17 அக்டோபர் 2024

இயல், இசை, கூத்து

 


     முத்தமிழ்.

     இயல், இசை, நாடகம்.

     இது காலத்தால் பிந்தையது.

     இயல், இசை, கூத்து.

  இதுவே சரியானதாகும்.

     கூத்து என்பது நேரடியாக நாடகம் ஆகாது.

     கூத்து வேறு, நாடகம் வேறு.

     ஆனால், கூத்தினுடைய பரிணாம வளர்ச்சிதான் நாடகம்.

     தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திலேயே, நாடக வழக்கு என்ற சொல் வருகிறது.

     இது குறித்து அதிக எண்ணிக்கையிலான ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. அறிஞர்கள் பேசியிருக்கிறார்கள்.

     இருந்தபோதிலும், சங்க இலக்கியத்தில் வரக்கூடிய கூத்தர்கள், பாணர்கள், விறலியர்கள், பொருணர்கள் எல்லாம் கலையோடு தொடர்பு உடையவர்கள்.

     எல்லா கலைகளுமே, தகவல் தொடர்பிற்காக, ஒரு கருத்தை அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக உருவாக்கப் பட்டதாகும்.

     கூத்தாக இருக்கட்டும், நாடகமாக இருக்கட்டும், ஓவியமாக இருக்கட்டும், எல்லா கலைகளுமே தகவல் தொடர்பிற்காக உருவாக்கப் பட்டவையே ஆகும்.

     இவை செப்பனிடப்பட்டு, செப்பனிடப்பட்டு, கலையாக இன்றைய வடிவத்தை அடைந்துள்ளன.

     சங்க இலக்கியம் கூறக்கூடிய கூத்து, கூத்தர்களுக்குப் பிறகு தமிழர்களுடைய வரலாற்றை எடுத்துக் கொண்டால், செயந்தம், சைத்தியம், மதிவாண நாடகத் தமிழ், முறுவல் போன்ற நாடகத்திற்கு இலக்கணம் கூறக்கூடிய நூல்களும் இருந்திருக்கின்றன.

     ஆனால், நமக்கு இன்று பெயர்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

     நூல்கள் கிடைக்கவில்லை.

     அதன்பிறகு, ஏழாம் நூற்றாண்டில். மகேந்திரப் பல்லவன் எழுதிய மத்தவிலாசப் பிரகடனம் என்ற நாடக நூல் பற்றிய செய்திகள் இருக்கின்றன.

     ஆனால், இந்நாடகம் தமிழ் நாட்டில் எழுதப்பட்டாலும், தமிழ் மொழியில் எழுதப்பட்டதல்ல, வடமொழியில் எழுதப்பட்டதாகும்.

     எனவே இதனைத் தமிழின் முதல் நாடகமாக எடுத்துக் கொள்ள முடியாது.

     தமிழின் முதல் நாடகமாக, வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்யும் முதல் நாடகம் எது தெரியுமா?

     இது நிகழ்த்தப்பட்ட நாடகம்.

     நாடகத்தில் இருவகை உண்டு.

     பனுவலாக படிப்பதற்கு மட்டுமே எழுதப்பட்ட நாடகங்கள்.

     நிகழ்த்துவதற்காக எழுதப்பட்ட நாடகங்கள்.

     இரண்டாம் வகையை, நிகழ்த்துவதற்கும், படிப்பதற்கும் என்றுகூட சொல்லலாம்.

     மனோன்மணீயம் நாடகம் என்பது நிகழ்த்துவதற்கான நாடகம் அல்ல, படிப்பதற்கானது.


நிகழ்த்தப்பட்ட நாடகமாக, தமிழ் நாடக வரலாற்றில் பதிவு செய்யப்பெற்ற முதல் நாடகம், தஞ்சாவூரில், இராஜராஜ சோழன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே, நிகழ்த்தப்பட்டதாக அறியப்படும் நாடகமாகும்.

     இராஜராஜேச்சுரம்.

     ஆனால், இந்நாடகத்தின் பனுவல்கள் இன்று இல்லை.

     நாடகங்கள் தெருக்கூத்துகளாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்திருக்கின்றன.

     இன்றைக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தெருக் கூத்துகள் நடத்தப்படுகின்றன.

     தெருக் கூத்துகள்.

     ஆசிரியர் கூறுவதைக் கேட்டு, மனதில் பதிய வைத்துக் கொண்டு, அதற்கானப் பயிற்சி மேற்கொண்டு கூத்துகள் நிகழ்த்தப்படுகின்றன.

     இதற்காக எழுத்துப் பிரதிகள் கிடையாது.

     தெருக்கூத்துகளின் பெண் வேடத்தையும் ஆண்கள்தான் ஏற்று நடித்திருக்கிறார்கள்.

     தெருக்கூத்துகளின் மையப் பொருள், கதைக்கரு என்னவென்று பார்த்தால் புராணக் கதைகள் மட்டும்தான்.

     மகாபாரதத்தின் கர்ண மோட்சம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, நல்ல தங்காள் போன்ற கதைகள்தான்.

     கட்டபொம்மன் எல்லாம் பிற்காலாத்தியது.

     பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், தமிழ் நாடகங்களின் மறுமலர்ச்சிக் காலமாகும்.

     சங்கரதாஸ் சுவாமிகளின் காலகட்டம்.

     பம்மல் சம்பந்தனாரின் காலகட்டம்.

     பரிதிமாற் கலைஞரின் காலகட்டம்.

     இவர்கள்தான் தமிழ் நாடக மூவராகப் பார்க்கப் பட்டனர், போற்றப் பட்டனர்.

     ஆனால் இந்த நாடக மூவர் என்பதே, பொது புத்தியின் கட்டமைப்பு என்கிறார் தமிழ்ப் பல்கலைக் கழக நாடகத் துறையின் முன்னார் தலைவர், பேராசிரியர் மு.இராமசுவாமி அவர்கள்.

     காரணம், சங்கரதாஸ் சுவாமிகள் முறையாகப் பனுவல்களை உருவாக்கிக் கொண்டு, பனுவல்களின் வழி நாடக நடிகர்களைப் பயிற்றுவித்து, அவர்களுக்கான உரையாடல்களைக் கொடுத்து, அவற்றை மனனம் செய்ய வைத்து, ஓயாது பயிற்றுவித்து, மேடையேற்றி, நாடகங்களை உருவாக்கியவர்.


ஆனாலும், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களின் பாடுபொருள், தமிழர்களின் வாழ்வியலைப் பேசவில்லை.

     சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் தமிழில் நடத்தப்பட்டன.

     புதிய புதிய தமிழ்ச் சொற்களைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறார்.

     வடமொழிச் சொற்களுக்கு மாற்றாக, தமிழ்ச் சொற்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

     மேலும், கூத்தை மேடை நாடகமாக மாற்றி, மேடை ஏற்றியிருக்கிறார்.

     ஆனால் கதைகளில் மட்டும் மாற்றமே செய்யவில்லை.

     அதே புராணக் கதைகள்தான்.

     தமிழ் நாடகம்தானே தவிர, தமிழர் நாடகம் அல்ல.

     அதுமட்டுமல்ல, உரையாடல்கள் மிக மிகக் குறைவாகவும், பாடல்கள் மட்டுமே நாடகம் முழுவதும் நிரம்பி வழிந்த காலகட்டம், சங்கரதாஸ் சுவாமிகளின் காலகட்டம்.


அடுத்து பம்மல் சம்பந்தனார்.

     மெத்தப் படித்தவர்.

     பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

     மேலை நாட்டு நாடகங்களைப் பார்த்து, அதன் பாதிப்பில், அதுபோன்ற தமிழ் நாடகங்களை உருவாக்கியவர்.

     கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியரின் மொழிபெயர்ப்பு நாடகங்களாகவே அமைந்திருந்தன இவரது நாடகங்கள்.

     இதுமட்டுமல்ல, கற்றறிந்தவர்கள் காணும் நாடகமாக, மேட்டுக் குடியினருக்கு உகந்த நாடகங்களாக, மேடை நாடகங்களாகவே பம்மல் சம்பந்தரின் நாடகங்கள் அமைந்திருந்தன.


மூன்றாவதாக, பரிதிமாற் கலைஞர்.

     நாடகவியல் என்கிற தன் நூலின் வழியாக, நாடகத்திற்கான இலக்கணங்களை வகுத்துக் கொடுத்தவர்.

