20 ஜூன் 2013

கரந்தை - மலர் 13


------ கடந்த வாரம் ------
ஏழூர் திருவிழாவானது சிறக்கப் பல்லாற்றானும் பாடுபட்ட பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்
-------------------------

இராதாகிருட்டினன் மறைவு

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பெருமையினைப் பெற்றமையால், சங்கம் நிறுவிய துங்கன் எனப் போற்றப் பெற்றவர் இராதாகிருட்டினன். தன் முயற்சியால் தோன்றிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்விதப் பதவியினையும் ஏற்காமல், அடிப்படை உறுப்பினராய் இருந்து பெருந்தொண்டாற்றிய பெருமைக்கு உரியவர் இவர். சங்கம் வளர உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதுதான் முதற் படி என்பதை உணர்ந்த இராதாகிருட்டினன், தான் பணியாற்றிய தனுக்கோடி அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றும் சக அலுவலர்களையும், தனுக்கோடியின் வணிகர்களையும், ஒப்பந்தக் காரர்களையும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாக்கினார்.

    தன் மனைவி செண்பக வள்ளி அம்மாள் அவர்களையும், 1916 ஆம் ஆண்டிலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினராக்கினார். இராதா கிருட்டினனின் மனைவி செண்பக வள்ளி அம்மாள் அவர்கள்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையினைப் பெற்றவராவார.
 
இராதாகிருட்டினன்
     இத்தகு பெருமை வாய்ந்த சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன், அவர்கள், 27.2.1918 அன்று தனது 33 ஆம் வயதில் அகால மரணமடைந்து, அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்றார்.
 
அரங்க. வேங்கடாசலம் பிள்ளை
             என்றிளைய  பருவத்தே  எழுந்துநின்  னட்பம்மா
             அன்றுமுதல்  யாமெய்துஞ்  சீரெல்லாம்   அதன்பயனே
             நன்றுதரும்  நண்பாவோ  நண்பாவோ  நண்பாவோ
             ஒன்றுளத்து  நினையன்றெம்  மூக்கமதே  யிழந்தனமே

             வள்ளுவர்தம்  திருநாளே  நின்னாளா  மாண்புற்றோய்
             ஒள்ளியசீர்  நின்மக்கள்  உன்புகழை  ஏந்துவரால்
             நள்ளிய  நின்காதலியை,  நம்முன்னை  நண்பர்களை
             விள்ளரிய  துயரடக்கிப்  பொறுமைகொள வேண்டுதுமே

என்று அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களும்,
 
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
             மதிவலி  யானே  பதிநலம்  பேணினை
             நவிறொறு  நூனயம்  போலத்  தவிரா
             வின்பு சுரக்க  வியைந்த  கேண்மையி
             னட்டனை  மன்னே  முன்னே  யெம்மொடு
             விட்டனை  யினியாம்  விழுமங்  கூர
             இனையை  யாகலின்  இராதா  கிருட்டின
             ஒளியு  மிருளும்  போல
             அளியகண்  டேமிவ்  வகனில  வாழ்க்கையே

என்று பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும்,
 
இராமசாமி வன்னியர்
            சீரார்  கரந்தைத்  திருப்பதியி  லங்குரித்த
            பேரா  ரிராதா  கிருட்டினப்பேர்  பெற்றவனே
            ஏராரு  நின்புகழை  யிவ்வுலகி  லேநிறுத்தி
            நீரார்  சடைமுடியோன்  நீள்கழல்சென்  றுற்றனையே

            தீந்தமிழி  லாங்கிலத்திற்  றேர்ச்சிபெறு  நுண்ணறிவாய்
            ஏய்ந்த  கரந்தை  யெழிலார்  தமிழ்ச்சங்கம்
            வாய்ந்த  புகழ்பரவ  மன்னுவித்தா  யக்கழகம்
            பாய்ந்து  பெருகுவதைப்  பாராது  சென்றனையே

என்று கூடலூர் வே. இராமாசாமி வன்னியர் அவர்களும் கையறு நிலைச் செய்யுட்களைப் இயற்றி இராதாகிருட்டினன் பிரிவு தாளாது துயருற்றனர்.

இராதாகிருட்டினன் கழகம்

     சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில கலாசாலையில், அதன் தலைமையாசிரியரும், இராதாகிருட்டினனின் ஆருயிர் நண்பருமான கவிஞர் அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்களால், இராதாகிருட்டினன் கழகம் தோற்றுவிக்கப் பட்டது.

     தமிழ் மொழியில் மாணவர்கள் தேர்ச்சியுறுவது போல், ஆங்கிலத்திலும் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில், இக் கழகத்தின் சார்பில், ஒவ்வொரு திங்கட் கிழமையும், ஒரு கூட்டம் கூட்டப் பெற்றறு, இக்கூட்டத்தில், கட்டுரை வரைதல், பேசப் பழகுதல், செய்யுள் இசைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பெற்றன.

இராதாகிருட்டினன் படத் திறப்பு

     இராதாகிருட்டினப் பிள்ளையின் மறைவினைத் தொடர்ந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவானது ஒத்திவைக்கப் பட்டது.

      எனவே 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு மற்றும் எட்டாம் ஆண்டு விழாக்கள் சேர்ந்து, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய இரு நாட்கள் கொண்டாடப் பெற்றன.

      முதல் நாள் விழாவின் போது 24.5.1919 இல், கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்டு, தண்டமிழ்த் தொண்டின் வழிதுறை காட்டிய பெருந்திருவாளர் இராதாகிருட்டினனின் நண்பர்களால், சங்கத்திற்கு உதவப்பெற்ற, இராதாகிருட்டினனது, திருஉருவப் படம், உயர்திரு ஞானியார் சுவாமிகளால் திறந்து வைக்கப் பெற்றது.

தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய இரு நாட்களில் கொண்டாடப் பெற்ற, ஏழு மற்றும் எட்டாம் ஆண்டு விழாவின் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே என்னும் தீர்மானம் இயற்றப் பெற்றது.

      தமிழ் மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர் தனிச் செம்மொழியென உறுதிபட, பல திறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார், தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றி, தமிழ் உயர் தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத் தென்னாட்டுப் பல்கலைக் கழகத்தில், அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள் என்ற தீர்மானம் இயற்றப்பட்டது. இத் தீர்மானமானது, சங்க உறுப்பினர்களான, திரு டி.எஸ்.சபாபதி பிள்ளை அவர்களால் முன்மொழியப்பட்டு, திரு எம். அப்பாவு முதலியார் அவர்களால் வழி மொழியப் பட்டது.

     இத்தீர்மானமே தமிழ் மொழியை உயர் தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று, அமைப்பு ரீதியாக இயற்றப்பெற்ற முதல் தீர்மானமாகும். இத் தீர்மானமானது, சென்னைப் பல்கலைக் கழகத் தலைவர் அவர்களுக்கும், துணைத் தலைவர் அவர்களுக்கும், சென்னை ஆட்சி அமைச்சர் அவர்களுக்கும் முறைப்படி அனுப்பப் பட்டது.

1919 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பிய  கடிதம்


     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழாவானது, 21.8.1920 அன்று திருவாளர் எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, எவ்வளனும் இனிது வாய்ந்துள்ள தமிழ் மொழியை, உயர் தனிச் செம்மொழி வரிசையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பலமுறையும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரை வற்புறுத்தியும். அவர்கள் இன்னும் அவ்வாறு செய்யாமலும், கட்டாயப் பாடமாக ஏற்படுத்தாமலும் இருப்பது பிசகென்று அறிவிப்பதோடு, இனியாவது அவர்கள், தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கொள்வதுடன், கட்டாய முறையாகவும், கூடியவரை கல்லூரிகளில் கலை பயில் கருவி மொழியாகவும் கொண்டு, தங்கள் முதற் கடமையை செலுத்தும்படி அவர்களை இப்பொருங்கூட்டத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் என்னும் தீர்மானம் இயற்றப் பட்டது. இத் தீர்மானத்தினை திருவாளர் வி.ஏ. சகராயப் பிள்ளை அவர்கள் முன் மொழிய, திருவாளர் ஐ.குமாரசாமி பிள்ளை அவர்கள் வழி மொழிந்தார்.

     1921 ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஆட்சித் தலைவர் அவர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்தபோது, செந்தமிழ் மொழியினை, உயர்தனிச் செம்மொழியாக அறிவிப்பது தொடர்பாகக் , கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, திருவாளர் ராவ் பகதூர் வீ.அ. வாண்டையார் அவர்கள் தலைமையில், ஒரு குழுவினர் சென்று சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை நேரில் எடுத்துரைத்தனர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்ககத்தின் பதினோராவது ஆண்டு விழாவானது, 18.11.1922 மற்றும் 19.11.1922 ஆகிய தேதிகளில், திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின்போது, விசுவபாரதிக் குடையார் தமிழை உயர்தனிச் செம்மொழியாகச் சம்மதித்து, அதனை அவர்கள் பாட வரிசையில்  சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் தொன்மை வரலாறு எழுதுவோர்க்குத் தென் இந்திய வரலாறு இல்லையாயின், முற்றுப் பெறாததாலும், வேண்டிய செய்திகள் சங்கத் தமிழ் நூல்களில் மட்டும் கிடைக்குமாதலாலும், உலகத்து நாகரீகமுற்ற நாடுகளில் தமிழ் நூல், தமிழ் அறிவுப் பரப்பை மிகுவிக்க வேண்டுமென்றும், அவர்களை இப்பெருங்கூட்டாத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் இயற்றப் பட்டது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டு விழா, 22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய தேதிகளில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது,  உலகத்து உயர் தனிச் செம்மொழிகளில், முதல் மொழியென கருதுப் படுவதற்கு உரித்தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாக இருப்பதால், அதனை அத்தகைய மொழியாக ஆட்சியாளர்கள் கருதி, ஐ.சி.எஸ்., பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, இந்திய அரசியலாரை இப்பெருங் கூட்டத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் இயற்றப் பட்டது.

     இதே விழாவில் மீண்டும், மிகவும் பழைமையான காலந்தொட்டு, நாகரிகம் அடைந்துள்ள நாடுகளில், தமிழ் நாடும் ஒன்றாகலானும், இலக்கியச் செழிப்பிலும், தத்துவ அறிவின் உயர்விலும், பண்டைய நாகரிகத்தின் பயனுடைமையிலும், உலகத்து பழைமையான மொழிகளில் எவ்வகையிலும் குறைவுபடாது, அழியா நிலைமை எய்தியுளதாய் தமிழ் மொழி சிறப்பெய்தி வரலானும், இந்திய நாட்டின் தொன்மை வரலாற்றை வரைவோர்க்குத், தென்னிந்திய வரலாறு இல்லையாயின் மிகவும் முடைப் படுவாராகையாலும், அவ்வாறு முடைபடாதிருத்தற்கு வேண்டிய செய்திகள், சங்கத் தமிழ் நூல்களில் மட்டுமே கிடைக்கக் கூடுமாதலாலும், விசுவபாரதிக்கு உடையார், தமிழை உயர் தனிச் செம்மொழியாகக் கொண்டு, தற்காலத்து நாகரிகமடைந்த எல்லா நாடுகளிலும் தமிழ் நூலையும், தமிழறிவுப் பரப்பையும் மிகுவிக்க வேண்டுமென்று அவர்களை இப்பெருங் கூட்டத்தார் கேட்டுக் கொள்கின்றனர் எனும் தீர்மானம் இயற்றப்பட்டது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவானது, 1938 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வெள்ளி விழாவிற்குத் தலைமையேற்ற, திரிப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள், தன் உரையில், இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை, உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத் தக்கதாகும் என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே மீண்டும் சந்திப்போமா

13 ஜூன் 2013

கரந்தை மலர் 12


-------- கடந்த வாரம் -------
திருவையாற்றிலிருந்து கும்பகோணம் சாலையில் 2 கி.மீ தொலைவில், திங்களூருக்குச் சாலை பிரியும் இடத்தில், திருநாவுக்கரசர் பெயரால் அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தல் இன்றும் அன்பர்கள் சிலரால் அமைக்கப் படுகிறது. ஏழூர் பல்லக்கானது, இவ்விடத்தைக் கடக்கும் போது, ஊர்வலத்தில் செல்லும் அன்பர்கள் சில நிமிடங்கள் நின்று, அப்பூதியடிகளின் அன்பினை, குருபக்தியினை வியந்து போற்றியபடி, நீரும் மோரும் அருந்தி தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.
------------------------
திருப்பழனம்

     குலவெஞ்  சிலையான்  மதில்மூன்  றெரித்த  கொல்வேறுடை  யண்ணல்
  கலவ  மயிலும்  குயிலும்  பயிலும்  கடல்போற்  காவேரி
  நலமஞ்சுடைய  நறுமாங்  கனிகள்  குதிகொண்  டதிருந்திப்
  பலவின்  கனிகள்  திரைமுன்  சேர்க்கும்  மழன  நகராமே

என ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற திருப்பழனத்தை பல்லக்குகள் சென்றடையும். பொதுமக்களால் இவ்வூர் திருப்பயணம் என்று அழைக்கப் படுகிறது. பழனம் என்ற பைந்தமிழ் சொல் வயல் வெளியைக் குறிக்கும். வயல் வெளிகள் நிறைந்த ஊராகையால் திருப்பழனம் என்றழைக்கப்படுகிறது.

     திருப்பழனத்தார் தமது ஊரில் இறைவனுக்கு விழா கொண்டாடி, அவரைப் பல்லக்கில் அமர்த்தி விழாக் கோலத்துடன் ஊர் எல்லைக்கு அழைத்து வருவார்கள். திருவையாற்றில் இருந்து வந்த பல்லக்குகளுடன், இப்பல்லக்கும் சேர்ந்து கொள்ளும். திருவையாறு மற்றும் திருப்பழனப் பல்லக்குகள் காவேரி மற்றும் குடமுருட்டி ஆறுகளைக் கடந்து, திருச்சோற்றுத் துறை என்னும் ஊரைச் சென்றடையும்.

திருச்சோற்றுத் துறை

    காலை எழுந்து  கடிமல்  தூயன  தாங்கொணர்ந்த
    மேலை  அமரர்  விருத்பு  மிடம்விரை  யான்மலிந்த
    சோலை  மணங்கமழ்  சோற்றுத்  துறையுறை  வார்சடைமேல
    மாலை  மதியமன்  றோவெம்  பிரானுக்கு  கழகியதே

என்று அப்பர் பெருமானால் பாடப்பெற்ற தலம் திருச்சோற்றுத் துறையாகும்.

     திருஞான சம்பந்தர் காலம் தொடங்கி இவ்வூரின் பெயர் மாற்றம் இன்றி வழங்கி வருகிறது. திருச்சோற்றுத் துறையினை திரு + சோறு + துறை எனப் பிரிக்கலாம். சோற்றடைப்பு என்ற சொல் அன்னதானக் கட்டளையையும், சோற்றுப்புரை என்ற சொல் மடைப் பள்ளியையும் குறிக்கும். திருவிழாக் காலங்களில் நீர்த் துறையில் கூடி உண்ணும் விருந்திற்குத் துறை சாதம் என்று பெயராகும். இச்சொல்லே முன்பின்னாக சோற்றுத் துறை என்று தனித் தமிழில் அமைந்துள்ளது. அடியார்களுக்குச் சோற்றினை வழங்கும் சிவன் உறையும் தலம் திருச்சோற்றுத் துறையாகும்.

     திருவையாற்று, திருப்பழனப் பல்லக்குகளுடன் திருச்சோற்றுத் துறையின் பல்லக்கும் சேர்ந்து, மூன்று ஊர் பல்லக்குகளும் திருவேதிக் குடிக்குப் பயணமாகும்.




திருவேதிகுடி

      செம்பொன்  நன்மலர்  மேலவன்  சேர்திருவேதிக் குடியே

என அப்பர் பெருமானால் பாடப் பெற்ற தலம் திருவேதிகுடியாகும். வேதி என்ற சொல்லுக்கு அறிந்தவன், பண்டிதன், மேடை, மதில் என்ற சொற்களைத் தமிழகராதி குறிப்பிடுகின்றது. எனவே மதிலுடன் ஊர்ப் பெயரைத் தொடர்பு படுத்தலாம் எனினும், கல்வியில் சிறந்தவர்கள் வாழ் ஊராகக் குறிப்பிடுவதே பொருத்தமாகும். திருவேதிகுடியில் ஆலய மரியாதையை ஏற்றபின், மாலை ஆறு மணியளவில் திருவேதிகுடிப் பல்லக்கும் சேர்ந்து கொள்ள, நான்கு ஊர் பல்லக்குகளும் கண்டியூருக்குப் பயணமாகும்.

கண்டியூர்

        பிண்டியார்  மண்டை  யேந்தி  பிறர்மனை  திருந்துண்ணும்
        உண்டியான்  சாபம்  தீர்த்த  ஒருவனூர்  உலமேகத்தும்
        கண்டியூர்

எனத் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற தலம் கண்டியூர். இவ்வூர் தஞ்சாவூர் திருவையாறு சாலையில் அமைந்துள்ளது. பிரம்மா தன்னை சிவனுக்குச் சமமாக எண்ணியதால், பார்வதி தேவியார் அவருடைய ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்யுமாறு இறைவனிடம் கூற, இறைவனும் அவ்வாறே செய்தார். இதனால் இவ்வூர் கண்டனபுரம் ஆயிற்று என்பர்.

     தமிழ் அகராதியானது கண்டி என்பதற்குப் பல பொருட்களைக் குறிப்பிட்டுள்ளது. அவற்றுள் மந்தை, நிலப் பிரிவு, எழுபத்தைந்து ஏக்கருள்ள நில அளவை, ஒரு முகத்தல் அளவை என்பன சிலவாகும். மந்தை, நிலப் பிரிவு இவற்றில் ஒன்றிலிருந்து உருவான பெயராகவே இருக்க வேண்டும். ஏழூர்களின் பிற ஊர்ப் பெயர்களுக்கு இயற்கையின் அடிப்படையில் பெயர் அமைந்திருக்க, இவ்வூருக்கு மட்டும் புராண அடிப்படையில் பெயர் அமைந்திருக்க வாய்ப்பில்லை.

             ஏழூரும் சுற்றி இளைப்பாறும் கண்டியூர்
என்பதற்கேற்ப பல்லக்கு சுமப்பவர்களும், ஏழூரை வலம் வரும் பொது மக்களும் சில மணி நேரங்கள் ஓய்வெடுப்பார்கள். ஓய்வுக்குப் பின் ஐந்து ஊர் பல்லக்குகளும் திருப்பூந்துருத்திக்குச் செல்லும்.

திருப்பூந்துருத்தி

     பல்லக்கில் வந்த ஞானசம்பந்தப் பெருமானை, வயதான நிலையில் இருந்த அப்பர், பல்லக்கை சுமப்பவர்களில் ஒருவராக சுமந்த தலம் இத்திருப்பூந்துருத்தியே ஆகும்.

     செழுமதியம்  தவம் சோலைப் பூந்துருத்தி
எனச் சேக்கிழாரால் பாடப்பெற்றத் தலம் திருப்பூந்துருத்தியாகும்.

     ஆற்றிடைக்குறையில் உள்ள தலம் துருத்தி எனப்படும். எடுத்துக்காட்டாக, மாயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம் என்னும் ஊரானது திருத்துருத்தி என்றே முன்னாளில் அழைக்கப் பட்டது. காவேரி, குடமுருட்டி என்ற ஆறுகளுக்கு இடையில் பூக்கள் மிகுந்து காணப்பட்ட நிலப்பகுதி, திரு என்னும் அடைமொழியுடன் இணைந்து திருப்பூந்துருத்தி ஆயிற்று என்றும் கூறுவர்.

     ஐந்து ஊர் பல்லக்குகளும், திருப்பூந்துருத்தி தீர்த்த நாராயணர் சமாதியருகே வந்து சேரும். திருப்பூந்துருத்தி இறைவன் பல்லக்கில் அமர்ந்து ஐந்து ஊர் பல்லக்குகளையும் வரவேற்பார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். பின்னர் குடமுருட்டி மற்றும் காவிரி ஆறுகளைக் கடந்து, நள்ளிரவுக்குப் பின் ஆறு ஊர் பல்லக்குகளும் திருநெய்த்தானத்தைச் சென்றடையும்.

திருநெய்த்தானம்

பறையும்பழி  பாவம்படு  துயரம்  பலதீரும்
பிறையும்புனல்  அரவும்பட  சடையம்  பெருமானார்
அறையம்புனல்  வருகாவிரி  அலைசேர்வடர்  கரைமேல்
நிறையும்புனை  மடவார்பயில்  நெய்த்தா  னமேனீரே

என்று ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருநெய்த்தானமாகும். இவ்வூர் திருவையாற்றில் இருந்து கல்லனை செல்லும் வழியில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏழூர் திருவிழாவின் ஏழாவது தலம் இந்த திருநெய்த்தானமாகும்.

     கால்நடைகள் மிகுதியாக இருந்து நெய் உற்பத்தி அதிகமாக இருந்ததனால் இவ்வூருக்கு நெய்த்தானம் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். பாலின் அடிப்படையில் பாலூர், வெண்னையின் சிறப்பால் வெண்னெய் நல்லூர், எருமைகள் மிகுந்த ஊர் எருமைப் பட்டி, பசுக்கள் நிறைந்த ஊர் ஆவூர் என அழைக்கப்பட்டு வருவது போல் நெய்த்தானமும் ஏற்பட்டது. திரு என்ற அடைமொழியுடன் இவ்வூர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மக்களின் தவறான உச்சரிப்பு காரணமாக இன்று இவ்வூர், தில்லைஸ்தானம் என்றே அழைக்கப்படுகிறது.

     திருநெய்த்தானத்தை வந்தடையும் ஆறு ஊர் பல்லக்குகளையும் திருநெய்த்தான இறைவன் நெய்யாடியப்பர் பல்லக்கில் அமர்ந்து காவிரிக் கரையில் வரவேற்பார். தொடர்ந்து வான வேடிக்கை நடைபெறும். பொழுது புலர்ந்து விடும். பின்னர் ஏழூர் பல்லக்குகளும் புறப்பட்டு திருவையாற்றைச் சென்றடையும்.

     திருவையாற்றின் மேல வீதி, வடக்கு வீதி வழியாக தேரடியை அடைந்த பின், ஆறு ஊர்களின் பல்லக்குகளும் தேரடியிலேயே நிற்க, திருவையாற்று ஐயாறப்பர் பல்லக்கினைத் தேவர்கள் வரவேற்கும் விழா நடைபெறும். கயிற்றில் கட்டிய பொம்மை ஒன்று அசைந்தாடி வந்து, ஐயாறப்பருக்கு மாலையிடும். இந்நிகழ்ச்சிக்குப் பூப்போடுதல் என்று பெயர். தொடர்ந்து ஐயாறப்பர் பல்லக்கானது, தெற்கு கோபுர வாசல் வழியாக, திருவோலக்க  மண்டபத்தை வந்தடையும். மங்கல ஒலி முழங்க ஏழூர் திருவிழாவானது இனிதே நிறைவுறும்.

உமாமகேசரும் சத்தானமும்

     தஞ்சை வட்டக் கழகத் தலைவராகத் திகழ்ந்த உமாமகேசுவரனார் அவர்கள், தமது பொறுப்பில் இருந்த எல்லா ஊர்களுக்கும் நேரில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உமாமகேசுவரனாரது திருவடி படாத ஊரே தஞ்சை வட்டத்தில் இல்லை எனலாம். அவரால் தான் சிற்றூர்கள் அனைத்திற்கும் தார்ச் சாலைகள் போடப்பட்டன. உமாமகேசுவரனார் காலத்தில் போடப்பட்ட சாலைகளில் முக்கியமானது, வரகூர் - அன்பது மேலகரம் சாலையாகும். இச்சாலை வரகூர் அக்கிரகாரத்தின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்பட்ட சாலையாகும்.

     திருவையாற்றை மையமாகக் கொண்டு நடைபெறும் ஏழூர் திருவிழாவின்போது, திருவையாற்றில் இருந்து புறப்படும் பல்லக்குகளைத் தூக்கிச் செல்வோரும், பல்லக்கின் முன்னும், பின்னும் செல்லும் பல்லாயிரக் கணக்கானப் பொது மக்களும், ஏழூரையும் இணைப்பதற்குரிய சரியான சாலைகள் இல்லாமல் பெரிதும் துயறுற்றனர். பலவிடங்களில் வயல்வெளிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

     ஏழூர் திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் இயல்புடைய உமாமகேசுவரனார், மக்கள் படும் இன்னல்களைத் தாமே நேரில் கண்டு உணர்ந்து, உடனடியாக சாலைகள் அமைப்பதற்கு உரிய ஆணையினைப் பிறப்பித்தார்.

     மேலத் திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய இரண்டு ஊர்களை இணைக்கும் சாலையும், திருப்பழனம், திருச்சோற்றுத் துறை ஆகிய ஊர்களை இணைக்கும் சாலையும், கண்டியூர் ஆலங்குடி சாலைகளும் உடனடியாகப் போடப்பட்டன. இவற்றுள் முதலிரண்டு சாலைகளும், காவிரி மற்றும் குடிமுருட்டி ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப் பட்டவை. ஆற்றில் நீர் நிறைந்தோடும் காலங்களில், இவ்வாறுகளைக் கடப்பதற்கு, இப்பாதைகளின் இருபுறமும், உமாமகேசுவரரால் தோணித் துறைகள் ஏற்படுத்தப் பட்டன.

     திருப்பழனம், திருச்சோற்றுத் துறைச் சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் பயிரிடப்பட்டன. இவைமட்டுமல்ல, சாலைகளுக்குக் குறுக்காகச் செல்லும் வாய்க்கால்களைக் கடக்க பாலங்களும் அமைத்தார்.


