02 செப்டம்பர் 2024

ஆற்றுப்படை

 


     திருமுருகாற்றுப்படை.

     பொருநராற்றுப்படை.

     சிறுபாணாற்றுப்படை.

     பெரும்பாணாற்றுப்படை.

     கூத்தராற்றுப்படை.

     மன்னரைப் பாடி பரிசில்களைப் பெற்ற ஒரு புலவர், தன்னைப் போன்ற பிற புலவர்களிடம், அம்மன்னனின் சிறப்புகளையும், அம்மன்னனைக் காண்பதற்கான வழிகளையும் கூறி, அம்மன்னனைக் காணச் செல்லுங்கள், மன்னனைப் பாடி பரிசில்களைப் பெற்று, வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும்.

இவ்வகை ஆற்றுப்படை நூல்களின் வழி, பழந்தமிழகத்தின் நில அமைப்பு, அரசர்கள், வரலாறு, மக்கள் நிலை, விருந்தோம்பல் பண்பு, பழக்க வழக்கம் முதலியவற்றையும் அறியலாம்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலாளராக, செம்மாந்தப் பணியாற்றிய, கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் அவர்களும், ஒரு ஆற்றுப்படை பாடியிருக்கிறார்.

ஆசானாற்றுப்படை.

     தனக்குத் தமிழின் சுவை உணர்த்திய, தன் ஆசிரியர் குயிலையா எனப்படும் சுப்பிரமணிய ஐயரிடம் தமிழ் கற்க வாருங்கள் என அழைத்து, ஆற்றுப்படுத்துவது ஆசானாற்றுப்படை.

     இப்படி இவரும், ஒரு ஆற்றுப்படை பாடியுள்ளார்.


மாணவராற்றுப்படை.

     திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் மாணவராக இருக்கும் பொழுதே,

தமிழைப் படிக்கத் தணியா விருப்பொடு

இமிழ்திரை உலகில் இனிய கல்லூரி

தேடிப் பொழுதெல்லாம் திரிந்தே அலைந்து

நாடி வந்த மாணவ நல்லோய்

எனத் தொடங்கி, 168 வரிகளில், ஆசிரியப்பாவில் ஆற்றுப்படையினை அழகுறப் பாடியவர் இவர்.

     அன்று மாணவராற்றுப் படை பாடிய இவர், இன்று புதிதாய் மேலும் ஒரு ஆற்றுப்படை பாடியிருக்கிறார்.

தண்ணரும் முல்லையும் விண்ணுயர் கோடும்

பண்ணை வயல்களும் படுகடல் வளமும்

கொண்டினி திருந்த கொழுந்தமிழ்க் குலத்தீர்

எனத் தமிழகச் சிறப்போடு, தன் ஆற்றுப்படையைத் தொடங்கி,

திராவிட இயக்கம் தமிழகம் தோன்றிப்

பெரியார் என்னும் பெரும்பே ராசான்

நல்வழி காட்ட, நாளும் வளர்ந்தது

எனத் தமிழ் மக்களின் எழுச்சியினையும், தொடர்ந்து, தமிழர்களின் உலகப் பரவலையும், இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட மீளா துயரத்தையும் பாடி,

அறிவுத் துறையில் அரசோச்சிய

குமரிக் கடல்முனைக் கொள்கைத் தமிழர்

கணினித் திரையில் கவினுறு தமிழை

நிலைபெறச் செய்து அலைபுகழ் பெற்றனர்.

இந்திய மொழிகளில் இணையம், கணினியென

முந்தித் தோன்றிய முதல்மொழி தமிழாம்

என கணினியின் தோற்றத்தையும், இணையத்தின் வரலாற்றையும் எழில்மிகு தமிழால் எடுத்துரைக்கிறார்.