     மற்றபடி, நாடகப் பனுவல்களாக, ரூபாவதி, கலாவதி, மான விஜயம் போன்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். இந்நாடகங்களில் பெண் வேடமிட்டும் நடித்திருக்கிறார்.

     இவர் முழுக்க முழுக்க நாடகத் துறையில் மட்டும் இயங்கவில்லை.

     ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்திற்காகவே, தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.

     இருப்பினும், மறுமலச்சிகால மூவேந்தவர்களாக இவர்களின் நாடகங்கள் தமிழில் இருந்தாலும், தமிழர்களுக்கான பெரும் பங்களிப்பை வழங்கிய நாடகங்களாக அமையவில்லை என்பதுதான் உண்மை.

     இவர்களாது காலகட்டம், சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த காலமாக இருந்தபோதிலும், இந்த மூவேந்தர்களின் நாடகங்களிலும், விடுதலைப் போராட்டத்தை முன்னிலைப் படுத்திய கதை அம்சங்கள் இருந்ததில்லை என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள்.

     இருப்பினும், பாஸ்கர தாஸ், விஸ்வநாத தாஸ், கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் இவர்களது நாடகங்களின் இடையிடையே தோன்றி, விடுதலை உணர்வைத் தூண்டும் பாடங்களைப் பாடியிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

     இவர்கள் காலத்திற்குப் பிறகு, நாடகங்களின் கதை வடிவத்திலும், ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது.


1922 ஆம் ஆண்டு, கிருஷ்ணசுவாமி பாவலர் அவர்கள் எழுதிய கதரின் வெற்றி என்ற நாடகம் மேடையேறியது.    

     முழுக்க முழுக்க விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை.

     இந்த கதரின் வெற்றி நாடகம்தான், தமிழில் அரங்கேறிய முதல், சமூக நாடகம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.


இதுபோன்ற சூழலில், 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குகிறார்.

     சுயமரியாதை இயக்கத்திற்காக, பெரியார் அனைத்துத் தளங்களையும் பயன்படுத்தத் தொடங்குகிறார்.

     அரசியல் தளத்தில் மட்டுமல்ல, பண்பாட்டுத் தளத்திலும் இயங்கத் தொடங்குகிறார்.

     சுயமரியாதை இயக்கத்தின் பிறப்பிற்குப் பிறகுதான், கலைத் துறையை, நாடகத் துறையை, இயக்கம் கைப்பற்றவேண்டும், இதன் வழி தங்களுடைய கருத்துக்களைப் பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற சிந்தனை உருவெடுக்கிறது.

     1928 ஆம் ஆண்டில், சுதந்திரப் பேராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே காலத்தில், தேசியக் கட்சிகளின் நோக்கத்திற்கும், பார்வைக்கும் முன்றிலும் எதிராக, மாற்றாக மக்கள் விடுதலையை முன்வைத்தார் பெரியார்.

     மண் விடுதலையா?

     மக்கள் விடுதலையா?

     மக்கள் விடுதலைதான் பெரிது என சுயமரியாதை இயக்கம் முடிவு செய்தது.

     இதன் அடிப்படையில், 1928 ஆம் ஆண்டில் ஒரு நாடகம் அரங்கேறியதாக குறிப்புகள் உள்ளன. நாடகத்தின் பெயர். சந்திர கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி.

     மதுரையில் நடந்திருக்கிறது. நீதிக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சௌந்தர பாண்டியனார் ஆதரவுடன் நடைபெற்றிருக்கிறது.

     இதன் பிறகு, சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை, மக்கள் விடுதலையை முன்வைத்து நாடகங்கள் தோன்றத் தொடங்கின.

     1930 ஆம் ஆண்டில் பங்கஜம் அல்லது பார்ப்பனக் கொடுமை என்றொரு நாடகம், ஆனால் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் பனுவல் உள்ளது.

     அதே ஆண்டில், தீண்டமை விலக்கு என்றொரு நாடகம், தமிழர்களுடைய சுயமரியாதையையும், சாதிய பேதங்களை நீக்கும் முயற்சியிலும் நடத்தப் பெற்றிருக்கிறது.

     இதன் மூலம், ஒரு புதிய நாடக மரபை, ஒரு புதிய நாடகப் போக்கை திராவிட இயக்கத்தவர்கள் தொடங்கி வைத்தனர்.

     இது வளர்ந்தது, இதன் மூலம், ஒரு இயக்கமாக திராவிடர் கழகம் நாடகத்தை கைப் பற்றியது.

     கலைகளின் வழி, கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பதைத் தெளிவாக புரிந்து வைத்திருந்தனர்.

     தமிழ்ப் பல்கலைக் கழக, நாடகத் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் மு.இராமசுவாமி அவர்கள் இதனைக் குறிப்பிடும்பொழுது, பொதுவுடமை இயக்கத்தவர்கள் கூட, இதனை செய்யத் தவறிவிட்டனர் என தன் நூலில் குறிப்பிடுகிறார். மேலும் இந்தியாவிலேயே, நாடகத் துறையினை கலைத்துறையை, தங்கள் இயக்கத்திற்காக, திராவிடர் கழகத்தைத் தவிர, யாருமே பயன்படுத்தவில்லை என்பதையும் பதிவு செய்கிறார்.

     1934 ஆம் ஆண்டில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய இரணியன் என்ற நாடகம் அரங்கேறுகிறது.

     தலைமை தந்தை பெரியார்.

     இன்று நவீன நாடகம் என்று சொல்கிறார்கள், ஆனால் இந்த நவீன நாடகத்தைத் தொடங்கி வைத்தவரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்தான் என்று துணிந்து கூறலாம்.

     ஏன் என்றால், நவீன நாடகம் என்பது, பழைய மரபுகளை உடைத்தெறிந்து, அதன் இலக்கணத்தையும்  மீறி, அதே சமயம் அதன் வடிவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, காலத்திற்கேற்ற சமூகக் கருத்துக்களை புதுத்துவது, பரப்புவது என்பார்கள்.

     இரண்யன் நாடகத்தில், பாரதிதாசன் அவர்கள், அனைத்துப் பாத்திரங்களையும், அதன் பண்பில் இருந்து, குணத்தில் இருந்து, முழுவதுமாய் தலைகீழாய் புரட்டிப் போட்டிருப்பார்.

     நேர்மறைப் பாத்திரங்களை எல்லாம் எதிர்மறைப் பாத்திரங்களாகவும், எதிர்மறைப் பாத்திரங்களை எல்லாம் நேர்மறைப் பாத்திரங்களாகவும் மாற்றியிருப்பார்.

     மறுவாசிப்பு என்று கூறுவார்கள் அல்லவா?

     பக்தபிரகலாதன் நாடகத்தை மறுவாசிப்பு செய்து, இரண்யன் நாடகமாக மாற்றி இருப்பார்.

     இந்த நாடத்திற்குத் தலைமையேற்ற பெரியார்,

     நாடகங்களை அதிக நேரம் நடத்தாதீர்கள். இரண்டில் இருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.

     நாடகம் நாடகமாக இருக்கட்டும்.

     இது சங்கீத சபா கிடையாது.

     உரையாடல்களை முன்னிலைப் படுத்துங்கள்

     அதீத நடிப்பு வேண்டாம்.

     இயல்பாக நடியுங்கள்

என நாடகத்திற்கானப் புதிய இலக்கணத்தை, சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

     இதன் பிறகு நாடகங்களின் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.

---

     காந்திய சகாப்தம் தொடங்கிய பிறகும்கூட, காங்கிரஸ் கட்சியோ, நாடகக் குழுக்களோ, விடுதலை உணர்வைத் தூண்டக்கூடிய அமைப்பாக, இயக்கமாக, நாடகங்களை முன்னெடுக்கவில்லை.

     1942 ஆம் ஆண்டில்தான், காங்கிரஸ் கட்சியினருக்கு இந்த எண்ணம் வந்தது.

     திராவிடர் கட்சியினர் நாடகத்தைக் கைப்பற்றியதால் ஏற்படும் விளைவுகளைக் கண்ட பிறகு, தாங்களும் நாடகத்தைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்தனர்.

    நாடகத்திற்கென்றே ஒரு அணியை உருவாக்கினர்.

    இதன் பயனாக, அதே ஆண்டில், ஈரோட்டில் தமிழ் மாகாண நாடக அபிவிருத்தி மாநாடு எனும் பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினார்கள்.

     இதுதான் தமிழ்நாட்டில் நாடகத்திற்காக நடத்தப்பெற்ற முதல் மாநாடு.

     அனைவரையும் மாநாட்டிற்கு அழைத்தனர்.

     அனைத்து நாடக சங்கங்களையும் அழைத்தனர்.

     மாநாட்டில் இரண்டு தீர்மானங்கள் முன்வைக்கப் பட்டன.

     தமிழ் மரபு மாறாமல் நாடகங்களை நடத்துவது.

     விடுதலை உணர்வோடு கூடிய நாடகங்களை நடத்துவது.

    


அறிஞர் அண்ணா அவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

     மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இரண்டு தீர்மானங்கள் குறித்த, தன் கருத்துக்களையும் முன்வைத்தார்.

     விடுதலை உணர்வோடு கூடிய நாடகங்களை நடத்துவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து எதுவுமில்லை.

     ஆனால், தமிழ் மரவு மாறாமல் என்கிறீர்களே? அதன் பொருள் என்ன?

     புராணக் கதைகளைத்தான் தமிழ் மரபு என்கிறீர்களா?

     அப்படியெனில், நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

     அது தவறு.

     மக்கள் மனதில், சமத்துவத்தை, பெண் விடுதலையைப் பரப்புங்கள்.

     எலும்புக்கூட்டை, பெண்ணாக்கிய கதையை, இன்னும் எத்தனை நாளைக்குத்ததான் நாடகமாகப் போட்டுக் கொண்டிருப்போம்.

     வீட்டு அடுப்படியில், எலும்புக் கூடாய் தேய்ந்து கொண்டிருக்கும் பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய நாடகங்களை இயற்ற வேண்டும், அவற்றை நடத்த வேண்டும்.

     சமத்துவம், சாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, இவற்றை மையமாகக் கொண்ட நாடகங்களைத்தான் நடத்த வேண்டும். அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

     இதன் வழியாகத்தான், தமிழ் நாட்டில் மறுமலர்ச்சியை எற்படுத்த முடியும், சமூயத்தை உயர்த்த முடியும் என முழங்கினார்.

     மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

     மாநாடானது கலகத்தில் முடிந்தது என பதிவுகள் கூறுகின்றன.

---

     விடுதலைக்கு முந்தைய இந்தியாவில், தமிழ் நாட்டில், இரண்யன் உட்பட பல நாடகங்கள், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன.

     ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே, 1948 ஆம் ஆண்டில், நாடகத் தடைச் சட்டம் வந்தது.

     இந்த நாடகத் தடைச் சட்டத்தால், முதன் முதலாகத் தடைசெய்யப் பட்ட நாடகம், இரண்யன்.

     வேதனையாக இருக்கிறது அல்லவா?

     தடையை மீறி நடத்துகிறார்கள்.

     கைது  செய்யப்படுகிறார்கள்.

     நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

     நீதிபதி கேட்கிறார்.

     இந்த நாடகத்திற்குத் தடை இருப்பது தெரியாதா? ஏன் நடத்தினீர்கள்?

     தெரியும், தெரிந்துதான் நடத்தினோம். இதனை அம்பலப் படுத்துவதற்காகவே நடத்தினோம். வெள்ளையர்கள் கூட, எங்களது இந்த நாடகத்திற்குத் தடைபோடவில்லை. சுதந்திர இந்தியாவில் என் தடை போடுகிறீர்கள்?

     பலனில்லை.

     சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

     தண்டனைக் காலம் முடிந்து, சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வரும்பொழுது, பெரியார். அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் முன்னின்று சிறை வாசலிலேயே வரவேற்கிறார்கள்.

     இந்த வரவேற்பு குறித்து, செய்தித் தாள்களில் அறிவிப்புக் கொடுத்து, பெரிய விழாவே எடுக்கிறார்கள்.

     தொடர்ந்து திராவிடக் கழகத்தினரின் நாடகங்கள் முன்னிலும் வேகமாய் அரங்கேறுகின்றன.

விமலா

அல்லது

விதவையின் கண்ணீர்.

என்றொரு நாடகம், விதவையின் மறுமணம் குறித்துப் பேசியது.

தீண்டாமை விலக்கு

தீண்டாதார் யார்?

     இப்படியாக, தமிழ் நாடகத்தை, தமிழர்களுக்கான, சமூக விடுதலைக்கான நாடகக் களமாக மாற்றியதில் திராவிட இயக்கத்தினரின் பெரும்பங்கு வகித்தனர்.

     ஆனால், பின்னாளில், திராவிட இயக்கத்தினர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, நாடகப் பனுவல்கள் எழுதுவதையும், நாடகங்கள் நடத்துவதையும் கொஞ்சம், கொஞ்சமாய் குறைத்துக் கொண்டனர் அல்லது வைவிட்டு விட்டனர்.

     இதன்பிறகு, திராவிட இயக்க நாடகங்களின் நீட்சியாக, தன்னெழுச்சியாக எழுந்த ஆர்வலர்களால், அமெச்சூர் நாடகக் குழுக்கள் அந்தப் பணியைப் பரவலாகச் செய்தனர்.

     பின்னாளில், திராவிட இயக்கத்தினர் இடத்தையும், அமெச்சூர் நாடகக் குழுக்களின் இடத்தினையும், சபாக்களில் நாடகம் நடத்தக் கூடிய, சபா நாடகக் குழுக்கள் கைப்பற்றிக் கொண்டன.

---

கடந்த 13.102024 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

அமைப்பின்

எட்டாம் ஆண்டு தொடக்க விழாவும்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவும் நடைபெற்றது.

தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்


முனைவர் ந.எழிலரசன் அவர்கள்

தமிழர் நாடகங்கள்

எனும் தலைப்பில் அற்புத உரையாற்றி, தமிழர் நாடக வரலாற்றை கண்முன் கொண்டுவந்தார்.

இப்பொழிவிற்குத் தலைமையேற்ற

சிங்கப்பூர், முன்னாள் தமிழ் விரிவுரையாளர்,

ஏடகப் பெரும் புரவலர்


கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள்

தலைமையுரையாற்றி,

தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கம், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஆசிரியர்

முனைவர் இரா.மீனாகுமாரி அவர்கள்

எழுதிய


இலக்கியத்தில் ஆ

எனும் நூலினை வெளியிட்டுச் சிறப்பித்தார்.

பொழிவின் நிறைவில்


முனைவர் இரா.மீனாகுமாரி அவர்கள்

நன்றிகூற பொழிவு இனிது நிறைவுற்றது.

முன்னதாக, பொழிவிற்கு வந்திருந்தோரை

ஏடகப் புரவலர், ஞாயிறு முற்றப் பொறுப்பாளர்


திரு பி.கணேசன் அவர்கள்

வரவேற்றார்.

ஏடகம், சுவடியியல் மாணவர், இந்திய அஞ்சல்துறை அலுவலர்


திரு சு.சரவணன் அவர்கள்

விழா நிகழ்வுகளை

அழகுத் தமிழால் ஒருங்கிணைத்தார்.

 

ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய்

ஏழு ஆண்டுகளை,

ஏழு கடல்களை, ஏழு மலைகளைத்

தாண்டுதல் போல் – ஏழு ஆண்டுகளில்

எழுநூறு தடைகளைப்

புலிப் பாய்ச்சலில், 

தமிழ்ப் பாய்ச்சலில் தாண்டி

ஏடகத்தை

எட்டாம் ஆண்டிற்கு

அழைத்துச் சென்றிருக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களை

வாழ்த்துவோம், பாராட்டுவோம்.

3 கருத்துகள்:

  1. மிக அருமையான, தகவல்கள் பல நிறைந்த கட்டுரைக்கு மிக்க நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
  2. தமிழ் மொழியில் நாடகம் பற்றிய ஒரு சிறிய ஆனால் ஆழ்ந்த ஆய்வினை சிறப்பாக பொழிவு செய்த முனைவர் . எழிலரசன் அவர்களுக்கும் அந்த பொழிவினை மிகவும் அருமையாக பதிவு செய்த அன்பு நண்பருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தகவல்கள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு