25 ஜூலை 2026

தகளி

      தகளி

     இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் ஒரு பெரும் கிளர்ச்சியை, எழுச்சியை உண்டாக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

     நூலின் முதல் பக்கத்தில் நுழைந்ததுமே, தெரிந்துவிட்டது, இந்நூல் படிப்பவர்களின் வாழ்வியலை மாற்றி, நெறிப்படுத்தத் தோன்றிய அற்புத வழிகாட்டி நூல் என்பது புரிந்துவிட்டது.

     வாழ்வே ஒரு பயணம்தானே.

    இந்த வாழ்வியல் பயணத்தின் நோக்கம், தன்னை அறியத் தலைப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறது இந்த நூல்.

     அதே சமயம், எந்த ஒரு வாழ்வியலும் அனைவருக்கும் பொருந்தியதாக இருக்க முடியாது என்றும், ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், அவர்களின் அகச்சூழல் மற்றும் புறச்சூழல் சார்ந்துதான் அமையும் என்றும், எது வேண்டும் என்பதைவிட, எது வேண்டாதது என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

     பாரம்பரியம், மரபு, பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில், நான் இப்படித்தான் நடந்து கொள்வேன், நீயும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது தவறு என்று, சற்று தயங்காமல் அடித்துச் சொல்கிறது இந்த நூல்.

     பண்பாடு, கலாசாரம், இனம், மொழி, இவற்றை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது உயர்வானதாகத்தான் தோன்றும். ஆனால் சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால், இது ஒரு அதிகார அமைப்பின் சல்லடைத் தன்மை என்பது புரியும்.

     அதாவது, தனக்குத் தேவையான ஒரே மாதிரியான மனிதர்களை மட்டும் சல்லடை போட்டு சளித்துத் தக்கவைத்துக் கொண்டு, மாற்றுக் கருத்து கொண்டவர்களை, பிரித்து எடுத்து, வெளியேற்றிவரும் அபாயகரமான முறையாகும்.

     எல்லாம் தலைவிதி என ஏற்றுக் கொள்வதையும், வழிபாடு அனைத்தும் மூட நம்பிக்கைச் சார்ந்ததே என்பதை விரிவாய் விளக்குகிறது இந்த நூல்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

எனும் பூதத்தாழ்வாரின், திருவந்தாதிப் பாடலை முன்னிறுத்தும் இந்நூல், சமயங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்றும், தேடலே வாழ்க்கையின் இனிமை என்றும், எதையும் சகித்துக் கொள்ளுதல் தீர்வல்ல, போராட்டமே தீர்வு என்றும் உணர்த்துகிறது,

     மேலும், பொது ஒழுங்கையும், இயற்கையுடன் இணைந்து வாழ்தலையும் வலிவுறுத்துகிறது.

     தகளி வாழ்வியல் முறையில், நாளாந்த செயற்பாட்டியல் முறைகளையும், உணவு முறைகளையும், யோகாசன முறைகளையும் விரிவாய் விளக்குகிறது இந்த நூல்.

     தமிழர் சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவான வர்ம மருத்துவம் பற்றி, இதுநாள் வரை நாம் அறியாத பல செய்திகளை விரிவாய், விளக்கமாய் எடுத்துரைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது இந்த நூல்.

---

     இந்நூலினைப் படிக்கப் படிக்க, என்னுள் மற்றுமொரு பெரு வியப்பினை ஏற்படுத்துகிறார் இந்த நூலின் ஆசிரியர்.

     இவர், தமிழக அரசின் வருவாய் துறையில், ஒரு பெரும் பொறுப்பில் நீண்ட காலம் அயராது பணியாற்றியவர். அதுவும், இரவு, பகல் பாராது பணியாற்றிய பெருமைக்கு உரியவர்.

     வாழ்வியல் நெறியாம் தகளியை அறியவும், அதில் ஆழ்ந்த புலமை பெறவும், வர்மத்தை விரல் நுனியில் கொண்டு வரவும், அம்முயற்சியில் ஆழங்கால்பட்டு, சிறந்த அனுபவசாலியாய், ஒரு ஞானியைப் போல் உயரவும், இவருக்கு எப்படி நேரம் கிடைத்தது என்று எண்ணி எண்ணி வியக்கிறேன்.

     நாம் அனைவருக்கும் உள்ளதைப் போல், நாள் ஒன்றுக்கு, இவருக்கு இருபது நான்கு மணி நேரம்தானே.

      மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை உணர்ந்து, ஒவ்வொரு நாளும் கிடைக்கும், சொற்ப ஓய்வு நேரத்தையும், தகளிக்காக முழுமையாய் செலவிட்டிருக்கிறார்.

     பணி ஓய்வு பெற்றபிறகு, தகளியே, தன் வாழ்வு என முற்றாய், முழுதாய் இறங்கிச் சேவையாற்றத் தொடங்கிவிட்டார்.

     நல்லோர் ஒருவர் கையில், வாழ்வியலும், வர்மமும் வசப்படுவது, நாம் பெற்ற பேறு

,


சித்தவர்மாணி எஸ்.சமத்துவராஜன்



ஒளிரும் தகளி

தகளி என்றால் அகல் விளக்கு.

நம் வாழ்வில் ஒளியேற்ற வந்திருக்கும் பெரு விளக்கு இந்நூல்.