பெர்கிலி மண்ணில் பெருந்தமிழ் ஆய்ந்த

சார்ச்சு ஆர்ட்டர், ஆதமி தந்த வாசனார்,

மயிலை தந்த கவிசு கல்யாண்,

நளினம் காட்டிய ஒளிபெறு செல்லையா,

 

கம்பன் பாடிய வாசு தேவனார்

விசய குமாரின் சரசுவதி யாரும்

கோவிந்த ராசரின் பல்லாடமும்

கோவிந்த சாமியின் கணியன் பணியும்

அணங்கிடை வயங்கிய குப்புசாமியார்

கனடா நாட்டின் இதயப் பிறப்போர்,

துணைவன் தந்த கதிரவர், தினமலர்

ஏட்டின் தீரர் கிருட்டின மூர்த்தியார்,

முரசு அஞ்சலின் முத்துநெடு மாறன்

பொன்மொழி தந்த பொறிஞர் மூர்த்தி

 

இளங்கோ, ஆனந்தன், இனிய செல்லப்பன்

யாழன் சண்முகன் இனிய உமருடன்

சர்மா நிறுவனத்தார், வானவில் குழுவினர்

எழுதியை, மாற்றியை இலவய மாக்கிய

என்.எச்.எம்., நாக ராசன், பத்ரியார்,

தகடூர் கோபி, தமிழ்நிறை முழுந்தன்

சுந்தரம், நீச்சல் காலன், ஆண்டோ

சென்னைக்  கவிகளெனும் சீர்சால் நிறுவனத்தா ருளப்பட

கணினித் திரையில் கவின்தமிழ் எழுத்தை

எணிபெறச் செய்தோர் அளவிலர் எனலாம்.

என கணினியில், தமிழ் எழுத்து நுழைய அரும்பாடுபட்டோரைப் பெரும் பட்டியலிட்டுப் பாராட்டுகிறார்.

ஆங்கில எழுத்துகள் தாங்கிய பலகை

உலகம் முழுதும் ஓர்மையில் விளங்க

தமிழர் கண்ட தட்டச்சுப் பலகையோ

அவரவர் விருப்பில் ஆயிர வடிவில்

தோற்றம் பெற்றே ஏற்றம் சிதைத்தது.

     ஆங்கில எழுத்துக்களை கணினியில் உலகம் முழுவதும் இலகுவாய் படித்தபோது, தமிழ் தட்டச்சுப் பலகையோ, பல உருவில் வந்து, அவரவர் விரும்பியபடி வந்து, யாரும் காண இயலாதபடி, படிக்க இயலா நிலைக்குத் தள்ளப்பட்டபோது, அரசும், கணினி வல்லுநர்களும் எடுத்த முயற்சிகளின் பயனாய், கணினியில் தமிழ் உலகு முழுவதும் பறந்த கதையை விரிவாய் பேசுகிறார்.

     இணையம் இன்று இல்லாத இடமில்லை.

ஒவ்வொரு நாளும் உலக மாற்றத்தைக்

கவ்வி வளரும் கணினி இணையத்தை

நாளும் அறிந்து, நற்பயன் பெற்றிட

ஞாலத் தமிழரை நண்ணிப்

பணிவுடன் உரைத்தனன் பண்பில் சிறந்தே.

என கங்கை கொண்ட சோழவுரத்தண்மிய, இடைக்கட்டு எனும் ஊரில் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுலகெய்திய அசோதை-முருகேசன் இணையரின் தலைமகனார் இளங்கோவனார் அற்புதமாய் இயற்றியுள்ளார் இப்புதிய ஆற்றுப்படையை.


இணைய ஆற்றுப்படை

     மரபு வடிவில், அழகு ஆசிரியப்பாவில், இணையத் தமிழ் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார், இந்திய அரசின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றவர். தமிழ் நாட்டு அரசின் தூய தமிழ் ஊடக விருது பெற்றவர். சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா விருது பெற்றவர். தமிழ் விக்கி பெரியசாமித் தூரன் விருது பெற்றவர்.


முனைவர் மு.இளங்கோவன்.

 

 

இணைய ஆற்றுப்படை,

வயல்வெளிப் பதிப்பகம்,

37,38, கிருட்டினா நகர் முதன்மைச் சாலை,

சூரியகாந்தி நகர், முத்தியால்பேட்டை,

புதுச்சேரி – 605 003.

94420 29053

muetamil@gmail.com

விலை ரூ.100/

 

2 கருத்துகள்:

  1. நூல் ஆசிரியரை செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றபோது தமிழ் சங்கம் நடத்திய பாரட்டு விழாவில் பார்த்து பேசி இருக்கிறோம்.
    அவர் தாயார் மற்றும் பல அறிஞர் பெருமக்களுடன் படம் எடுத்து கொண்டது நினைவுகளில் வந்து போகிறது.
    நூலின் சிறப்பை நீங்கள் சொன்னது அருமை..

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு