15 மார்ச் 2025

ஐந்திணைப் பெருவாழ்வு

 


     குரங்கு.

     மனிதக் குரங்கு.

     மனிதக் குரங்குகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் ஒருவர்.

பெயர் மைக்கேல்.

     ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர்.

     பல மாதங்கள் தொடர்ந்தது இவரது ஆராய்ச்சி.

     மனிதக் குரங்குகள் எல்லா செடிகளையும் கடித்து, மென்று, தன் வாயின் இருபுறமும் அடக்கி வைத்துக் கொண்டு, பின் அசைபோட்டுச் சாப்பிடுவதைத் தொடர்ந்து கவனித்து வந்தார்.

     ஒரு நாள், ஒரு வித்தியாசமானச் செயலை, ஒரு குரங்கு, ஒரு பெண் குரங்கு, அதுவும் கருவுற்ற ஒரு பெண் குரங்கிடம் கண்டார்.

     தொடர்ந்து கவனித்ததில், கருவுற்ற பெண் குரங்குகள் மட்டும் இந்த வித்தியாசமான செயலைச் செய்வதைக் கண்டார்.

     அதாவது, குருவுற்ற பெண் குரங்குகள், ஒரே ஒரு செடியின் இலையை மட்டும், கடித்து, மென்று சாப்பிடாமல், கைகளால் இலையைப் பறித்து, மடித்து, சுருட்டி வாயில் போட்டு, கடிக்காமல், அப்படியே விழுங்குவதைக் கண்டார்.

     ஏன், இந்த ஒரு செடியின் இலைகளை மட்டும் கடிக்காமல், அப்படியே விழுங்குகின்றன என, அந்த இலைகளைப் பறித்து ஆய்வு செய்யத் தொடங்கினார்.

     அந்த இலையில், உணவிற்கான எந்த காரணியும் இல்லை.

     அந்த இலை உணவு அல்ல.

     பின் ஏன் இதை அப்படியே முழுங்குகின்றன.

     ஐந்து ஆண்டுகள் முயன்றார்.

     கண்டுபிடிக்கவே முடியவில்லை.

     இவரது நண்பர், தாவரவியல் ஆய்வாளர் ஒருவரிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

     தாவரவியல் ஆய்வாளர், இவரிடம் அந்த இலைகளைப் பெற்று, மைக்ரோஸ்கோப்பில், அதாவது நுண் நோக்கியில் வைத்து அந்த இலையை ஆராய்ந்து பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார்.

     இலை முழுவதும், கண்களுக்குத் தெரியாத வகையில், சின்னஞ்சிறு அளவில் முள் போன்ற அமைப்புகள் நிரம்பி வழிந்தன.

     முள் இருப்பதால், குரங்குகள், கடித்துச் சாப்பிடாமல், சுருட்டி, அப்படியே விழுங்குகின்றன என்பதைக் கண்டு பிடித்தார்.

     உணவு அல்லாத இலையை, பசியைப் போக்க முடியாத இலையை, முள் இருந்தும் ஏன் விழுங்குகின்றன, அதுவும் கருவுற்ற பெண் குரங்குகள் மட்டும் ஏன் விழுங்குகின்றன?

     மேலும் ஆராய்ந்தார்.

     முடிவு கண்டு வியந்து போனார்.

     அவ்விலையானது, கருவுற்றிருக்கும் பெண் குரங்குகளின் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருத்துவ குணம் கொண்டது என்பதைக் கண்டுபிடித்தார்.

     இதைக் குரங்குகளுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்?

     மனிதனும், தொடக்கத்தில் குரங்குகளைப் போலத்தான் காடுகளில் வாழ்ந்தான்.

     வேட்டையாடி உயிர் வளர்த்தான்.

     தான் வாழும் சூழலை நன்கு அறிந்திருந்தான்.

     எல்லாவிதமான தாவரங்களையும், தாவரங்களின் குணங்களையும் நன்கு  உணர்ந்திருந்தான்.

     இந்த அறிவை மனிதன் காடுகளில் இருந்தவரை, இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவரை மறக்கவில்லை.

     ஓரிடத்தில் நிலையாய் தங்கி, விவசாயம் செய்யத் தொடங்கிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாய் சூழலியல் அறிவை, தாவரவியல் அறிவை மறக்கத் தொடங்கினான்.

---

     ஒரு கன்றுக்குட்டி கழிகிறது.

     வயிற்றுப் போக்கு.

     மருந்தாக இரசாயணப் பொருட்களைக் கொடுக்கவே கூடாது.

     கழிசலுக்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா?

     உண்மை.

     கண்டுபிடிக்கப்படவில்லை.

     ஆனால் நம்மிடம் மருந்து இருக்கிறது.

     கத்திரிக்காயை நெருப்பில் வாட்டிக் கொடுத்தால், அதனுடன் கொய்யா இலையை, கொழுந்து இலையாய்ப் பார்த்து சேர்த்து அரைத்துக் கொடுத்தால் போதும், கழிசல் நிற்கும்.

     ஆனால், இதை அறிவியல் இல்லை என்கிறார்கள்.

---

     250 ஆண்டுகளுக்கும் முன்.

     ஜெர்மனியில் ஒரு மருத்துவமனை.

     இராணுவ மருத்துவமனை.

     மகப்பேறு மருத்துவமனை.

     இம்மருத்துவமனைக்கு, பிரசவத்திற்காக வரும் பெண்கள், அதிக அளவில் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.

     காரணம் தெரியவில்லை.

     இம்மருத்துவமனையில் ஹங்கேரியைச் சார்ந்த ஒரு மருத்துவர் பணியாற்றுகிறார்.

     இக்னஸ்.

     இவர் இப்பிரச்சினையை தீவிரமாக ஆராயத் தொடங்கினார்.

     ஏன் அதிக அளவில் மரணம் ஏற்படுகிறது?

     முதலில் மலேரியாவாக இருக்குமோ என எண்ணினார்.

     மலேரியா என்ற சொல்லுக்கு என்ன பொருள் தெரியுமா?

     கெட்டக் காற்று.

     பின்னர்தான் மலேரியா பரவுவதற்குக் காரணம் கொசுக்கள் எனக் கண்டுபிடித்தனர்.

     அதற்கு முன்பு வரை கெட்டக் காற்று.

    எனவே மருத்துவமனையின் சன்னல்களை எல்லாம் மூடிவைக்குமாறு அறிவுறுத்தினார்.

     பலனில்லை.

     இறப்புகள் தொடர்ந்தன.

     இந்நிலையில், அவரது நண்பர், அதே மருத்துவமனையில் பணியாற்றிய, உடற் கூறாய்வு மருத்துவர் ஒருவர், திடீரென்று இறந்து போகிறார்.

     மகப்பேற்றிற்காக மருத்துவமனைக்கு வந்து இறந்துபோன பெண்களின் உடல்களில் தென்பட்ட அதே அறிகுறிகள், அப்படியே உடற்கூறு மருத்துவருக்கும் இருந்தன.

     யோசித்தார்.

     மகப்பேறு பெண்களையும், இவரையும் இணைக்கக் கூடிய பொதுவானக் காரணி என்ன என்று யோசித்தார்.

     மின்னல் வெட்டியது போல், ஓர் எண்ணம் தோன்றியது.

     அம்மருத்துவமனையில், மருத்துவம் பயிலும் மாணவர்களின் தினசரி செயல்பாடுகள், அவர் மனக்கண் முன் வரிசையாய் வந்து நின்றன.

     மாணவர்கள் தினமும் காலை, உடற்கூறாய்வு அறைக்கு வருவார்கள், கூறாய்வு செயல்முறைகளைக் கற்பார்கள், கூறாய்வும் செய்வார்கள்.

     அடுத்து, கூறாய்வு அறையில் இருந்து நேராக, மகப்பேறு பிரிவிற்குச் செல்வார்கள்.

      பிரசவம் பார்ப்பார்கள்.

     உடற்கூறாய்வுப் பிரிவில் இருந்து, கை உறை அணியாமலும்,கைகளைக் கழுவாமலும் அப்படியே, பிரசவ அறைக்குச் சென்று பிரசவம் பார்ப்பார்கள்.

     250 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர்கள் கையுறை அணிவதில்லை.

     இன்று போல் அன்று கை கழுவும் ஆன்டி செப்டிக் திரவங்களும் இல்லை. கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பதுதான் உண்மை.

     ஜெர்ம் தியரியே தோன்றாத காலம்.

    கை கழுவாததுதான் காரணமாக இருக்குமோ என்று எண்ணினார்.

     மருத்துவ மாணவர்களை அழைத்து, கை கழுவுங்கள் என்றார்.  

     மருத்துவர்கள் கோபம் அடைந்தார்கள்.

     இருப்பினும் தொடர்ந்து வற்புறுத்தினார்.

     வேண்டா வெறுப்பாக மருத்துவ மாணவர்கள் கை கழுவத் தொடங்கத் தொடங்க, மகப்பேறு பெண்களின் இறப்பும் குறையத் தொடங்கியது.

     ஆனால், அக்காலத்திலேயே, வீடுகளின் முகப்பில், வேப்பிலையைக் கட்டி வைத்தவர்கள் நாம்.

     மஞ்சள் தூளைத் தண்ணீரில் கலந்து வீட்டையும், தெருவையும் சுத்தப் படுத்தி சுகாதாரம் பேணியவர்கள் நாம்.

     வெளியில் சென்று, வீட்டிற்குள் நுழையும் முன், கை, கால்களைக் கழுவி சுத்தம் செய்த பின்னரே, வீட்டிற்குள் நுழைந்தவர்கள் நாம்.

---

     இவரும் ஒரு மருத்துவர்தான்.

     தஞ்சையைச் சேர்ந்தவர்.

     கால்நடை மருத்துவர்.

     ஒருமுறை, தஞ்சைக்கு அருகில் இருக்கும் திருக்காணூர்ப்பட்டி என்னும் சிற்றூருக்குச் செல்கிறார்.

     ஒரு உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார்.

     திருக்காணூர் பட்டியில் வசிக்கும், இவரது தந்தையின் நண்பர் ஒருவர், இவரைப் பார்த்ததும், இவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

     அவர் வீட்டு மாட்டைக் காட்டுகிறார்.

     கன்றினை ஈன்ற பிறகும், பால் சுரக்க வழியின்றித் தவிக்கிறது மாடு.

     மடி நோய்.

     மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டுத் திரும்புகிறார்.

     ஆனாலும் இவருக்குள் ஓர் உறுத்தல்.

     எழுதிக் கொடுத்த மருந்தை வாங்குவார்களா?

     முறையாகக் கொடுப்பார்களா?

     மருந்தியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், மருத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை நன்றாக அறிந்தவர்.

     கல்லூரியில் பேராசிரியராகப் பாடம் நடத்துவதற்கும், களத்தில் இறங்கி, நேரடியாக மாடுகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்கும் இடையில் இருக்கும் இடைவெளியையும், முரண்களையும் நன்கு உணர்ந்தவர்.

     யோசிக்கிறார்.

     ஒன்று, இந்த மருத்துவத்தைச் சொல்லிக் கொடுக்கிற எனக்கு, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தெரியாமல் இருக்க வேண்டும்.

     அல்லது மருத்துவத்தில் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்க வேண்டும்.

     குறிப்பாக, மாடுகளுக்கு வரும் மடிநோய்.

     ஊசி போட்டு மருந்துகள் கொடுத்தாலும் பலன் கிடைப்பதேயில்லை.

     காப்பில் பால் வருவதே இல்லை.

     இது நெருடலாகவே இருந்தது.

     இந்நிலையில் மதுரையில், அமெரிக்கன் கல்லூரியில் ஒரு விழா.

     மூலிகை உற்சவம்.

     கடைசி வரிசையில் அமர்ந்து, மூலிகை மருத்துவம் பற்றி, தமிழ்நாட்டின் பெரும் ஆளுமைகள் பேசுவதைக் கேட்கிறார்.

     இவர் மனதில் திடீரென்று ஒரு உணர்ச்சி பொங்கி எழுகிறது.

     ஒரு புரிதல் பிறக்கிறது.

     மூலிகை மருத்துவம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா?

     கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறார்.

     விலங்குகளுக்கும் மூலிகை மருத்துவம் செய்தால் என்ன?

     யோசிக்க, யோசிக்க, இதுநாள்வரை புரியாத பல புதிர்களுக்கு விடை கிடைத்துவிட்ட ஓர் உணர்வு, இவர் உள்ளத்தில் அலை மோதுகிறது.

     யுரேகா, யுரேகா என்று கத்த வேண்டும்போல் தோன்றுகிறது.

     இவரது மனக்கண் முன், மாடுகளுக்கு ஏற்படும் மடிநோய் முன்வந்து நின்றது.

     மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு மூலிகை மருத்துவ முறைகளில் மருத்துவம் பார்ப்பது என்று முடிவு செய்கிறார்.

     சோற்றுக் கற்றாழை ஒரு முழம்.

     உள்ளங்கை வழிய, வழிய இரண்டு கை மஞ்சள் தூள்.

     கொட்டைப் பாக்கு அளவிற்கு சுண்ணாம்பு.

     மூன்றையும் ஒன்று சேர்த்து, அரைத்து, மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிகளில் தடவுகிறார்.

     அதிசயம் நிகழ்ந்தது.

     நாள்கள் செல்லச் செல்ல, மடி வீக்கம் குறையத் தொடங்கியது.

     பால் சுரக்கத் தொடங்கியது.

     மடி நோய்க்கு இதுதான் மருத்துவம், இதுதான் மருத்துவம் என மகிழ்ச்சியோடு முழங்கினார்.

     ஆனால் இவரது சக ஆசிரியர்களும், மற்றவர்களும் இதனை மருத்துவமாக ஏற்கவில்லை.

     அறிவியல் அல்லாத அல்லது அறிவியலுக்கு உட்படாத ஒரு செயலை வலிந்து திணிக்கிறார்.

     இது மருத்துவமே இல்லை என்றனர்.

     சோற்றுக் கற்றாழையை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

     மஞ்சளை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

     இயற்கையாய் கிடைக்கிறது.

     இது மருத்துவமே இல்லை என்று வாதிட்டனர்.

     இருப்பினும், இவர் சொன்னக் கலவையைப் பரிசோதித்துப் பார்த்த, பண்ணையார்கள், இவரது மருத்துவத்தை ஏற்றுக் கொண்டனர்.

     பின்னர், கால் நடை மருத்துவர்கள்கூட, சோற்றுக் கற்றாழை, மஞ்சள், சுண்ணாம்பு தடவிப் பாருங்கள் என போகிற போக்கில் கூறத் தொடங்கினார்.

     ஆனால் இது அறிவியலுக்கு உட்பட்டதா?

     இவரது முயற்சிகளையும், வெற்றிகளையும் கண்டு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், ரூபாய் எண்பது இலட்சம் இதற்காக ஒதுக்கியது.

     ஆய்வு தொடங்கியது.

     சோற்றுக் கற்றாழையை அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து ஆய்வு செய்தார்கள்.

     இம்மருத்துவ முறையினை., கால்நடைகளில் பயன்படுத்தி தரவுகளைச் சேகரித்தார்கள்.

     வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

---

     இந்நிலையில், இவர் தன் ஆய்வு முடிவுகளை, அமெரிக்காவின் பாஸ்டனில் வசிக்கும் நண்பர் ஒருவருக்கு அனுப்பினார்.

     மணிவாசகம்.

     இவர் இம்முடிவுகளைத் தன் நண்பரான ஆஸ்திரிய நாட்டு அறிவியலாளர் ஆண்டன் என்பவருக்கு அனுப்பினார்.

     இவர் உயிரியலோடு வேதியியலும் படித்தவர்.

     40 சர்வதேச நிறுவனங்களுக்கு மருத்துவத் துறையில் ஆலோசகராக இருப்பவர்.

     இன்று AI (Artificial Inteligence) என்று அனைவராலும் அறியப்படும் முறைக்கு முன் இருந்த, Information Flow Analysis  என்னும் முறையின் மூலம், தன்னிடம் இருந்த, ஓராயிரம் டிரில்லியன் டேட்டாவில், கொடுத்து ஆய்வு செய்தார்.

     மூன்று வார ஆய்விற்குப் பின், மணிவாசகத்தை அழைத்தார்.

     யார் இதை உங்களுக்குக் கொடுத்தது?.

     இந்தக் கலவையை யார் செய்தது?

     கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார்.

    சற்றுப் பொறுங்கள் அவரை அழைக்கிறோன் மூவரும் பேசுவோம் என்றார்.

     சூம் இணைய இணைப்பில் மூவரும் இணைந்தனர்.

     அதே கேள்விகளைக் கேட்டார்.

     தஞ்சை மருத்துவர் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.

     இதெல்லாம் ஒன்றுமே இல்லீங்க. இதுபோன்ற ஆயிரக்கணக்கான மருத்துவ முறைகள், எங்கள் பாரம்பரியத்தில் இருக்கின்றன.

     அதனைச் செய்யக் கூடியவர்களும், நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள்.

     ஆஸ்திரிய அறிவியலாளர் வியந்து போனார்.

     சோற்றுக் கற்றாழை போன்ற எதிர் நுண்ணுயிரியை இதுவரை நான் கண்டதில்லை.

     வீக்கத்தைத் தடுக்கக்கூடிய ஆற்றலும் இருக்கிறது.

     இவ்விரண்டையும் விட, நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் இருக்கிறது.

     மலைத்துப் போனார்.

---

     மடி என்பது அடிப்படையில் ஒரு வியர்வை சுரப்பி.

     பால் சுரக்கிற மடி என்பது ஒரு வியர்வை சுரப்பி.

     அது பல இலட்சம் ஆண்டுகளாக, உருவாகி, உருவாகி, உருமாறி, உருமாறி, இன்று அது ஒரு பால் சுரப்பியாக மாறியிருக்கிறது.

---

     இன்று இம்மருத்துவம் இந்தியா முழுவதும், 12 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

     இவரது இம்மருத்துவ முறையால், 100 க்கு 85 மாடுகள் குணமடைகின்றன.

     பல இலட்சம் மாடுகளுக்கு வந்த மடிநோயை இம்மருந்து இன்று விரட்டி அடித்திருக்கிறது.

---

     அடுக்களையில் இருக்கக்கூடிய உணவுப் பொருள்களை அல்லது உணவிற்குக் கூடுதலாக சுவையும், மனமும் சேர்க்கக்கூடிய பல பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, இவர் இன்று கால்நடைகளுக்கான மருத்துவத்தினைச் செய்து வருகிறார்.

     பாட்டி வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

     அன்று எழுதப் படிக்கத் தெரியாத பட்டிகள் எல்லோருமே, நிறைந்த அறிவோடு இருந்தார்கள்.

     காலப்போக்கில் ஏட்டுப் படிப்பை மட்டுமே நம்பியதால் நாம் இழந்தவை அதிகம் என்கிறார் இவர்.

     மருத்துவம் என்றால் என்ன?

     அது எப்படி இருக்க வேண்டும்?

     ஒன்று  எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

     இரண்டு, கட்டுப்படியாகும் விலையில் கிடைக்க வேண்டும்.

     மூன்று, இம்மருந்தைக் கொடுத்தால், இதைச் சாப்பிட்டால், இந்நோய் இவ்வளவு நாளில் சரியாகும் என்ற உத்திரவாதத்தையும் கொடுக்க வேண்டும்.

    இதுவே சிறந்த மருத்துவ முறை என்கிறார் இவர்.

     இவ்வாறான மருத்துவ முறை, நம் மரபு வழி சித்த மருத்துவத்தில் இருப்பதை உணர்ந்து, கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக உழைத்து வருகிறார்.

     இயற்கைப் பொருளையும் மருத்துவத்திற்குப் பயன்படுத்துகிற வாய்ப்பை, அரசு மற்றும் பல்கலைக் கழகங்கள் வழங்க வேண்டும் என்கிறார்.

     நம் முன்னோர்களால், காலம் காலமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த அறிவின், ஒரு துளியை எடுத்து, அதன் சாரத்தைத்தான், தான் பயன்படுத்தி வருவதாகவும், அடக்கமுடன் கூறுகிறார்.

இவர்தான்

மருத்துவர்

கால்நடை மருத்துவர் ந.புண்ணியமூர்த்தி.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்

கடந்த 9.3.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை

தஞ்சாவூர், இந்தியச் செஞ்சிலுவைச் சங்க


குறள்நெறிச் செல்வர் கோ.ஜெயக்குமார் அவர்கள்

தலைமையில்,

சென்னை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக

மேனாள் பேராசிரியர்


மருத்துவர் ந.புண்ணியமூர்த்தி அவர்கள்

ஐந்திணைப் பெருவாழ்வு

என்னும் தலைப்பில்

சொற்பெருக்காற்றி அமர்ந்தபோது,

ஏடக அரங்கு முழுவதும் ஓர் அமைதி.

நம் முன்னோர்களின் அறிவியல் அறிவை, தாவர அறிவை,

மருத்துவ அறிவை உணர்ந்ததால், தங்களையும் அறியாமல் ஏற்பட்ட

ஓர் அமைதி.

இவற்றையெல்லாம் மறந்துபோனோமே என்ற

தவிப்பால் ஏற்பட்ட அமைதி.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக, சுவடியியல் மாணவி


திருமதி ந.டானியா அவர்கள்

நன்றிகூறத்

தொடங்கியதும் இந்த அமைதி கலைந்தது.

முன்னதாக, பொழிவு கேட்க வந்திருந்தோரை

ஏடகப் பொறுப்பாளர்


புரவலர் திரு பி.கணேசன் அவர்கள்

வரவேற்றார்.

தஞ்சாவூர், கிரசண்ட் மெட்ரிக் மேனிலைப் பள்ளி

நிருவாக அலுவலர்


திருமதி க.பத்மாவதி அவர்கள்

விழா நிகழ்வுகளை எழிலுறத் தொகுத்து வழங்கினார்.

என்ன இல்லை

மரபு வழி மருத்துவத்தில்.

எல்லாம் இருக்கிறது

எல்லாம் இருக்கிறது – என

ஓங்கி உரைத்து

உரத்து முழங்கை வைத்த

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம் வாழ்த்துவோம்.