31 ஜனவரி 2023

தமிழ்ப் பரிதி

 


 தேவர் குறளாட்டித் திருவாசகம் சூட்டி

மூவர் தமிழ் ஓதி, நாலாயிரம் சொல்லி

தாள் வடங்களாக முச்சங்கத் தமிழ் அணிந்து

தீவினை நீக்கும் திருமந்திரம் சொல்லி

காவிய மாமணி கம்ப முடி கவித்து

ஆவி உருக்கும் அருட்பாவால் அர்ச்சித்து

கூவித் திருப்புகழைக் கூத்தாடிக் கும்பிட்டு

தேவாதி தேவனடி

சேர்ந்திடுவோம் எம்பாவாய்.

---

காதொளிரும் குண்டலமும்

கைக்கு வளையாபதியும்

கருணை மார்பில் மீதொளிர் சிந்தாமணியும்

மெல்லிடையில் மேகலையும்

சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும்

பொன்முடி சூளாமணியும்

நீதி ஒளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு

தமிழ் நீடு வாழி.

---

பங்கயத்து குமரிமுனை பாதம் சேர்த்தாள்

பசும்பொன்முடி வேங்கடத்தை புணைந்தங்கு ஆர்த்தாள்

பொங்கிவரும் காவிரியை இடையில் கோத்தாள்

புறம் மூன்றும் கடல் கன்னி பணியப் பார்த்தாள்

மங்கலமாம் மேலைமலை செங்கோல் ஆர்த்தாள்

மலர்மொட்டு லங்கையெனும் மகளைப் பெற்றாள்

எங்கள்குல தெய்வதமாம் எமக்கு வீடு

இளமை குன்றா கன்னி எங்கள் தமிழ நாடு.

---

திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்

பொரு வடிவேலும் கடம்பும் தடம்பும் ஆறிரண்டும்

மருவடிவு ஆன வதனங்கள் ஆறும் மலர்க் கண்களும்

குருவடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே.

---

போக்கும் வரவும் இரவும்

பகலும் புறம்பும் உள்ளும்

வாக்கும் வடிவும் முடிவும் இல்

லாது ஒன்று வந்துவந்து

தாக்கும், மனோலயம் தானே

தரும், எனைத் தன்வசத்தே

ஆக்கும், ஆறுமுக வா, சொல்

லொணாது இந்த ஆனந்தமே.

     அன்பார்ந்த இந்த நிகழ்வினுடைய தலைவர், என்னுடைய பாசமிகு பிள்ளை, திருநாவுக்கரசு அவர்களே,

     என்னை வாழ்த்தியும், போற்றியும், பாராட்டியும், வணங்கியும், இன்னும் என்னென்னவோ செய்தும், பாராட்டி அமர்ந்திருக்கக்கூடிய என்னுடைய நிழல்,

உண்மையிலே எறி

அடியேன் வினைதீர

இன்மையிலே வந்து என்னை நேற்றும்

உண்மையிலே என்னப் பாவம் செய்தேன்

உண்மையிலே எந்தப் பாவம் செய்தேன்

அந்தப் பாவம் தீர கந்தப்பா

என்று சொன்னதைப்போல, எப்போதும் என்னைத் தன்னுள் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கக் கூடிய கந்தவேள், அன்பிற்கினிய தம்பி அவர்களே,

     எவ்வளவு குணங்கள் ஒரு மனிதனை உயர்த்துமோ, என்னென்ன குணங்கள் இருந்தால் உயர்வானோ, அத்தனை குணங்களையும் சேகரித்துத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கக்கூடிய குணசேகரன் அவர்களே,

     இது ஏடகம்,

     இதை வைத்திருப்பவர் மாறன்.

     நினைத்துப் பார்க்கிறேன்.

     உடல் சிலிர்க்கிறது.

     பொய்யாமொழிப் புலவர், ஒருமுறை பாண்டிய நாட்டிற்குச் சென்றார். அவரை சங்கத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

     அவன் தமிழ்நாட்டுப் புலவன்.

     தம்பியூர், அரசூர்காரன்.

     சங்கத்திற்குச் சென்றால், அவர் புலவரா? இல்லையா? என்பதை அறிய ஒரு சோதனை வைப்பார்கள்.

     என்ன சோதனை என்றால், உயிரோடு இருப்பவர்களிடம் காட்டி அல்ல.

     பண்டை நாள், சங்கத்திற்குப் பணியாற்றி, இப்போது சிலை வடிவில் சிறப்பாகவும், குறிப்பாகத் தலைவடிவில் இருக்கக்கூடிய, 49 சங்கப் புலவர்களுடைய தலைகள், சிவாலயங்களிலே லிங்கம் இருப்பதைப் போல, வரிசையாய், தலைகளாய் இருக்கும்.

     இச்சிலைகளுக்கு முன்னால், தலைகளுக்கு முன்னால் நிற்கவேண்டும்.

     நின்று, சிலை வடிவில் இருக்கக்கூடிய, அந்தப் பண்டைநாள் புலவர்களைப் பார்த்து, தனது கருத்தைச் சொல்ல வேண்டும்.

     கருத்தைச் சொன்னவுடன், பண்டைப் புலவர்கள் அத்தனை பேரும், சிலை வடிவில் இருக்கக் கூடியவர்கள் அனைவரும், தங்கள் தலைகளை அசைக்க வேண்டும்.

     அப்படி அசைத்தால்தான், முன்னால் நிற்பவரைப் பாதிப் புலவர் என்று ஏற்றுக் கொள்வார்கள்.

     அந்தச் சிலைகளுக்கு முன் நின்று, பொய்யாமொழிப் புலவர் பாடினார்.

உங்களிலே நானொருவ னெவ்வுவேனோ வொவ்வேனோ

திங்கட் குலனறியச் செப்புங்கள் – சங்கத்தீர்

பாடுகின்ற முத்தமிழ்க்கென் பைந்தமிழு மொக்குமோ

ஏடெழுதா ரேழெழுவீ ரின்று,

     கழுத்திலே பூமாலை அணிந்து கொண்டு, சிலைவடிவில் இருக்கக்கூடிய புலவர்களே, நீங்கள் 49 பேர்.

     உங்களைப்போல், ஏதேனும் சிறிதாவது எனக்குப் புலமை இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய, இந்தப் பாண்டியன் என்னை இங்கு, அழைத்து வந்து நிறுத்தி இருக்கிறான்.

     அவன் அறியும்படி கூறுங்கள்.

உங்களிலே நானொருவன் ஒவ்வுவேனோ ஒவ்வேனோ

திங்கள் குலனறிய

     சோழர் குலம் சூரியர் குலம்.

     பாண்டியர் குலம் சந்திர குலம்.

     அதனால்தான்,

திங்கள் குலனறியச் செப்புங்கள், சங்கத்தீர்

பாடுகின்ற செந்தமிழ்க்கு என் பைந்தமிழும் ஒக்குமோ.

     நீங்கள் பாடிய அந்த செந்தமிழுக்கு, சங்க இலக்கியத்திற்கு, நான் பாடுகின்ற, இந்தப் பைந்தமிழ் ஒக்குமா?

ஏடெழுதா ரேழெழூவீ ரின்று

     நாற்பத்து ஒன்பது புலவர்களும், ஒட்டு மொத்தமாக சிரக்கம்பம் செய்தனர்.

     சிரக்கம்பம், கரக்கம்பம் என்று சொல்லுவார்கள்.

     கரக்கம்பம் என்றால் கை தட்டல்.

     சிரக்கம்பம் என்றால் தலையை ஆட்டுதல்.

     கம்பம் என்றால் அசைவு என்று பொருள்.

     பூ கம்பம் என்றால், பூமி அசைகிறது என்று அர்த்தம்.

     நாற்பத்து ஒன்பது புலவர்களும் தலையசைத்து, இவரைப் புலவராக ஏற்றுக் கொண்டார்கள்.

     அரைப் புலவர் ஆகிவிட்டார்.

     அப்பொழுது சங்கத்தில், சோம சுந்தரர் கோவிலில் பொற்றாமரைக் குளம் இருக்கிறது. அந்தப் பொற்றாமரைக் குளத்தின் கீழ், சங்கப் பலகை மூழ்கி இருக்கிறது.

     நீ கரையில் நின்று தமிழ் பாட வேண்டும்.

     அந்தக் குளத்தின் அடிப்பகுதியில் இருக்கின்ற சங்கப் பலகை, மேலே வந்து அலையில் மிதக்க வேண்டும் என்றனர்.

     பொய்யாமொழிப் புலவர் குளக்கரையில் நின்று பாடினார்.

பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையெனினும்

பாவேந்த ருண்டென்னும் பான்மையாற் – கோவேந்தன்

மாற னறிய மதுரா புரித்தமிழோர்

வீறணையே சற்றே மித.

    மதுராபுரியில் இருந்து தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்கள் எல்லாம் ஏறி அமர்ந்து, செந்தமிழை ஆய்ந்த சங்கப் பலகையே, பொற்றாமரைக் குளத்தில் இருக்கக்கூடிய சங்கப் பலகையே, ஒரு காலத்தில் தமிழை வளர்ப்பதற்காக, மதுரையிலும் தமிழ்ச் சங்கம் இருந்தது.

     மங்கல சோழ வளநாடு என்ற பெயர் பெற்ற சோழ வளநாட்டில், தில்லையிலே ஒரு தமிழ்ச் சங்கம் இருந்தது என பாடல் ஒன்று உண்டு.

அடியவர்க் கூட்டமும் ஆதிச் சங்கமும்

படியில் மாப்புகழ் பரவொடு சோழனும்

உள்ள மையரு சோழவளநாடு என்று

வளநாடுதான் செந்தமிழ் நாடு, சங்கம் இருந்த நாடு என்று ஒரு காலத்தில பதிவாகி இருந்தது.

     அதுபோன்ற மன்னர்கள் இப்போது இல்லை.

மூவேந்தர் முன்போல் புரப்போரிலல் எனினும்

பாவேந்தர் உண்டு என்னும் பான்மையால்

கோலேந்தும் மன்னர்கள் அத்தனை பேரும், தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடக் கூடிய அந்த மாறன் இருக்கிறான்.

     அந்த மாறன் அறிய, அவன் கண்ணிற்குத் தெரியவேண்டும்.

     சங்கத்து வீறணையே சற்றே மித.

     சங்கப் பலகை மேலே ஏறிவந்து மிதந்தது.

     அப்பொழுதுதான் பொய்யா மொழியைப் புலவர் என்று ஏற்றுக் கொண்டனர்.

     அதுபோல், தமிழ் நாட்டு அரசு என்னைத் தேர்ந்தது.

     விருது கொடுத்தது.

     விருது என்ற சொல் இருக்கிறதல்லவா? அதைத் திருப்பிப் பார்த்தால் துருவி என்று வரும்.

     வி ரு து.

     து ரு வி.

     எத்தனையோ பேர் விண்ணப்பித்த விண்ணப்பங்களை எல்லாம், துருவி எடுத்து என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.

     18ஆம் தேதி எனக்கு விருது தந்தார்கள்.

     அடுத்த நாளே, தம்பி என்னை அழைத்து, தொல்காப்பியர் காட்டும் தமிழர் பண்பாடு என்னும் தலைப்பில், சரசுவதி மகாலில் பேசச் சொன்னார்.

     முதல் நாள் கலைவாணர் அரங்கில் விருது.

     மறுநாள், சரபோசி மன்னரின், அரண்மனைக்குள் இருக்கக்கூடிய, சரசுவதி மகாலில் தொல்காப்பியம் பேசினேன்.

     அடுத்தநாள் அமெரிக்காவில் இருந்து வந்த சான்றோர்களிடம், ந.மு.வே. நாட்டார் கல்லூரியில், மீண்டும் தொல்காப்பியம் பேசினேன்.

     பிற்பகல், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பொழிவாற்றினேன்.

     மூன்றாம் நாள், புதுக்கோட்டை, கம்பன் கழகத்தாரின், கம்ப மாமணி விருதினைப் பெற்றேன்.

     பின்னர் தொடர்ந்து, தஞ்சையில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் என்னை அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தன.

     நாட்டார் திருவருள் கல்லூரியில் ஒரு பாராட்டு விழா.

     இங்கெல்லாம் வெறும் பாராட்டுதான்.

     இங்கு எனக்குக் கொடுத்திருப்பது தமிழ்ப் பரிதி.

     பரிதி.

     ப, ரி, தி.

     இலக்கியத்தில் பருதி என்று இருக்கும்.

     பருதி.

     சங்க இலக்கியத்தில் சூரியனைக் குறிக்கும் பருதிக்குப் பொருள் என்ன தெரியுமா?

     வட்டம்.

     அந்தப் பொருளில் பார்த்தால்,

     தமிழ்ப் பரிதி

     தமிழ் வட்டம்.

     நான் இங்கு தமிழ் வட்டத்தில்தான் இருக்கிறேன்.

     அந்தச் சூரியனோடு என்னை ஒப்பிட்டுச் சொன்னார்களோ இல்லையோ, இதுதான் எனக்குச் சரியாகப் படுகிறது.

     தமிழ் வட்டத்தில் நான் இருக்கிறேன்.

     அடுத்து, பரி என்று என்று சொன்னால், விரைவு என்று அர்த்தம்.

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்

விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கைஏந்தி

பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி

     சூரியனுக்குப் பரிதி என்று பெயர் வந்ததற்குக் காரணமே, ஆகாய வீதியில், பெரிய இடத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுவதால்தான்.

     மிக விரைவாக ஓடக்கூடியவர், அதனால் பரிதி என்று பெயர்.

     அதோடு மட்டுமல்லாமல், திருக்குறளை எடுத்துக் கொண்டால், திருக்குறளுக்கு ஒரு பத்து பேர் உரை எழுதியிருக்கிறார்கள்.

தருமர் மணக்குடவர் தாமதத்தர் நச்சர்

பரிதி பரிமே லழகர் – திருமலையர்

மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு

எல்லையுரை செய்தார் இவர்.

     இதில் ஒருவர் பரிதி.

     என்ன நினைத்து விருது கொடுத்தார்களோ.

     பரிதி.

     பொழுது விடிந்தால், பழநி குடமுழுக்கைக் காண இருக்கிறேன்.

     அநேகமாக இன்றைய தினம், பாதையில் இருக்கிற எல்லா ஆலயங்களிலும் குடமுழுக்கு முடிந்துவிட்டது.

      நாளை மலைக் கோவிலுக்கு குடமுழுக்கு.

      அந்த நாளில் என்னைத் தேர்ந்து, அதுவும் 63ஆவது ஏடகக் கூட்டத்தில், 

      63 என்பது 63 நாயன்மார்களைக் குறிக்கும்.

     அடுத்து ஒரு ஆறு சொன்னீர்கள்.

     ஏடகம் அமைப்பின் ஆறாவது ஆண்டு என்று சொன்னீர்கள்.

     அந்த ஆறு என்பது முருகப் பெருமானைக் குறிக்கும்.

     முருகப்பெருமானுடைய முகங்கள் ஆறு.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று

ஈசருடன் ஞானமொழி பேசம் முகம் ஒன்று

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று

குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று

ஆறுமுகம் ஆன பொருள் நீ, அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

     இது திருப்புகழ். திருமுருகாற்றுப்படையிலும் ஒரு ஆறு முகம் உண்டு.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்

ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

முருகா என்று ஓதுவார் முன்.

     இதுபோன்று ஒரு ஆறைத் தேர்ந்தெடுத்து, ஒரு நிகழ்ச்சியாக இங்கே நடத்தி, எனக்குத் தமிழ்ப் பரிதி என்ற விருது வழங்கி இருக்கிறீர்கள்.

     தமிழ்ப் பரிதி என்று சொன்னபிறகு, தமிழ்க் கடல் என்பதை கொஞ்சம் ஒத்திவைக்க வேண்டும்.

     ஏனென்றால், அந்தப் பரிதியில் கடல் வற்றும்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான் நல்கா தாகி விடின்.

என்று கூறுவார் வள்ளுவர்.

     தம்பி பேசும்போது கூறினார், முப்பது நாற்பது விருது இதுவரை பெற்றிருக்கிறேன் என்று.

     இந்தப் பரிதியின் ஒளியில் அவையெல்லாம் மங்கிவிடும்.

     எனக்கு அந்த விருதிற்கான விண்ணப்பத்தை தம்பி நிறைவு செய்தபோது, தம்பி குணசேகரன் கூறியதுபோல்,

மன்னுடை மன்றத் தோலை தூக்கினுந்

தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்

மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினுந்

தன்னை மறுதலை பழித்த கலையுந்

தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே

என நன்னூலில் கூறியுள்ளபடி, என் விண்ணப்பத்தில் நான் எழுதியிருந்தேன்.

என்னிடம் கற்றவர்களும்

என்னோடு கற்றவர்களும்

விருதுக்கு விண்ணப்பம் செய்யுங்கள் என்று

விண்ணப்பித்துக் கொண்டதனால் – நான் இந்த

விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலானேன்.

     விண்ணப்பம் போடுங்கள் என்று விண்ணப்பித்துக் கொண்டதால், நான் இந்த விண்ணப்பத்தை, விண்ணப்பிக்கலானேன் என்று விண்ணப்பத்தை நிறைவு செய்தேன்.

     அறிஞர் அண்ணா அமெரிக்காவில் கூறினார் அல்லவா.

      No Sentence end with because, because, because is a conjuction என்று கூறினார் அல்லவா.

     Because  என்று மூன்று முறை அடுத்தடுத்து வரும்.

     ஒரே சொல் மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்லுங்கள் என்று யேல் பல்கலைக் கழக மாணவர்கள் கேட்டபோது, அடுத்த நிமிடமே, இப்படி பதில் உரைத்தாராம் அண்ணா.

     இதேபோல் கம்பரும் உரைத்திருக்கிறார்.

அம்மாநகருக்கு அரசன், அரசர்க்கு அரசன்.

இதுமட்டுமல்ல,

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் – என்னை

வைத வைவின் மராமரம் ஏழ் துணை

எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை

செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.

     அகத்தியர் இமயமலையில் இருந்து, தெற்கே பொதியமலைக்கு வருகிறார். இடையில் விந்திய மலை அவரைத் தடுக்கிறது.

நாகமது நாகமுற நாகமென நின்றான்.

     அகத்தியர், அந்த மலை மேல் எறி நின்று, தன் காலால் ஒரு அழுத்து அழுத்தினார். உடனே அழுத்தம் தாழாமல் கீழிறங்கிய விந்திய மலை, பூமியைத் தாங்குகிறதல்லவா, ஆதிசேசன், அந்த ஆதிசேசன் தலையை இடித்ததாம்.

நாகமது நாகமுற நாகமென நின்றான்.

     நாகம் என்றால் மலை என்று ஒரு பொருள் உண்டு.

     நாகமுற, பாம்பின் தலையில் இடிக்கும்படியாக

     நாகமென, நாகம் என்றால் யானை என்றும் ஒரு பொருள் உண்டு.

     நாகமென, யானையாக நின்றான்.

     அதுபோல, இந்த வரியை சேர்ப்பதாக இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்றேன்.

     விண்ணப்பித்தேன்.

     விருது கிடைத்தது.

     அவர்களுக்கு என் தமிழ்ப் புலமைத் தெரியாது.

     தெரியாதவர்களிடம் விருது பெறுவதைவிட, தெரிந்தவர்களிடம், என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்களிடம், ஒரு விருது வாங்குவது பெரிது.

     பொய்யாமொழிப் புலவர் பாடியவுடன் பாடியவுடன், 49 சிலைகளும் தலையாட்டியது போல, நீங்கள் நான் பேசும்பொழுது, கைதட்டி மகிழ்வது, நான் தமிழ்ப் பரிதியானது தகும் என்று கூறுவதைப் போல் உள்ளது அல்லவா.

     இதுதான் எனக்கு மிகப் பெரிய, மிகச் சிறந்த மதிப்பையும், மரியாதையையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

     அப்பேர்ப்பட்ட இந்த வட்டத்தில், தமிழ் வட்டத்தில், இந்தப் பொன்மாலைப் பொழுதைச் செலவிடுவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

     நீங்கள் ஒவ்வொருவரும், நூறு பேருக்குச் சமம். அப்படியே நூறால் பெருக்கிப் பாருங்கள். எவ்வளவு வருகிறது என்று?

     அதனால்தான், கண்ணதாசன் ஒருமுறைக் கூறினார்.

     கடற்கரையில் அண்ணாவைப் பாராட்டுகின்ற விழாவில்,

     அங்கே கடலெல்லாம் அலை. இங்கே கரையெல்லாம் தலை.

     அதுபோல் நீங்கள் ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சமம் என்றால், கூட்டிப் பாருங்கள்.

     அவ்வளவுபேரும், இங்கிருந்து என்னைப் பாராட்டியதாக நான் கருதுகிறேன்.

     இது என்னை ஊக்கப்படுத்தும்.

     என்னைப் பெருமைப்படுத்தும்.

     பாராட்டும்.

     குழந்தை பிறந்தவுடன் நீராட்டு.

     அதன் பிறகு தாலாட்டு.

     அது வளர்கின்ற காலத்தில், அதற்குப் பாராட்டு.

     அதைப்போல, எப்பொழுதோ படித்தது, தம்பி ஆகுபெயரைப் பற்றிக் கேட்டார்கள், சொன்னேன்.

     அதை அப்படியே நினைவில் வைத்திருந்து, இப்பொழுது சொல்லிப் பாராட்டியுள்ளார்.

ஆசைபற்றி அலையலுற்றேன் – மற்று இக்

காசுஇல் கொற்றத்து இராமன் காதை அரோ

என்று கம்பநாட்டாள்வார் கூறியது போல, என்மேல் உள்ள பற்றின் காரணத்தால், என்னுடைய தமிழ் ஞானத்தை, தமிழ் அறிவைப் புரிந்துகொண்டு, நான் பெற்ற விருதிற்காக, நான் பெற்று வந்த விருதிற்காகப் பாராட்டியுள்ளனர்.

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு

     செவிமீதி லும்பகர் செய் … குருநாதா

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு

     மடியேனை அஞ்சலென

என்று அருணகிரிநாதரின் திருப்புகழிலும்,

இருவருக்கும் காண்பறியா ஈசன் மதுரேசனார்

விருது கட்டி அங்கம் வெட்டி வென்றான் காண் அம்மானை

விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனரே யாமாகில்

ஆனாலும் காயமில்லை ஐயரவர்க் கம்மானை

என்று குமரகுருபரர், மதுரைக் கலம்பகத்திலும், இந்த விருது என்ற சொல்லினைப் பயன்படுத்தியுள்ளனர்.

     அருணகிரிப் பெருமான் மீண்டும் ஓரிடத்தில், விருது குறித்துப் பாடுகிறார்.

கருவினுரு வாரிகி வந்து வயதளவி லேவ ளர்ந்து

கலைகள் பல வேதெ ரிந்து … மதனாலே

கரியகுழல் மாதர் தங்கள டிசுவடி மார்பு தைந்து

கவலைபெரி தாகி நொந்து … மிகவாடி

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று

அறுசமய நீதி யொன்று … மறியாமல்

அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று

அநுதினமு நாண மின்றி … பழிவேனோ

உகரபடி மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்

உலகளவு மால்ம கிழ்ந்த … மருகோனே

உபயகுல தீப துங்க விருதுகவி ராஜசிங்க

உறைபுகலி யூரி லன்று … வருவோனே

     ஏனென்றால், எங்கள் தமிழ்ப் புலவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள், சரியான கவிஞருக்கு விருது வழங்கவில்லை என்றால், விருது வழங்கியவரையே வசைபாடுவார்கள்.

     ஒருவருக்கு விருது கொடுத்துவிட்டார்கள்.

     ஆனால், அவர் அந்த விருதிற்குத் தகுதியானவர் அல்ல.

     இதனைப் பார்த்தப் புலவர்கள் பாடுவதைக் கேளுங்கள்.

கள்ளிக்கு ஏன் முள் வேலி?

கழுதைக்கு ஏன் கடிவாளம்?

கருப்பில்லாத உள்ளிக்கு ஏன் பரிமணங்கள்

உவர் நிலத்திற்கு ஏன் விதைகள்.

ஒடித்துப் போடும் சுள்ளிக்கு ஏன் கோடாலி

துடைப்பத்துக்கு ஏன் கவசம்.

சும்மா போகும் பல்லிக்கு ஏன் மடவரந்த பூவனார் பட்டம்.

     விருது தரவில்லை என்றாலும், இந்தப் புலவர்கள் விடமாட்டார்கள்.

     தேர்ந்தெடுத்து, ஒருமுறைத் தகுதியானவன் எனப் பாராட்டப்பெற்ற எனக்கு, மறுமுறையும் ஒரு விருது.

தாவடி ஓட்டு மயிலும் சேவல் தலையிலும் என்

பா அடி எட்டிலும் பட்டது அன்றோ? படி மாவலிபால்

மூ அடி கேட்டு அன்று மூது அண்டம் கூட முகடுமுட்டச்

சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே

     முருகப் பெருமானுடைய பாதம், எங்கெல்லாம் பட்டது என்று அருணகிரிநாதர் பாடுவார்.

     முதன் முதலில் மயிலின் மீதும்.

     இரண்டாம் முறை சேவல் மீதும்.

     மூன்றாம் முறை, தான் எழுதிய திருப்புகழ் பாட்டிலும் என்பார்.

     அதுபோல,

     எனக்குப் பரிதி விருது.

     முதலில் அங்கே. சென்னையில்

     அடுத்தது பல இடங்களில் பாராட்டு.

     இறுதியாய் இங்கே.

     மகாபலிச் சக்கரவர்த்தியிடம், வாமன அவதாரம் எடுத்து வந்து, மூன்றடி மண் கேட்டார் அல்லவா?

     மூன்றடி மண் கேட்டு, திரிவிக்கிரம அவதாரம் எடுத்து, இந்த உலகத்தை ஓரடியாலும், மேலுலகத்தை மறு அடியாலும், மூன்றாவது அடியை மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது வைத்தது போல,

     மகாவிஷ்ணுவின் மாப்பிள்ளை முருகன்,

தாவடி ஓட்டு மயிலும் தேவர் தலையிலும் என்

பா அடி எட்டிலும் பட்டது அன்றோ? படி மாவலிபால்

மூ அடி கேட்டு அன்று மூதுஅண்டம் கூட முகடுமட்டச்

சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே

     அதுபோல, வைத்த அடி சிற்றடியாக இருந்தாலும், வைக்க வேண்டிய இடத்தில் வைத்தார்.

     அதுபோன்று, அரசு கொடுத்தது விருது, தங்கக் காசு, ஐந்து இலட்சம் பணம், பெரிய சான்றிதழ்.

     இதெல்லாம் இல்லாவிட்டாலும், மனதோடு வழங்கினீர்களே பரிதி விருது, அதுவும் வழங்கியது ஏடகம்.

     ஏடகம் எப்படிப்பட்டது?

     தமிழ் விடு தூதில், தமிழ்விடு தூது ஆசிரியர் சொல்வார்.

அந்த நாளில் வையை ஆற்றங்கரையிலே

நீ ஆகமம் வைத்தாய், அந்த ஆகமம் வைத்ததற்குக்

காரணம் சோதிக்கின் ஏடகமே சான்று.

     நீ சோதித்துப் பார்த்தால் ஏடகமே சான்று.

     ஏடகம்.

     ஏடகத்தில் எனக்கு நிகழ்ச்சி நடக்கிறது என்று தெரிந்தவுடனே, தம்பி மோகன், பாடகத்தில் இருந்து, காஞ்சிபுரத்தில் இருந்து, இங்கு வந்துள்ளார்.

     காஞ்சிபுரத்திற்கும் மூன்று வகையானப் பெருமை உண்டு.

     அங்கே மகாவிஷ்ணு கோவில் கொண்டுள்ளார்.

     விஷ்ணு சில இடங்களில் நிற்பார்.

     சில இடங்களில் அமர்ந்திருப்பார்.

     சில இடங்களில் படுத்திருப்பார்.

     ஆனால், காஞ்சிபுரத்தில், மூன்று நிலைகளிலும் இருக்கிறார்.

ஆடவர்கள் எவ்வாறு ஆன்று ஒழிவார் வெஃகாவும்

பாடகமும் ஊரகமும் பஞ்சரமா – நீடியாமல்

நின்றான், இருந்தான், கிடந்தான், இதுஅன்றோ

மன்று ஆர் மதில்கச்சி மாண்பு.

என்று நம்முடைய தண்டியலங்காலம் கூறுகிறது.

     இன்றைக்கு எனக்கு வழங்கியிருக்கும், இந்த விருதிற்குத் தகுந்தாற்போல, தண்டியலங்காரத்தில், வேற்றுமை அணிக்கு ஒரு வெண்பா வரும்.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்

மின்னோர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது

தன்னேர் இல்லாத தமிழ்.

     மலையில் வரும், பெரியவர்கள் மதித்து வழிபடுவார்கள்.

     மனதில் உள்ள இருளைப் போக்கும்.

     இது தமிழ்.

     பொதியமலையில் வந்தது.

     பொதியமலையில், அகத்திய முனிவர் தமிழைத் தோற்றுவித்தார்.

     உயர்ந்தோர் தொழ விளங்கி – சான்றோர்களால் வழிபடப்பெற்று, தமிழைத் தாய்த் தமிழாகச் சொல்லி, தமிழைத் தெய்வமாகக் கருதி வழிபட்டார்கள்.

     ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் – மக்களுடைய அக இருளைப் போக்கும்

     இந்தப் பரிதி.

     தமிழ்ப் பரிதி.

     முதலில் தமிழ்,

     ஓங்கலிடை வந்தது.

     உயர்ந்தோர் தொழ விளங்கிற்று.

     மனிதர்களின் மனதில் உள்ள இருளைப் போக்கும்.

     அடுத்தது பரிதி

     சூரியன்.

     உதய சூரியன் என்றால் தெரியும்.

     இரு மலைகளுக்கு இடையில் வரும்.

     அதனால்தான் ஓங்கல் இடை வந்து.

     அதற்குப் பெயர் உதயகிரி.

     புராணத்தில் சூரியன் உதிக்கும் இடம் மலை.

     மறையும் இடமும் மலை.

     உதித்தல் உதய வெப்பு.

     மறைதல் அஸ்தமன வெப்பு.

அந்த வெற்பு இரண்டு விற்கிடை எனப்போய்

ஆதவன் சாய்தல் கண்டருளி

முத்தருக் கெல்லாம் மூலமாய் வேத

முதல் கொழுந்தாகிய முகுந்தன்.

 சித்திர சிலைக்கை விசயனைச் செருநீ

ஒழிக எனத் தேர்மிசை நிறுத்தி

மெய்த்தவப் படிவ வேதிய னாகி

வெயிலவன் புதல்வனை அடைந்தான்.

என பதினேழாம் போர் சதுக்கத்தில், வில்லிப்புத்தூர் ஆழ்வார் பாடுவார்.

     உதிக்கின்ற சூரியன், மலையிடையே தோன்றி, உயர்ந்தோர் தொழ விளங்கி, உயர்ந்த அந்தணர்கள், முனிவர்கள், ரிஷிகள், முடிபுங்கவர்கள் இவர்கள் எல்லாம், காலையில் சூரிய உதயத்தைப் பார்த்து வணங்குவார்களாம்.

     அந்த உயர்ந்தோர் தொழ விளங்கி,

     ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றி

     தமிழ் அக இருளைப் போக்கும்

     பரிதி புற இருளைப் போக்கும்.

     ஏடகத் தலைவர், மாறன் இந்தப் பாட்டைப் பார்த்தார்களா எனத் தெரியவில்லை.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்.

     மின்னேர் தனியாழி- ஒற்றைச் சக்கரத்தை உடைய சூரியன்.

     சூரியனுக்கு உவமை சொல்கிறார் அந்தக் கவிஞர்.

     மின்னலைப் போல ஒளி வீசக் கூடிய சூரியன்.

     மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று.

     சூரியனுக்கு மின்னல் ஒளி உவமை.

     ஆனால், எம் தமிழுக்கு, எதுவுமே உவமையில்லை,

     தன்னேரில்லாத தமிழ்.

     எனவே, தன்னேரில்லாதத் தமிழை முன்னால் வைத்து,

     பரிதியைப் பின்னால் வைத்து,

     இரண்டையும் ஒன்றாக வைத்து,

     தமிழ்ப் பரிதி எனும் விருதினை

     இந்த அவையிலே எனக்கு நல்கிய, ஏடகத்திற்கு, என் இதயம் நிறைந்த, மனம் நிறைந்த மகிழ்ச்சியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     என்னுடைய உரையை ஆடாமல், அசங்காமல், இருந்தது இருந்தபடியே, அப்படியே கேட்டு மகிழ்ந்த உங்களுக்கும், என்னுடைய நன்றியைச் சொல்லி, வாய்ப்பிற்கு மறுமுறையும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

     நன்றி. வணக்கம்.

---

     சங்க இலக்கியப் பாடல்கள், இராமாயணம், சிலப்பதிகாரம் முழுமையையும் மற்றும் அதன் தெளிவுரைகள், பதவுரைகள், பழந்தமிழ் இலக்கண நூற்பாக்கள், உரை வேறுபாடுகள் முழுமையையும் ஒப்பிக்கும் வல்லமை,

     முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பராசக்தி, மனோகரா, ராஜாராணி முதலான பத்து திரைப்படங்களின் வசனங்களை, முதல் காட்சி தொடங்கி, நிறைவுப் பகுதிவரை, ஒரு சொல் விடாமல் ஒப்பிக்கும் திறமை.

     பாவேந்தர், கண்ணதாசன் பாடல்களின் புலமை.

     தஞ்சாவூர் கம்பன் கழகத்தின் மூலம், கம்பராமாயணம் முழுமையையும், கலித்தொகை முழுவதையும், பெரியபுராணம் முழுவதையும் பாடமாய் நடத்தியவர்.

     தஞ்சாவூர், உலகத் திருக்குறள் கழகத்தின் மூலம், புறநானூறு முழுவதும் நடத்தி முடித்து, சிலப்பதிகாரம் முழுவதும் பாடம் நடத்தத் தொடங்கி, அரங்கேற்றுக்காதை நடத்திக் கொண்டிருப்பவர்.

     தமிழ்ப் பல்கலைக் கழகமும், உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து நடத்தும், திங்கள் தோறும் திருக்குறன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருபவர்.

     கடந்த 60 ஆண்டுகளாக, செம்மொழி இலக்கியங்களை மேடைதோறும் முழங்கி வருபவர்.

01.  தமிழ்ப் பேராசான் விருது

02.  ஔவை விருது

03.  வாண்டையார் விருது

04.  மாமன்னன் இராசராசன் விருது

05.  குறள் நெறிச் செம்மல்

06.  கம்பர் சீர் பரவுவார்

07.  கவிஞர்கள் திருநாள் விருது

08.  தமிழவேள் கலைஞர் இலக்கியப் பொறிகிழி விருது

09.  தொல்காப்பியர் விருது

10.  இரகநாத ராசாளியார் விருது

11.  முதுபெரும் புலவர் விருது

12.  அறிஞர் அண்ணா விருது

13.  செந்தமிழ் நாவரசு விருது

14.  சிவத் தமிழ்ச் செம்மல் விருது

15.  வீறு கவியரசர் முடியரசனார் விருது

16.  விளக்கவுரை வித்தகர் விருது

17.  சென்னிமலை கலைஞான விருது

18.  நடமாடும் சங்க இலக்கியப் பலகை

19.  வான்புகழ் வள்ளுவர் விருது

20.  தமிழ்க் கடல்

21.  செந்தமிழ்ப் பெருங்கடல்

22.  கவிமணிச் சிகரம் விருது

23.  பைந்தமிழ்ப் பேரொளி

24.  மண்ணின் சிறந்த படைப்பாளி

25.  செம்மொழிச் சிகரம்

26.  தமிழ்ச் சுடர் விருது

27.  கம்ப மாமணி விருது

முதலான நாற்பதிற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவரும்


தமிழ் நாட்டு அரசின்

இலக்கிய மாமணி

விருது பெற்றவருக்கு,

தஞ்சாவூர்

ஏடகம்

அமைப்பின் சார்பில்,

கடந்த 26.1.2023 வியாழக் கிழமை மாலை

நடத்தப்பெற்ற

பாராட்டு விழா

மற்றும்

தமிழ்ப் பரிதி

விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு

தமிழ்ப் பரிதி

எனும் உயரிய விருதினைப் பெற்று மகிழ்ந்து,

தமிழ்க் கடல், பெரும்புலவர்

முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள்

ஆற்றிய செந்தமிழ் உரையினைக் கேட்டு

ஏடக அரங்கே தமிழ்க் கடலின்

அலையில் நனைந்து போனது, மகிழ்ந்து போனது.

 



ஏடகம் அமைப்பின் பெரும் புரவலர்

மேனாள் விரிவுரையாளர்

கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள்,

விழாவிற்குத் தலைமையேற்று,

தமிழ்ப் பரிதி விருதினை வழங்கி மகிழ்ந்தார்

ஓய்வு பெற்றத் தமிழாசிரியர்


புலவர் மா.கந்தசாமி அவர்களும்,

கலை பண்பாட்டுத் துறையின்

மேனாள் இணை இயக்குநர்


முனைவர் இரா.குணசேகரன் அவர்களும்

வாழ்த்துரை வழங்கினர்.

ஏடகப் புரவலர். பத்திரிக்கையாளர்


திரு சு.வீரமணி அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி எம்.மகாலெட்சுமி அவர்கள்

விழா நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

ஏடக நிறுவநரும், தலைவருமான

முனைவர் மணி.மாறன் அவர்கள்

விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்று மகிழ்ந்தார்.

 

63 பொழிவுகள்

ஆர்ப்பரித்து

அருவியாய் இறங்கி

ஏரியாய்

தமிழ்ப் பேரேரியாய்

ததும்பிக் கொண்டிருக்கும்

ஏடகத்தில்,

கடலுக்குப் பாராட்டு

தமிழ்க் கடலுக்குப் பாராட்டு.

 

தமிழ் நாட்டு அரசின்

இலக்கிய மாமணி விருது பெற்ற

மின்னேர் தனியாழி

வெங்கதிருக்குத்

தமிழ்ப் பரிதி

விருது வழங்கு விழாவை

கண்டோர் வியக்க

கேட்டோர் மலைக்க

அற்புதமாய் அரங்கேற்றிய

எடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.