     ஏழூர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பான துப்புரவு ஏற்பாடுகள் செய்யப்படும். பகற் பொழுதில் காவிரி, குடமுருட்டி ஆகிய இரண்டு ஆறுகளின் மணற் பரப்பில் நடந்து செல்வோருக்குக் கால்கள் சுடாதபடி, வைக்கோல் பரப்பப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்படும். இரவு நேரங்களில் ஆங்காங்கே மண்ணெண்ணய் ஆவி விளக்குகள் பொறுத்தப்பட்டிருக்கும். உமாமகேசுவரரால் இது போன்ற வசதிகள் செய்யப் பெற்றதால், மக்கள் சுற்றுலாச் செல்வது போல் ஏழூர் வலம் வருதலை மேற்கொண்டனர்.

    ஏழூர் திருவிழாவின் போது, ஏழு ஊர்களையும் இணைக்கும் அனைத்து சாலைகளும் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஆங்காங்கே தேவாரம் பாடு கூட்டங்களும், பஜனைக் கூட்டங்களும் நடைபெறும். சிலர் இசைக் கருவிகளை வாசித்தபடியும், சிலர் பாடிக் கொண்டும் செல்வார்கள். இப்பாடல்கள் கேட்டு மகிழ்ந்து அக்கூட்டங்களுடன் செல்வோரில் பலர் ஆடியும், சிலர் பாடியும், மேலும் பலர் பல்வேறு வேடங்கள் புனைந்தும் செல்வார்கள். ஆயிரக் கணக்கானப் பொது மக்கள் இவைகளைக் கண்டும் கேட்டும் ரசித்தவாறு செல்வார்கள்.


     கூட்டத்தில் செல்வோருக்குச் சிலர் பெரிய பெரிய விசிறிகளைக் கொண்டு விசிறுவார்கள். சிலர் சந்தணக் குழம்புகளை துருத்தியில் நிரப்பிப் பீய்ச்சுவார்கள். வழி எல்லாம் தண்ணீர் பந்தல்களும், தோரணங்களும் காட்சி அளிக்கும். வீடுகளின் முன்பான அமைக்கப்பட்டிருக்கும் பந்தல்களில், தாருகளுடன் உள்ள வாழை மரங்களும், இளநீர் குலைகளும், ஈச்சங் குலைகளும் கட்டப் பெற்றிருக்கும். மா, தென்னை, பணை காகிதங்களால் செய்யப் பெற்ற தோரணங்கள் வீடுகளையும், வீதிகளையும் அலங்கரித்திருக்கும். தெருக்கள் எல்லாம் நீர் தெளித்து, தூய்மை செய்யப்பெற்று, அழகிய வண்ணக் கோலங்களால் பொலிவு பெற்றுக் காட்சியளிக்கும்.

      இவ்விழாவினால் மக்களிடையே உள்ள அரிய நல்லுணர்ச்சிகள் யாவும் வெளிப்படுகின்றன. அவற்றால் தெய்வ உணர்ச்சி, சமய வளர்ச்சி, மக்கள் ஒற்றுமை, சாதி வேற்றுமை நீங்குதல், அன்பு, அளவிலா மகிழ்ச்சி முதலியன உண்டாகின்றன. மேலும் பல்வகை கலைகளும் வளருகின்றன.

     உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் வெண்ணீறும், உருத்திராட்ச மணி மாலையும், புன்முறுவலும் பூத்த பொன் மேனியராய், இடையில் கட்டிய வேட்டியும், இதன் மேல் சுற்றிய வெண்ணிற துண்டுடன், அடியார்கள் புடை சூழ, ஏழூர் முழுதும் நடந்தே செல்வார். அடியார்களை ஆங்காங்கே சமயச் சொற் பொழிவாற்றச் செய்வதோடு, தாமும் சொற் பொழிவாற்றுவார். விழா நடக்கும் இரண்டு நாட்களிலும் வேறு பணிகள் எதிலும் ஈடுபட மாட்டார்.

     ஏழூர் திருவிழா நாட்களில் உமாமகேசுவரனாரின் பங்களிப்பையும், செயல் திறனையும் நேரில் கண்ட மறைமலை அடிகளாரின் புதல்வர் மறை. திருநாவுக்கரசு அவர்கள் மறைமலையடிகள் வரலாறு என்னும் தனது நூலில், உமாமகேசுவரனார் வளர்த்த ஏழூர் விழாவை இனியும் வாழ்வித்தல் அன்பர் கடனாகும் என்று எழுதுகிறார். இதிலிருந்தே ஏழூர் திருவிழாவில் உமாமகேசுவரனார் கொண்டிருந்த ஈடுபாட்டை அறியலாம்.

     இதுமட்டுமல்ல, ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் இளவல் ந.மு.கோவிந்தராய நாட்டார் அவர்கள், தான் எழுதிய, திருவையாற்றின் ஏழூர் திருவிழா வரலாறு என்னும் நூலினை உமாமகேசுவரனாரின் நினைவுக்கு உரிமையாக்கிப் பின்வருமாறு எழுதுகிறார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்திலிருந்து, அதன் தலைவராயிருந்து தமிழன்னைக்கு அரும்பெருந் தொண்டாற்றி வந்த, அண்ணலாரும், கரந்தைப் புலவர் கல்லூரி, உயர் நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, திக்கற்ற மாணவர் இல்லம் ஆகியவற்றை நிறுவி, அவற்றை தண்ணளி நிறைந்த தாய்போல் புரந்து வந்த பேராளரும், எளிய மாணவர்களுக்கும், புலவர்களுக்கும் பொருளுதவி செய்து, அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிய வள்ளலாரும், தமிழும் சைவமும் தழைத்தோங்க, அவற்றை தம்மிரு கண்களாகப் போற்றித் தொண்டாற்றி வந்த தூய வாழ்க்கையரும், ஆண்டுதோறும் ஐயாறப்பர் ஏழூர் விழாவிற்குச் சென்று, ஏழூர் நடந்து வலம் வந்து, வணங்கி இறையருள் பெற்ற திருவினாரும், தஞ்சை வட்டக் கழகத் தலைவராயிருந்த போது, திருப் பழனத்திலிருந்து, திருச்சோற்றுத் துறை வரையில் சாலையின்மையால் ஐயாறப்பர் முதலிய மூர்த்திகள் எழுத்தருளும் திருப்பல்லக்குகளும், அடியார் குழாங்களும் வயல்களின் வழியாகச் செல்ல வேண்டியிருந்தமை அறிந்து வருந்தித் தக்கதோர் சாலை அமைத்துதவிய சைவப் பெருந்தகையாளரும், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரும், பேரறிவாளரும் ஆகிய தமிழ்ப் புரவலர் தமிழவேள் உயர்திருவாளர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., அவர்கள் நினைவிற்கு இந்நூல் உரிமையாக்கப்படுகிறது.

     இவ்வாறாக ஏழூர் திருவிழாவானது சிறக்கப் பல்லாற்றானும் பாடுபட்ட பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.

,..... வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா

07 ஜூன் 2013

திப்பு சுல்தானின் கோட்டையில் ஓர் நாள்


மே மாதத்தின் மத்தியில், ஓர் நாள், நண்பர் பால்ராஜ் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, இம்மாதம் 24 ஆம் தேதி, திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன், மைசூர் மற்றும் ஊட்டி சுற்றுலா செல்ல இருக்கின்றேன், வருகிறீர்களா? என அழைத்தார். வருகிறேன் என்றேன்.

     24.5.2013 வெள்ளிக் கிழமை இரவு ஒன்பது மணியளவில், நானும் நண்பர் பால்ராஜ் அவர்களும், பேரூந்தில், தஞ்சையில் இருந்து திருச்சிக்குப் புறப்பட்டோம். 10.30 மணியளவில், திருச்சி தொடர் வண்டி நிலையத்தின் அருகில் இறங்கினோம்.

     அங்கிருந்த முருகன் கோயிலுக்கு எதிரில், திரு நேரு, திரு அசோகன், திரு நரசிம்மன் ஆகியோர் எங்களுக்காகக் காத்திருந்தனர். மூவருமே திருச்சி தேசியக் கல்லூரியில் பணியாற்றுபவர்கள். இவர்களுடன் திரு நேரு அவர்களின் இளைய மகன் செல்வன் அழகேசன் அவர்களும் எங்களுக்காகக் காத்திருந்தார்.

     நண்பர் பால்ராஜ் நால்வரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார். அறிமுகப் படுத்திக் கொண்டோம். அறுவரும் முருகப் பெருமானை வணங்கி, டவேரா காரில் பயணத்தைத் தொடங்கினோம்.
    
     மறுநாள் சனிக் கிழமை அதிகாலை மைசூர் சென்றடைந்தோம். மைசூர் செல்லும் வழியில், பன்னாரி மாரியம்மனையும், நஞ்சங்கூடு சிவபெருமானையும் தரிசித்தோம்.

    
 மைசூரில் விலங்கியல் பூங்காவிற்கு எதிரிலேயே ஸ்ரீகீர்த்தி தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம்.

     அன்று காலை விலங்கியல் பூங்காவையும், பிற்பகல் மைசூர் அரண்மனையினையும் பார்த்து ரசித்துவிட்டு, மாலை பிருந்தாவன் தோட்டம் சென்றோம். இசைக்கு ஏற்றபடி வண்ண விளக்குகளின் ஒளியினைத் தாங்கி, நடனமாடும், நீறூற்றுகளின் நடனக் காட்சிகளை மெய்மறந்து பார்த்தோம்.

     மறுநாள் காலை விடுதியினை காலிசெய்து விட்டுப் பயணத்தைத் தொடங்கினோம். அப்பொழுது அலைபேசி வழி தொடர்பு கொண்ட நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், மைசூரின் ரெங்கனா திட்டு பறவைகள் சரணாலயத்தையும், சீரங்கப் பட்டிணத்தையும் தவறாது பார்த்து வருமாறு அறிவுறுத்தினார்.

      முதலில் சாமுண்டீஸ்வரி கோயில் சென்று வணங்கினோம். வசந்த மாளிகை திரைப் படத்தில், வசந்த மாளிகையாய் காட்சிதரும் லலித் மகால் சென்று சுற்றிப் பார்த்தோம். அடுத்து ரெங்கனா திட்டு பறவைகள் சரணாலயம். எங்கு நோக்கினும் பறவைகள். மனித மற்றும் வாகனங்களின் சத்தத்தையே கேட்டுப் பழகிப்போன காதுகளுக்கு, ஆயிரக் கணக்கான பறவைகளின் ஒலி சங்கீதமாய் இனித்தது. பறவைகளின் சரணாலயத்திலிருந்து புறப்பட்டு வெகுநேரமாகியும், பறவைகளின் ரீங்காரம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்த்து.

     அடுத்ததாக சீரங்கப் பட்டிணம். சீரங்கப் பட்டிணத்தில் நுழைந்த்துமே, ஒரு வித உணர்வு, உள்ளக் கிளர்ச்சி மெல்ல, மெல்ல உடலெங்கும் பரவுவதை உணர முடிந்தது.


     
திப்பு சுல்தான். இப்பெயரினை உச்சரிக்கும்போதே, ஓர் வீர உணர்வு உதிரத்தில் எழுகிறதல்லவா? புலிகளை மிகவும் நேசித்தவர் திப்பு. தன்னையும் புலியாகவே எண்ணி, எண்ணி, புலியாகவே வாழ்ந்தவர். தன் கொடியில் கூட புலியையே பொறித்தவர். ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம்.

     இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாற்றைத் தொடங்கி வைத்தவர் அல்லவா திப்பு சுல்தான். ஆங்கிலேயர்கள் மீண்டும், மீண்டும் திப்புவைச் சீண்டிச் சீண்டி, மண்னை அல்லவா கவ்வினார்கள். ஆங்கிலேயர்களின் சதி, சூழ்ச்சி, போர் எதுவுமே பலிக்கவில்லையே திப்பு சுல்தானிடம். இறுதியில் உடனிருந்தே கொல்லும் துரோகத்திற்கல்லவா இறையாகிப் போனார்.

      துரோகிகளும், நய வஞ்சகர்களும், சுயநலப் பேய்களும் உலாவும் காடல்லவா, இப்பூமி. திப்பு சுல்தான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

          வாருங்கள், சீரங்கப் பட்டிணத்திற்குள் நுழைவோம். பெரிய மதில் சுவர் எங்களை வரவேற்கிறது. அதோ ஒரு பாதை தெரிகிறதல்லவா? அதுதான் மைசூர் கேட். வாருங்கள்.

     சீரங்கப் பட்டிணத்தை ஒரு தீவு என்றே சொல்லலாம்.  நாற்புறமும் கடலால் சூழ்ந்த தீவு அல்ல, ஆனால் நாற்புறமும் காவிரியால் சூழப்பெற்ற தீவுப் பகுதிதான் சீரங்கப் பட்டிணம். மேற்கில் இருந்து ஓடி வரும் காவிரியானது, சீரங்கப் பட்டிணத்திற்கு முன் இரண்டாகப் பிரிந்து, ஒரு புறம் காவிரியாகவும், மறுபுறம் வாகினி நதியாகவும் ஓடி, மீண்டும் ஒரே நதியாக, காவிரியாக ஒன்றிணைந்து ஓடுகிறது.


    
 இதோ ரெங்கநாதசுவாமி கோயில். ஒன்பதாம் நூற்றாண்டில் கங்க மன்னரால் கட்டப்பெற்ற கோயிலாகும் இது. பின்னர் ஹோசல மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்ட, விரிவு படுத்தப் பட்ட கோயிலாகும். பாற்கடலில் ஆதிசேசன் என்னும் நாகத்தின் மேல் ரெங்கநாத சுவாமி துயில் கொள்ளும் காட்சியைக் கண்டு வணங்கினோம்.


    
 ரெங்கநாத சுவாமி கோயிலுக்கு எதிரிலேயே, கூப்பிடு தூரத்தில், திப்பு சுல்தான் வாழ்ந்த அரண்மனை. வானளாவிய அரண்மனையினை எதிர்பார்த்துச் சென்றால், அதிர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது. எங்கே அரண்மனை? வெறும் தரையும், சில குட்டிச் சுவர்களும் மட்டுமே மிஞ்சியுள்ளன. ஆம் ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இறையாகி, தரை மட்டமாக அல்லவா காட்சியளிக்கின்றது. திகைப்புடன் அரண்மனை இருந்த இடத்தையே பல நிமிடம் பார்த்துக் கொண்டு நிற்கிறோம். ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தான் மீது கொண்டிருந்த கோபத்தின் எல்லை புரிகிறது. பேசுவதற்கு வார்த்தைகள் ஏதுமின்றி, இடதுபுறமாகத் திரும்பிப் பயணிக்கின்றோம்.

     ஒரு சில நிமிடங்களிலேயே எதிர்படுகிறது ஒரு மேட்டுப் பகுதி. இதுதான் கர்னல் பெய்லிஸ் டங்கன் எனப்படும், திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை.


   
  மெதுவாகப் படிக்கட்டுகளில் ஏறுகிறோம். மேடான பகுதிக்குச் சென்றவுடன், தரைப் பகுதிக்கும் கீழே தெரிகிறது சிறைச் சாலை. தரை மட்டத்தில் மதில் சுவர். மதில் சுவற்றினை ஒட்டியவாறு ஓடுகிறது காவிரி. காவிரியின் தரை மட்டத்திற்கும் கீழே சிறைச்சாலை தெரிகிறது. படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்குகிறோம். பூமிக்கு முப்பது அடி ஆழத்தில் அச்சிறைக் கூடம். உள்ளே நுழைகிறோம்.

     நடுவில் இரு வரிசையில் பெரிய பெரிய தூண்கள். தூண்களுக்கும், இரு புறச் சுவர்களுக்கும் இடையே வளைவுகள். சுவற்றில் வரிசையாய் சிறு சிறு கற்கள் ஒரு அடி நீளத்திற்கு, ஒரே அளவினதாய், சம இடைவெளிகளில் பொறுத்தப்பட்டுள்ளன. கைதிகளை இரு கற்களுக்கும் இடையில் நிற்க வைத்து, இரு கைகளையும் தோள் உயரத்திற்கு, கிடைமட்டமாக நீட்டச் செய்து, இக் கற்களுடன் கைகளை பிணைத்துக் கட்டுவார்களாம். பின்னர் சுவற்றில் உள்ள ஒரு துவாரத்தினைத் திறந்து விட்டால், காவிரி நீரானது இச்சிறையினை மெல்ல மெல்ல நிரப்பும். முதலில் கைதிகளின் கணுக்காலினைத் தொடும், நீரானது, மெல்ல மெல்ல படிப்படியாக உயர்ந்து, கைதியினை முழுமையாய் மூழ்கடித்து விடும். கைதிகள் ஜலசமாதி ஆக வேண்டியதுதான்.


    
 திப்பு சுல்தானிடம் சிறைபட்டு, இச்சிறையில் அடைத்து வைக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரியின் பெயர் கர்னல் பெய்லி என்பதாகும். அவர் பெயரே இச்சிறையின் பெயராக நிலைத்து விட்டது. சிறையின் மையப் பகுதியில், மேற் கூறையில் ஓர் பெரிய ஓட்டை. வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கானதால் விழுந்த ஓட்டையாம் இது. சிறையின் வலப்புற மூலையில் ஓர் பள்ளம் தெரிகிறது.


     


இப்பள்ளத்தில் இறங்கினால், சுரங்கப் பாதை வழியாக பல இடங்களுக்கும் செல்லலாம் என்று கூறுகின்றனர். மீண்டும் படிகளில் ஏறி மேலே வருகிறோம். மதில் சுவற்றை தொட்டவாறு காவிரி ஓடுகிறது. மதில் சுவரில் வரிசையாய் சதுர வடிவில் துளைகள்.


    

சற்று குனிந்து, துளைகளுக்கு உள்ளே பார்த்தால், இந்த ஒரு துளை மூன்று துளைகளாக பிரிந்து செல்வதைக் காண முடிகிறது. வீரர்கள், இத்துளைகளுக்குள் துப்பாக்கியைச் சொருகி, ஆங்கிலேயர்களுடன் போரிட இந்த ஏற்பாடு. சற்று இடதுபுறமாகவோ, வலது புறமாகவோ சுட வேண்டும் எனில், சற்று துப்பாக்கியை வெளியே இழுத்து, வேண்டிய திசையைக் காட்டும் துளைக்குள் சொருகிச் சுடவேண்டியதுதான்.


    
 திப்பு சுல்தானின் முன்னேற்பாடுகளை உணர்ந்து மலைப்புடன் வெளி வருகிறோம். வந்த வழியாகவே மீண்டும் பயணம். ஐந்து நிமிடப் பயணம்.

      இதோ, இதோ இடது புறம் தெரிகிறதே இதுதான் தண்ணீர் வாயில் ( Water Gate )  காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.


    
  கர்னல் பெய்லி சிறையைப் பார்த்தபோது, நமக்கு ஏற்பட்ட மலைப்பு மெல்ல மெல்ல கரைகிறது. எத்துனை, எத்துனை முன்னேற்பாடுகள் செய்தும் என்ன பயன்? பாதுகாப்பினை எந்தெந்த வகைகளில் பலப்படுத்த முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் பலப்படுத்தியிருந்தாலும் என்ன பயன்?

     உடன் பிறந்தே கொல்லும் துரோகம் இருக்கிறதே, அத்துரோகத்திற்கு முன், இப்பாதுகாப்புகள் எல்லாம் எம்மாத்திரம். ஆம் ஒரு துரோகியின் நயவஞ்சகச் செயலுக்கு, நினைவுக் சின்னமாய், அவமானச் சின்னமாய் தண்ணீர் வாயில் ( Water Gate ) தலை குனிந்து நிற்கிறது.

     திப்பு சுல்தான் தினமும் அதிகாலையில் இவ்வழியே நுழைந்து, காவிரியில் நீராடுவது வழக்கம். பல்வேறு வழிகளில் போராடியும், திப்புவை ஒழிக்க இயலாத ஆங்கிலேயர்களின் வஞ்சக வலையில் விழுந்தவன்தான் மீர் சாதிக். எப்பொழுதும் திப்புவின் உடனிருக்கும் வீரன். உடனிருந்தே கொல்லும் வியாதி என்பது இதுதானோ?

     ஒரு நாள் அதிகாலை, மீர் சாதிக், யாரும் அறியா வண்ணம் தண்ணீர் வாயிலை ஆங்கிலேயர்களுக்குத் திறந்து விட்டான். வழக்கம்போல் நீராட வந்த திப்பு சுல்தான், ஆங்கிலேயர் படை திடுமென உள் நுழைந்து எதிர்பாராமல் தொடுத்திட்ட தாக்குதலை, முறியடிக்க முடியாமல், நயவஞ்சகத்தால் கொல்லப் பட்டார்.

      1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள், தனது 48 வது வயதில் திப்பு சுல்தான் துரோகத்திற்கு பலியான இடம் இது.

     கனத்த இதயத்துடன் தண்ணீர் வாயிலையே சிறிது நேரம் வெறித்து பார்த்தபடி நின்று விட்டு புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருப்போம்.

     இதோ பாருங்கள், இதுதான் மே 4 ஆம் நாள் மதியம் திப்புவின் உடல் கண்டுபிடிக்கப் பட்ட இடம்.


      
கண்கள் திறந்திருந்தன. உடலில் மூன்று இடங்களில் வெட்டுக் காயங்கள். வலது காதில் கீழ் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு, கன்னத்தில் பதிந்து கிடந்தது. பட்டாடை, தலைப்பாகை எதுவும் இல்லை. ஆபரணங்கள் எதுவும் இல்லை. உடலுக்கு அருகே குர் ஆன் பிரதி. அவ்வளவுதான்.

      அமைதியாய், சிறிது நேரம் திப்புவின் உடல் கண்டெடுக்கப் பட்ட இடத்திலேயே நின்றோம். சிறிது நேரத்திற்குப் பிறது மௌனமாய் புறப்பட்டோம்.

       சிறிது நேரத்தில், திப்பு சுல்தானின் வழிபாட்டுக் கூடாமாகிய ஜும்மா மசூதிக்குச் சென்றோம்.  இம்மசூதியானது, ஒரு காலத்தில் ஆஞ்சநேயர் ஆலயமாக இருந்ததாகவும், பின்னர் திப்புவால் இந்த ஆலயம் பல்வேறு மாற்றங்களைப் பெற்று மசூதியாக மாற்றப்பட்டதாகவும் வழிகாட்டி ஒருவர் கூறினார். கோயில்களை இடித்து மசூதி கட்டியவர் என்ற பெயரும், சரித்திரத்தின் பக்கங்களில் திப்புவிற்கு உண்டு, அவ்வாறு இருக்குமோ என்று எண்ணினோம்.


    
 திப்புவின் மாளிகைக்கு நேர் எதிரே இருக்கும், ரங்கநாதசுவாமி கோயில் மனதில் தோன்றியது. கோயில்களை எல்லாம் இடித்தவர் என்றால், தனது மாளிகைக்கு நேர் எதிரில் இருக்கும் கோயிலை விட்டுவைத்திருப்பாரா?

       கோட்டையினை விட்டு வெளியேறி, முதன்மைச் சாலையில் பயணித்தோம். 15 நிமிட பயணத்திற்குப் பின், வலது புறம் திரும்பி, சிறிது தூரம் சென்றோம்.

      இதோ திப்புவின் கோடை கால மாளிகை. பெரும்பாலும் மரப் பலகைகளால் கட்டப் பெற்றக் கட்டிடம். சுவரெங்கும்.,திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காட்சியளிக்கின்றன. கோடை காலத்தில் சூரியனின் தாக்கம் அதிகம் தெரியாமல இருப்பதற்காகத்தான், எங்கெங்கினும் மரப் பலகைகள் பொறுத்தப் பட்டுள்ளதாக்க் கூறினார்கள்.


    


அங்கிருந்து கிளம்பினோம். சில நிமிடப் பயணம்தான். கும்பஸ் (GUMBAZ) . திப்பு சுல்தானின் கல்லறை. திப்பு சுல்தான் மரணமடைந்த அடுத்த நாளே, திப்புவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் இது. திப்புவின் தந்தை ஹைதர் அலி, தாயார் பாத்திமா பேகம் இருவருக்கும் அருகிலேயே திப்புவும் நல்லடக்கம் செய்யப் பெற்ற இடம். கண்ணைக் கவரும் நுணுக்கமான வேலைப்பாடுகள். முகப்பில் பெரிய தோட்டம். தாஜ்மகாலை நினைவு படுத்தும் வகையிலான அமைப்பு. தோட்டத்திலும், திப்புவின் உடல் உறங்கும் இடத்திற்கு வெளியிலும் எங்கு நோக்கினும், கல்லறைகள் , கல்லறைகள்.


    

திப்புவின் மனைவி, குழந்தைகள் மற்றும் வீரர்களின் சமாதிகள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட சமாதிகள்.

     அச்சமென்பதை என்னவென்றே அறியாத திப்புவும், ஹைதர் அலியும் மீளாத் துயில் கொள்ளும் இடமல்லவா இது. கண்மூடி வணங்கினோம். அமைதியாய் பல நிமிடங்கள் கழிந்தபின். கனத்த இதயத்துடன், மனமின்றிப் புறப்பட்டோம்.

       இரண்டு நாட்கள் மைசூரில் செலவிட்டமையைத் தொடர்ந்து, எங்களது மகிழ்வூந்து ஊட்டி நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. எங்களது மகிழ்வூந்து ஊட்டி மலையின் கொண்டை ஊசி வளைவுகளில், சுழன்று ,சுழன்று ஏறத் தொடங்கினாலும், மனமென்னவோ, திப்புவை சுற்றியே சுழன்று, உழன்று கொண்டிருந்தது.

 .... வருகைக்கு நன்றி ந்ண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக் கிழமை, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தொடரில் சந்திப்போமா