22 நவம்பர் 2025

மகாகவி மறைந்தார்

 


ஒருநாள்

என் தாயிடம் எல்லா எழுத்துகளும்

கோரிக்கை வைத்தன.

எங்களிடம்

குழந்தையைக் கொடுங்கள்.

கவிஞனாக நாங்கள் வளர்த்துத் தருகிறோம் என்று.

 எனக்கு ஏழு வயது இருக்கும்போது

எழுத்துக்களை அழைத்து, என்னைக் கொடுத்துவிட்டுப்

போய்விட்டாள் என்னைப் பெற்றெடுத்தவள்.

     எழுத்துக்கள் இவரைக் கைப் பிடித்து அழைத்து வந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் சேர்த்துவிட்டன.

ஏழு வயதில் நான்

இழந்த தாயைப்

பதினெட்டு வயதில்

கரந்தையில் பெற்றேன்.

     என கரந்தையையே, தன் தாயாகப் போற்றியவர் இன்று இல்லை.

     பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் பழகி, ஒரு சமயம் ஒரு குவளைத் தண்ணீரைப் போலவும், ஒரு சமயம் ஒரு குவளைத் தேநீரைப் போலவும், அவர் அருகே இருந்து, அவர் பிடிக்கும் சுருட்டின் புகையாய் வெளிவந்தவர் இன்று இல்லை.

புத்தரும் பெரியாரும்

என்

அறிவு நரம்புகளில்.

மகாவீரரும் இராமாநுசரும்

என்

இரத்த அணுக்களில்.

 

உறிஞ்சப்படுபவன்

ஒரிசாவில் இருந்தாலும்

உள்ளூரில் இருந்தாலும் அவன் என்

தோழன்.

 

அபகரிக்கப்பட்ட வைகறைக்காக

ஆர்த்தெழுபவன்

ஆப்பிரிக்காவில் இருந்தால் என்ன?

ஈழத்தில் இருந்தால் என்ன?

அவன் என் வர்க்கம்

என உரத்து முழங்கியவர் இன்று இல்லை.

     எளியேனான என்மேல் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். அன்பைப் பொழிந்தவர்.

     என் தந்தை படுக்கையில் வீழாமல், பாயில் முடங்காமல், திடீரென்று மறைந்தபோது,

வருந்துகிறேன் ஜெயக்குமார்.

ஒளியாக

உங்கள் தந்தை – என்றும்

உங்கள்

உள்ளத்திருப்பார்

என்று வார்த்தைகளால் அரவணைத்தவர் இன்று இல்லை. என் தாய் மறைந்த போது,

அன்புத்தாய் அகன்றுபோனதாய்க்

கவலையில் ஆழும் ஜெயக்குமார்.

அத்தாய் இதுவரை

அகத்தும், புறத்துமாய் இருந்தார்.

இப்போதோ

அகத்தாயாகி, அகலாதுள்ளார்.

உங்கள்

நெஞ்சில், நினைவில்

நீங்காதிருப்பார்.

விளக்கின் கதை முடியலாம்

வெளிச்சத்தின் வாழ்வு

முடிவதில்லை.

ஆறுதல் பெறுக

அன்னை வாழ்த்துவார்

என ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தியவர் இன்று இல்லை.

அவர் எழுத்தாணி

கிடைக்குமா எனக்கு?

காலக் குளத்துக்குள்

கண்மூடிக் குதித்துப் பார்த்தால்

கையில் அகப்படுமா?

என வள்ளுவரின் எழுத்தாணியைத் தேடியவர், இன்று காலக் குளத்துக்குள் முழுமையாய் மூழ்கி, வள்ளுவரையேத் தேடிப் போய்விட்டார்.

கவி, மகாகவி,

கல்லூரிப் பேராசிரியர், மொழி பெயர்ப்பாளர், உரை வீச்சாளர்,

கட்டுரையாளர், திரைப்படப் பாடலாசிரியர், செய்தி வாசிப்பாளர்,

ஓவியர், வர்ணனையாளர், இதழாளர்,

ஆய்வறிஞர், திராவிடம், பெரியாரியம், மார்க்சியம், தேசியம்

தமிழ் உணர்வு

உலக மானுடப் பற்றாளர்


மகாகவி ஈரோடு தமிழன்பன்

இன்று இல்லை.

நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து போய்விட்டார்.

ஒளியாய்,

எழுத்தாய்,

கவிதையாய்

என்றும், என்றென்றும் அகலாது

நம் உள்ளத்திருப்பார்.