17 நவம்பர் 2012

கணிதமேதை அத்தியாயம் 6



----------------------------------
இராமானுஜா, கணக்கிற்கு விடைகாணும் நீ, மற்றவர்களின் புரிதல் திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு வரியாக விடை காண வேண்டுமே தவிர, பத்து வரிகளுக்கு பதில், இரண்டே வரிகளில் விடை கண்டு என் போன்றோரைக் குழப்பக் கூடாது     ....... எஸ்.நாராயண அய்யர்
----------------------------------


     18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில், வர்த்தகப் பயன்பாட்டிற்கான துறைமுகம் கிடையாது. வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப் பெற்ற பொருட்களை ஏற்றிவரும் கப்பல்கள், கடற் கறையிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் நங்கூரம் இட்டு நிற்கும். கடற் கரையிலிருந்து செல்லும் சிறிய ரகப் படகுகளில், கப்பலில் இருக்கும் பொருட்கள் மாற்றப்பட்டு, பல தவணைகளில் கரைக்குக் கொண்டு வரப்படும். பொருட்கள் சிறிய படகுகளுக்கு மாற்றப்படுவதால், பெருமளவில் பொருளிழப்பு ஏற்பட்டு வந்தது.

     1796 இல் தான்  சென்னையில் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 1861 ஆம் ஆண்டில் ஆயிரத்து நூறு அடி அகலமுள்ள, பொருட்களை இறக்குவதற்கான தளம் கட்டி முடிக்கப் பட்டது. 1876ல் செவ்வக வடிவ செயற்கைத் துறைமுகப் பணிகள் தொடங்கப் பட்டன.

     இந்தியாவிலிருந்து, பிரிட்டனுக்கு ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் அறுபது சதவீதப் பொருட்கள் சென்னைத் துறைமுகத்தின் மூலமே அனுப்பப்பட்டன அல்லது பெறப்பட்டன.

    1904 ஆம் ஆண்டு சென்னை துறைமுகக் கழகத்திற்கு பொறுப்பாளராகப் பதவியேற்றுக் கொண்டவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவராவார். 1849 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த இவர் ட்ரினிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றவர். 1870 இல் இந்தியப் பொறியியல் துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

     தென்னக இரயில்வே துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுள் ஒருவர். கோதாவரி ஆற்றின் குறுக்கே ரயில்லே பாலம் அமைத்து சாதனை படைத்தவர். இச் சாதனைக்காக 1911 இல் இந்திய அரசின் Knight Commander ஆக அறிவிக்கப்பட்டவர்.

சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்
     தென்னக ரயில்வேயில் சாதனைகள் படைத்த சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் 1904 இல் துறைமுகக் கழகப் பொறுப்பை ஏற்கும் பொழுது, எஸ். நாராயண அய்யர் என்பவரையும் உடன் அழைத்து வந்தார்.

     நாராயண அய்யர் ஆங்கில அரசாங்கத்தால் பயிற்சியளிக்கப் பெற்ற, நிர்வாகத் திறன் மிக்க எழுத்தராவார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் எம்.ஏ., பட்டம் முடித்து, அக்கல்லூரியிலேயே கணித விரிவுரையாளர் வேலைக்காகக் காத்திருந்த வேலையில், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களைச் சந்தித்தார். சென்னை துறைமுகக் கழகத்தில் அலுவலக மேலாளராகவும், பின்னர் தலைமைக் கணக்கராகவும் பதவி உயர்வு பெற்றார்.

      சென்னைத் துறைமுகக் கழகத்தில் பணியாற்றிய இந்தியர்களிலேயே, உயர்ந்த பதவியான தலைமைக் கணக்கர் பதவியினை வகித்தவர். மேலும்  பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களின் முழு நம்பிக்கைக்கு உரியவர்.

நாராயண அய்யர்
     சென்னை துறைமுகக் கழகத்தில் ஒரு எழுத்தர் பணியிடம் நிரப்பப்பட இருப்பதை அறிந்த இராமானுஜன், உடனடியாக இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திர ராவ் அவர்களைச் சந்தித்தார். இராமச்சந்திர ராவ் அவர்களின் பரிந்துரையின் பேரில், பிரிசிடென்சிக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இ.டபிள்யூ. மிடில் மாஸ்ட் அவர்கள், இராமானுஜனுக்காகச் சிபாரிசுக் கடிதம் ஒன்றை வழங்கினார். இக்கடிதத்தில் அற்புதக் கணிதத் திறமை வாய்ந்த இளைஞன் இராமானுஜன் எனக் குறிப்பிட்டார்.
     1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் நாள்,சென்னைத் துறைமுகக் கழகத்தில் காலயாக உள்ள எழுத்தர் பணிக்கான விண்ணப்பத்தினை இராமானுஜன் அனுப்பினார். விண்ணப்பத்துடன் இ.டபிள்யூ. மிடில் மாஸ்ட் அவர்களின் சிபாரிசுக் கடிதத்தையும் இணைத்து அனுப்பினார். விண்ணப்பத்தில் எண்.7, சம்மர் ஹவுஸ், திருவல்லிக் கேணி என்று தனது முகவரியைக் குறிப்பிட்டிருந்தார்.மேலும் விண்ணப்பத்தின் கீழ் I beg to remain Sir. Your most Obedient Servant என்று எழுதி கையொப்பமிட்டிருந்தார்.

இராமானுஜனின் விண்ணப்பம்

     சென்னைத் துறைமுகக் கழகத்தில் Class III. Grade IV கிளார்க்காகப் பணியில் சேர்ந்தார் இராமனுஜன். மாதச் சம்பளம் ரூபாய் முப்பது.

     இராமானுஜனுக்குத் திருமணமாகி நான்காண்டுகள் ஆன போதிலும், ஜானகி, தனது தந்தை வீட்டிலும்,   கும்பகோணத்திலுமாக மாறி, மாறி வசித்து வந்தாள். திருமணத்திற்குப் பின் பருவமெய்திய ஜானகி, இராமானுஜனுக்கு நிரந்தர வேலை கிடைத்ததை முன்னிட்டு, தனது மாமியார் கோமளத்தம்மாளுடன் சென்னைக்கே வந்து சேர்ந்தார்.

மிடில் மாஸ்ட்டின் சிபாரிசுக் கடிதம்
     திருவல்லிக் கேணியில் இராமானுஜன் குடியிருந்த சம்மர் ஹவுஸ் வீடானது, சென்னைத் துறைமுகக் கழகத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தது, எனவே பணியில் சேர்ந்த சில மாதங்களில், பிராட்வே சைவ முத்தையா முதலித் தெருவில் வசித்து வந்த தனது பாட்டி வீட்டில் குடியேறினார். இந்த வீட்டில் இருந்தபோதுதான் ஜானகியும், கோமளத்தம்மாளும் இராமானுஜனுடன் சேர்ந்து கொண்டனர்.

      சைவ முத்தையா முதலித் தெரு வீடு மிகவும் சிறியது. மாத வாடகை ரூ.3. ஒரே வீட்டில் இருந்தும் ஜானகிக்கும் இராமானுஜனுக்கும், எவ்விதமான உறவோ தொடர்போ இல்லாமலேயே இருந்தது. பகலில் இராமானுஜன் சோப்போ அல்லது சட்டையோ எடுத்து வரும்படி கூறுவார். மற்றபடி இருவரும் பேசிக் கொள்வதுகூட மிகவும் அரிதாகவே இருந்தது. பகலில் இராமானுஜனின் அருகில கூட செல்லாமல் ஜானகியை கோமளத்தம்மாள் பார்த்துக் கொண்டார். இரவில் ஜானகியை, கோமளத்தம்மாள் தன் அருகிலேயே படுக்க வைத்துக் கொள்வார். கோமளத்தம்மாள் கும்பகோணத்திற்குச் செல்ல வேண்டியிருந்தாள், பாட்டி ரெங்கம்மாளின் கண்காணிப்பில் ஜானகியை விட்டுச் செல்வார்.

நடுவில் பிரான்சிஸ் ஸ்பிரிங், வலமிருந்து மூன்றாவது நாராயண  அய்யர்
     இராமானுஜன் காலையில் எழுந்ததும் கணக்கில் கவனம் செலுத்தி ஏதாவது எழுதிக் கொண்டேயிருப்பார். மாலையில் அலுவலகத்தில் இருந்து திரும்பியதும், கணக்கு நோட்டை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார். பல சமயங்களில் அதிகாலை ஆறு மணிவரை கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார். பின்னர் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் உறங்கி, அலுவலகத்திற்குப் புறப்படுவார்.

     இராமானுஜனுக்குத் துறைமுகக் கழகத்தில் எளிமையான பணியோ கொடுக்கப்பட்டது. வேலை செய்தது போக மீதமுள்ள நேரத்தில் கணக்கில் கவனம் செலுத்துவார்.

