தமிழ்ப் புத்தாண்டு எது?
என்று தொடங்குகிறது?
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?
அரசு ஆணையிட்ட போதிலும், தையா? சித்திரையா? என்ற வாதப் பிரதிவாதங்கள் முடிவிற்கு வந்தபாடில்லை.
ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவும் இல்லை.
இன்றைய வழக்காறுகள், இலக்கண, இலக்கிய, நிகண்டுகள்
மற்றும் கல்வெட்டுகள் தரும் காலக் குறிப்புகளை முன்னிறுத்தி, ஒருவர் தமிழ்ப் புத்தாண்டு
இதுதான் என அறிவித்துள்ளார்.
இவரது ஆய்வு முடிவின்படி,
தமிழ்ப் புத்தாண்டு, தையும் அல்ல,
சித்திரையும் அல்ல,
பிறகு?
ஆவணிதான்
தமிழ்ப் புத்தாண்டு.
ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்கிறார்.
இது என்ன புதுக் கதையாக இருக்கிறது?
ஆவணியா?
அது எப்படி?
கேள்வி எழுகிறதல்லவா?
வாருங்கள் பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள பழைய கல்வெட்டுகளில், பொதுவாகக்
காணப்படும் தொடராண்டுகளின் பெயர்கள் என்ன தெரியுமா?
கள,
சகம், கொல்லமாண்டு.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள,
அனைத்துத் தமிழ் கல்வெட்டுகளிலும், முகம் காட்டி நிற்பது கொல்லம் ஆண்டுதான்.
தமிழ்நாடு அரசின், தொல்லியல் துறையால் வெளியிடப் பெற்றுள்ள, கன்னியாகுமாரி மாவட்ட தொல்லியல்
கையேடானது, கேரளாவில் உள்ள, கொல்லம் என்ற இடத்தின் பெயரில் இருந்து, கொல்லமாண்டு என்னும்
பெயர் தோன்றியதாக அறிவிக்கிறது.
ஸ்வஸ்தி
ஸ் ரீ கொல்லம் தோன்றி 148 ஆம் ஆண்டு துலாத்தில் வியாழன் நிற்க… என்று பத்தாம் நூற்றாண்டைக்
குறிப்பிடும், மாம்பள்ளிச் செப்பேடுதான்
(Mamballi Copper Plates) கொல்லமாண்டைக் குறிக்கும் முதல் ஆவணமாகும்.
கி.பி.12 ஆம் நூற்றாண்டில் இருந்தே கல்வெட்டுகளில்
கொல்லமாண்டு இடம் பெறுகிறது.
கொல்லம்
துடங்கி,
கொல்லம் தோன்றி,
கொல்லமழிந்த ஆண்டு என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
தமிழ் மாதங்கள் இருப்பதைப் போலவே, கேளராவிலும்,
கேரள மாதங்கள் இருக்கின்றன அல்லவா?
அம்மாதங்கள் என்ன என்று தெரியுமா?
சனவரி மாதம் 14 அல்லது 15 தேதிகளில் தை மாதம்
தொடங்குகிறது.
அதைப் போல, ஒவ்வொரு கேரள மாதமும் நடைமுறையில்
இருக்கும் பொழுது, அதே சமயத்தில், தமிழில் நடைமுறையில் இருக்கும் தமிழ் மாதம் என்ன
தெரியுமா?
சிங்கம் (ஆவணி)
கன்னி (புரட்டாசி)
துலாம் (ஐப்பசி)
விருச்சிகம் (கார்த்திகை)
தனு (மார்கழி)
மகரம் (தை)
கும்பம் (மாசி)
மீனம் (பங்குனி)
மேடம் (சித்திரை)
இடவம் (வைகாசி)
மிதுனம் (ஆனி)
கற்க்கடகம் (ஆடி)
இவைகள்தான் கேரள மாதங்கள்.
இவையெல்லாம் ஜாதகங்களின் வழி, நாம் நன்கு அறிந்த
பெயர்கள்தான்.
ஜாதகக் கட்டங்களின், இராசிகளின் பெயர்கள்.
ஆனால், இவையெல்லாம் கேரள மாதங்களின் பெயர்கள்
என்பதுதான் நமக்குத் தெரியாது.
இக்கணக்கு முறை காட்டுவது, கொல்லமாண்டின் சுழற்சி
கணக்கைத்தான்.
ஆவணியில் தொடங்கி, ஆடியில் முடிகிறது.
இந்த கொல்லமாண்டை, நாம் இன்று பயன்படுத்தும்
கிரிகோரியன் ஆண்டிற்கு மாற்ற, கொடுக்கப்பட்ட ஆண்டுடன் 824 அல்லது 825 ஐக் கூட்ட வேண்டும்.
ஆவணியில் தொடங்கி, ஆடியில் முடியும் இந்த சுழற்சி
முறையைத்தான், பழந்தமிழர் ஆண்டின் தொடக்கம் என்று, தன் தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார்
நச்சினார்க்கினியர்.
காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய
சிங்கவோரை
முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக வோரையீறாக
வந்து
முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின்
கொல்லம்
ஆண்டின் தொடக்கம் குறித்து, தொல்காப்பியம்
தெய்வச்சிலையார் உரையும் குறிப்பிடுகிறது.
கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்
படுதலின் குமரியாற்றிற்கு வடகரைக்கண்
அப்பெயரானே கொல்லம் எனக் குடியேறினர்.
இடைக்காலத்தில்,
சேரநாட்டின் கொல்லம் நகர் கடலால் விழுங்கப்
பெற்றது என்றும், பிறகு கடல் உள் வாங்கியதால், ஏற்பட்ட ஒரு புதிய நிலப்பரப்பில், ஒரு
புதிய நகரை உருவாக்கி, அதற்குக் கொல்லம்
என்றே பெயரிட்டனர்.
இப்புதிய கொல்லத்தில் மக்கள் குடியேறிய காலம்
முதல், கொல்லம் ஆண்டு என்ற தொடர் ஆண்டு, கேரள மக்களால் பின்பற்றப்பட்டது என்கிறது தேய்வச்
சிலையார் உரை.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், காலங்களை வரிசைப்
படுத்துகிறது ஒரு நூற்பா.
காரும் மாலையும் முல்லை
முதற்பொருளாகிய நிலத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,
காலத்தின் அடிப்படையில் முல்லையை முதன்மையாக வைத்தார்.
கார்
காலத்தின் தொடக்கம் ஆவணி.
ஆவணி.
தமிழர்கள் இன்று, தமிழாண்டின் தொடக்கமாகச் சித்திரையைக்
கொண்டாடிவரும் வேளையில், தொல்காப்பியர் ஏன், கார்காலம் என்று ஆவணியில் தொடங்குகிறார்
என்ற கேள்வி எழுகிறதல்லவா?
காரும மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
ஞாயிற்றின் ஆட்சி வீடாகிய சிங்கவோரை முதல் (ஆவணித்
திங்கள்), திங்களின் ஆட்சி வீடாகிய கற்கடவோரையின் இறுதி (ஆடித் திங்கள்) வந்து முடியும்
வரை ஓர் ஆண்டாகும்.
இதனை முறையாக ஆறு பருங்களாகப் பகுத்து, ஒவ்வொரு
பருவத்திற்கும், இரண்டு இரண்டு மாதங்களை உரியதாக்கினார் என்கிறார் நச்சினார்க்கினியர்.
மேலும் ஞாயிற்றைக் கொண்டே காலம் வரையறுக்கப்பட்டதால்,
காலவுரிமை எய்திய ஞாயிறு என்றும் குறிப்பிடுகிறார்.
கார்காலம் – ஆவணி, புரட்டாசி
கூதிர் காலம் – ஐப்பதி, கார்த்திகை
முன்பனிக் காலம் – மார்கழி, தை
பின்பனிக் காலம் – மாசி, பங்குனி
இளவேனில் காலம் – சித்திரை, வைகாசி
முதுவேனில் காலம் – ஆனி, ஆடி
மேற்கண்டவாறு, நச்சினார்க்கினியர் வழங்கும் இந்த
உரை விளக்க முறையே, பழந்தமிழர் ஆண்டின் தொடக்கம் ஆவணி என்பதை உறுதியாகக் கூறுகிறது.
இதுமட்டுமல்ல,
ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவின திங்கள்
எண்ணினர் கொளலே
என்கிறது,
ஒன்பதாம் நூற்றாண்டில் சேந்தன் திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம் –தெய்வப் பெயர் தொகுதி- 134.
ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவிய திங்கள்
எண்ணினர் கொளலே
என்று
மீண்டும் உரைக்கிறது, பத்தாம் நூற்றாண்டில் எழுதப் பெற்ற பிங்கல நிகண்டு.
ஆவணியே ஆதி மற்று இரண்டு இரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின்
வாய்ந்த பேராம்
என்கிறது
பதினாராம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற சூடாமணி
நிகண்டு.
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான, சிலப்பதிகாரத்தில்,
இளங்கோவடிகள், கார், கூதிர், முன்பனி, பின்பனி,
இளவேனில், முதுவேனில் என்ற வரிசையில்தான் ஆறு வகைப் பருவங்களில் மதுரை மாநகரில்
வாழ்ந்த இளம்பெண்களின் செயல்பாடுகளை விவரிக்கிறார்.
இவ்வாறாக, பல நூற்றாண்டுகளாக, ஆவணியை முதன்மை
மாதமாகக் கொண்டிருந்த தமிழர்களின் மாதக் கணக்கை மாற்றி அமைக்கத் தொடங்கியவர்கள் விஜயநகர
அரசர்கள்தான்.
விஜயநகர
அரசர்களின் ஆட்சிக் காலத்தில்தான் கோயில் கல்வெட்டுகளில் பிரபவ என்பதில் தொடங்கி அட்சய
என்பதில் முடியும், வடமொழிப் பெயர்கள் கொண்ட அறுபது வியாழ வட்ட ஆண்டுக் கணக்கீடு, கல்வெட்டுகளில் மிகுதியாகப் பரவத் தொடங்கியது.
இதனால், விஜயநகர அரசர்களின் காலத்திற்கு முன்,
அதாவது பதினாறாம் நூற்றாட்டு வரை, ஆவணியைத்தான் தமிழர்கள் ஆண்டின் தொடக்கமாக கொண்டிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது என்ற தன்
ஆய்வு முடிவினை, முன் வைக்கிறார் இவர்.
---
தமிழ்ப் புத்தாண்டு
சர்ச்சைகளும் தீர்வுகளும்
பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட ஒரு நூல்.
நாட்காட்டியின் கண்டுபிடிப்பில் தொடங்குகிறது
இந்த நூல்.
வரலாற்று
ஆய்வாளர் என்பவர், உண்மைக்கு மட்டுமே உண்மையாளராக இருக்கவேண்டும். ஏனெனில், உண்மைதான்
வரலாற்றின் தாய். வரலாறுதான் அருஞ்செயல்களை ஆவணப்படுத்தி அடைகாக்கிறது. தெளிவின்மையின்
எதிரி, கடந்த காலத்தின் சாட்சி, எதிர்காலத்தின் இயக்குவிசையும்கூட என்கிற அம்பேத்கர் அவர்களின் கூற்றையும், மேற்கோளாய்
சுட்டிக்காட்டி, அம்பேத்கர் காட்டிய வழியில் ஆய்ந்து, தொடராண்டு, சூழற்சியாண்டுக் கணக்குகளின்
நிறை, குறைகள், தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களில் தமிழ் மாதங்கள் எனப் பயணித்து, ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற
முடிவிற்கு வருகிறார் இந்நூலாசிரியர்.
அம்பேத்கரின் இந்த வரலாற்றுப் பார்வையில், இந்நூலின்
கட்டுரைகளையும், இக்கட்டுரைகள் தரும், தரவுகளையும், விருப்பு, வெறுப்பின்றிச் சீர்தூக்கிப்
பார்க்கும் அனைவரும், இந்நூலில், தான் எடுத்த முடிவு சரி என்பதை உணர்வார்கள் என்ற தனது
நம்பிக்கையினையும், பெருமகிழ்வோடு குறிப்பிடுகிறார்.
தைத் திங்கள் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடிக்
கொண்டு இருப்பவர்களையோ அல்லது சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிக்
கொண்டிருப்பவர்களையோ, புத்தாண்டு குறித்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளச் சொல்வது பலனளிக்காது
என்பதையும் இவர் உணர்ந்தே இருக்கிறார்.
It is always difficult to change a Calendar
towhich people are used. Because it affects social practices என்று 1953 ஆம் ஆண்டில், அன்றைய இந்தியப்
பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள், தொலைநோக்குப்
பார்வையோடு குறிப்பிட்டதை நினைவுகூரும் இவர்,
தமிழ்
ஆண்டின் தொடக்கம் குறித்தானத் தன் ஆய்வை, ஆராய்ந்து, தமிழ் ஆண்டின் தொடக்கம் குறித்த
உண்மைத் தமிழ் மரபு எது என்பதைப் புரிந்து கொண்டாலே போதும், என்னளவில், அதுதான் இந்நூலின்
வெற்றி என்கிறார்.
தன் நூலின் இறுதியில் முடிவுரையினையும், தமிழக
அரசிற்கு இரண்டு பரிந்துரைகளையும் முன்வைக்கிறார்.
தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்
இந்நூலாசிரியர், திருச்சியைச் சேர்ந்தவர் எனினும்,
கடந்த 35 ஆண்டுகளாக, அமெரிக்காவில் வசித்து வருபவர்.
தமிழ் மொழி ஆர்வலர், ஆய்வாளர், எழுத்தாளர், இதழாளர்.
நிர்வாகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
அமெரிக்காவின், ஓக்லஹோமா மாநில அரசில் திட்ட
ஆய்வாளராகப் பணியாற்றியவர்.
தமிழ் இலக்கியம், பெரியாரியம், அறிவியல் மாற்றும்
தொழில் நுட்பம் சார்ந்த 12 நூல்களின் ஆசிரியர்.
தற்பொழுது,
தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் பன்னாட்டு அமைப்பின் செயலாளராகவும், தமிழ் மரபு அறக்கட்டளையின் திணை இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர்தான்,
இவரது
நூல்
படித்துப்
பாருங்கள்
தெளிவு
பிறக்கும்.
நூல்
வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்,
விலை ரூ.250
மின்னஞ்சல்
mythforg@gmail.com