ்ந்து, வாழ்த்தியிருக்கிறார், இவரது தமிழாசான் கவிஞர் ப.திருநாவுக்கரசு.

     கோர்க்கப்படாதிருந்த மணிகளைக் கவிதை நூலாக, அறியாதபுரமாக, அற்புதமாகக் கோர்த்துள்ளார்

இது ஆரம்பம்

வரவுகள் பல உள்ளன

வாழ்த்தி மகிழ்வோம்

என வாழ்த்தியிருக்கிறார், அமீரகத் தொழிலதிபர் மற்றும் அறிவியல் அறிஞர் விருதாளர் முனைவர் வெள்ளம்ஜி.எம்.ஜே.முஹமது இக்பால்.

ஆழ்மனக் கிடக்கையில் அரும்பிய மலர்களை

அறியாத புறமெனும் ஆரத்தில் கோத்துமே

தோழமைக் கவிமொஹி தீன்படைத் தளித்துள்ளார்

தமிழுக்குச் சூட்டிடும் சரமென வாகுமே

என வாழ்த்தியிருக்கிறார், இதுவரை பதிமூன்று காவியங்களை, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை, கவி வடிவில் வழங்கிய, இலங்கை காப்பியக்கோ. ஜின்னா ஷரிபுத்தீன்

தாயே… தமிழே

உன் அன்பு உயிரெல்லாம் வேண்டுமடி

என்றும் நீ அணைக்க மகிழ்வேனடி.

நான் வாழ இதயமும்

என் வாழ்வின் உதயமும் நீ தானடி.

நாளும் நீ இன்றி நான் ஏதடி

என நாளும், தமிழ், தமிழ் எனத் துடிக்கும், தமிழிதயம் பெற்றவர்தான் இந்நூலின் ஆசிரியர்.



அறியாதபுரம்

ஜா.முஹையத்தீன் பாட்ஷா

வாசித்துப் பாருங்கள்.

அறியாதபுரத்தில்,

தங்களையும் அறியாமல் கரைந்து போவீர்கள்.

 

அறியாதபுரம்

கேலக்ஸி பதிப்பகம்,

1068, என்.பெருமாள் பட்டி,

ஆட்டுகுளம் விளக்கு,

சிவகங்கை சாலை,

மேலூர்.

மதுரை- 625 106.

99944 34432

www.galaxtbs.com

admin@galaxybs.com

விலை ரூ.150