     நாராயண அய்யர் இராமானுஜனுக்கு மேலதிகாரி மட்டுமல்ல, இந்தியக் கணிதவில் கழகத்தின் உறுப்பினராகவும், பொருளாளராகவும் பணியாற்றி வருபவர். கணிதவியல் ஆர்வலர். மாலை நேரங்களில் நாராயண அய்யர், திருவல்லிக் பைகிராப்ட்ஸ் சாலையிலுள்ள தனது வீட்டிற்கு இரமானுஜனை அழைத்துச் செல்வார்.

     வீட்டின் மாடியில் ஆளுக்கொரு சிலேட்டுடன் அமர்ந்து கணித ஆராய்ச்சியில் இறங்குவார்கள். இரவு வெகுநேரம் வரை அமர்ந்திருப்பர்.

     நாராயண அய்யர் கணக்கில் மேதையல்லர். ஆனாலும் இராமானுஜனின் திறமையைக் கண்டு வியந்தவர். இராமானுஜன் கணிதக் கேள்விக்கு விடைகாணும் முயற்சியில், பல வரிகளைத் தாண்டித் தாண்டி விடை காணும் தன்மையைக் கண்டு திருத்த முயன்றார்.

     இராமானுஜா, கணக்கிற்கு விடைகாணும் நீ, மற்றவர்களின் புரிதல் திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு வரியாக விடை காண வேண்டுமே தவிர, பத்து வரிகளுக்கு பதில், இரண்டே வரிகளில் விடை கண்டு என் போன்றோரைக் குழப்பக் கூடாது. என்று பலமுறை பொறுமையுடன் எடுத்துக் கூறி இராமானுஜன் தன் கணக்கை விரிவாகச் செய்ய வற்புறுத்துவார்.

     சிறிது காலத்திலேயே, நாராயண அய்யர் மேலதிகாரி, உடன் பணிபுரிபவர் என்ற நிலையிலிருந்து மாறி, இராமானுஜனின் நண்பராகவும், ஆலோசகராகவும் மாறிப் போனார்.

     1912 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில், இராமானுஜன் துறைமுகக் கழகத் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களின் கவனத்திற்கு உரியவராக மாறினார்.

ஆங்கில அரசின்  உதவி

     இராமானுஜனின் கணிதத் திறமையைத் தினமும் உடனிருந்து கவனித்த நாராயண அய்யருக்கு ஓர் உண்மைத் தெரிந்தது. இராமானுஜனுக்கு எவ்வளவுதான் கணிதத் திறமை இருந்தாலும், அத்திறமைகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்ட, இராமானுஜன் கணிதத் துறையில் நினைத்த இலக்கினை அடைய, ஆங்கிலேயர்களின் உதவியும், ஆதரவும் அவசியம் தேவை என்பதை உணர்ந்தார்.

     துறை முகக் கழகத் தலைவரான பிரான்சிஸ் ஸ்பிரிங்கிடம் இராமானுஜனைப் பற்றியும், அவரது கணிதத் திறமைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

இராமச்சந்திர ராவ்
     அதே நேரத்தில், இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிய இராமச்சந்திர ராவ் அவர்களும், தன் பங்கிற்கு, சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் உடன் பணியாற்றிய, மெட்ராஸ் பொறியியல் கல்லூரியின் பேராசிரியரான சி.எல்.டி. கிரிப்த் என்பவர் மூலம், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுத வைத்தார்.

மதிப்பிற்குரிய சர் பிரான்சிஸ்,

     தங்கள் அலுவலகத்தில், மாத ஊதியம் ரூ.30 பெற்றுக் கொண்டு, கணக்கர் வேலையில் இராமானுஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் ஓர் சிறந்த ஆற்றலுடைய கணித அறிஞர் ஆவார். ஆனால் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவருக்குத் தற்போதைய பணி அவசியம் தேவைப் படுகிறது. அதனால் அவருடைய அற்புதத் திறமையை, வெளிப்படுத்தும் வகையில் முயற்சி எடுக்கப்படும் வரை, அவரை கணக்கர் பணியில் தடங்கலின்றித் தொடர அனுமதிக்க வேண்டுகிறேன். இராமானுஜனின் கணிதத் திறமையின் உண்மைத் தன்மையை அறிய, அவர் செய்திட்ட கணக்குகள் சிலவற்றை, இலண்டனிலுள்ள கணிதப் பேராசிரியர் எம்.ஜெ.எம். ஹில் என்பாருக்கு அனுப்பி உள்ளேன். அவரிடமிருந்து பதில் கிடைத்தவுடன், நாம் இராமானுஜனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைப் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை அவரை கணக்கர் பதவியில் தடையின்றித் தொடர அனுமதிக்கவும்.

இப்படிக்கு,
சி.எல்.டி. கிரிப்த்


,,,,,வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா?